சத்குருவின் கவிதைகள் தமிழில் (Tamil Kavithaigal by Sadhguru)
கவிதைகள் என்றாலே ஆழமான ஒரு கருத்தை சுவையோடு புரிய வைப்பவை. ஒரு ஞானி கவிஞராகவும் இருப்பது எவ்வளவு அற்புதம்! வாழ்வின் முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தை அழகியலோடு வெளிப்படுத்தும் சத்குருவின் கவிதைகள் இங்கே உங்களுக்காக.
அன்பு (Tamil Kavithai about Love)
அன்புக்கு அப்பால்
என் அகவெளியின் விசாலத்தில்
இந்தப் பிரபஞ்சம் ஒரு சிறுதுளியே
உனக்கான என் அன்பு வெறும் ஒரு தந்திரம்தான்
இந்த உடல் பொம்மையைப் பிடித்துவைத்திருக்க
அன்போ ஏக்கமோ நான் அறியேன்
உள்ளதெல்லாம் நானே என்பதால்
எல்லையில்லா சாத்தியம் நீ
எல்லைகொண்ட பல விதங்களாய் குறுகி அமர்ந்தாய்
உன் குறுகிய வரம்புகளை போற்றி வைத்தாய் - ஆனால்
அத்தனையும் உள்ளேற்கும் என் அரவணைப்பை விலங்கிட முடியாது
இருப்பதெல்லாம் நான், நான்தான், நான் மட்டும்தான்
பிறகு ஏன் இந்த நீயும் நானும்?
அன்பும் அருளும்,
சத்குரு
அன்பு
பலர் அறிவது போல் அன்பு
வெறும் உணர்ச்சி மட்டுமன்று
பிரத்தியேக வரம்புகளின் வறட்சியினின்று
அத்தனையும் அரவணைக்கும் நிலை எனும்
வளமான அறுவடை நோக்கி நம் எண்ண உணர்வுகளை
வழிநடத்தும் தண்டவாளம் அன்பு
வெறும் பிணைப்பு அல்ல அன்பு
எல்லையற்ற நிலையின் எல்லைக்கு உனை
ஏந்திச் சேர்க்கும் மிதவை பலூன் அன்பு
அன்பும் அருளும்,
சத்குரு
அன்பு
அன்பெனில் உங்களுக்கு
மனம்போன போக்கா? - அல்லது
மனதின் உணர்ச்சியா? - அல்லது
வேட்கையான தாபம்தானா?
எனக்குள் அது மனப்போக்கு உணர்வல்ல
எரிந்துகொண்டிருக்கும் மகத்தான தீ அது
நான் விழைவதுபோல்
என்னை அது விழுங்கிடாதோ!
களங்கமற்ற அழிவற்ற நிலைக்கு
என்னை கொண்டு சேர்த்திடாதோ!
அழிவற்ற இம்மகத்தான தீயில் எரிவது
அழிவுள்ள பிராணிகளுக்கு பாக்கியம் அன்றோ!
அந்தோ! அழியும் மானுடர் பலரும்
இப்பேரதிசயத்தை கொன்றுவிட்டனரே
இம்மையின் அற்ப காரணங்களுக்காக
இம்மகத்தான தீயை
ஊதி ஊதிப் பெருக்குங்கள்
அதில் உருகிக் கரைந்திட
ஒன்றிக் கரைந்திடும் பேற்றினை உணர்ந்தோர்க்கு
ஒருபோதும் இனி அழிவென்பது இல்லையே!
அன்பும் அருளும்,
சத்குரு
அன்பு
பேனாவின் ஒற்றை கீறல்
நாவின் ஒற்றை ஜாடை
விழியின் ஒற்றை பார்வை
கரத்தின் ஒற்றை ஸ்பரிசம்
இவை அனைத்தும் வழிகளே...
அன்பும் அருளும்,
சத்குரு
Subscribe
அன்பு அபாயம்
மேகங்களுக்கு மேலே மிதக்கின்றோம்
ஒரு உலோகக் குடுவைக்குள்ளே
சுகத்துடனோ சிரமத்துடனோ நீங்கள் அமர்ந்திட
இருக்கைகளும் எந்திரங்களும் அதனுள்ளே
உடைந்திடும் இயல்புடைய
அலுமினியக் குடுவையது என்று
துளியும் கவனமில்லை அநேகருக்கு
நாமோ பூமித்தாயிடமிருந்து
சில மைல்களுக்கு அப்பால்
உயரத்தில்...
அவளோ அனைத்தையும் தன் மார்போடு
அணைத்து இணைத்து ஏற்றுக்கொள்ளும்
ஓயாத அன்பு கொண்டவள்
இந்த தீராத அன்பு
நம்மை ஆட்கொண்டு நெகிழச்செய்யும்
ஆனாலும் அபாயகரமானது அன்றோ!
அன்பும் அருளும்,
சத்குரு
கனிவு
என்னே வாழ்வின் முரண் -
என்னை பிணைத்துக் கொள்ள
எல்லாமும் செய்யத்தான் வேண்டும்
இப்போது
எவரும் தாண்டக் கூடாத
எல்லைகளை வகுத்திட
முடிந்ததெல்லாம் செய்கிறேன்
தன்னலம் காத்திட
குலைந்து கொண்டிருக்கும் இந்தக் கூட்டை
கட்டி வைக்கத்தான்
அத்தனை கூத்துகளும்
"வேலை முடிந்ததே, பிறகென்ன தாமதம்?
நயமாய் விட்டுச்செல்,"
நவிழ்ந்தது என் மனம்
ஆனால்,
காதலர்களை என் செய்வேன்?
அன்பில் விழுந்து தன்னை
இழந்து போனவர்களை என் செய்வேன்?
எத்தனை எத்தனை காதலர்கள் -
எண்ணும் போதே கனிவின் நெகிழ்வு
கண்களில் நீர்ப்பெருக்கு - எனவே நான்
கட்டுக்கடங்காமல் கட்டாயம் செல்வேன்
அன்பும் அருளும்,
சத்குரு
கனிவு
கனிவின் மிகையால் நெகிழ்ச்சி
கண்ணீர் நிரம்பிய என் விழிகள்
பொங்கிப் புடைக்கிறது என் மார்பு - அதில்
பொதிந்தது அன்பல்ல, அது கருணையும் அல்ல
அது கனிவின் நெகிழ்ச்சி - என் உயிரை
அனைத்துடனும் இணைக்கும் கனிவின் நெகிழ்ச்சி.
ஆரத் தழுவுவதை விடுங்கள்,
தொடுவதற்கே பெரும்பாடு
அத்தனை மென்மை,அத்தனை மென்மை
போலித்துணிச்சல் எனும் பூச்சை - மேலே
பூசிக்கொள்ள வேண்டும் நான்
இன்னொருவர் மூச்சைத் தொடுவதற்குக் கூட - ஏனெனில்
அத்தொடுதல்... என் இருப்பைத் தீர்த்துவிடும் அன்றோ!
ஓர் அரவணைப்போ... அழித்துவிடும் - ஆம்,
நானென்றறிந்தது அனைத்தையும் அழித்துவிடும் அன்றோ!
கனிவின் மிகையால் நெகிழ்ச்சி
கண்ணீர் நிரம்பிய விழிகள்
பொங்கி புடைக்கிறது என் மார்பு.
அன்பும் அருளும்,
சத்குரு
மதில்
சிள் வண்டின் கூப்பாடு
உள்ளதத்தை உருக்கும்
காதல் கீதமாகக் கூடும்.
வேங்கையின் உறுமல்
வாடும் தனிமையாகக் கூடும்
வெஞ்சினத்தால் அல்ல.
வீசும் காற்றின் ஊளை
விண்ணீரை ஏந்தி வரலாம்
வீணழிவின் தடமாக அல்ல.
நாகத்தின் சீறொலி -அதில்
நஞ்சல்ல எல்லாப் பொழுதும்.
ஐக்கியத்திற்கு அழைத்த குரல்கள்
அனைத்தையும் தவறவிட்டு
உயிருக்கு எதிராய் மதில் அமைத்தாயோ நீ?
அன்பும் அருளும்,
சத்குரு
அன்பு
ஆன்மீக பேச்சனைத்தும் ஆபாசமே - நம்
அன்புக் குழந்தைகள் பட்டினியில் துவளுகையில்
ஒருகண ஐக்கியம் நீ சுவைத்திருந்தால்
ஓய்ந்து அயர்ந்து உன் உள்ளம்தான் துஞ்சுமோ
அன்பும் அருளும்,
சத்குரு
அன்பு
உன் உள்ளிருக்கும் உறைபனியை
உயிரனைத்தும் அன்பு செய்து
உருக்கினால் உன் வாழ்வாகும்
உவகையின் ஊற்றாய்.
அன்பும் அருளும்,
சத்குரு
அன்பு
மனிதரமைத்த கோடுகள் அழிந்திட வேண்டும்
கதியற்றோர் புதிர்வலையில் சிக்காதிருக்க
அச்சக் கலக்கமாய் இன்றி வாழ்வு சீரமைய
இவையனைத்தையும் முடித்துவிட முடியும்
ஓர் அன்பான அரவணைப்பில்...
அன்பும் அருளும்,
சத்குரு
காதல் உறவு
பருவமழை
வரவிருக்கும் நாட்களில் வாரங்களில்
கட்டவிழ்க்கப்போகும் தன் சீற்றத்தை
காட்டாமல் மறைத்தபடி...
வீசும் குளிர் தென்றலாக.
வறண்டிருக்கும் நிலங்களும் உயிர்களும்
வரவேற்கும் விரும்பி அச்சீற்றத்தை
நேரத்தில் புற்றுக்குள் நுழையாத
அந்தவொரு சோம்பேறி எறும்பைத் தவிர...
சீற்றத்தின் வாசத்தை உணர்கிறேன் நான்
சிலிர்க்கிறது என் தேகம்
வருடாவருடம் வருகை தரும்
இக்காதல் உறவை எதிர்பார்த்து.
அன்பும் அருளும்,
சத்குரு
தொடர்புடைய பதிவுகள்:
இயற்கையின் அழகை வர்ணிக்காத கவிஞர்கள் இல்லை. அப்படி இருந்தாலும், ஒரு ஞானியின் கவிதைகள் இயற்கையின் விநோதங்களைப் பற்றிய முற்றிலும் புதிதானபார்வையை நமக்கு வழங்கவல்லது. இயற்கையைப் பற்றிய சத்குருவின் கவிதைகள் இந்தப் பதிவில்...
பூமி, மண், மண்வளம், மண்வாசனை - இவற்றின் ரகசியங்களை, நுட்பங்களைப் பேசும் சத்குருவின்கவிதைகள் இந்தப் பதிவில்...