ஈஷா யோகா மையத்தின் பிறப்பு

சத்குரு: , தியானலிங்கத்தை நிறுவ ஓர் இடம் தேட ஆரம்பித்தபோது, தமிழ்நாடு முழுவதும் பல இடங்களை எனக்குக் காட்டினார்கள். அவர்கள் எனக்கு என்ன காட்டினாலும், "இது கிடையாது," "இது கிடையாது," "இது கிடையாது". என்றே சொல்லிக்கொண்டு இருந்தேன். எல்லோரும் "நீங்கள் என்னதான் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று எரிச்சலடையும் நிலையைத் தொட்டுவிட்டார்கள்.”

.பிறகு ஒருநாள் இன்று ஆசிரமம் இருக்கும் இடத்திற்கு வர நேர்ந்தது. மாலையில் தோராயமாக 6:45 மணியளவில் காரில் வந்திருந்தோம். ஒரு வளைவைக் கடக்கும்போது நான் ஏழாவது மலையைக் கண்டேன். நான் அங்கே அப்படியே சில விநாடிகளுக்கு நின்றுவிட்டேன், அடுத்து எங்கு செல்லவேண்டும் என்பதை நான் அறிந்தேன். இப்போது ஆசிரமம் இருக்கும் இடத்திற்குள் நுழைய அப்போது சாலை எதுவும் கிடையாது. அது நுழையமுடியாதபடி எல்லாப்பக்கமும் காடாக இருந்தது. காட்டின் ஊடே ஊடுறுவிச்சென்று இந்த இடத்தை அடைந்ததும், "இதுதான்! இந்த இடம் வேண்டும்." என்றேன். ”

என்னுடன் இருந்தவர்கள், "இதற்கு சொந்தக்காரர் யார் என்றுகூட நமக்குத் தெரியாது, இது விற்பனைக்கு உள்ளதா என்றும் தெரியாது." என்றார்கள். அது பரவாயில்லை, இதற்கு யார் சொந்தக்காரர்கள் என்று கண்டுபிடியுங்கள் என்றேன்.

விற்கும் நோக்கமே இல்லாத, கோவையிலுள்ள ஒரு வசதியான குடும்பத்திற்கு சொந்தமானதாக இருந்தது இந்த நிலம். என்னுடன் இருந்த அனைவரும், அவர்கள் நிலத்தை விற்க வழியே இல்லை என்று நம்பினார்கள், ஆனாலும் நான் அவர்களைக் கேட்கச் சொன்னேன். 11-வது நாளில் இந்த நிலத்தில் காலடி எடுத்து வைத்தபோது, நிலம் ஈஷா அறக்கட்டளையின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.