சத்குரு:

எண்ணங்களை விழிப்புணர்வற்ற நிலையில் பயன்படுத்துவதால்தான் ஒருவர் உண்மையிலிருந்து, தெய்வீகத்திலிருந்து விலகி வெளிநோக்கி சென்றுவிடுகிறார். அதே எண்ணங்களை விழிப்புணர்வுடன் பயன்படுத்தும்போது நம் பயணத்தை உள்நோக்கித் திருப்ப முடியும். எங்கோ ஓரிடத்திற்கு உங்களை ஒரு வாகனம் சுமந்து சென்றது என்றால், அதே வாகனத்தைக் கொண்டே திரும்பி வருவதுதான் மிகவும் சிறந்த வழி. அந்த வாகனம் தவறான இடம் நோக்கி புறப்பட்டிருக்கலாம், ஆனாலும் அந்தப் பாதையில் ஏற்கனவே ஒரு முறை பயணப்பட்டிருக்கிறது. எனவே எந்த எண்ணங்கள் உங்களை ஒரு இடத்திலிருந்து வெளிநோக்கிய பயணத்திற்கு அழைத்துச் சென்றதோ அதே எண்ணங்கள்தான் நீங்கள் எங்கிருக்க வேண்டுமோ அங்கே மீண்டும் உங்களை கொண்டு சேர்க்கும். உண்மையில் எண்ணங்களோ அல்லது மனத்தின் இயக்கமோ பிரச்சனையில்லை. விழிப்புணர்வற்ற நிலையில் அந்த எண்ணங்களை நீங்கள் பயன்படுத்துவதுதான் பிரச்சனை.

இந்த எண்ண முறைகளை வெகு சுலபமாக விழிப்புணர்வுடன் நடத்தமுடியும். அந்த விழிப்புணர்வை எளிதாக பராமரிக்க உங்கள் கையில் எப்போதும் போதுமான கருவிகள் உள்ளன. போதுமான ஆன்மீகப் பயிற்சிகள் உள்ளன. முதலில், எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் உங்கள் முட்டாள்தனத்தை விட்டு, எண்ணங்களை விழிப்புணர்வுடன் நடத்தக் கற்றுக் கொண்டாலே, நீங்கள் விரும்பும் இடத்திற்கு இயல்பாகவே அந்த எண்ணங்களை செலுத்த முடியும். பயணிக்கும் திசையும் நோக்கமும் சரிசெய்து விட்டாலே எண்ணங்கள் என்பது எப்போதும் மிகச் சிறிய பிரச்சனைதான். எனவே பயணிக்கும் திசைக்கும் நோக்கத்திற்கும் நீங்கள் அதிக கவனம் கொடுப்பது மிகவும் முக்கியம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.