சத்குரு : எங்கள் வீட்டைச் சுற்றிலும் நிறைய மரங்கள் இருக்கும். அதில் பழமரங்கள் அதிகம். அம்மரங்களின் கனிகளை பறிக்கக்கூடாது என்பதை நாங்கள் ஒரு கொள்கையாகவே பின்பற்றினோம். எங்களுக்குப் போதுமான அளவிற்கு உணவு இருந்தது என்பதால், பறவைகள், அணில் மற்றும் பிற உயிரினங்களுக்கு அப்பழங்கள் பயன்படட்டும் என்று அதை விட்டுவிட்டோம். உணவிற்கு பஞ்சமின்றி நிறையவே கிடைக்க, பறவை, அணில்களின் இனவிருத்தி அதிகமாக இருந்தது. பருவகாலம் வரும்போது திடீரென டசன் கணக்கில் அணில்குட்டிகள் இங்குமங்கும் ஓடிக்கொண்டிருக்கும். நான் அடிக்கடி வெளியூர் பயணம் செய்ததால், வீட்டில் அதிகம் இருக்கமாட்டேன். ஒருமுறை நான் திரும்பி வந்தபோது, அந்த அணில்கள் என் குளியலறைக்குள் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். என் அறையில் இருந்த பெரிய ஜன்னல்களுக்கு வலைகள் பொருத்தியிருந்தோம். ஆனால் இந்த அணில்கள் மிக சாமர்த்தியமானவை. சிறிதாய் ஒரு ஓட்டை தென்பட்டாலும் கூட, அதைப் பெரிதாக்கி அதன் வழியாக உள்ளே நுழைந்துவிடுகின்றன.

இதில் சில அணில்கள், என் குளியலறையில் தம் வீட்டை கட்டிக் கொண்டிருந்தன. சரி எப்படியோ வந்தது வந்து விட்டார்கள், தம் வேலையை முடித்துக்கொண்டு போகட்டும் என விட்டுவிட்டேன்.

இந்த பாதுகாப்பான, வெளிஆபத்துகளின் பயமில்லாத சூழ்நிலையில், அணில்குட்டிகள் நன்றாக வளர்ந்தன. சரி அவை சீக்கிரம் கிளம்பிவிடும் என்று பார்த்தால், இப்போது புதிதாய் அங்குவந்த அவர்கள் "மாப்பிள்ளை" என் புத்தக அடுக்கில் தன் வீட்டை அமைக்க ஆயத்தமானது. அங்கே வீட்டை அமைத்துக்கொண்டு குடியேறிய பின், அந்த புதுகுடும்பம் அட்டகாசம் செய்யத்துவங்கிது. விடிகாலை 4.30 மணிக்கெல்லாம் மிக உரக்கமாக அவை கிரீச்சிடத் துவங்கிவிடும். விடிந்ததும் வெளியே செல்ல வேண்டுமெனில் நான் கதவைத் திறந்துவிட வேண்டுமே! சரி பரவாயில்லை என்று அதற்கும் இணங்கினேன். வேறு என்னதான் செய்வது? இப்படியே சிலநாள் சென்றபின், மற்றுமோர் அணில், இவர்களின் மாமாவோ, சித்தப்பாவோ, இன்னொரு வீடு ஒன்றை கட்டத் துவங்கியது. நல்ல வீட்டுமனை... மிகச் சிக்கனமாகக் கிடைக்கிறதே! இப்படியே வீடு முழுவதும் "கீச்... கீச்... கீச்" என இரவெல்லாம் அவர்கள் சப்தம் வீட்டை நிறைத்தது. பின், என் புத்தகங்களின் மேல் அவற்றிற்கு ஆர்வம் பிறந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, புத்தகங்களை படிக்கத் தெரியாது என்பதால், அதை அப்படியே ஜீரணிக்க ஆரம்பித்தன! இப்படியே என் புத்தகங்கள் அனைத்தையும் அவை "படித்து" முடித்தன. நாட்கள் செல்லச்செல்ல மிக தைரியமாக அவை வீட்டின் மாடிப்படிகளில் ஏறி இறங்கி விளையாடி, வாயிற் கதவு வழியாக உள்ளே நுழைந்து, வீடு முழுவதும் அட்டகாசம் செய்தன.

மாதத்தின் பெரும்பகுதி நான் பயணத்தில் இருந்தேன் என்பதால், என் வீட்டிற்கு நான் ஒரு விருந்தாளி போல்தான் வந்துசென்றேன். இப்படி எப்போதாவது நான் வீட்டிற்கு வரும்போது, "இவன் யார்?" என்பதுபோல் அந்த அணில்கள் என்னை மேலும்கீழும் பார்க்கும்.

இது நிஜம்தான். அணில்களை நீங்கள் கூர்ந்து கவனித்தால், அவற்றின் முகத்தில் பலவித பாவங்கள் வெளிப்படுவதை நீங்கள் பார்க்கலாம். "யார் இவன்? இவன் எப்படிப்பட்டவன்?" என்று எடைபோடும் பாவத்தோடு, என்னை அவை மேலும்கீழும் பார்க்கும். அதன்பின் அணில்களின் சேட்டை மிக அதிகமாகிவிட்டது, இதை இதற்குமேல் தொடரவிடுவது சரியல்ல என்று முடிவெடுத்தேன். அவை மீண்டும் உள்ளே நுழையாதபடி எல்லா ஓட்டைகளையும் அடைத்துவிட்டு, அவற்றை வீட்டிற்கு வெளியே விரட்டினோம்.

அன்றிரவு குளிக்கலாம் என்று குளியலறைக்கு சென்று லைட்டை போட்டேன். அங்கு ஒருபக்க சுவரில் இருந்த விரிசலின் இடைவெளியில், இரு சின்னஞ்சிறு அணில்குட்டிகள் தம் தலையை நீட்டி பார்த்துக் கொண்டிருந்தது. இத்தனை நேரம் ஆகியும் அவற்றின் தாய்-தந்தை வீட்டிற்கு வரவில்லையே என்ற கலக்கத்தோடு அவை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தன. அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியாது. நல்ல உணவை பொறிக்குள் வைத்து, அவை இரண்டையும் அதில் பிடித்தோம். ஆனால் அந்த சின்னஞ்சிறு குட்டிகளை எங்கே கொண்டுபோய் விடுவது? அவை மிகமிகச் சிறியவை. தம்மை பாதுகாத்துக்கொள்ளத் தெரியாதவை. அதனால், வெளியே இன்னும் சில பொறிகளை வைத்து பெரிய அணில்களை பிடிக்க முயன்றோம். அப்படி இரண்டு பெரிய அணில்களைப் பிடித்தோம். பிடிபட்ட இரண்டும் இக்குட்டிகளின் சொந்தமா அல்லது பெற்றோர்களா என்று தெரியவில்லை. ஆனால் அனேகமாக பெற்றோர்களாகத்தான் இருக்கவேண்டும். ஏனெனில் குறிப்பாக இந்த இடத்திற்குள் நுழையவே அவையிரண்டும் முயற்சி செய்து கொண்டிருந்தன. பின் இந்த நான்கு அணில்களையும் ஒரே பெட்டியில் சில மணிநேரம் சேர்ந்திருக்க வைத்துவிட்டு, அவற்றை ஒன்றாக காட்டில் விட்டுவிட்டு வந்தோம்.