பகுதி 1 - கருமையான கூந்தல் பெற கச்சிதமான வழிமுறைகள்!

பெப்பர் & சால்ட் லுக் என்று சொல்லி நானும் சிலகாலம் எனது நரைமுடியை அப்படியே ஸ்டைலாக விட்டிருந்தேன். ஆனால், திடீரென்று கண்ணாடியில் பார்க்கும்போது தெரிந்தது…. பெப்பர் குறைந்து சால்ட் அதிகமாகிக் கொண்டே வருவது! ஆஹா… என்னடா இது நம் பெர்சனாலிட்டிக்கு வந்த சோதனை என்று எண்ணி, உடனே அதற்கான தீர்வுகளை தேடத் துவங்கினேன்.

டை அடிப்பதில் பலவித ரசாயன கலப்பு இருப்பதாகவும், அதனால் தோல் வியாதி முதல் புற்றுநோய் போன்ற பெரிய ஆபத்துகள் காத்திருப்பதாகவும் சமூக வலைத்தள பதிவுகள் மூலம் அறிந்து கொண்டேன். கூடவே ஹேர் கேர் சென்டர்களில் கூந்தல் பராமரிப்புக்கான கட்டணத்தை அறிந்தபோது, சாதாரண முடிக்காகவா இவ்வளவு செலவழிக்கிறார்கள் என அதிர்ச்சியாக இருந்தது.

தலைமுடி என்பது நம் வெளித்தோற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தனது ஒரு முடி உதிர்ந்தால்கூட உயிரை விடுவதாக சொல்லப்படும் கவரிமான் அளவிற்கு நாம் இல்லாவிட்டாலும், ஏதோ ஓரளவுக்கு நம் பெர்சனாலிட்டியையும் பராமரிக்க வேண்டியது நமது பொறுப்புகளில் ஒன்றுதான். தலைமுடி என்பது இயற்கை நமக்கு கொடுத்துள்ள ஒரு பரிசாகும். நம் உடல் எங்கும் நிறைந்திருக்கும் மயிர்கால்கள் நம் தேகத்தை பலவிதங்களில் பாதுகாக்கும் அம்சமாக உள்ளன.

குறிப்பாக தலைமுடி என்பது நம் கலாச்சாரத்தில் முக்கியமான ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது. அந்தக் காலத்தில் பெண்களுக்கு இணையாக ஆண்களும் நீண்ட கருங்கூந்தலுடன் வலம் வந்ததை நாம் அறிவோம்! ஆனால், அவர்கள் தங்கள் கூந்தல் பிரச்சனைகளுக்கு பியூட்டி பார்லர்களையோ, ரசாயன வெளிப்பூச்சுகளையோ பயன்படுத்தவில்லை என்பதுதான் நிதர்சனம்!

எனவே நான் இறுதியாக நம் உமையாள் பாட்டியிடமே இதற்கான தீர்வினை கேட்டுவிடலாம் என்று பாட்டி வீட்டுக்கதவைத் தட்டினேன்.

காலை நேரம் என்பதால் பாட்டி குளிப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். நான் வெளியில் இருந்து வந்ததால் குளியலறை சென்று கை கால்களை அலம்பிவிட்டுவரலாமென சென்றேன்.

அங்கே குளியலறையில் பாட்டி குளிப்பதற்காக வைத்திருந்த அந்த இரும்பு வாளியைப் பார்த்தேன். சற்று வித்தியாசமான தண்ணீராக அது தெரிந்தது. கை கால்களை அலம்பிவிட்டு அந்தத் தண்ணீர் பற்றி பாட்டியிடம் கேட்டேன். “அது நெல்லிக்காயை ஊற வைச்ச தண்ணிப்பா” என்று கூறிவிட்டு குளியலறைக்குள் சென்றுவிட்டாள் பாட்டி.

எனக்கு சஸ்பென்ஸ் அதிகமானது. பாட்டி குளித்திவிட்டு வெளியே வரும்வரை பதிலை அறிய ஆவலோடு காத்திருந்தேன்.

“நெல்லிக்காய நான் வாயில ஊறவச்சு சாப்பிட்டிருக்கேன். அப்படி சாப்பிட்டு தண்ணி குடிச்சா இனிப்பா இருக்கும்னு தெரியும். குளிக்கறதுக்கு நெல்லிக்காய் தண்ணியா? புதுசா இருக்கே?!” மனதிற்குள் கேள்விகள் வந்த வண்ணம் இருந்தன.

பாட்டி அந்த நெல்லிக்காய் தண்ணீரில் குளித்துவிட்டு வயோதிகத்திலும் நரைக்காத தன் கருங்கூந்தலுக்கு சாம்பிராணி காட்ட, நானும் பாட்டியின் அருகில் சென்று சாம்பிராணியை நுகர்ந்தபடியே எனது ஐயங்களைப் போக்கிக்கொள்ள விழைந்தேன்.

ஆம்... நெல்லிக்காயை தண்ணீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரில் நாம் குளித்து வந்தால் இளநரை மாறும் என்பதை பாட்டி மூலமாகத் தெரிந்து கொண்டேன்.

பின்னர் பாட்டி நம் கூந்தல் கருமையாக இருப்பதற்கு பல குறிப்புகளை ஒன்றன்பின் ஒன்றாக சொல்ல, நானும் குறிப்பெடுத்துக் கொண்டேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“பஞ்சகற்ப குளியல் பொடியை கரிசாலைச் சாற்றுல கலந்து, வெயில்ல ஊறவச்சு, சாறு சுண்டி நல்லா காஞ்ச பிறகு, அதை பொடி செஞ்சு தலையில் தேய்த்து குளிக்கலாம். கடுக்காய் ஊறிய தண்ணியில கரிசாலைச் சாறு கலந்து தலைமுடியில் தடவி தலைக்குளித்து வரலாம்.

அப்புறம் டிவில எல்லாம் பாத்திருப்பியே… முட்டையின் வெள்ளை கரு கலந்த ஷாம்பூனு சொல்லி அந்த விளம்பர படத்துல ஒரு பொண்ணு அழகா தன்னோட கருப்பான முடிய காத்துல ஆடவிட்டு ஜோரா நடந்து வருவாளே?!

“ஆமாம் பாட்டி, பார்த்திருக்கிறேன்! அந்த பொண்ணு டிவி சீரியல்ல கூட நடிக்குது.”

“நான் அந்த பொண்ண பத்தி சொல்லலப்பா அந்த ஷாம்பூ பத்தி சொன்னேன். நம்ம வீட்டுல கோழி முட்டை போடுது; அதுல வெள்ளைக்கரு இருக்குது; அதை எடுத்து நம்ம நேரடியா நம்ம தலையில தடவ போறோம். இதுக்கு எதுக்குப்பா மாச மாசம் இருநூறு முன்னூறு ரூபாய் செலவழிச்சு ஷாம்பு வாங்கணும்?

முட்டை வெள்ளைக் கருவ எடுத்து தலைமுடியில தடவி, வாரம் இரண்டு தடவை தலைக்குளிச்சு வந்தா செம்பட்டை முடி மறையும்.

சாப்பிடுற உணவுல கருவேப்பிலை, நெல்லிக்காய், முளைக்கீரை, இரும்புசத்து நிறைந்த காய்கறி பழங்கள சேத்துக்கணும்.

அப்புறம் தலைக்கு தேய்க்குற சாதாரண தேங்காய் எண்ணெய்க்கு பதிலா, தேங்காய் எண்ணெயில கருவேப்பிலச்சாறு கலந்து காய்ச்சி தினமும் தலைக்கு தேச்சு வரலாம்.

இன்னும் பலவித வஸ்துக்கள் கலந்த ஒரு இயற்கை தீர்வு ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ!” “சொல்லுங்க பாட்டி… நோட் பண்ணிக்குறேன்!”

“மருதாணி பொடி, முட்டை வெள்ளைக்கரு, தேங்காய் எண்ணெய், தயிர், டீ டிகாஷன், எலுமிச்சை சாறு சிலதுளி…. இதெல்லாம் இளம் வெந்நீருல நல்லா கலந்து, இரும்பு பாத்திரத்தில 4 மணி நேரம் ஊறவிட்டு எடுத்து வச்சுக்கணும்.

முதல்ல தலையில ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெய் தடவி மசாஜ் செஞ்சு, அதுக்கப்புறம் இந்தக் கலவையை முடியோட எல்லா பக்கமும் பரவும்படி தடவி, கொண்டை போட்டு 2-3 மணிநேரம் ஊறவிட்டு குளிச்சிட்டு வந்தா முடி கருமை நிறமடையும்.”

“சரி பாட்டி…எண்ணெய் தேச்சு குளிக்கிறதுக்கு ஸ்பெஷலா ஏதாவது எண்ணெய் இருந்தா சொல்லுங்க!” “நரைமுடி கலர் மாறி கருப்பா ஆகுறதுக்கு ஒரு ஸ்பெஷல் எண்ணெய் பத்தி சொல்றேன். திரிபலா பொடி, மருதாணி பொடி, கருவேப்பிலை பொடி, கரிசாலைப் பொடி, வெட்டிவேர் பொடி, ரோஜா பொடி, சந்தன பொடி, அதிமதுர பொடி ஆகிய எல்லாத்தையும் சம அளவு (10கி) எடுத்து தேங்காய் எண்ணெயில (1லிட்) கலந்து, வெயில்ல 4 நாள் மட்டும் வைக்கணும். அதுக்கப்புறம் வடிகட்டி எடுத்து, இந்த எண்ணெய தலை குளிக்கிறதுக்கு முன்னாடி தடவி, அரை மணிநேரம் கழிச்சு குளிச்சிட்டு வந்தா நரைமுடி செம்பட்டை முடியல்லாம் கருமையாகும்.

அப்புறம் இன்னொரு ஸ்பெஷல் கலவையும் இருக்கு…

அவுரி விதை, செம்பருத்திப் பூ, காய வைத்த நெல்லிக்காய், காய வைத்த கருவேப்பிலை… எல்லாத்தையும் சம அளவு பொடி செஞ்சு தண்ணியில கலந்து, இரும்புப் பாத்திரத்தில 4 மணிநேரம் ஊறவைக்கணும். வெள்ளை முடி இருக்குற இடத்துல இந்தக் கலவையை பூசி, அரைமணி நேரம் கழிச்சு குளிச்சு வந்தா முடி கருமை நிறமாமாறுவதோட, நரை முடி வராமலும் தடுக்கும்.”

“அதெல்லாம் சரி பாட்டி, இத்தனை பொடியையும் நான் எங்கன்னு போய் வாங்குறது?”

“நீ எங்கயும் போயி அலைய வேண்டாம்! நம்ம ஈஷா ஆரோக்யா மருத்துவமனைகள்ல நான் சொன்ன எல்லா மூலிகை பொடியும் கிடைக்குது”

“ஓ ரொம்ப நல்லது பாட்டி!”

பாட்டியிடம் விடைபெற்றுக் கொண்டு ஈஷா ஆரோக்யாவிற்குச் செல்வதற்காக வெளியில் வண்டியை ஸ்டார்ட் செய்தபோது, திடீரென்று மழைமேகம் சூழ்வதுபோல் தோன்ற, திரும்பிப் பார்த்தேன்; பாட்டி தன் கார்மேக கூந்தலைக் உதறி அள்ளிமுடிந்து கொண்டிருந்தாள்.

மருத்துவ குறிப்புகள்: 
மரு.பா.சக்தி புவனாம்பிகை,
சேலம் ஈஷா ஆரோக்யா மருத்துவமனை