சத்குரு: உங்களுக்கு நகைச்சுவை ஒன்று கூற விரும்புகிறேன். ஒரு தம்பதி, தங்களுக்குக் குழந்தைகள் வேண்டுமா அல்லது வேண்டாமா என்று முடிவெடுக்க இயலாமல் போராட்டத்தில் இருந்தனர். கணவர் குழந்தை வேண்டும் என்று விரும்பினார். ஆனால் மனைவியோ அதற்குப் பதில் ஒரு நாய் வாங்க விரும்பினார். அவர்கள் வாக்குவாதத்தில் சமரசம் ஏற்படாததால், இருவரும் ஒரு திருமண ஆலோசகரிடம் சென்றனர். “நாங்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாமா அல்லது ஒரு நாய்க்குட்டி வாங்கலாமா என்று எங்களால் முடிவெடுக்க இயலவில்லை. நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டனர். திருமண ஆலோசகர், “இது மிகவும் எளிமையான விஷயம். நீங்கள் நாசப்படுத்த விரும்புவது உங்கள் வீட்டின் தரை விரிப்புகளையா அல்லது உங்கள் வாழ்வையா? நீங்கள் இதை முடிவெடுக்க வேண்டும்,” என்று பதில் கூறினார்.

பச்சிளம்பருவம், குழந்தைப்பருவம், இளமைப்பருவம், நடுத்தரப்பருவம், மற்றும் முதுமைப்பருவம் போல டீன் ஏஜ் பருவம் அல்லது டீன் ஏஜ் பருவமும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டமாகவே இருக்கிறது. அதை நாம் பகுதிகளாகப் பிரிப்பதற்கு முயற்சிக்கிறோம், ஆனால் அடிப்படையில், இது ஒரு உடலின் பயணம். சிலர் பச்சிளம்பருவத்தில் பிரச்சனைகளால் துன்பப்படுகின்றனர், சிலருக்கு டீன் ஏஜ் பருவத்தில் பிரச்சனைகள், சிலர் நடுத்தரவயதுப் பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர், சிலர் முதுமைப்பருவத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்தக் கண்ணோட்டத்தில் அதைப் பார்க்கும் நிலையில், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் ஒரு பிரச்சனையாக இருப்பதாகத் தோன்றுகிறது. வாழ்க்கையின் வெவ்வேறு முகங்களாகப் பார்ப்பதற்குப் பதில், மக்கள் அதை வெவ்வேறு பிரச்சனைகளாகப் பார்க்கின்றனர்.

உங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான சூழ்நிலைகள் இருக்கின்றன, அவ்வளவுதான். அவைகள் சூழ்நிலைகள் மட்டுமே. அவைகளுள் சிலவற்றை உங்களால் கையாள முடிகிறது – சிலவற்றை உங்களால் கையாள முடியவில்லை. அது ஒரு சூழ்நிலை மட்டுமே என்று பார்த்து, அதைக் கையாள்வதற்கு உங்களையே தயார்ப்படுத்துவதை விடுத்து, உங்களால் கையாளமுடியாதது என்னவாக இருப்பினும், அதை நீங்கள் ஒரு பிரச்சனை என்று கூறிவிடுகிறீர்கள். அதை ஒரு பிரச்சனை என்று நீங்கள் கூறும் கணமே, சந்தோஷமின்மை என்பது இயல்பானதொரு விளைவாக இருக்கிறது.

# 1 ஒரு நல்ல நண்பராக இருங்கள்

டீன் ஏஜ் பருவத்தினரின் கண்ணோட்டத்தில் நீங்கள் பார்த்தால், தினமும், அவர்கள் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் காரணத்தால் அவர்களுக்குள் வாழ்க்கை மாறிக்கொண்டிருக்கிறது, மற்றும் அவர்களைச் சுற்றிலும் இருப்பவர்கள் அதை உணரமுடியாதவர்களாக இருக்கின்றனர். வழக்கமாக, பெற்றோர்களைக் காட்டிலும், தாத்தா பாட்டிகள் சற்றுக் கூடுதலாக அன்பு செலுத்துபவர்களாக இருப்பது ஏனென்றால், அவர்கள் விஷயங்களைச் சிறிது தள்ளி வைத்துப் பார்க்கின்றனர். ஒரு டீன் ஏஜ் பருவத்தினர் என்ற முறையில், நீங்கள் உங்களது ஹார்மோன்களால் மெல்ல கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். மூத்த வயதினர் என்றால் நீங்கள் அதிலிருந்து விடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள், ஆகவே அவர்கள் ஒருவிதமாகப் புரிந்துகொள்கின்றனர். நடுத்தர வயதில் இருப்பவர்கள் புரிந்துகொள்வதில்லை. வரலாற்றுரீதியிலும் கூட, கற்காலத்திற்கு அடுத்த இடைக்காலங்கள் ஒரு குழப்பமான மனநிலையையே பிரதிபலிக்கிறது!

நீங்கள் அவர்களைப் பெற்றெடுத்ததால், உங்களுக்கு தாய், தந்தை என்ற பட்டம் கிடைக்கிறது – ஒரு நண்பர் என்ற பட்டம் உங்களுக்குக் கிடைக்காது. தினமும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதால், இந்தப் பட்டம் உங்களால் சம்பாதிக்கப்பட வேண்டும்.

டீன் பருவத்தின் வருடங்களுக்கு பல அம்சங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று, உங்களுடைய புத்திசாலித்தனம், உங்கள் ஹார்மோன்களால் கடத்தப்படுகிறது. திடீரென்று, ஒட்டுமொத்த உலகமும் வித்தியாசமாகத் தோன்றுகிறது. சக மனிதர்களாக மட்டும் இருந்தவர்கள் சட்டென்று ஆண்களாகவும், பெண்களாகவும் மாறிவிடுகின்றனர். திடீரென்று, நீங்கள் மனிதகுலத்தின் சரிபாதியினரிடம் மட்டுமே ஆர்வம் கொள்கிறீர்கள். அது பெரியதொரு மாற்றமாக இருக்கிறது. டீன் பருவத்தினருக்கு இது புதிய உணர்வு என்பதுடன், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள முயற்சி செய்கின்றனர் என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் ஒரு நல்ல நண்பராக இருக்கும் நிலையில், அவர்களுக்குப் பிரச்சனைகள் இருந்தால், அவர்கள் உங்களிடம் பேசுவார்கள். ஏனென்றால் பெரும்பாலான பெற்றோர்கள் மிகுந்த தொந்தரவூட்டும் நண்பர்களாக இருப்பதால், அவர்கள் மற்ற சகவயது நண்பர்களை நாடுகின்றனர். அவர்களும் அதேபோன்ற நிலையில் இருப்பதால், அந்த நண்பர்கள் அவர்களுக்கே உரிய வேடிக்கையான அறிவுரையை வழங்குகின்றனர். உங்களது குழந்தைகளுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டால், அவர்கள் உங்களிடம் வருவதுதான் சிறந்ததாக இருக்கும். ஆனால் நீங்கள்தான் தலைவர் என்று நீங்கள் நினைத்தால், அவர்கள் உங்களிடம் வரமாட்டார்கள். அவர்கள் வாழ்க்கை மீது அதிகாரம் செலுத்த உங்களுக்கு உரிமை இருப்பதாக நீங்கள் நினைத்தால் அவர்கள் உங்களிடம் வரமாட்டார்கள். நீங்கள் “அப்படிப்பட்ட மோசமான தந்தை அல்லது தாய்” என்றால் அவர்கள் உங்களிடம் வரமாட்டார்கள்.

நீங்கள் ஒரு நல்ல நண்பராக இருந்தால், அவர்கள் உங்களிடம் வருவார்கள், ஏனென்றால் அவர்களுக்கு பிரச்சனை இருக்கும்போது, ஒரு நண்பனைத் தேடுவது இயல்பானது. சிறு வயது முதல், அவர்கள் 18 அல்லது 20 வயதை அடையும்வரை, நீங்கள் அவர்களின் சிறந்த நண்பர் என்பதை உறுதிப்படுத்துங்கள். அவர்களை நீங்கள் பெற்றெடுத்த காரணத்தினால் அது நிகழாது. நீங்கள் அவர்களைப் பெற்றெடுத்ததால், உங்களுக்கு தாய், தந்தை என்ற பட்டம் கிடைக்கிறது – ஒரு நண்பர் என்ற பட்டம் உங்களுக்குக் கிடைக்காது. தினமும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதால், இந்தப் பட்டம் உங்களால் சம்பாதிக்கப்பட வேண்டும்.

#2 அவர்களைப் பொறுப்பாக்குங்கள்

உங்கள் டீன் ஏஜ் குழந்தைகளை உங்கள் வழிக்குக் கொண்டுவராதீர்கள். அவர்கள் அணுகும் விதத்தில் உங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் அவர்களைப் பொறுப்பாக்குங்கள். உங்கள் ஒருமாத சம்பளத்தை அவர்களிடம் ஒப்படைக்கும் தைரியத்துடன் நீங்கள் இருப்பதோடு, வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பையும் அவர்களுக்கு வழங்குங்கள். பிறகு, விஷயங்கள் ஆச்சரியகரமாக மாறுவதை நீங்கள் பார்ப்பீர்கள். உங்கள் குழந்தைகளுடன் உண்மையிலேயே ஏதேனும் செய்வதற்கு நீங்கள் விரும்பினால், அவர்கள் விரிவடைவதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும், ஏனென்றால் அதைத்தான் அவர்கள் செய்ய முயற்சிக்கின்றனர். வளர்ந்துகொண்டிருப்பது அவர்களது உடல் மட்டுமல்ல – மனித ஆற்றலும்கூட வளர்ந்துகொண்டிருக்கிறது. அவர்களுக்கு எப்படித் தடை ஏற்படுத்துவது என்று பார்க்காமல், அவர்கள் விரிவடைவதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும்.

தடை விதிப்பது வாழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான நல்லதொரு வழி என்று என்ணாதீர்கள். பொறுப்புணர்வு அவர்களை சரியான பாதையில் செலுத்தும்.

அவர்களது பதினைந்து வயது வரையில், அவர்களுக்கு நீங்கள் தாய்ப்பாலூட்ட வேண்டிய அளவுக்கு, ஒருவிதமான முட்டாள்களைப் போல் உங்கள் குழந்தைகளை வளர்க்காதீர்கள்! இன்றைக்குக் குழந்தைகள் அப்படித்தான் வளர்க்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் பன்னிரண்டு, பதிமூன்று, பதினைந்து வயதாக இருக்கும்போதுகூட, சிறு குழந்தைகளைப்போல் நடந்துகொள்கின்றனர். இப்போதெல்லாம் டீன் ஏஜ் பருவத்தினரில் அதிகமானோர் இப்படி ஆகிக்கொண்டிருக்கின்றனர். இந்த நாட்டில் முந்தைய காலங்களில் இப்படி இருந்ததில்லை. மக்கள் கூட்டுக்குடும்பங்களில் வளர்ந்தபோது இப்படி இருந்ததில்லை; அவர்கள் ஆறு, ஏழு வயதை அடையும்போது மிக நன்றாக இருந்தனர். இப்போது அவர்கள் முற்றிலும் தனித்துச் செயல்படும் திறனின்மை மற்றும் உணர்ச்சிரீதியான தடுமாற்றத்துடன் இருக்கின்றனர். வளரும் குழந்தைகள் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறார்கள் என்கிற இந்தக் கருத்து மறையவேண்டும். அவர்களுடைய வீட்டில் ஒரு டீன் ஏஜ் குழந்தை இருப்பதாக யாராவது கூறினால், வீட்டில் அவர்களுக்கு ஒரு மாபெரும் பிரச்சனை இருப்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கப்படுகிறோம், அது உண்மை கிடையாது.

எனது மகள்கூட ஒரு டீன் ஏஜ் பருவத்தில் இருந்தாள்; மக்கள் என்னிடம், “உங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லையா?” என்று கேட்டவாறு இருந்தனர். என்ன தொந்தரவு? அவள் என்ன வெடிகுண்டா அல்லது வேறு ஏதோ ஒன்றா? அவள் நன்றாகவே இருந்தாள், ஏனென்றால் நான் அவளை ஒரு குழந்தை போல் நடத்துவதில்லை, எனக்குச் சமமாக அவளை நான் நடத்தினேன். அவள் நான்கு, ஐந்து வயதில் இருந்தபோது, “சரி, நாம் இதைச் செய்கிறோம், இது பற்றி நீ என்ன கூறுகிறாய்?” என்று அவளது கருத்தை நான் கேட்பேன், எத்தனையோ தருணங்களில், பெரும்பாலான பெரியவர்களும்கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாத ஆச்சரியகரமான தீர்வுகளை அவள் வெளிப்படுத்தினாள். அதற்காக அந்தக் குழந்தை ஒரு மேதை என்பது அர்த்தமல்ல. நீங்கள் அதை அனுமதித்தால், ஒவ்வொரு குழந்தையும் ஒரு மேதைதான். அவர்களை ஒரு குறிப்பிட்ட வார்ப்புக்குள் நீங்கள் பொருத்துவதற்கு விரும்பும் காரணத்தால், ஏதோ ஒருவித இயந்திரத்தனமான முட்டாள்தனத்திற்குள் பொருந்திப்போவதற்கு அவர்களை நீங்கள் உருவாக்குகிறீர்கள். அதைப்போன்ற ஒரு வார்ப்புக்குள் நீங்கள் பொருத்தவில்லையென்றால், ஒவ்வொரு குழந்தையும் இந்தத் திறனுடன் இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.

உங்கள் குழந்தைகளுக்குத் தடை விதிக்க நீங்கள் முயற்சித்தால், உங்களுக்குப் பெரும் பிரச்சனைகள் ஏற்படும். உங்களுக்கு ஆண் குழந்தைகள் இருந்தால், ஒருவிதமான பிரச்சனை உங்களுக்கு இருக்கும். உங்களுக்கு பெண் குழந்தைகள் இருந்தால், வேறொரு விதமான பிரச்சனை உங்களுக்கு இருக்கும். தடை விதிப்பது வாழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான நல்லதொரு வழி என்று என்ணாதீர்கள். பொறுப்புணர்வு அவர்களை சரியான பாதையில் செலுத்தும். நான் கூறியது போல், உங்கள் பணத்தை அவர்களிடம் கொடுத்து, அதை அவர்கள் கையாள்வதற்கு அனுமதியுங்கள் – நீங்கள் விடுமுறையை அனுபவியுங்கள். அவர்கள் அதை வீணாக்கிவிடுவார்கள் என்று நீங்கள் அச்சமடைந்தால் – அவர்கள் அதையே செய்தால், உங்களுக்கு என்ன நிகழ்கிறதோ, அது அவர்களுக்கும்கூட நிகழும். ஒரு மாதத்திற்கு அவர்கள் அதை அனுபவிக்கட்டும். நிச்சயம் நீங்கள் கொஞ்சம் இருப்பு வைத்திருக்கலாம், ஆனால் அவர்கள் பணத்தை விரயம் செய்தால், நாளைக்கு காலை உணவு இருக்காது என்பதை அவர்களுக்குப் புரியவிடுங்கள். வீதிக்கு வந்தபிறகு கற்றுக்கொள்வதைக் காட்டிலும், ஒரு பாதுகாப்பான, அன்பான சூழ்நிலையில் கற்றுக்கொள்வது மேலானது.

#3 உங்களைச் சார்ந்திருக்கும் கையறு நிலையைப் பெருமைப்படுத்துவதை நிறுத்துங்கள்

உங்கள் குழந்தைகள் வளர்ந்துகொண்டிருப்பதுடன், டீன் ஏஜ் வயதை எட்டிக்கொண்டிருக்கின்றனர் – அது ஒரு ஆனந்தமான நிகழ்வாக இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் வளர்வது குறித்து நீங்கள் வருத்தமடைகிறீர்கள். துரதிருஷ்டவசமாக, சுயமாகச் செயல்படமுடியாத வாழ்வின் பச்சிளம்பருவம் மற்றும் குழந்தைப்பருவத்தை நாம் பெருமைப்படுத்தியுள்ளோம். குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும்போது, அவர்கள் தானாக செயல்பட முடியாமலும், எல்லாவற்றுக்கும் உங்களைத் தேடுபவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் செயல்பட முடியாமல் இருக்கும் காரணத்தால், உங்கள் குழந்தைகள் அதிசயமானவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஒருவேளை, உங்களிடமிருந்து வெளியில் வந்த குழந்தை, எழுந்து நின்று, “ஏய், யார் நீ?” என்று கூறியிருந்தால், இந்தக் குழந்தையை நீங்கள் விரும்பியிருக்கமாட்டீர்கள். ஆனால் அந்தக் கேள்வியைக் கேட்பதற்கு அவர்கள் 14 அல்லது 15 ஆண்டுகள் எடுத்துக்கொள்கின்றனர். உண்மையில், ஒரு டீன் ஏஜ் ஆணோ அல்லது பெண்ணோ கேட்பதெல்லாம் அந்தக் கேள்வியைத்தான்,” அது சரி, நீங்கள் யார்?”

இன்னமும் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள், இளமையும், ஆற்றலும் கொண்ட டீன் ஏஜ் பருவத்தினரின் கண்களுக்கு, பரிகாசத்துக்கு உரியவர்களாகத் தோன்றுகின்றனர்.

வேறொருவரது துணையில்லாமல் நம்மால் வாழமுடியாத, வாழ்வின் செயலற்ற கட்டமாக இருக்கும் இந்தக் குழந்தைப்பருவத்தை நீங்கள் கொண்டாடினால், நீங்கள் என்றென்றைக்கும் செயலற்றவர்களாகவே இருந்துவிடுவீர்கள். சிறு குழந்தைகள் பெற்றோர்களை நாடும் செயலற்ற படைப்புகளாக இருப்பதே மக்களுக்குப் பழகிவிடும் காரணத்தால், “டீன்” பருவம் என்றழைக்கப்படும் வயதை அவர்கள் அடைந்து, தங்கள் சொந்தக் காலில் நிற்கத் தொடங்கும்போது, மக்கள் அதை விரும்புவதில்லை.

அந்த புத்தம்புதிய உயிருக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக நீங்கள் இருக்கவேண்டுமென்றால், நீங்கள் யார்? என்பதன் எல்லைகளை நீங்கள் வகுத்திருக்கக் கூடாது. உங்களது குழந்தை பச்சிளம் பருவத்தில் தவழ்ந்தபோது, நீங்கள் குழந்தையுடன் தவழ்ந்தீர்கள். இப்போது டீன் ஏஜ் பருவத்தில் அவன்/அவள் ஊஞ்சலாட விரும்பும்போது, அவர்களுடன் ஊஞ்சலாடும் திறன் உங்களுக்கு இருக்கவேண்டும். இப்போதும் நீங்கள் அவர்களுடன் தவழவேண்டுமென்றால், அதில் அவர்களுக்கு ஆர்வமிருப்பதில்லை. இன்னமும் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள், இளமையும், ஆற்றலும் கொண்ட டீன் ஏஜ் பருவத்தினரின் கண்களுக்கு, பரிகாசத்துக்கு உரியவர்களாகத் தோன்றுகின்றனர்.

# 4 அவர்களை “உரிமை” கொண்டாடாமல், இணைத்துக்கொள்ளுங்கள்

உங்கள் குழந்தை உங்களுக்குச் சொந்தமானது என்ற இந்தக் கருத்தைக் களையுங்கள். இந்தக் குழந்தைகள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் என்று நீங்கள் நினைத்தால், அவர்கள் தங்களது டீன் பருவத்தை அடையும்போது, அவர்களுக்கே உரிய வழியில் “இல்லை, நான் உங்களது உரிமை அல்ல,” என்பதை உங்களிடம் கூறுவார்கள். உங்களுக்கு அவர்கள் கூற முயற்சிப்பதெல்லாம் அவ்வளவுதான் – இதை உங்களால் ஜீரணிக்க முடியவில்லை. உங்களுடன் இருப்பதற்கு மற்றொரு உயிர் தேர்வு செய்திருக்கிறது என்றால், தயவுசெய்து அதைப் போற்றுங்கள். அது ஒரு மகத்தான விஷயம். அது உங்கள் கணவராக, உங்கள் மனைவியாக அல்லது உங்கள் குழந்தையாக இருந்தாலும் – மற்றொரு உயிர் உங்கள் மூலமாக வருவதற்கோ அல்லது உங்களுடன் இருப்பதையோ தேர்வு செய்திருக்கும் உண்மையை மதித்துப் போற்றுங்கள். மற்றபடி, எந்த விதத்திலும் அவர்கள் உங்களுக்கு உரிமையானவர்கள் அல்ல. இப்போது இதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால், நீங்கள் இறக்கும்போதோ அல்லது அவர்கள் இறக்கும்போதோ உங்களுக்குப் புரியும். அவர்கள் உங்களுக்கு உரிமையானவர்கள் அல்ல, ஆனால் நிச்சயமாக, நீங்கள் அவர்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.

#5 உங்களுக்குள் ஏதாவது செய்யமுடியுமா என்று பாருங்கள்

நமது குழந்தைகளை உண்மையாகவே நாம் நன்றாக வளர்க்கவேண்டுமென்றால், எல்லாவற்றுக்கும் முதலில் நம்மிடமே நம்மால் ஏதாவது செய்யமுடியுமா என்று பார்க்கவேண்டும். ஒரு பெற்றோராக இருப்பதற்கு விரும்பும் ஒவ்வொருவரும் எளிமையான சோதனை ஒன்று செய்யவேண்டும். நிதானமாக அமர்ந்து, உங்கள் வாழ்வில் சரியில்லாமல் இருப்பது என்ன என்பதையும், மற்றும் உங்கள் வாழ்க்கைக்கு எது நல்லதாக இருக்கும் என்பதையும் பார்க்கவேண்டும். இது வெளி உலகத்தைப் பற்றியதல்ல, ஏனென்றால் அதற்கு மற்றவர்களின் ஒத்துழைப்பு தேவை, ஆனால் இது உங்களைப் பற்றியது. அடுத்த மூன்று மாதங்களில் அதை உங்களால் உருவாக்கமுடியுமா என்று பாருங்கள்.

ஒரு பெற்றோராக இருப்பதற்கு விரும்பும் ஒவ்வொருவரும் எளிமையான சோதனை ஒன்று செய்யவேண்டும்.

உங்களைப் பற்றிய ஏதோ ஒன்று – உங்களுக்கே உரிய நடவடிக்கை, பேச்சு, செயல்படும் விதங்கள் மற்றும் பழக்கங்கள் – மூன்று மாதங்களில் அதை உங்களால் மாற்றமடையச் செய்ய முடிந்தால், அப்போது உங்கள் மகன் அல்லது மகளை மதிநுட்பத்துடன் நீங்கள் கையாள்வீர்கள். இல்லையென்றால், யாரோ ஒருவரிடமிருந்து பெறும் ஏதோ ஆலோசனைப்படிதான் நீங்கள் நடந்துகொள்வீர்கள். ஆலோசனை என்பதே இல்லை. ஒரு குறிப்பிட்ட குழந்தையைப் பொறுத்து, செய்யவேண்டியது என்ன மற்றும் செய்யக்கூடாதது என்ன என்று அந்தக் குறிப்பிட்ட குழந்தையை உற்றுக் கவனிக்கத் தேவைப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையிடமும் நீங்கள் அதே விஷயங்களைச் செய்யமுடியாது, ஏனென்றால் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான நிகழ்வாக இருக்கிறது.

ஆசிரியர் குறிப்பு: குழந்தை வளர்ப்பது குறித்த சத்குருவின் அறிவுறுத்தல்களை, “குழந்தையை ஊக்கப்படுத்துங்கள், உலகை ஊக்கப்படுத்துங்கள்” புத்தகத்தில் மேலும் அறிந்துகொள்ளலாம். இலவச பதிவிறக்கத்திற்கு ‘0’ என்று விலை குறிப்பிடவும்