இதுவரை: கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையேயான அதிகார மோதலில் தனது ஐந்து பங்காளிகளையும் கொல்வதற்கு துரியோதனன் தொடர்ந்து முயற்சி செய்யவே, இராஜ்யத்தை இரண்டாகப் பிரித்து இரு தரப்பினருக்குமிடையில் அமைதியை ஏற்படுத்துமாறு முடிவாக கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார்.

சத்குரு: தேசத்தின் மீதிருந்த தன் ஆழமான விசுவாசத்தினால், தனது மண் பிளவுபடாமல் தடுக்க எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருந்தார் பீஷ்மர். ஹஸ்தினாபுரத்தின் மூத்தவர்களிடம் சென்று, "நீங்கள் அனைவரும் இதில் தலையிடவேண்டும், இல்லையென்றால் இந்த தேசம் இரண்டாக உடைந்துவிடும்" என்றார். அவர்கள், "வாழ்க்கை முழுவதும் பிரம்மச்சரியமேற்க சபதமிட்ட போது எங்களிடம் நீ எந்த அறிவுரையும் கேட்டு வரவில்லை. இப்போது ஏன் எங்களிடம் வருகிறாய்?" என்றார்கள். எப்படியிருந்தாலும் தேசம் இரண்டாக உடைவதை நோக்கியே நகர்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அத்துடன், நாட்டை துண்டாக்கி எல்லை வகுக்கும் வலியையும் பீஷ்மரே சுமக்கட்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

உடைந்தது இராஜ்யம்

தான் மிகவும் நேசித்த நிலத்தை பங்கிட்டு பிரிக்கும் பொறுப்பு பீஷ்மரிடமே வந்து சேர்ந்தது. இறுதியாக திருதராஷ்டிரனிடம் "சரி, நாட்டை பிரித்து பாண்டவர்களுக்கு ஒரு பங்கைக் கொடுத்து விடுங்கள், கௌரவர்கள் இங்கே ஹஸ்தினாபுரத்தில் இருந்தபடி ஆளட்டும்" என்றார். அனைவரும் கூடியிருந்த அரசவைக்கு பாண்டவ சகோதரர்களை அழைத்த திருதராஷ்டிரன், காண்டவபிரஸ்த பகுதியை அவர்களுக்கு வழங்குவதாக அறிவித்தான். பல தலைமுறைகளுக்கு முன் காண்டவப்பிரஸ்தம் குரு வம்சத்தினரின் தலைநகரமாக விளங்கியது. சந்திரவம்ச இராஜ்யத்தின் முதலாவது மன்னனான பூதவின் புதல்வன் புருரவாவுக்கு ரிஷிகள் கொடுத்த சாபத்தினால் காண்டவப்பிரஸ்தம் அழிவுக்குள்ளாகி பாலைவனமானது. எனவே அனைவரும் அந்த இடத்தை விட்டு வெளியேறினர். இதைத்தான் தன் அன்புப் பரிசாக பாண்டவர்களுக்கு வழங்கினான் திருதராஷ்டிரன்.

அந்த சபிக்கப்பட்ட இடத்தில் பாண்டவர்கள் எப்படியும் இறந்து விடுவார்கள் என்றே பலரும் நம்பினார்கள். ஆனால் அந்த வாய்ப்பை நம்பி துரியோதனன் காத்திருக்க விரும்பவில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

யுதிஷ்டிரன் தன் இயல்பிற்கேற்ப கடமையே கண்ணாக அதை ஏற்றுக்கொண்டு, தனது சகோதரர்கள் மற்றும் மனைவியுடன் அங்கிருந்து புறப்படத் தயாரானான். இடையே புகுந்த கிருஷ்ணர், "இந்த பிரிவினை சம பங்காக இருப்பதை உறுதி செய்ய, தேசத்தின் பாதியளவு தங்கத்தை, கால்நடைகளை, குதிரைகளை பாண்டவர்களுக்கு வழங்க வேண்டும். அத்துடன் மல்லர்கள், இரும்புக் கொல்லர்கள், பொற்கொல்லர்கள் மற்றும் யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களும் பாண்டவர்களுடன் செல்லலாம். இங்கே இருப்பதற்கோ அல்லது அங்கே செல்வதற்கோ யாரும் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது" என்றார்.

மல்யுத்த வீரர்களை மல்லர்கள் என்று அழைப்பார்கள். அந்த நாட்களில் மல்யுத்த வீரர்கள் மிக முக்கியமானவர்களாக இருந்தார்கள். நீங்கள் ஒரு படைக்கு பயிற்சியளிக்க வேண்டியிருந்தால், உடற்பயிற்சி கூடத்தில் அவர்களை திறம்பட கையாளும் மக்கள் இருப்பது உங்களுக்கு முக்கியமானதாக இருந்தது. கௌரவர்கள் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் இது. இவர்களில் யார் வேண்டுமானாலும் பாண்டவர்களுடன் செல்லலாம் என்று கிருஷ்ணர் அறிவிப்பார் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. கௌரவர்களும் திருதராஷ்டிரனும் சமபங்காக பாகப்பிரிவினை செய்திருப்பதாகக் காட்டிக்கொண்டாலும், நிஜத்தில், வளமான பகுதியை தங்கள் வசம் வைத்துக்கொண்டு, கைவிடப்பட்ட ஒரு தரிசு நிலப்பகுதியையே பாண்டவர்களுக்கு வழங்கியிருந்தார்கள்.

 

அந்த சபிக்கப்பட்ட இடத்தில் பாண்டவர்கள் எப்படியும் இறந்து விடுவார்கள் என்றே பலரும் நம்பினார்கள். ஆனால் அந்த வாய்ப்பை நம்பி துரியோதனன் காத்திருக்க விரும்பவில்லை. தானே அவர்களுக்கு முடிவு கட்டிவிட திட்டங்கள் வைத்திருந்தான். ஆனால் முதலில் தங்களது பாதியளவு தங்கம், குதிரைகள் மற்றும் கால்நடைகளை அவர்கள் பிரிய வேண்டி இருந்தது. அத்துடன் மக்கள் பலரும் பாண்டவர்களுடன் கிளம்பினார்கள். மக்கள் தங்கள் உடைமைகளுடன் தொடர்ந்து பல நாட்கள் நடந்தனர். வழியிலேயே பலர் இறந்தார்கள். இறுதியாக எஞ்சியவர்கள் காண்டவபிரஸ்தத்தை அடைந்தார்கள். அதுவரையிலும் ஐந்து சகோதரர்களும் மிக உற்சாகமாகவே இருந்தார்கள். தங்களுக்கு வழங்கப்பட்ட பகுதியை நேரில் வந்து பார்த்ததும் அவர்கள் இதயம் நழுவியது. கடுங்கோபமுற்றான் பீமன். "துரியோதனனையும் அவன் சகோதரர்களையும் நான் கொல்ல வேண்டும்! இப்படிப்பட்ட ஒரு இடத்தை வழங்க அவர்களுக்கு எப்படி மனம் வந்தது?" என்று கொதித்தான்.

பீமன்

Poem on Bhima by Sadhguru

 

வாயு புத்திரனான பீமன் அங்கிருந்து ஆவேசமாக வாயு வேகத்தில் கிளம்பினான். திக்குத் தெரியாத பாலைவனத்தில் சபிக்கப்பட்ட பாழடைந்த நகருக்கு தாங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்த மற்ற சகோதரர்கள் பேச்சின்றி நின்றார்கள். கிருஷ்ணர் தனக்கு சம்பந்தமில்லாத ஒரு குரலில், "இதை எப்படி பீஷ்மர் அனுமதித்தார், உங்கள் குரு துரோணரும் கிருபாச்சாரியாரும் இதை எப்படி நிகழ விட்டார்கள்! உங்கள் மீது இதை சுமத்திய அனைவரும் தங்கள் கைகளை விரித்து மரணத்தை வரவேற்கிறார்கள். அது மிகத் தொலைவில் இல்லை." முதன்முறையாக இது துரியோதனன் பற்றியதாக மட்டுமில்லாமல், பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார், திருதராஷ்டிரன் என அனைவருமே கிருஷ்ணரின் சாபத்திற்குள் உள்ளடங்கினார்கள்.

இந்திரபிரஸ்தம் - மாய நகரம்

பாண்டவர்களும் குழுவினரும் பயணக் களைப்பினால் அந்த பாலைவனத்தின் திறந்தவெளியிலேயே உறங்கத் தயாரானார்கள். அனைவரும் கண்ணயரும் வரை காத்திருந்த கிருஷ்ணர், அந்த இடத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காக மெதுவாக சுற்றிலும் நடந்து வந்தார். வான் நோக்கி தலையுயர்த்தி, சூரியனுக்கும் மூத்தபடியான ஒரு குரலெழுப்பி இந்திரனை அழைத்தார். இடி முழக்கத்துடன் மின்னல் ஒளிவீச வந்து சேர்ந்தான் இந்திரன். கிருஷ்ணர், "உனது மாயாஜாலத்தை கொண்டு இந்நகரை எழுப்பு. இதனை இந்திரபிரஸ்தம் என நாம் அழைப்போம், இது உனது நகரமாக இருக்கும். உலகம் இதுவரை பார்த்திராத மிக அழகான நகரமாக இது அமையவேண்டும்" என்றதும் துவங்கியது மாயாஜாலம்.

வெளியிலிருந்து படையெடுத்து வந்தவர்கள் கூட, ஆட்சி செலுத்த தங்கள் தலைநகரமாக இந்திரபிரஸ்தத்தையே தேர்ந்தெடுத்தனர். இன்று வரையிலும் அதிகார மையங்கள் அங்கேதான் இருக்கிறது, இந்திரபிரஸ்தம் உயிர்ப்புடன் இருக்கிறது. இப்போது அது மாயாஜாலமாக இருக்கிறதா இல்லையா என்பது ஒரு சிந்திக்க வேண்டிய கேள்வி.

தனது நிர்மாணியாக திகழ்ந்த விஸ்வகர்மாவை அழைத்து நகரை எழுப்ப உத்தரவிட்டான் இந்திரன். அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த போது தனது ஜீவ உடலை ஒரு போர்வையைப் போல் நகர் முழுவதும், அதன் சுவர்கள், கோபுரங்கள், அரண்மனைகள், மன்றங்கள், இல்லங்கள் என அனைத்தின் மீதும் பரப்ப, எழுந்தது புதிய நகரம். இந்த மாயாஜாலத்தை இந்திரனும் கிருஷ்ணரும் மட்டுமே கண்ணுற்றனர். மற்ற அனைவரும் காலையில் கண்விழித்துப் பார்த்ததும், தாங்கள் ஒரு அழகான நகரத்தில் இருப்பதைக் கண்டார்கள். இரவோடிரவாக பாண்டவர்கள் தங்கள் நகரை நிர்மாணித்து விட்டார்கள் என்ற செய்தி காட்டுத்தீயாகப் பரவியது.

அந்த கணம் முதல், பாண்டவர்களை மக்கள் கடவுள் போலவே பார்த்தார்கள். ஏற்கனவே இறப்பிலிருந்து மீண்டு வந்ததாக அவர்களைப் பற்றி பல கதைகள் உலவி வந்தது. பாண்டவர்கள் இறந்து தேவலோகம் சென்றதாகவும், தங்களை தேவர்களாக உருமாற்றிக் கொண்டதாகவும், பிறகு மீண்டும் பூலோகம் திரும்பி இப்போது இரவோடிரவாக ஒரு நகரை நிர்மாணித்துவிட்டதாகவும் மக்கள் பேசத் துவங்கினார்கள். மிக அழகான நகரமாக இந்திரபிரஸ்தம் உருவெடுத்திருந்தது. இன்றும்கூட பாரதத்தின் தலைநகராக இருக்கிறது. புதுதில்லியின் ஒரு பகுதியாக இந்திரபிரஸ்தம் இருக்கிறது. பல்வேறு சாம்ராஜ்யங்களின் தலைநகரமாக தொடர்ந்து தன் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. வெளியிலிருந்து படையெடுத்து வந்தவர்கள் கூட, ஆட்சி செலுத்த தங்கள் தலைநகரமாக இந்திரபிரஸ்தத்தையே தேர்ந்தெடுத்தனர். இன்று வரையிலும் அதிகார மையங்கள் அங்கேதான் இருக்கிறது, இந்திரபிரஸ்தம் உயிர்ப்புடன் இருக்கிறது. இப்போது அது மாயாஜாலமாக இருக்கிறதா இல்லையா என்பது ஒரு சிந்திக்க வேண்டிய கேள்வி.

தொடரும்...