இந்தவார சத்குரு ஸ்பாட்டில், புத்தபௌர்ணமி தினமான இன்று நாம் உச்சநிலையையே எப்போதும் இலக்காகக் கொள்ளவேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறார் சத்குரு. அதோடு புத்தர் உணர்ந்ததை நாம் உணர்வதற்கு வழிசெய்யும் எளிமையான வழிமுறை ஒன்றையும் நம்மிடம் கொடுத்துள்ளார், படித்து மலர்ந்திடுங்கள்.

நோக்கத்தில் தளராது இருக்கும் ஒரு மனிதர், தன்னை ஊனமாக்கியிருக்கும் எல்லைகள் அனைத்தையும் கடந்துசெல்ல முடியும் என்பதற்கு புத்த பௌர்ணமி தினம் இன்னுமொரு நினைவூட்டல். உலகம் முழுவதையும் முக்திநிலை நோக்கிச் செல்லவைக்கும் கௌதம புத்தரின் கனவு இன்னும் நிறைவேறவில்லை. பொருள்தன்மையைக் கடந்த ஒன்றை ஒரு கணமேனும் உணர்ந்திருக்கும் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்வது இதுதான், இதை அனைவருக்கும் நிகழ்த்துவதற்காக வேலை செய்யுங்கள். "எப்படி" என்பது கேள்வியாக இருந்தால், இந்த புத்த பௌர்ணமி தினத்தில் நீங்கள் எடுக்கக்கூடிய ஒரு எளிமையான உறுதிமொழியை நான் உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் இதுவரை உணர்ந்ததில் மிக ஆழமான, இனிமையான அனுபவத்தை அடையாளம் காணுங்கள். அது நிகழ்ந்த அந்தக் கணத்தில் எப்படிப்பட்ட முகத்தை சுமந்திருந்தீர்கள்? அந்த அனுபவத்தையும் வெளிப்பாட்டையும் உங்கள் வாழ்க்கையின் கீழ்க்கோடாக செய்திடுங்கள். நீங்கள் ஏற்கனவே உணர்ந்துள்ள அந்த உயர்வான நிலைக்குக் கீழே நீங்கள் செல்லக்கூடாது. அந்த கோட்டிற்கு மேலே மட்டுமே நீங்கள் இருக்கவேண்டும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உணர்ந்துள்ள உச்சத்தை உங்கள் எதிர்காலத்தின் அடிக்கோடாக செய்திடுங்கள். தன்னிலை மாற்றத்திற்கான கருவிகள் இருக்கின்றன. சரித்திரத்தில் நீங்கள் சரியான காலகட்டத்தில் இருக்கிறீர்கள். உங்கள் முழுமைநிலைக்கு மலர்வதற்கு இது சரியான நேரம். நான் இங்கு இருக்கும்போது, சராசரியை உங்கள் இலக்காக வைத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் இலக்கு உச்சநிலையை அடைவதாக மட்டுமே இருக்கட்டும்.

இந்த புத்தபௌர்ணமி தினம் உள்வளர்ச்சி நோக்கி உங்களை உந்தித்தள்ளட்டும்.

ஆசிகள்,
சத்குரு

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த சத்சங்கத்தில் சத்குரு புத்தர் குறித்தும் புத்த பௌர்ணமி குறித்தும் பேசிய வீடியோ ஒன்றையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.