கொல்லைப்புற இரகசியம் தொடர்

வெகுநாட்கள் கழித்து பள்ளி கல்லூரிகள் திறந்திருப்பதால் காலை நேரம் சற்று பரபரப்பாக இருக்க, கடைத்தெரு கூடுதல் களைகட்டியது. வழக்கமாக காய்கறி வாங்கிய பின் கொஞ்சம் கறிவேப்பிலையும் கொத்தமல்லியும் போடும் கடைக்காரர், இன்று மறந்துவிட்டதால் எனது காய்கறி பையை விரித்து, அதில் கொஞ்சம் போட்டு விடும்படி கூற, அவரும் இரண்டு கணுக்களை கிள்ளிப் போட்டார்.

இந்த கறிவேப்பிலையே பெரும்பாலான வீட்டுல எல்லாரும் தாளிக்கறதுக்கும் நறுமணத்துக்காகவும் மட்டும்தான் பயன்படுத்துறோம். ஆனா இதை உணவுல தினமும் சேர்த்து சாப்பிட்டு வந்தா, நல்ல ஆரோக்கிய பலன்களைக் கொடுக்குது.

“தம்பி நீங்க உமையாள் பாட்டி வீட்டுப் பக்கம் போனீங்கன்னா, இந்த கறிவேப்பிலை கட்டை கொடுத்திருங்க” என்று ஒரு பெரிய கறிவேப்பிலை கட்டை எடுத்து கொடுத்தார் கடைக்காரர்.

கறிவேப்பிலை, Curry Leaves in Tamil

 

நானும் உமையாள் பாட்டியை சந்தித்து பல நாட்கள் ஆகிவிட்டதால், கறிவேப்பிலை கட்டை கொடுக்கும் சாக்கில் பாட்டியின் தரிசனம் பெறலாமென கிளம்பினேன். வழக்கமாக சிறிதளவு கொசுறாக காய்கறிகளுடன் போடப்படும் கறிவேப்பிலையை, இப்படி பெரிய கட்டாக பாட்டி வாங்குவதன் நோக்கம் என்ன என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

பாட்டியை சந்தித்ததும் முதல் கேள்வியாக அதையே முன்வைத்தேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“காசு பணம் இல்லாத உறவுகள சில சொந்தக்காரங்க ஒதுக்கி வைக்கிற மாதிரி, நம்ம சாப்பாட்டுல முதல்ல எடுத்ததுமே கருவேப்பிலையை எடுத்து ஓரமா ஒதுக்கி வச்சிடுறோம். ஆனா இந்த கருவேப்பிலையை சாப்பிட்டா எவ்வளவு நன்மை இருக்குன்னு தெரிஞ்சா யாரும் அப்படி செய்யமாட்டாங்க” என்று பீடிகையுடன் பாட்டி சொல்லத் தொடங்க,

நானும் பாட்டியுடன் சேர்ந்து கறிவேப்பிலை கட்டைப் பிரித்து கைபார்க்கும் வேலையை செய்துகொண்டே கேட்கலானேன்.

கறிவேப்பிலை பயன்கள் (Curry Leaves Benefits in Tamil)

கறிவேப்பிலை, Curry Leaves in Tamil

 

“இந்த கறிவேப்பிலையே பெரும்பாலான வீட்டுல எல்லாரும் தாளிக்கறதுக்கும் நறுமணத்துக்காகவும் மட்டும்தான் பயன்படுத்துறோம். ஆனா இதை உணவுல தினமும் சேர்த்து சாப்பிட்டு வந்தா, நல்ல ஆரோக்கிய பலன்களைக் கொடுக்குது. உதாரணமா இந்த கருவேப்பிலையை மிளகு, சீரகம் சேர்த்து அரைச்சு பொடி செஞ்சு சாதத்துல சேர்த்து சாப்பிடலாம். கருவேப்பிலையை துவையலா அரைச்சும் சாப்பிடலாம். இதனால வயிற்றுப்போக்கு, மலக்கட்டு சரியாகுது, செரியாமை பித்தம் போன்ற பிரச்சனைகளும் குணமாகும். பசியை தூண்டுறதோட, பித்தவாந்தி சரியாகவும் இது உதவுது. இதோட இலை, வேர், பட்டை இந்த மூனுலயுமே மருத்துவ குணம் இருக்கு. இலை, பட்டை, வேரை எடுத்து தண்ணியில போட்டு அந்த நீரை குடிச்சிட்டு வந்தா வயிற்றுவலி குணமாகும்.

கறிவேப்பிலையிலுள்ள சத்துகள்

கறிவேப்பிலை, Curry Leaves in Tamil

 

இந்த கறிவேப்பிலையில கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் C, வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் E… இப்டி பல்வேறு சத்துகள் நிறைஞ்சிருக்கிறதா சொல்லப்படுது.

தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு

இப்போ இளைஞர்கள் மட்டுமில்லாம நடுத்தர வயதினருக்கும் பெரிய பிரச்சனையா இருக்கறது தலைமுடி பிரச்சனை! இப்பெல்லாம் இளைஞர்கள் கிட்ட இளநரை பெரிய பிரச்சனையா இருக்கு. நம்ம தலைமுடி நரச்சிடாம பாதுகாக்க கருவேப்பிலை உதவுது. நாம தினமும் தேவையான அளவு கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தா, நரைமுடி பிரச்சனையை தடுக்க முடியும். அதுமட்டுமில்லாம, முடி கொட்டுறது மாதிரி பலவிதமான தலைமுடி பிரச்சனைகளையும் சரிசெய்ய உதவுது இந்த கறிவேப்பிலை. இதுக்கு நாம தினசரி உணவில கறிவேப்பிலையை சேர்த்துக்கறதோடு, தேங்காய் எண்ணெயோட கருவேப்பிலையை சேர்த்து காய்ச்சி அதை தலைக்கு தடவியும் வரலாம்.

கறிவேப்பிலையை அரைச்சு வடிகட்டி ஜூஸாவும் தினமும் காலையில குடிச்சிட்டு வரலாம்.”

கறிவேப்பிலை, Curry Leaves in Tamil

 

பாட்டி கறிவேப்பிலையின் நன்மைகளை முழுமூச்சாக சொல்லி முடிக்க, எனது இளநரை பிரச்சனைக்கு அருமையான தீர்வு கிடைத்திருப்பதில் உள்ளுக்குள் மகிழ்ச்சியலை அடித்தது. பாட்டியிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட சமயத்தில்,

“கொஞ்சம் இருப்பா… சாதம் ரெடியாயிடுச்சு! என்னோட கருவேப்பிலை சாதப் பொடியை கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பாத்துட்டு போ…!” என பாசத்துடன் பாட்டி சொல்ல, “கரும்பு திண்ண கூலியா?!” என்ற பழமொழி மைண்ட் வாய்ஸாக எனக்குள் எழுந்தது.

கறிவேப்பிலை சாதப் பொடி செய்முறை:

கறிவேப்பிலை இலைகளை நிழலில் உலர்த்தி, அதோடு மிளகு, சீரகம், சுக்கு சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து, சாதத்தில் நெய்யுடன் பிசைந்து சாப்பிடலாம்

கறிவேப்பிலை துவையல் செய்வது எப்படி?

கறிவேப்பிலையுடன் சிறிதளவு புளி, உப்பு, வறுத்த மிளகாய் வற்றலைச் சேர்த்து அம்மியில் அரைத்து துவையலாக செய்து சாப்பிடலாம்.

மருத்துவ குறிப்பு: டாக்டர். S.சுஜாதா MD (S)
ஆரோக்யா க்ளினிக், சேலம்.