உலக மக்கள்தொகையில், தோராயமாக 10 கோடியே 10 லட்சம் மக்கள் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்கிறது சமீபத்திய கணக்கெடுப்பு. இந்த புகைபிடிப்பதால் வரும் கேடுகள், இதிலிருந்து வெளிவர யோகா எப்படி உதவும் என்பதை விரிவாக எடுத்துரைக்கிறது இக்கட்டுரை.

டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:

புகை பிடிக்கும் பழக்கத்துக்கு எவ்வாறு ஒருவர் அடிமை ஆகிறார்?

புகைப் பழக்கம் ஆரம்பித்த புதிதில், புகையை இழுத்த 10 வினாடிகளில், புகையிலையில் முக்கியமாக உள்ள நிகோட்டின் எனப்படும் ரசாயனம் மூளையைச் சென்றடைந்து ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி, அமைதியாகவும் அதிகக் கவனத்துடன் இருப்பது போலவும் உணரச் செய்கிறது. நாளடைவில் மூளை, உடலில் இயற்கையாகவே உள்ள ரசாயனங்களுக்குப் பதிலளிக்காமல் நிகோட்டினுக்குப் பழக்கப்பட்டு புகைக்காக ஏங்கத் துவங்குகிறது. இந்த ஏக்கம், தலைவலி, கோபம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை போன்றவையாக வெளிப்பட்டு, புகை பிடிக்கத் தூண்டி, நாளடைவில் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிடுகிறது. ஆரம்பத்தில் ஒரு சிகரெட் பிடித்து ‘நன்றாக’ இருப்பதாக உணர்ந்தால், நாளடைவில் அதே உணர்வைப் பெற பல சிகரெட்டுகள் பிடிக்க வேண்டிவரும். பின்னர் இயல்பாக உணர்வதற்கே புகை பிடிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது.

நிகோட்டின் மட்டும் அல்லாது 4000 த்துக்கும் மேற்பட்ட கெடுதலான ரசாயனங்கள் சிகரெட்டில் உள்ளன. இவை நுரையீரலில் மட்டுமில்லாமல் உடலில் பல்வேறு பாகங்களிலும் புற்றுநோயையும் மற்ற நோய்களையும் ஏற்படுத்தக்கூடியவை.

அவற்றில் சில....

  • கார்பன் மோனாக்சைடு (நச்சு வாயு)
  • ஆர்சனிக் (எலி மருந்தில் உள்ளது)
  • ஹைட்ரஜன் சயனைடு (நச்சு வாயு)
  • நாப்தலின் (இது பாச்சா உருண்டைகளில் இருப்பது)
  • கந்தகம் (தீக்குச்சிகளில் உள்ளது)
  • ஈயம் (நச்சுப் பொருள்)
  • ஃபார்மாலடிஹைட் (பிணங்களை பதப்படுத்தும் திரவம்)

புகைபிடிப்பது நுரையீரல்களை எவ்வாறு பாதிக்கிறது?

புகை பிடிப்பது, நுரையீரல்களில் இயற்கையாகவே உள்ள சுவாசச் சுத்திகரிப்பு செயல்களைப் பாதிப்பதால் கிருமிகள், நச்சுப்பொருட்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் சரிவர அகற்றப்படாமல் நுரையீரலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால் தொடர் இருமல், நுரையீரல் புற்று நோய், நாட்பட்ட நுரையீரல் பாதிப்புகள் வருகின்றன.

புகைபிடிப்பது நுரையீரலில் உள்ள சிறிய காற்றுப் பைகளைச் சேதப்படுத்தி அவற்றின் விரிந்து சுருங்கும் தன்மையைப் பாதிக்கின்றன. இதனால் ஆக்சிஜனை எடுக்கவும், கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றவும் நுரையீரல் கஷ்டப்படுகிறது. இதற்குத் துணை கொடுக்க இதயம் அதிகமாக இயங்கும்பொழுது, அதுவும் பாதிக்கப்படுகிறது.

மனதளவில், நாளடைவில் பயம், பதற்றம், கோபம், சமநிலையற்றதன்மை, ஈடுபாடற்றதன்மை போன்றவை புகைபிடிப்போரின் இயல்பாகிறது.

உடல் முழுவதுமுள்ள நரம்பு மண்டலத்தைத் தூண்டுவது புகை செய்யும் வேலை. ஆனால், ஒருவரின் நரம்பு மண்டலம் எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளதோ அவ்வளவு பிரச்சனையின்றி அவரது முதுமை கழியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஏன் இளம் வயதினர் இப்பழக்கத்திற்கு ஆளாகின்றனர்?

ஓர் ஆய்வின்படி 70% மேற்பட்டோர் நண்பர்களின் உந்துதலினாலும், அவர்களின் வற்புறுத்தலுக்கு மறுப்பு தெரிவிக்கச் சிரமப்படுவதாலும் புகைபிடிக்க ஆரம்பிப்பதாகக் கூறப்படுகிறது.

பலர் லைட் சிகரெட், தாங்களே தயார் செய்தது அல்லது ஃபில்டர் சிகரெட் பிடிப்பதால் நச்சுப் பொருட்களைச் சுவாசிப்பதில்லை என்று நினைக்கிறார்கள். அது தவறு. அவர்களும் மற்றவர்களைப் போலவே அத்தனை நச்சுப் பொருட்களையும் சுவாசிக்கிறார்கள்.

புகை பிடிப்பவரின் நுரையீரல்கள் பாதிப்படைந்ததற்கான சில அறிகுறிகள்:

  • அடிக்கடி சளி பிடித்தல்
  • தொடர் இருமல்
  • இருமும் போது சளி வருதல்
  • சிறிது தூரம் நடந்தாலே மூச்சு இரைப்பு ஏற்படுதல்.

இவை இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகவும். அலட்சியமாக இருக்க வேண்டாம்.

புகைபொருள் இன்றி புகைத்தல்

செகன்ட் ஹான்ட் ஸ்மோகிங் (Second hand smoking)

ஒருவர் புகை பிடிக்கும்போது மூன்றில் இரண்டு பங்கு புகை காற்றில் கலந்து, அருகில் இருந்து அப்புகையைச் சுவாசிப்பவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படும் அத்தனை உடல் உபாதைகளும் இவர்களுக்கும் ஏற்படும்.

தர்ட் ஹான்ட் ஸ்மோகிங் (third hand smoking)

புகைபிடிக்கும்போது, அப்புகை மற்றும் அதிலுள்ள ரசாயனங்கள் அந்த நபரின் கேசம், சருமம், மற்றும் அவரைச் சுற்றி உள்ள திரைச்சீலை, சோபா, குஷன், படுக்கை, தலையணை போன்றவற்றில் தங்கிவிடுகின்றன. அந்த சூழ்நிலையில் ஒவ்வொரு முறையும் சுவாசிக்கும்போதும் அப்பொருட்கள் உடலுக்குள் சென்று உடல் நலக்கேட்டை அளிக்கின்றன. இதில் முக்கியமாகப் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.

புகையினால் குழந்தைகளுக்கு வரும் கேடுகள்:

  • காதில் சீழ் வருதல் மற்றும் காது கேளாமை.
  • மூச்சுக் கோளாறுகள்.
  • இருமல், மூச்சு இழுப்பு, ஆஸ்துமா.
  • நுரையீரல்களில் பல்வேறு வியாதிகள்.
  • மூளை முழுத் திறனில் வேலை செய்யாமை.

கர்ப்பிணிப் பெண்கள் முக்கியமாக இப்புகையில்லா சூழ்நிலையில் இருக்க வேண்டும். இந்தியாவில் ஆண்டு தோறும் 90 லட்சம் மக்கள் புகைப் பழக்கத்தினால் ஏற்படும் நோய்களினால் இறக்கிறார்கள்!

புகைப் பழக்கத்தைக் கைவிட யோகா எவ்வாறு உதவுகிறது?

யோகா, மன உறுதித்தன்மையை (will power) அதிகரிக்கிறது.
யோகா, உடலையும், மனதையும் சமநிலைக்குக் கொண்டுவரும். இதனால் நாம் பழக்கமாக மேற்கொள்ளும் பல கெட்ட பழக்கங்களை எளிதில் விட முடியும்.

கோபம், எரிச்சல், மன உளைச்சல், உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றை யோகா மூலம் நன்கு கையாள முடிவதால், அமைதிப்படுத்த வெளிப்புற வஸ்துக்கள் தேவை என்ற தோற்றம் தவிர்க்கப்படுகிறது.

புகை பிடிப்பதை விட்டவர்களுக்கு, அதன் பின், எடை அதிகரித்தல், மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனை போன்றவை வர வாய்ப்புள்ளது. யோகாவின் மூலம் அதை தவிர்க்கலாம் / குறைக்கலாம்.

புகைப் பழக்கத்தை விட்ட பின் புகைக்கான ஏங்குதலே (craving) அவர்களை பெரும்பாலும் இப்பழக்கத்துக்கு மீண்டும் மீண்டும் அடிமையாக்கி அவர்களை இப்பழக்கத்தில் இருந்து மீளாமல் இருக்க செய்கிறது. யோகா இந்த ஏக்கத்தை வெகுவாகக் குறைத்து, இந்த சுழற்சியில் இருந்து ஒருவரை மீட்கிறது.

யோகா நமது செயல்களிலும், நடவடிக்கைகளிலும் விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் நாம் தன்னிச்சையாகச் செய்யும் பல செயல்கள் குறைகின்றன. அதில் புகை பிடித்தலும் அடக்கம். யோகா நாள் முழுவதும் ஒருவரை உற்சாகமாக இருக்கச் செய்வதால், வெளியிலிருந்து உற்சாகம் தரும் பொருள்களுக்கான தேவை என்ற தோற்றம் போய்விடுகிறது.

புகைபிடிப்பதால் நுரையீரல்களில் வரும் பாதிப்புகளைச் சரிசெய்யவும் யோகா பெரிதும் உதவுகிறது.

புகைபொருள் இன்றி புகைத்தலில் இருந்து எப்படி நம்மை எப்படி பாதுகாப்பது?

வீட்டுக்குள்ளோ, காரிலோ அல்லது மூடப்பட்டுள்ள எந்த இடத்திலும் யாரையும் புகைக்க அனுமதிக்காதீர்கள். புகை அதிகமாக இருக்கும் இடத்திலிருந்து உங்கள் குழந்தையை அப்புறப்படுத்துங்கள். உணவு விடுதிகளுக்குச் செல்லும்போது புகையில்லா இடத்தையே தேர்வு செய்யவும்.

புகைக்கும்போது மின்விசிறியாலோ, ஜன்னலைத் திறப்பதாலோ புகையின் வாசனை வேண்டுமானால் போகலாம்; ஆனால் அதன் ரசாயனங்கள் அறையின் பொருட்களில் படிந்து தொடர்ந்து தீய விளைவுகளை எற்படுத்தும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால், மூடிய இடங்களிலும், மக்கள் நெரிசல் உள்ள இடங்களிலும் புகை பிடிப்பதைத் தவிருங்கள். முக்கியமாக குழந்தை, மற்றும் கர்ப்பிணி பெண்கள் அருகில் புகைக்காதீர்கள்!

அனுபவப் பகிர்வு:

ரத்தினசாமி (47), வியாபாரி, விழுப்புரம்.

நான் என் 25 வயது முதல் புகைபிடித்து வருகிறேன். ஒரு நாளைக்கு 2-3 என ஆரம்பித்து, 2 பாக்கெட்டுகள் வரை பிடித்து வந்தேன். டென்ஷன் அதிகமானால் 4 பாக்கெட் வரை பிடிப்பேன். கடந்த 20 வருடங்களில் பல முறை இப்பழக்கத்தை விட முயன்று தோற்றுப் போயிருக்கிறேன். என் உடல்நிலையை இது பாதிக்கத் தொடங்கியது. தொடர்ந்து இருமல், சளி, மூச்சு வாங்குதல் என அவதிப்பட்டேன்.

2 வருடங்களுக்கு முன் ஈஷா யோக வகுப்புகளில் சேர்ந்தேன். அங்கு சொல்லிக்கொடுக்கப்படும் பயிற்சிகளைத் தவறாது செய்து வந்தேன்.

நாளடைவில், என்னால் புகையை இயல்பாகவே முற்றிலுமாக விட முடிந்தது. புகையை விடுவதற்கு நான் எனக்குள் எந்தப் போராட்டமும் செய்யவில்லை. மற்றவர் புகை பிடிக்கும் இடத்தில் இருந்தும்கூட எனக்கு அந்த எண்ணம் வராதது ஆச்சர்யமாக இருந்தது. கடந்த ஒரு வருடத்தில் ஒரு முறைகூட நான் புகை பிடிக்கவில்லை. எனது உடல்நிலையும் நன்கு தேறி வருகிறது. முன்பு போல சளி, இருமல் அடிக்கடி வருவதில்லை. முன்னைவிட புத்துணர்வுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதாக உணர்கிறேன்.