சத்குரு: குறிக்கோள் ஏதுமின்றி, அதற்கான அவசியமுமின்றி, இங்கு வெறுமனே வாழ்வை வாழ்வது ஆன்மீகம். அதற்காக சோம்பேறியாக எதைப்பற்றியும் அக்கறையின்றி இருப்பதல்ல. ஆன்மீகம் என்றால், வாழ்வை முழு தீவிரத்தில் வாழ்வது. குறிக்கோள் என்று எதுவுமில்லை... ஆனால் இந்நொடியில் இங்கு என்ன இருக்கிறதோ, அதனுடன் முழு தீவிரத்தில் ஈடுபடுவது. "நாளைக்கு எது வேண்டுமானாலும் நடக்கட்டும், ஆனால் இன்று இந்நொடியில் நான் செய்யும் செயலில் நான் முழு தீவிரத்துடன் ஈடுபடுவேன்" என்ற துணிவோடு நீங்கள் இருக்கமுடியும் என்றால், இயல்பாகவே நீங்கள் ஆன்மீகத்தில்தான் இருப்பீர்கள்.

சில வருடங்களுக்கு முன், மலைமுகடுகள் ஏறும் சாகசம் நிறைந்த சிறு குழு ஒன்றைச் சந்தித்தேன். இருப்பதிலேயே உயரமான மலைச்சிகரங்கள் சிலவற்றை அவர்கள் ஏறியிருந்தார்கள். வடதுருவத்திற்கு நடந்தே சென்றது, கடல் மட்டத்திலிருந்து 22,000 அடி உயர சிகரம்கொண்ட ஆண்டிஸ் (Andes) மலைமுகடை அடைய கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் குளிர்காலத்தில் ஏறியது என இவர்கள் பல சாதனைகள் செய்துள்ளனர். 'அடுத்த நொடியில் என்ன நிகழும் என்றே தெரியாது' என்ற சூழ்நிலையில் அவர்கள் வாழ விரும்பினார்கள். இவர்கள் என்னைச் சந்திக்க வந்தபோது, நமது தன்னார்வத்தொண்டர் ஒருவர் அவர்களிடம் நம் 3-நாள் இன்னர் இஞ்சினியரிங்க்வகுப்பைப் பற்றி எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அவர்களைப் பார்த்ததுமே, அவர்களின் மீது மூன்று நாட்கள் வீணடிக்கத் தேவையிருக்காது என்பதை நான் தெரிந்துகொண்டேன். என்னுடன் அமர்ந்து அவர்களை கண்மூடச் சொன்னேன். அவ்வளவே. நடக்கவேண்டியது நடந்தது... ஒரு வார்த்தை கூடப் பேசாமல்.

அவர்கள் வாழ்வில் அவர்கள் என்றுமே ஆன்மீகம் பற்றி எண்ணியதில்லை. அவர்களுக்குத் தேவையானது எல்லாம், துணிவோடு சாகசம் செய்வது மட்டுமே. அடுத்த நொடியில் என்ன நடக்கும் என்பதை யூகிக்கமுடியாது என்பது போன்ற சூழலில் அவர்கள் வாழ விரும்பினார்கள்.

அவர்களுக்கு நான் எதையும் சொல்லிக்கொடுக்க அவசியம் இருக்கவில்லை. அவர்களுக்குள் தீப்பொறி ஒன்றை பற்றவைக்க வேண்டியிருந்தது அவ்வளவுதான். ஏனெனில் அவர்கள் ஏற்கெனவே தயார்நிலையில்தான் இருந்தார்கள். அவர்கள் உடல் நன்னிலையில், ஆரோக்கியமாக இருந்தது, மனமும் திறந்த நிலையில், எதற்கும் தயாராகவே இருந்தது. இது நடப்பதற்கு அவ்வளவுதான் தேவை.