இந்த வார ஸ்பாட்டில், வாழ்க்கையில் மனிதர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளையும், அப்படி முடிவெடுக்கும் போது நம்மில் பெரும்பாலனோர் போராடுவதற்கான காரணங்களையும் சத்குரு விளக்குகிறார். என்ன செய்தாலும் வலிப்பது ஏனென்று தெளிவாக்குவதோடு, "இருத்தல்" எனும் அழகிய கவிதையின் மூலம் "இல்லாத ஒரு பயணத்தை மேற்கொள்ளும் முயற்சியைக் கைவிடும்போது தான் இருத்தலின் பரவசத்தை அறிவீர்கள்" என்று சொல்கிறார்.

தினசரி அளவில், மக்கள் என்னை சந்தித்து அவர்கள் முடிவெடுக்க சிரமப்படும் விஷயங்களில் என் அறிவுரையைக் கேட்கிறார்கள் - உதாரணத்திற்கு பணிபுரிய எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது, திருமணம், குழந்தைகள், ஆன்மீகத்தில் ஈடுபடுவது, அல்லது விவாகரத்து செய்வதா வேண்டாமா. பிரபஞ்சத்தில் எல்லாம் இருக்கும் நிலையில் (இருத்தலளவில்), நாம் வாழ்க்கையைப் பார்ப்போம். நீங்கள் தனியாகப் பிறந்தீர்கள் என்பதுதான் நிதர்சன உண்மை - பிறகு திருமணம் எனும் கடினமான முடிவை எடுத்தீர்கள். இப்படிப் பார்த்தால், உங்கள் பழைய இயல்புக்குத் திரும்புவது சாதாரண ஒரு முடிவு. நீங்கள் செய்யும் எல்லாவற்றுடனும் உங்களை அடையாளப்படுத்தியிருப்பதாலும், இன்னொருவரை உங்களுக்கு சொந்தமான பொருளாக கருதுவதாலும் மட்டும்தான் இந்த முடிவு கடினமானதைப் போல தோன்றுகிறது. உங்கள் உடலை நாளை விடுவதென்றாலும் அது கடினமாக முடிவு கிடையாது. நீங்கள் முதலில் இருக்கவேயில்லை; பிறகு, யாரோ ஒருவரின் செயலால் நீங்கள் வர நேர்ந்தது, இப்போது இங்கு இருக்கிறீர்கள். மீண்டும் இல்லாமல் போவது ஒரு சாதாரண முடிவு. வாழ்க்கையில் கடினமான முடிவுகள் ஏதும் கிடையாது. நீங்கள் பல விஷயங்களை இறுகப் பற்றிக்கொண்டிருப்பதால் தான் ஒவ்வொரு முடிவும் உள்ளே கலவரத்தை ஏற்படுத்துகிறது. இல்லாவிட்டால் விவாகரத்து என்றாலும் உயிரை விடுவது என்றாலும் எதுவும் கடினமான முடிவல்ல. அது பெரிய விஷயமாகவே இருக்கலாம், ஆனால் அது வாழ்க்கையில் இன்னுமொரு படி மட்டுமே, அது எப்படியும் நடந்தேறும், நீங்கள் அந்தப் படியை நீங்களாக எடுக்காவிட்டாலும் ஏதோ ஒரு விதத்தில் அது உங்களுக்கு நடந்தேறும். வாழ்க்கை உங்களை அதைச் செய்யும் நிலைக்குத் தள்ளும்முன் நீங்களாகவே விழிப்புணர்வாக செய்வது தான் இரண்டிற்குமிடையே உள்ள ஒரே வித்தியாசம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முடிவெடுப்பது கடினமானதல்ல. இது கடினமாவதற்குக் காரணம், உங்களைச் சுற்றியுள்ள பல விஷயங்களை ஆழமாகப் பற்றியிருக்கிறீர்கள். மேற்கத்திய சமுதாயங்களில், திருமணம் செய்வதா வேண்டாமா என்று முடிவெடுப்பதற்கு மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். யாரோ ஒருவருடன் அவர்கள் பல வருடங்களாக வாழ்ந்துகொண்டு இருப்பார்கள், ஆனாலும் திருமணமெனும் பந்தத்திற்குள் நுழையப் போராடுவார்கள், ஏனென்றால் அவர்கள் பற்றிக்கொண்டிருக்கும் சின்னச்சின்ன விஷயங்களை விடவேண்டியிருக்கும். நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும், நீங்கள் எதையாவது விடவேண்டியிருக்கும். விவாகரத்து என்று வரும்போது, அந்த முடிவெடுப்பதற்கும் போராடுகிறார்கள், ஆனால் சற்று குறைவான போராட்டமாக இருக்கும். இந்தியாவில் திருமணம் சுலபம் - விவாகரத்து கடினம். மேற்கில் திருமணம் கடினம் - விவாகரத்து சுலபம். இரண்டு வேறு கலாச்சாரங்கள், ஆனால் அதே அடிப்படையான போராட்டம். இரண்டு விதங்களிலும், அடிப்படையான பிரச்சனை ஒன்றுதான். இரண்டு சூழ்நிலைகளிலும் முடிவெடுப்பதற்கு மக்கள் சிரமப்படுகிறார்கள். இரண்டில் எது செய்தாலும் வலிக்கும், ஏனென்றால் நீங்கள் அல்லாத பல விஷயங்களுடன் உங்களை அடையாளப்படுத்தியுள்ளீர்கள். இது ஒரு முள்வேலியில் சிக்கியிருப்பதைப் போன்றது - எந்தப்பக்கம் அசைந்தாலும் வலிக்கிறது. ஏனென்றால் முள் பலதிசைகளில் பின்னப்பட்டிருக்கிறது, இருப்பதை வைத்துக்கொண்டு அசையாமல் உங்களால் வாழவும் முடியாது. வலி ஏற்படுத்தினாலும் நீங்கள் நகர்ந்தாகவேண்டும்.

இந்த முள்வேலியிலிருந்து எப்படி வெளியே வருவது? இந்த முட்கள் கற்பனையானவை. வாழ்க்கையின் பல அம்சங்களுடன் நீங்கள் கொண்டுள்ள அடையாளங்களால், இனிமையாக இருந்திருக்க வேண்டியவை வலிதரும் முட்களாகிவிட்டன. உங்கள் மனைவி, கணவன், குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லாம், நீங்கள் எப்போதும் விரும்பியிருந்த சாதாரண இன்பங்கள். அவை வலிகளாக மாறியிருப்பதன் காரணம், அவற்றுடன் நீங்கள் உங்களை அதிகமாக அடையாளப் படுத்தியிருப்பதுதான். வாழ்க்கையின் ஒவ்வொரு சாதாரண செயல்முறையும் வலிக்கிறது. நீங்கள் அல்லாத பல விஷயங்களுடன் உங்களை நீங்கள் அடையாளப்படுத்தியிருக்கும் அதே சமயம், எதுவும் உங்களுக்கு வலி தரக்கூடாது என்றால், வாழ்க்கை நடக்கக்கூடாது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படி செய்யும்போது உங்கள் நோக்கத்தை நீங்களே தோற்கடிக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறீர்கள். உங்கள் உடலுடன் நீங்கள் அடையாளமின்றி இருந்தால், வேறொரு உடலுடனும் வேறெந்த பொருளுடனும் அடையாளமின்றி இருப்பீர்கள். யாரோ ஒருவருடன் இருப்பதும், அவருடன் சிக்கிப்போவதும், முற்றிலும் மாறுபட்ட இருவேறு தன்மைகள். யாரோ ஒருவருடன் இருப்பது மூலம் நீங்கள் வாழ்க்கையை கட்டமைப்பீர்கள். பற்றுதல் உருவாக்குவது மூலம், நீங்கள் இந்த தனிமனிதனின் அழிவைத் தேடுகிறீர்கள்.

இருத்தல்

வாழ்க்கையின் இந்த அர்த்தமற்ற
பயணம், எங்கோசென்றிடும் ஏக்கத்துடன்
எத்தனிக்கச்செய்கிறது, தேங்கிப்போவது
மரணத்திற்கு சமம். போய்க்கொண்டே
இருக்கச்சொல்கிறது. ஆனால் போவதற்கு
ஏது இடம், இருப்பதெல்லாம் இங்கு
என்னுள் இருக்கும்போது. காலமும் வெளியும்
அறியாமை உருவாக்கிய மாயை எனும்போது,
வாழ்க்கையின் நிழலை வாழ்க்கையென தவறாய்
நினைக்கும்போது, நிழலின் நீளமும்
அகலமும் அளப்பது ஒருவரின் அறியாமையை
திடப்படுத்துகிறது. இது செல்லும் இடமும்
செல்லவேண்டிய தூரமும் பற்றியதல்ல.
வெகுதூரம் செல்வது அறியாமையில்
மூழ்கியிருக்கும் ஒரு உயிரின் வெளிப்பாடு.
போவதா வேண்டாமா என்பதுகூட
கேள்வியல்ல. இல்லாத ஒரு பயணத்தை
கைவிடுவதில், இருத்தலின் பரவசத்தை உணர்ந்திடுவாய்.

Love & Grace