சத்குரு: கட்டிடக்கலை என்பது வடிவியலின் விளையாட்டு. படைப்பு என்பது அற்புதமான கட்டிடக்கலை. என் கட்டிடக்கலையோ இந்தப் படைப்பின் சின்னஞ்சிறிய பிரதிபலிப்பு... இயற்கையின் சாரம். நான் படித்துப் பட்டம்பெற்ற கட்டிடக்கலை வல்லுநர் அல்ல. ஆனால் ஆசிரமத்தில் உள்ள அத்தனைக் கட்டிடங்களையும் நான் வடிவமைத்திருக்கிறேன். இங்குள்ள கட்டிடங்கள் நாங்கள் உபயோகித்த கட்டிடப் பொருட்களின் உறுதியால் நிற்கவில்லை... அவற்றின் கச்சிதமான வடிவியலால்தான் அவை நின்று கொண்டிருக்கின்றன. சிமெண்ட், ஸ்டீல் உபயோகித்துக் கட்டும் கட்டிடங்களை எப்படி வேண்டுமானாலும் வடிவமைக்கலாம், ஏனெனில் அவை அக்கட்டிடப்பொருட்களின் உறுதியால் நிற்கும், அதன் வடிவியலால் அல்ல. ஆனால் இங்கு நாம் இயற்கைப் பொருட்களான செங்கல், சுண்ணாம்பு மற்றும் மணலை உபயோகிக்கிறோம். அதனால் இக்கட்டிடங்களின் பலமும் உறுதியும் அதன் வடிவியலை சார்ந்திருக்கிறது.

இங்கிருக்கும் கட்டிடங்கள் எல்லாம் தளர்வாய் இருக்கின்றன. அவை தியானத்தில் இருக்கின்றன என்றும்கூட சொல்லலாம், ஏனெனில் இக்கட்டிடங்களில் இழுவிசை (tension) கிடையாது.

நவீன கட்டிடங்கள் இழுவிசையால் சேர்ந்து நிற்கிறது. பல கட்டிடங்களில் கூரைக்கும் புவியீர்ப்பு விசைக்கும் இடைவிடாது போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. புவியீர்ப்பு விசைக்கு கட்டிடத்தை கீழிழுக்க ஆசை, கூரைக்கோ மேலே நிற்க ஆசை. இதில் ஒரு நாள் புவியீர்ப்பு விசை வென்றிடும். கூரையின் கலவை வலியதாக இருப்பதால்தான் கட்டிடம் நிற்கிறது. அனால் இங்கிருக்கும் கட்டிடங்கள் எல்லாம் தளர்வாய் இருக்கின்றன. அவை தியானத்தில் இருக்கின்றன என்றும்கூட சொல்லலாம், ஏனெனில் இக்கட்டிடங்களில் இழுவிசை கிடையாது. அதனால் நான் சிரித்துக்கொண்டே மக்களுக்குச் சொல்வேன் “இங்குள்ள கட்டிடங்களே தியானம் செய்யும்போது, உங்களுக்கு அது மிகச்சாதாரணமான விஷயமாக இருக்கவேண்டுமே!" என்று. இப்பூமியில் செயல்படும் விசைகளோடு இக்கட்டிடங்கள் முழுமையான ஒத்திசைவில் இருக்கின்றன.