இந்தவார சத்குரு ஸ்பாட்டில், பாலின வேறுபாடு உடலில் எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதை விரிவாக விளக்குவதோடு, அதைக் கடந்து செல்வதற்கான வழிகாட்டுதலையும் சத்குரு வழங்குகிறார்.

பாலினங்கள் ஒரு பொருட்டாக இருக்கவேண்டிய இரண்டே இடங்கள் கழிப்பறையும் படுக்கையறையும் மட்டும்தான் என்று நான் எப்போதும் சொல்வதுண்டு. ஆனால் இப்போது எந்தக் கழிப்பறைக்குச் செல்வது என்பதுகூட விவாதம் செய்யப்படும் நிலை வந்துவிட்டது. பாலினம் என்பது மனித உடலமைப்பில் எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்ற கேள்வியை இது எழுப்புகிறது. உடலளவில் இது பலவிதங்களில் வெளிப்பட்டாலும், உடலிலுள்ள பஞ்சபூதங்களின் அளவில் இது வேறுபடுகிறதா? சாதாரணமாக, பஞ்சபூதங்களின் அளவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே இயல்புகள் மாறுபடுகின்றன, ஆனால் இது தனிமனிதர்களுக்கு வித்தியாசப்படலாம். பொதுவாக பெண்களுக்கு நீர் தத்துவம் ஆதிக்கமானதாய் இருக்கும், ஆண்களுக்கு பூமி தத்துவம் ஆதிக்கமானதாய் இருக்கும். இது பெண்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் ஒருவித வளைந்துகொடுக்கும் தன்மையைத் தருகிறது. ஆண்களுக்கு பூமி ஆதிக்கமானதாய் இருப்பதால், உறுதியும், அழுத்தமும், திடமும், வலுவாக வெளிப்படுத்தும் தன்மையும் இயல்பாகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இயற்கையில், பெண்களுக்கு உள்ளுணர்வு அதிகமாய் இருக்கும், ஆண்களுக்கோ காரண அறிவு அதிகமாய் இருக்கும். மறுபடியும் சொல்கிறேன், இது அனைவருக்கும் பொருந்தவேண்டிய அவசியமில்லை, ஆனால் பொதுவாக ஒரு பெண் வாழ்க்கையை அனுபவித்துணர விரும்புகிறார், ஒரு ஆண் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள விரும்புகிறார். அணுகுமுறையில் இந்த மிகப்பெரிய வேறுபாடு இருப்பதற்குக் காரணம், ஒருவரில் நீர் ஆதிக்கம் செலுத்துகிறது, இன்னொருவரில் பூமி ஆதிக்கம் செலுத்துகிறது. மற்ற தத்துவங்கள் ஒவ்வொரு தனிமனிதருக்குள்ளும் ஒவ்வொரு விதத்தில் இயங்குகின்றன. நீங்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், மனதளவில், எதிர்பாலினம் எதைத் திறம்படச் செய்கிறதோ அதை நீங்களும் திறம்படச் செய்திட, உங்களுக்கு நீங்களே பயிற்சியளித்துக்கொள்ள முடியும். அடிப்படையில், ஆண்களுக்குள்ளும் பெண்களுக்குள்ளும் இப்படி பஞ்சபூத தத்துவங்கள் மாறுபடுவது சில அடிப்படையான செயல்பாடுகளுக்காக மட்டுமே. இந்த செயல்பாடுகள் குறித்து இன்று நாம் விவாதம் செய்துகொள்ளலாம், ஏனென்றால் இன்று நம் வீடுகளிலும் அலுவலகங்களிலும் நாம் பாலின வித்தியாசங்கள் சமப்படுத்தப்பட்டுள்ள ஒரு செயற்கையான உலகை உருவாக்கியுள்ளோம். ஆனால் நீங்கள் காடுகளில் வசித்திருந்தால், இந்த வித்தியாசங்கள் இயற்கையான தேவைகளாக அமைந்திருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, அடிப்படையில் தாயெனும் ஒரு பெண் நம்மைச் சுமந்ததால் தான் நாம் இங்கு இருக்கிறோம் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது, அடுத்த தலைமுறையை உருவாக்குவது பெண் உடலின் ஒரு செயல்பாடு. அதனால் பெண்ணின் உடல் ஒரு குறிப்பிட்ட விதத்தில் உருவாகியுள்ளது. இந்த இனப்பெருக்க செயலிற்கு, நீர்த்தத்துவம் மிகவும் முக்கியமாகிறது.

ஒரு குறிப்பிட்ட வயதுவரை, ஆண் பெண் உடலமைப்பின் பஞ்சபூத தத்துவங்கள், ஒருவருக்கொருவர் நிறைவைத்தரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. வாழ்க்கையின் பிற்காலத்தில் ஆண் பெண் உடல்கள் தனித்தனியாக தம்மை மாற்றியமைத்துக்கொள்கின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சமுதாயத்தில் செய்யப்படும் ஏற்பாடுகளை, குறிப்பாக திருமண வாழ்வையும் குடும்பத்தையும் வாழ்க்கை முழுவதும் அப்படியே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கைக்கு மனிதர்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். அதற்கு மாறாக நடந்துகொண்டால், எல்லாவற்றைப் பற்றியும் கருத்துச் சொல்லி முத்திரை குத்தும் இந்த சமுதாயம், அவர்களுக்கு ஓடுகாலிகள் என்று பெயர்சூட்டிவிடும். இந்தப் பழக்கத்தாலும், மனதளவிலும் உணர்ச்சியளவிலும் உள்ள பாதுகாப்பின்மையாலும், தேவைப்படும் கட்டத்தைத் தாண்டியும் ஆண் பெண் உறவை மக்கள் தொடர்கிறார்கள். ஆண் பெண் உடலமைப்பிலுள்ள இந்த பஞ்சபூதங்களின் வித்தியாசமான அமைப்பு, அதாவது ஒன்றில் நீர் ஆதிக்கமாய் இருப்பதும் ஒன்றில் பூமி ஆதிக்கமாய் இருப்பதும் தற்காலிகமானது. நீங்கள் எவ்வளவு சீக்கிரம் இந்த பாலினம் சார்ந்த இயல்புகளைக் கடக்கிறீர்கள் என்பதை உங்களுக்குள் ஆகாயத் தத்துவத்தை எந்த அளவு மேம்படுத்துகிறீர்கள் என்பதே நிர்ணயிக்கிறது. உங்கள் தற்போதைய எல்லைகளை நீங்கள் கடக்க விரும்பினால், உங்கள் ஐம்புலன்கள் மற்றும் பொருள்தன்மையக் கடந்து உங்கள் கிரகிக்கும் திறனை மேம்படுத்தி பிரபஞ்சத்தின் புதிரான பரிமாணத்தை ஆராய்ந்துணர வேண்டும். உங்கள் உடலமைப்பில் ஆகாயத் தத்துவத்தின் விகிதத்தை அதிகரிப்பது அத்தியாவசியமானது. இப்போது உங்களுக்குள் ஆகாயத் தத்துவத்தை எப்படி மேம்படுத்துவது என்பதுதான் கேள்வி. முதலில், பொருள்நிலையில் படைத்தல் என்பது பஞ்சபூதங்களான பூமி, நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயத்தின் கலவையால் மட்டுமே நிகழ்ந்ததல்ல. படைப்பு நிகழ்வதற்கு முன், வெறுமை அல்லது ஷூன்யம் மட்டுமே இருந்தது. இந்த ஷூன்ய நிலையிலிருந்து ஆகாயம் அல்லது முதல் பஞ்சபூத தத்துவம் தோன்றியது. மற்ற நான்கு தத்துவங்கள் ஆகாயத் தத்துவத்திலிருந்து தோன்றின.

ஆகாயத் தத்துவத்தை மேம்படுத்துவது என்றால் உங்கள் தலைக்குள் வெற்றிடங்களை உருவாக்குவதல்ல. ஆகாயத்தை மேம்படுத்துவது என்றால், ஆன்மீகரீதியாகவும் மனதளவிலும் உங்கள் உண்மையான தன்மை நோக்கி நகர்வது. உங்களுக்குள் ஆகாயத்தத்துவம் ஆதிக்கமானதாய் மாறினால், உங்கள் ஆன்மீகத் தேடுதலே மற்ற அனைத்துத் தேவைகளையும் விடப் பெரிதாக இருக்கும். ஆகாயத் தத்துவம் உங்களுக்குள் ஆதிக்கமானதாய் இருக்கும்போது உடல்சார்ந்த தன்மைகள் முக்கியமில்லாது போய்விடும். உடலைப் புறக்கணிப்பதல்ல இதன் அர்த்தம், உடலைக் கடந்து செல்வதே இதற்கு அர்த்தம். கடந்துசெல்வது என்றால், தற்போதைய எல்லைகளைக் கடப்பதைக் குறிக்கிறது. மக்கள் சாதாரணமாக தங்கள் இனம், மதம், தேசம், பாலினம் சார்ந்த அடையாளங்கள் அல்லது ஆளுமைத்தன்மையின் குணாதிசயங்களைக் கொண்டு தங்களை ஒரு தனித்துவமான மனிதராக வித்தியாசப்படுத்துகிறார்கள். அடிப்படையில் உங்கள் எல்லைகள் கொண்டு, அல்லது உங்களுக்கு நீங்களே வரைந்துள்ள வரையறைகள் கொண்டு உங்கள் தன்மையை விளக்குகிறீர்கள். ஆகாயத்தின் விகிதத்தை அதிகரித்து ஆன்மீகப்பாதையில் செல்வது என்றால், உங்கள் எல்லையில்லாத்தன்மை கொண்டு உங்களை விளக்குவது. எல்லையில்லாத் தன்மையோ விளக்க இயலாதது.

உங்கள் புரிதல் பொருள்சார்ந்த தன்மையின் எல்லைகளைக் கடந்துவிட்டால், ஆண் பெண் என்று எதுவுமில்லை. பல்வேறு விதங்களில் திறமையை வளர்த்துக்கொள்ளக் கூடிய ஒரு மனித வடிவம் மட்டுமே இருக்கும். செயலாற்றும் திறனை மட்டுமல்லாது, கிரகிப்புத்திறனையும் வளர்த்துக்கொள்ள முடியும். ஒரு மனிதராக உங்கள் திறன்களை வளர்ப்பதோடு, உயிராக உங்கள் திறன்களை வளர்க்கலாம், நீங்கள் இன்னும் உயிரோட்டமாகலாம். ஒவ்வொரு மனிதரும் இன்னும் பெரிய பரிமாணத்தில் வாழ்க்கையை உணரும் திறமை படைத்தவராக இருக்கிறார். கடந்துபோக வேண்டும் என்ற ஏக்கம் அனைவருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது. உங்கள் அலுவலகம், குடும்பம், நண்பர்கள், சமூக ஊடகங்கள், அலைபேசிகள் மற்றும் கணிப்பொறியிலிருந்து உங்களை விலக்கிவைத்தால், தற்போதைய எல்லைகளைக் கடப்பதற்கான தேவையை உணர்வீர்கள். இதற்கு எவ்விதமான போதனையும் தூண்டுதலும் தேவையில்லை. தேவையான நேரம் ஒதுக்கினால் ஒவ்வொரு மனிதரும் தன் இருப்பின் எல்லைகளை அறிவார். உங்கள் எல்லைகள் குறித்த விழிப்புணர்வு உங்களுக்கு வந்துவிட்டால், அதைக் கடப்பதற்கான ஏக்கம் உதிப்பது இயல்பானது.

Love & Grace