Question: நான் ஹடயோகா ஆசிரியர் பயிற்சி மேற்கொள்கிறேன். இங்கே நாம் எப்படி உட்கார வேண்டும், என்ன சாப்பிடவேண்டும், என்னசாப்பிடக்கூடாது, எப்படி சுவாசிக்க வேண்டும் என்பது உட்பட பல விஷயங்களை நுட்பமாகப் பார்த்துவருகிறோம். நம்மைநாமே ஆனந்தமான மனிதராக மாற்றும் முயற்சியில், இந்தப் புதிய விதிமுறைகளிலும் கட்டுப்பாடுகளிலும் சிக்கி துயரமான மனிதராக மாறாமல் இருப்பது எப்படி?

சத்குரு:

முதலில் புதிய விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் இதில் கிடையாது. இவற்றை ஒருவிதத்தில் பார்த்தால் விதிமுறைகள் என்று சொல்லலாம், ஆனால் நிச்சயம் இவை கட்டுப்பாடுகள் கிடையாது. இந்தியக் கலாச்சாரத்தில் ஒருபோதும் போதனைகள் இருந்ததில்லை. கடவுளால் இந்தியர்களுக்குக் கட்டளைகள் பிறப்பிக்க முடியாது. அப்படிச்செய்தால் அவர்கள் அதை எதிர்த்து விவாதம் செய்வார்கள். பல கேள்விகள் கேட்பார்கள். நாங்கள் கைலாய யாத்திரை சென்றிருந்த போது ஒரு இந்திய பங்கேற்பாளர் மிகச் சிக்கலான ஒரு கேள்வியைக் கேட்டார். அப்போது நான் சொன்னேன், "இது இந்தியப் பிரச்சனை. நீங்கள் மிக சிக்கலான கேள்வியை எப்படி உருவாக்குவது என்று பார்க்கிறீர்கள்." உடனே ஒரு சீனப் பெண்மணி, "ஆம்! நான் அமெரிக்காவில் பணிபுரிகிறேன், எப்போதும் கேள்வி கேட்பவர்கள் இந்தியர்களாகவே ஏன் இருக்கிறார்கள் என்று நான் யோசித்ததுண்டு" என்றார். எல்லாவற்றைப் பற்றியும் கேள்வி கேட்கும் நமது பாரம்பரியம் மிகத் தொன்மையானது.

இந்தக் கலாச்சாரத்தில், பிரபஞ்சத்தை ஆளும் அந்த விதிகள் என்ன, நம் உள்தன்மையையும் படைத்தல் செயல்முறையையும் ஆளும் விதிமுறைகள் என்ன என்று கவனமாகப் பார்த்தார்கள்.

கடவுள் தனது தூதுவரையும் தனது மகனையும் பிற இடங்களுக்கு அனுப்பிவைத்தார், அதனால் மக்கள் அவர்களுக்கான விதிமுறைகளைக் கடவுளே வகுத்துக்கொடுத்தார் என்றார்கள், அதை எதிர்த்துக் கேள்வி கேட்க எவரும் துணியவில்லை. இங்கோ கடவுளே நேரில் வந்தார், யாரிடம் பேசுவது என்பது உட்பட கவனமாகத் தேர்வு செய்தார். அதையும் மீறி அவர்கள் கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டார்கள். கிருஷ்ணரிடம் அர்ஜுனர் எவ்வளவு கேள்விகள் கேட்டார் என்று தெரியுமா? கிருஷ்ணரால் அர்ஜுனருக்கு ஒரு கட்டளை கூட பிறப்பிக்க முடியவில்லை. புரியவைக்க பல விதங்களில் முயற்சி செய்தார், ஆனால் அர்ஜுனருக்கோ பல கேள்விகள் இருந்தன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்தியக் கலாச்சாரத்தில், வாழ்க்கையை ஆளும் விதிகளை நாம் தர்மம் என்கிறோம். கௌதமபுத்தர் அதனை "தம்மம்" என்றார். துரதிர்ஷ்டவசமாக இன்று மக்கள் தர்மம் என்றால் மதம் என்று நினைத்துக்கொள்கிறார்கள், ஆனால் தர்மம் என்றால் வாழ்வின் விதிமுறைகள் - போதனையல்ல, தத்துவமல்ல, நம்பிக்கை முறையல்ல, மதமல்ல.

பிரபஞ்சத்தின் விதிமுறைகள்

சமுதாயம் மற்றும் உலகின் பல்வேறு அம்சங்களை ஒழுங்குபடுத்தவும், முடிந்த அளவு அவை சீராக செயல்பட உதவியாகவும், மனிதன் உருவாக்கிய விதிமுறைகள் உள்ளன. உதாரணத்திற்கு, இந்தியாவில் தெருவின் இடதுபக்கத்தில் வாகனங்களை ஓட்டிச்செல்ல வேண்டும். இது முழுமுதல் உண்மையல்ல, போக்குவரத்து சீராக நடப்பதற்கு நாம் செய்திருக்கும் ஏற்பாடு இது. வாகனங்களும் அதற்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல சமுதாயத்தை சீர்படுத்தவும், அதன் ஒரு பகுதி இன்னொரு பகுதியுடன் மோதாமல் இருக்கவும் பலவிதமான சட்டங்களும் ஏற்பாடுகளும் உள்ளன. ஆனால் சமுதாயங்களும் மனிதன் உருவாக்கிய சட்டங்களும் வரும் முன்பே வாழ்க்கை சுமுகமாக நடந்து பரிணமித்தது. அப்படி நிகழ்வதற்கு அதனை ஆளும் சில அடிப்படையான விதிமுறைகள் இருந்திருக்க வேண்டும்.

உதாரணம் சொல்லவேண்டும் என்றால், காட்டுக்குள் நடந்துசென்றால், அதன் விதிமுறைகள் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அந்தக்காடு பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்துள்ளது. அது தன்னைத்தானே அழித்துக்கொள்ளாமலும், அதில் வாழும் உயிரினங்கள் ஒன்றையொன்று அழித்துவிடாமலும் அது இவ்வளவு காலம் நீடித்துள்ளது என்றால், அதனை ஆளும் விதிமுறைகள் இருக்கவேண்டும். இந்தக் கலாச்சாரத்தில், பிரபஞ்சத்தை ஆளும் அந்த விதிகள் என்ன, நம் உள்தன்மையையும் படைத்தல் செயல்முறையையும் ஆளும் விதிமுறைகள் என்ன என்று கவனமாகப் பார்த்தார்கள். கற்பனையாலோ, நம்பிக்கையாலோ அல்லாமல், கவனிப்பதன் மூலமாகவே வாழ்க்கையின் பல பரிமாணங்களை ஆளும் விதிமுறைகளைக் கண்டுபிடிக்கவும் செய்தார்கள்.

உடலெனும் இயந்திரத்திற்குள் தவறான எரிபொருளைப் போட்டால், அது திறம்பட இயங்கும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது.

எப்படி உட்காருவது என்பது நான் கண்டுபிடித்தது அல்ல. மனித உடல் ஒரு குறிப்பிட்ட விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தியானலிங்கத்திற்கு முன்பு நந்தி உட்கார்ந்திருக்கும் விதம், ஒரு காளை உட்காருவதற்கான சரியான முறை. ஆனால் நீங்கள் மனிதராக வந்திருக்கிறீர்கள், உங்கள் உடலின் வடிவியல் வித்தியாசமானது. அனைத்து ஜடப்பொருள்களுக்கும், பொருள்தன்மை சார்ந்த அனைத்து அம்சங்களுக்கும், வடிவியல் அடிப்படை உண்டு. பொருள்தன்மையுடைய ஒன்றின் வடிவியலை நீங்கள் புரிந்துகொண்டால், அது மனித உடலானாலும், காளையானாலும், இயந்திரமாக இருந்தாலும், அதன் வடிவியலை அறிந்தால் அதனை எப்படி சிறப்பாக பயன்படுத்துவது என்பதை அறிவீர்கள்.

பூமியிலுள்ள மற்ற உயிரினங்கள் அனைத்தும் தம் வடிவியலைத் தெரிந்துகொண்டு உடலை எப்படி முழுமையாக பயன்படுத்துவது என்பதையும் தெரிந்திருக்கின்றன. மனிதர்கள் மட்டும்தான் தங்கள் வடிவியலைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள், அவர்கள் தங்களைத்தவிர மற்ற அனைத்துக்கும் கவனம் செலுத்துகிறார்கள். அதனால் ஈஷா ஹடயோகாவில் வழங்கப்படுவது புதிய விதிமுறைகள் அல்ல. உங்கள் உடலின் வடிவியலுக்கு நீங்கள் கவனம் செலுத்தினால், குறைந்தபட்ச சக்தியை செலவிட்டு சிறந்த முறையில் இயங்குவதற்கு எப்படி உட்காரவேண்டும், எப்படி நிற்கவேண்டும் என்று கவனித்து செய்வீர்கள். பொருள்தன்மையில் உங்கள் செயல்திறன், இந்த வடிவியலை நீங்கள் எந்த அளவு புரிந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொருத்தே இருக்கிறது. வேறுவிதமாகச் சொல்வதென்றால், சமுதாயத்தில் இன்னொருவர் செய்வதைப் பார்த்து அதையே நீங்களும் செய்வதற்கு பதிலாக, விழிப்புணர்வாக இயங்குவது நோக்கி நகர்கிறீர்கள்.

சேர் டேபிள் போன்ற பொருட்கள் அனைத்தையும் உங்கள் வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்திவிட்டால், அப்போது உங்கள் உடலின் வடிவியலை நீங்கள் உணர்வீர்கள். இது உணவிற்கும் பொருந்தும். மனித உடல் ஒரு குறிப்பிட்ட விதமான உணவை ஏற்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பிழைப்பைத் தேடுவதால், அல்லது கலாச்சாரத்தின் தாக்கத்தால் மக்கள் எல்லாவித உணவையும் முன்பு உட்கொண்டிருக்கலாம். ஆதிகாலத்தில் உலகின் சிலபகுதிகளில் யாரோ மாமிசம் சாப்பிட்டால், அது அவர் தேர்ந்தெடுத்த ஒன்றாக இருந்திருக்காது, அது பிழைப்பிற்காக இருந்திருக்கும். அங்கு அவர்கள் வேறெதுவும் விளைவிக்க முடியாமல் இருந்திருக்கலாம், அல்லது அவர்களுக்கு விவசாயம் தெரியாமல் இருந்திருக்கலாம். பிற்காலத்தில்தான் அந்த உணவு அவர்கள் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகியது. அது பிழைப்பிற்காக இருந்திருந்தால் தவறேதும் இல்லை. இது ஒழுக்கநெறி பற்றியதல்ல, உடலெனும் இயந்திரத்திற்குள் தவறான எரிபொருளைப் போட்டால், அது திறம்பட இயங்கும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது.

செயல்திறன் மிக்க வாழ்க்கை

எவ்வளவு உராய்வு ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து காலப்போக்கில் உங்கள் முகம் கவலையில் நீண்டுபோகிறது. உராய்வு இல்லாவிட்டால் உங்கள் முகம் புன்னகையில் மலர்ந்திருக்கும்.

செயல்திறன் என்பது ஒரு குறிப்பிட்ட செயலைச் சிறப்பாக செய்வது மட்டுமல்ல. ஒரு மனிதராக நீங்கள் வந்துவிட்டால், உங்களிடமிருந்து என்ன தேவைப்படுகிறதோ அதைச் செய்யும் அறிவாற்றலுடன் நீங்கள் வந்திருக்கிறீர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதராய் இருப்பதன் முழு ஆழத்தையும் பரிமாணத்தையும் உணரும் திறனுடன் வந்திருக்கிறீர்கள். மனித வாழ்க்கை கனியவும், பலவிதமான செயல்களைச் செய்யும் வாய்ப்பைப் பயன்படுத்தவும், அனைத்திற்கும் மேலாக மனிதராய் இருப்பதன் எல்லா பரிமாணங்களையும் உணரத் தேவையான நுண்ணுணர்ச்சியைக் கொண்டுவரவும், உங்கள் உணவுப்பழக்கமும் உடலை வைத்துக்கொள்ளும் நிலையும் மனஅமைப்பும் அனுமதிக்கவில்லை என்றால், அது ஒரு வீணான வாழ்க்கை என்றே நான் சொல்வேன். ஒழுக்கநெறியோ, சொர்க்கத்திற்குக் கடவுச்சீட்டோ, சமுதாயத்தின் அங்கீகாரமோ தேடி சரியான விஷயங்களைச் செய்வதல்ல. ஒருவர் தன் வாழ்வில் அதிகபட்ச பலன்கள் பார்க்க சரியான விஷயங்களைச் செய்வது. இதைப் பல மனிதர்கள் பலவிதங்களில் அணுகுகின்றனர். ஆனால் உயிரை ஆளும் விதிமுறைகள் என்னவென்று நீங்கள் கண்டுபிடிக்காதவரை, அதிகபட்ச செயல்திறனுடன் நீங்கள் செயல்படமாட்டீர்கள்.

மேலோட்டமாகப் பார்த்தால் பொய்மைக்குக் கூட பலன்கள் கிடைப்பது போலத் தோன்றும். ஒருமுறை இப்படி நடந்தது, இரண்டு கார்கள் ஒன்றையொன்று மோதிக்கொண்டன. ஒரு காரில் வந்தவர் வழக்கறிஞர், இன்னொரு காரில் வந்தவர் மருத்துவர். மோதிய பிறகு இருவரும் அவரவர் கார்களை விட்டு வெளியே தவழ்ந்து வந்தார்கள். அந்த வழக்கறிஞர் தன்னுடைய காரிலிருந்து ஒரு பாட்டில் விஸ்கியை எடுத்து, "இது கொண்டாடுவதற்கான தருணம்! எவ்வளவு பெரிய விபத்து இது, ஆனால் ஒருவருக்கும் ஒரு கீறல் கூட இல்லாமல் உயிர் பிழைத்துவிட்டோம், கொண்டாடலாம் வாங்க!" என்றார். அவர் பாட்டிலை மருத்துவர் கையில் கொடுத்தார், அவர் விபத்தால் சற்று தடுமாறிப்போயிருந்தார், ஒரு பெரியமடக்கு குடித்துவிட்டு பாட்டிலை வழக்கறிஞர் கையில் திருப்பிக் கொடுத்தார். வழக்கறிஞர் பாட்டிலை மறுபடியும் காருக்குள் போட்டுவிட்டார். "நீங்கள் குடிக்கவில்லையா?" என்று அந்த மருத்துவர் கேட்டார், அதற்கு வழக்கறிஞர் "போலீஸ் வந்து சென்ற பிறகு குடிப்பேன்." என்றார்.

இப்படி சிலசமயம் தந்திரங்களும் வேலை செய்யலாம். ஆனால் இதை வாடிக்கையாக்கிக் கொண்டால், மற்றவர்களுக்கும் என்ன செய்வதென்று தெரிந்துவிடும், வாழ்க்கைக்கும் உங்களை என்ன செய்வதென்று தெரிந்துவிடும். வாழ்க்கையை ஆளும் விதிமுறைகளுடன் நீங்கள் ஒத்திசைவாய் இல்லாவிட்டால், வாழ்க்கை செயல்முறை உங்களை நொறுக்கிவிடும். பெரும்பாலான மனிதர்களுக்கு, வாழ்க்கையில் பேரிழப்பு ஏதும் நிகழவில்லை. வெளியில் அனைவரும் அவர்களிடம் அன்பாக இருந்தாலும், உள்ளிருந்து வாழ்க்கை அவர்களை கசக்கிப்பிழிகிறது. வாழ்க்கையை ஆளும் விதிகளுடன் ஒத்திசைவின்றி இருப்பதாலேயே இது நடக்கிறது. இதன் விளைவாக உங்களுக்குள் உராய்வு ஏற்படுகிறது. அதனால் வலியும் வேதனையும் பதற்றமும் டென்ஷனும் மன அழுத்தமும் துயரமும் பித்துப்பிடிப்பது போன்ற உணர்வும் ஏற்படுகிறது. எவ்வளவு உராய்வு ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து காலப்போக்கில் உங்கள் முகம் கவலையில் நீண்டுபோகிறது. உராய்வு இல்லாவிட்டால் உங்கள் முகம் புன்னகையில் மலர்ந்திருக்கும். மனிதர்கள் திறந்திருக்கும் சாத்தியங்கள் அனைத்தும், இயற்கை வகுத்திருக்கும் சில விதிமுறைகளின் வரையறைகளை அறிந்ததால் தான். இயற்கை ஒரு விதமாக இயங்கியதால் நீங்கள் மனிதராக உருவெடுத்தீர்கள். அது வேறுவிதமாக இயங்கியிருந்தால் நீங்கள் காளையாகவோ மரமாகவோ வந்திருப்பீர்கள்.

மனித உடல் தன்னை எப்படி வடிவமைத்துள்ளது என்பதற்கும், அது ஏன் இப்படி உருவெடுத்துள்ளது என்பதற்கும் நீங்கள் கவனம் செலுத்தி, அவற்றைப் பின்பற்றி ஒத்திசைந்து இருந்தால், உங்கள் உடலமைப்பு மிகக்குறைந்த உராய்வுடன் இயங்கும். உராய்வு இல்லாவிட்டால் நீங்கள் வேதனையுடனும் மன அழுத்தத்துடனும் இருக்கமாட்டீர்கள், தினமும் துயரத்தை உற்பத்தி செய்யமாட்டீர்கள். உங்கள் உடல் கட்டமைப்பை எப்படி ஒத்திசைவாக வைத்துக்கொள்வது என்பதை அறியாவிட்டால், குறைந்தபட்சம் அருள் என்னும் எண்ணெயை பயன்படுத்தி உங்கள் கட்டமைப்பு குறைந்த உராய்வில் இயங்கும் விதமாக வைத்துக்கொள்ள வேண்டும். அழகான ஒரு இயந்திரம் வைத்திருந்தாலும், தேவையான எண்ணெய் போடாவிட்டால், அது மோசமான சப்தங்கள் செய்யும். இந்த இடத்தில்தான் அருள் முக்கியத்துவம் பெறுகிறது. உங்கள் இயந்திரம் ஒத்திசைவாக இயங்கும் விதமாய் இல்லாவிட்டாலும், அருள் அதனை உராய்வின்றி இயங்கச்செய்யும்.