டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:

இதயம் ஒரு கணம்கூட நிற்காமல் தொடர்ந்து சுருங்கி விரிந்தபடி இருக்கிறது. இதனால், இதயத்தில் இருந்து ரத்தம் உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்கிறது. ரத்தம்தான் உடலின் மற்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜனையும் சத்தையும் எடுத்துச் செல்கிறது. அப்போதுதான் அப்பகுதிகள் நல்ல இயக்கத்துடன் இருக்கும்.

ஒருமுறை நெஞ்சு வலி வந்தால்கூட மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது அவசியம். நெஞ்சு வலி இருப்பவர்க்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம். சரியாகக் கையாண்டால் வலி வராமல் தடுத்து ஆரோக்கியமாக வாழமுடியும்.

இதயம், தசைப் பையைப் போன்றதுதான். இதயமும் தனக்குள் வரும் ரத்தம் மூலம்தான் ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்களைப் பெறுகிறது. பொதுவாக, இதயத்தின் ரத்தக் குழாய்கள் பல்வேறு கடினமான சூழ்நிலைகளிலும் திறம்படச் செயல்படும். சில காரணங்களால் அவை சரிவரச் செயல்பட முடியாதபோது, உடல் கோளாறுகள் ஏற்படுகின்றன.

நெஞ்சு வலி (Angina, ஆன்ஜைனா)

நெஞ்சு வலி, Chest Pain, Angina

அறிகுறிகள் :

இந்த வலி பொதுவாக நெஞ்சில் ஆரம்பித்து, தாடை, கை, கழுத்து என்று பரவும். சில சமயம் முதுகுக்கும் பரவும். வலி தொடர்ந்து இருக்கும்.

எப்போது ஏற்படும்?:

அதிக தூரம் நடக்கும்போதோ, படியேறும்போதோ, உடலளவில் கடுமையான செயல்களில் ஈடுபடும்போதோ, மனஅழுத்தத்தின்போதோ, நெஞ்சு வலி ஏற்படும். ஓய்வு எடுத்தால், வலி குறைந்து நின்றுவிடும். சிலருக்கு வேலை செய்யாமல் ஓய்வாக இருக்கும்போதேகூட நெஞ்சு வலி ஏற்படலாம். இந்தக் குறிப்பிட்ட நிலை ஆபத்தானது. ஏற்கெனவே ஒரு முறை நெஞ்சு வலி வந்திருந்து, இப்போது குறைந்த வேலைகளைத் தொடர்ந்து செய்யும்போதுகூட நெஞ்சு வலி வந்ததென்றால், நிச்சயம் உடலைக் கவனிக்க வேண்டும்.

ஒருமுறை நெஞ்சு வலி வந்தால்கூட மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது அவசியம். நெஞ்சு வலி இருப்பவர்க்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம். சரியாகக் கையாண்டால் வலி வராமல் தடுத்து ஆரோக்கியமாக வாழமுடியும்.

எதனால் ஏற்படுகிறது?

குறுகிய ரத்த நாளங்கள்இதயத்தின் ரத்த நாளங்கள் குறுகி இருக்கும்போது குறைந்த அளவு ரத்தம்தான் இதயத்துக்குச் செல்கிறது. அதனால், இதயத்துக்கு குறைந்த ஆக்ஸிஜனே கிடைக்கிறது. கடினமான வேலைகளில் ஈடுபடும்போது, அதிக ரத்தம் தேவைப்படுகிறது. குறுகிய நாளங்களால் ஈடுகொடுக்க முடிவதில்லை. இதனால், இதயத்துக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் வலி ஏற்படுகிறது. இந்நிலை தொடருமானால், ரத்தம் குறைவான பகுதியின் திசுக்கள் இறக்க நேரிடும்.

வலியினால் ஓய்வெடுக்கும்போது, அந்த அவகாசத்தில் இதயம் தன்னைச் சீர்செய்து கொள்கிறது. நெஞ்சு வலியை இதயம் நமக்குத் தரும் எச்சரிக்கை மணியாகக்கொள்ளலாம்.

அதிக ரத்த அழுத்தம், ரத்தச்சோகை, குளிர்ந்த சூழல், மதுப்பழக்கம், புகைபிடித்தல், உடற்பருமன், ரத்தத்தில் அதிகக் கொழுப்பு ஆகியவை நெஞ்சு வலி ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கும்.

எதனால் நாளங்கள் குறுகிப் போகின்றன?

ரத்தத்தில் உள்ள கொழுப்பு, படலங்கள் அதிகமாகப் படியக் காரணமாகின்றன.

மாரடைப்பு (Heart Attack in Tamil):

மேலே கூறிய கொழுப்புப் படலம் அதிகமாகும்போதோ, வேறு பல காரணங்களாலோ, நாளத்தின் சுவரில் இருந்து பிரிந்து நாளத்தை அடைத்து, ரத்த ஓட்டத்தை முழுமையாகத் தடைப்படுத்துகிறது. இதனால், அந்த ரத்த நாளம் மூலமாக ரத்தம் பெற்றுக் கொண்டு இருந்த இதயத்தின் பகுதிகளில் ரத்தம் செல்வது நின்றுவிடுகிறது. இதனால் இதயத்தின் அப்பகுதியின் திசுக்கள் ரத்தம் இன்றிப் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடுகிறது. அதைத்தான் மாரடைப்பு என்கிறோம்.

மாரடைப்பு அறிகுறிகள் / ஹார்ட் அட்டாக் அறிகுறிகள் (Symptoms of Heart Attack in Tamil):

நெஞ்சு வலிதான் பொதுவான அறிகுறி. இந்த வலி அதிக வீரியத்துடனும், அழுத்தத்துடனும் இடது நெஞ்சுப் பகுதியில் இருந்து தாடை அல்லது இடது கைக்குப் பரவும். மூச்சுவிடச் சிரமமாக இருக்கும். அதிகமாகவும் வேர்க்கும். வாந்தி மற்றும் மயக்கமும் ஏற்படலாம். சிலர் இந்த அறிகுறிகளால் பயம் மற்றும் பதட்டமாக உணர்வர்.

முன்பு கூறிய ‘ஆன்ஜினா’ வலி போல் இன்றி, இந்த வலி ஓய்வு எடுத்தாலும் குறையாது. சில சமயங்களில் இந்த வலி நெஞ்சுக்குழியில் இருக்கும். மிகவும் வயதானவர்களுக்கும், பெண்களுக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், நெஞ்சு வலியின் வீரியம் குறைவாகவும், காரணமே இல்லாமல் சோர்வாகவும், களைப்பாகவும் இருக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் காலதாமதம் இன்றி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்தானது.

மாரடைப்பு ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கும் காரணிகள்:

  • வயது 65-க்கு மேற்பட்டோருக்கு இருபாலருக்குமே மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம்.
  • ஆண்களுக்கு இளம் வயதிலும், பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகும் வரும் வாய்ப்பு அதிகம்.
  • மரபு வழியாக குடும்பத்தினர் யாருக்கேனும் மாரடைப்பு ஏற்பட்டு இருந்தால், மற்றவருக்கும் வரும் வாய்ப்பு அதிகம்.

ரத்தத்தில் கொழுப்பின் அளவு:

கொலஸ்ட்ரால் எனப்படும் ஒரு வகையான கொழுப்பைப் பற்றிதான் நாம் அதிகமாகக் கேள்விப்பட்டு இருக்கிறோம். உடலில் உள்ள ஒவ்வொரு செல் (cell) லுக்கும் இது மிகவும் அவசியத் தேவை. இதன் அளவு அதிகரிக்கும்போதுதான் பிரச்சனையாகிறது. டிரை கிளிசிரைட் (triglyceride) எனப்படும் மற்றொரு கொழுப்பு வகை அதிகமானாலும் சிக்கல்தான்.

கேக், பிஸ்கட் வகைகள், வறுத்த பொருட்கள், டால்டா, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், பாலாடை, வெண்ணெய் ஆகியவை அதிகமாக உட்கொள்ளும் போது கொழுப்பின் அளவு அதிகமாகிறது.

துரித உணவு, Fast food

மரபு வழியாகவும், உணவில் கவனம் செலுத்தாமலும் போனால், ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும். இதைத் தவிர, தைராய்ட், சிறுநீரகக் கோளாறுகள், மதுப் பழக்கம் ஆகியவை ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

இப்போதுள்ள வாழ்க்கை முறையில் இளவயதினரும் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

உடல் பருமன்:

உடல் பருமன், Obesity

சீரான உடல் எடைக்கு ஆரோக்கியமான சம­விகித உணவு, தொடர் உடற்பயிற்ச¤ மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை அவசியம். இதயம் சீராகச் செயல்பட உடல் எடை சீராக இருத்தல் அவசியம்.

ரத்த அழுத்தம்:

ரத்த அழுத்தம், Blood Pressure

அதிக ரத்த அழுத்தம் இருந்தால் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதனுடன் உணவில் உப்பின் அளவைக் குறைத்தல், சமவிகித உணவு, உடற்பயிற்சி, மது மற்றும் புகைப் பழக்கத்தை நிறுத்துதல், ரத்த அழுத்தத்தைச் சீர்செய்யும். ரத்த அழுத்தத்துடன், புகை பிடிக்கும் பழக்கமும், அதிகக் கொழுப்பும் இருந்தால் மாரடைப்பின் அபாயம் அதிகம்.

புகை பிடித்தல்:

புகைப்பிடித்தலை கைவிடுதல், Avoid Smoking

நெஞ்சு வலி அதிகரிப்பதுடன் மாரடைப்பு ஏற்படுத்தும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது. புகை பிடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது, புகை பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.

சர்க்கரை நோய்:

நீரிழிவு பரிசோதனை, Diabetes Test

 சர்க்கரையின் அளவு சீராக இல்லை என்றால் இதயத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். அதிக சர்க்கரை, நாளங்களின் சுவற்றைப் பாதித்து அதிகக் கொழுப்பைப் படரச் செய்யும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, மாரடைப்பு வரும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.

உடற்பயிற்சியின்மை:

உடற்பயிற்சி, Physical Exercise

தினமும் 30 நிமிடங்கள் வீதம் வாரத்துக்கு ஐந்து தடவையாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது, ரத்தத்தின் கொழுப்பு அளவைக் குறைப்பதுடன் உடல் எடையைச் சீராக்கி, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து, சர்க்கரை நோயையும் தடுக்கும். இவை தவிர, மன அழுத்தம், மதுப் பழக்கம் போன்றவையும் மாரடைப்பு ஏற்படக் காரணமாக அமையலாம்.

யோகா எவ்வாறு உதவுகிறது?

யோகா, Yoga

யோகா இதயத்தை இயக்கும் தானியங்கி நரம்பு மண்டலத்தைச் சமன் செய்கிறது. ஈஷா பயிற்சி செய்பவர்களில் இத்தகைய ஆய்வு சில மாதங்களுக்கு முன் நடத்தப் பட்டபோது, அவர்களது இதயத்தின் தானியங்கி நரம்பு மண்டலம் சமனான நிலையில் இருப்பதாகவும், அவர்களுடைய இதயம் எத்தகைய மன அழுத்தம் ஏற்படுத்தும் சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதுவும் கண்டறியப்பட்டது.

யோகா, நேரடியாக இதயத்தின் ஆரோக்கியத்தைச் சரிசெய்வது மட்டுமின்றி, மறைமுகமாக இதய நோய்கள் ஏற்படுத்தும் காரணிகளையும் சரிசெய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அதிக ரத்த அழுத்தம், இதயத்தில் சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவு, உடல் எடை போன்றவற்றைச் சீர்செய்கிறது.

தளர்வு நிலையை ஏற்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நாளத்தில் அதிகப்படியாகக் கொழுப்பு சேராமலும், ஏற்கெனவே அதிகமாகச் சேர்ந்தவை குறைவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

குறிப்பு: ஈஷா யோகா ஆன்லைன் தமிழ் வகுப்பு பற்றிய முழு விபரங்களை இந்த இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.

மாரடைப்பு பற்றி சத்குரு:

மாரடைப்பு குறைய ஒரு வழி:

நான் சொல்கிறேன் - இது ரொம்ப சர்ச்சைக்குரியதாக இருக்கலாம், மருத்துவ உலகம் நிச்சயம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும். ஆனால் அவர்கள் இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு பிறகு வருவார்கள் ... எல்லோரும் போதுமான அளவு சுத்தமான (நல்ல) தண்ணீரை குடித்தால், நான் சொல்கிறேன், உலகில் ஐம்பது சதவிகிதம் மாரடைப்பு குறையும். தேவையான நீர் உடல் அமைப்பில் இல்லாதபோது இதயத்திற்கு ஏற்படும் சேதம் மிக அதிகமானது. ஆனால் நான் தண்ணீர் என்று சொல்லும்போது, அது நீர் (பச்சைத் தண்ணீர்) குடிப்பது மட்டுமல்ல. நீங்கள் அதிக நீர்ச்சத்துள்ள உணவுகளை உண்ணுவதும் முக்கியம்.

நீர்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதன் முக்கியத்துவம்:

பழங்கள், Fresh Fruits


 

காய்கறிகள், Fresh Vegetables

ஒரு பழத்தில் தொண்ணூறு சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது. காய்கறிகள் மற்றும் பிற விஷயங்களில் எழுபது சதவிகிதத்திற்கும் அதிகமான நீர் சத்து உள்ளது. நீங்கள் சாப்பிடும் உணவில் குறைந்தது எழுபது சதவிகிதம் தண்ணீர் இருக்க வேண்டும். ஆனால் உலகின் மேற்கு பகுதியில் - இப்போது அது நிச்சயமாக மாறிக் கொண்டிருக்கிறது, மக்கள் இந்த விஷயங்களைப் பற்றி அதிக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள், இங்கு பொதுவாக மக்கள் சாப்பிடுவது மிகவும் உலர்ந்து (காய்ந்து) போன உணவாக இருக்கிறது. இங்கு இருக்கும் அனைத்தும் பொதுவாக உலர்ந்தவை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதிகளில், மக்கள் காய்கறிகள் எதையும் சரியாக சாப்பிடவில்லை என்று நினைக்கிறேன். இப்போதுதான் மக்கள் அதில் அதிக கவனம் கொடுக்கிறார்கள்.

குறைவான நீர்ச்சத்து உள்ள உணவு ஏற்படுத்தும் பாதிப்பு:

ரொட்டி மற்றும் இறைச்சி, Bread and Meatநீங்கள் சாப்பிடும் உணவு மிகக் குறைவான நீர்ச்சத்துள்ளதாக இருக்கிறது. அது போய் கான்கிரீட் போல, உங்கள் வயிற்றில் உட்கார்ந்து கொள்ளும். இப்போது நீங்கள் தண்ணீர், தண்ணீர், தண்ணீர் எனக் குடிக்கிறீர்கள் - அது உதவாது. நீங்கள் அதிக நீர்ச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். நீங்கள் உணவை உட்கொள்ளும்போது, குறைந்தபட்சம் அது உங்கள் உடலில் உள்ள நீரின் சதவீதத்துடன் சமமாக இருக்க வேண்டும். அதனால்தான் காய்கறிகள், பழங்கள் நம் அன்றாட உணவின் பகுதியாக இருக்க வேண்டும். நீங்கள் ப்ரெட் சாப்பிட்டால், நீங்கள் சாப்பிடும் ப்ரெட் பொருத்து, ஏறக்குறைய 25 அல்லது அதற்கும் குறைவாகவே நீர்ச் சத்து கொண்டதாக இருக்கிறது. மாமிசம் அதை விடவும் நீர்ச்சத்து குறைந்ததாக இருக்கிறது.

எனவே நீங்கள் ரொட்டி மற்றும் இறைச்சியை உண்ணும்போது, உங்களுக்கு கடுமையான பிரச்சினைகள் ஏற்படும், நான் உங்களுக்குச் சொல்கிறேன், மருத்துவர்கள் இன்னமும் இருபது, முப்பது வருடங்களுக்கு பிறகு இதைப் பற்றி பேசுவார்கள். அவர்கள் அதிக நீர்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டால், இதய நோயினால் ஏற்படும் இறப்புகள் உலக அளவிலேயே ஐம்பது சதவிகிதம் குறைந்துவிடும் என்று நான் உங்களுக்குச் சொல்வேன். மாரடைப்பால் மக்கள் இறப்பது மிகமிக குறைந்து விடும்.

அவர்கள் மாரடைப்பால் இறப்பதற்கு ஒரு காரணம் அவர்கள் மிகக் குறைந்த நீர்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதுதான். எனவே மக்கள் சொல்லலாம், “மற்ற நாடுகளில் எப்படி? ஏன் இந்தியாவில் மட்டும் இறக்கிறார்கள்?" அங்கேயும் அதேதான் நடக்கிறது. அவர்களின் தற்போதைய உணவு பாரம்பரிய உணவிலிருந்து வியப்பான முறையில் மாறிவிட்டது, ஏனென்றால் அவர்களும் வியாபாரத் தந்திரங்களால் ஆளப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் உடலைக் கேட்க மாட்டார்கள், விளம்பரத்தைப் பார்க்கிறார்கள். பெரிய விளம்பர பலகைகள் அல்லது தொலைக்காட்சி விளம்பரம் நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது, என்ன சாப்பிட வேண்டும் என்று உங்கள் உடல் சொல்வதை நீங்கள் கேட்பதில்லை.

தண்ணீர் எப்போது, எவ்வளவு குடிக்க வேண்டும்?

தண்ணீர் குடிப்பதன் முக்கியத்துவம், Importance of Drinking Water

எனவே, சில சந்தர்ப்பங்களில் தண்ணீரை உட்கொள்ளாமல் இருப்பது பரவாயில்லை. ஆனால் தாகத்தின் அறிகுறி இருந்தால், நீங்கள் நிச்சயம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால் உடல் தன் வழியில் உங்களுக்கு அதை நினைவுபடுத்துகிறது. உங்களுக்கு தண்ணீர் தேவை என்று அது குறிப்பிடும் போது, நீங்கள் இருபது நிமிடங்களுக்குள் அல்லது குறைந்தபட்சம் அரை மணி நேரத்திற்குள் தண்ணீர் குடிக்க வேண்டும், நீங்கள் கணிசமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்தால், பிறகு எவ்வளவு நீரை எடுத்துக்கொள்ள வேண்டும், எவ்வளவு நீரை நிராகரிக்க வேண்டும் என்பதை அது தேர்வு செய்து கொள்ளும்.

ஈஷா யோகா வகுப்புகள் பற்றிய விபரங்களுக்கு: 0422 2515300