பல நூறு ஆண்டுகளுக்கு முன் நம் தமிழர்கள் உலகின் சில பகுதிகளில் பிரம்மாண்டமான கோவில்களை நிர்மாணித்தனர். கம்போடியா தேசத்தில் உள்ள அங்கோர்வாட் கோவிலும் அதில் ஒன்று. அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்...

சத்குரு:

கோவிலை பிடித்து வைத்திருக்கும் மரங்கள்

சியெம் ரீப் (siem reap) சிறிய அழகிய நகரம். இந்த நகரத்தின் 25-30 மைல் சுற்று வட்டாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலும் தத்தமது வகையில் ஓர் உன்னத படைப்பு. பெரும்பாலானவை சிதிலமடைந்துவிட்டன. பல கோவில்கள் மரங்களால் பிணைத்து வைக்கப்பட்டுள்ளன. இம்மரங்கள் கோவிலின் கூரைக்கு மேல் வளர்ந்து, கட்டிடத்தைப் பிடித்து வைத்திருக்கின்றன. கோவில் தகர்ந்து விழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே இம்மரங்கள் அதன் மீது வளர்ந்துள்ளதைப் போன்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது. சில இடங்களில் இந்த மரங்கள் கட்டிடத்தை சிதிலமடையச் செய்துள்ளன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
நான் இதனைப் பற்றிப் பேசக் காரணம், இதுபோன்ற அற்புதமான விஷயங்கள்கூட, முட்டாள்களால் வேருடன் அழிக்கப்படக் கூடும் என்பதற்காகவே சொல்கிறேன்.

இதனை உருவாக்கியவர்கள் ஏன் இதனைச் செய்தார்கள்? அவர்களுக்குள் அப்படி என்ன பித்து பிடித்தது? இப்படி ஒரு இடத்தைச் சுற்றி இத்தனை கோவில்களை உருவாக்கக் காரணம் என்ன? ஒருவர் தன் முழு ஆயுளையும் செலவழித்தால்கூட இப்படிப்பட்ட அமைப்பை உருவாக்குவது சிரமமாயிற்றே? ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கிரேன் இல்லை, லாரிகள் இல்லை, அதிநவீன சாதனங்கள் இல்லை, இப்படி எதுவுமே இல்லாமல் இப்படி ஒரு அமைப்பை உருவாக்க, அந்தத் தலைமுறை மக்கள் தன் நேரம் முழுவதையும் இதற்கே செலவு செய்திருக்க வேண்டுமே...! ஆம், நாம் ஆச்சரியப்படும் வகையில் அத்தனை பிரம்மாண்டமான விஷயங்களை அவர்கள் செய்தார்கள்.

இடம் - அங்கோர் வாட், அங்கோர் தாம். கட்டியவர்கள் தமிழர்கள். நாடு - இந்தியாவல்ல, கம்போடிய தேசம்.

எதற்காகக் கட்டினார்கள்? மனதால் கற்பனை செய்துகூடப் பார்க்க இயலாத இத்தனை பிரம்மாண்டம் ஏன்?

அங்கோர் வாட்டிலுள்ள பிரதான கோவில் கட்டப்பட்டபோது 112 லிங்கங்களை ஸ்தாபித்தார்கள் என்று சொல்கிறார்கள். உடலில் பிரதானமாக 112 சக்கரங்கள் இருப்பதால் அத்தனை லிங்கங்களை உருவாக்கினார்கள். இன்னும் அதனை விஸ்தாரமாக்கி 515 லிங்கங்கள் அங்கு உருவாக்கப்பட்டன. தலைசிறந்த ஒரு உடலை நிர்மாணம் செய்வது போன்ற ஒரு முயற்சி இது. ஒரு கோவிலையே மனித உடல்போல் அமைக்கும் பிரமாதமான செயல் இது. ஆனால், கோவில் கட்டப்பட்டு 200, 300 வருடங்களில் இதனை உருவாக்கிய அரசகுல வழிவந்தவர்கள் புத்த மதத்திற்கு மாறினர். அதனால் தங்கள் புது நம்பிக்கைக்கு ஏற்றவாறு அந்தக் கோவிலை மாற்றியமைக்க விரும்பினர். புது கோவில்களை எழுப்பினாலும் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட கோவிலை அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அதனால், அங்கிருந்த சிவலிங்கங்களை அப்புறப்படுத்தினர். இடமெங்கும் புத்தரை ஸ்தாபித்தனர். துரதிருஷ்டவசமாக, உலகம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நிலைகொள்ளத் துவங்கிவிட்டன.

எகிப்தில் உள்ள கோவில்கள்

எகிப்திற்குச் சென்றால், அங்கும் அதி அற்புதமான சில கோவில்களைக் காண முடிகிறது. ஆனால், உலக மக்களுக்கு எகிப்து என்றால் பிரமிட். ஆனால், அந்த பிரமிட்டை விட பிரம்மாண்டமான கோவில்கள் எகிப்தில் உள்ளன. வடிவியல்படி, பிரமிட் ஒரு அற்புதமான அமைப்புதான், ஆனால் அங்குள்ள கோவில்கள் அசாத்தியமானதாய், காண்போருக்கு பிரமிப்பை வழங்குவதாய் இருக்கின்றன. 4000 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் அங்கு செய்துள்ள பணியைப் பார்த்தால், மனிதனாய் பிறந்ததற்கே பெருமைப்படுவீர்கள். அப்படி வேலை செய்திருக்கிறார்கள். துருக்கியிலும் அப்படித்தான். 3000, 4000 வருடங்களுக்கு முன் அவர்கள் எழுப்பியுள்ள கோவில்கள் அற்புதமானவை. ஆரம்பக் காலத்தில் அவை தகர்க்கப்பட்டு தேவாலயங்களாக மாற்றப்பட்டாலும், பின்னர் அங்கு மசூதிகள் எழுப்பப்பட்டுவிட்டன.

ஆரம்ப காலங்களில் இதுபோன்ற கோவில்கள், தெய்வத்திற்காக உருவாக்கப்படாமல் அறிவியல் முறைப்படி, ஒரு கோவிலை உருவாக்கும் விஞ்ஞானம் அறிந்து உருவாக்கினர். அற்புதத்திலும் அற்புதமாய் இந்தக் கோவில்கள் எழுப்பப்பட்டன. நான் இதனைப் பற்றிப் பேசக் காரணம், இதுபோன்ற அற்புதமான விஷயங்கள்கூட, முட்டாள்களால் வேருடன் அழிக்கப்படக் கூடும் என்பதற்காகவே சொல்கிறேன். கட்டிடங்கள் அடையாளமாய் நின்றிருந்தாலும், அங்கு நிலவிய சக்தியோ, ஒருவர் வளர்வதற்கு உருவாக்கி வைக்கப்பட்டிருந்த சாத்தியமோ இன்று துளிகூட மிஞ்சவில்லை. முழுவதுமாகச் சிதைக்கப்பட்டுவிட்டது.

அதனால், ஒரு விஷயம் எத்தனை சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் பரவாயில்லை, எத்தனை புனிதமானதாக இருந்தாலும் பரவாயில்லை; அறியாமை அதனை அழிக்கக் கூடும். அறியாமையின் பலத்தை நீங்கள் அறியமாட்டீர்கள். இன்று உலகிலுள்ள முக்கிய பிரச்சனை சாத்தான் அல்ல; அறியாமை!