வறட்சியிலும் வாடாத இயற்கை விவசாயம்
இத்தகைய வறட்சி காலங்களில் விவசாயம் செய்ய முடியாது எனக் கூறும் விவசாயிகளின் மத்தியில், முடியும் என்று கூறுகிறார் பொள்ளாச்சி ஆனைமலை அருகில் வேட்டைக்காரன் புதூரைச் சேர்ந்த பொறியாளர் விவசாயி திரு.வள்ளுவன் அவர்கள்.
பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 8
கடந்த ஆண்டு தேவைக்கு அதிகமாக பொழிந்த மழை, இந்த ஆண்டு மிகக் குறைவாகவே பெய்துள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு தென்மேற்கு பருவமழை கிட்டத்தட்ட பொய்த்து விட்டது என்றே சொல்லலாம்.
இத்தகைய வறட்சி காலங்களில் விவசாயம் செய்ய முடியாது எனக் கூறும் விவசாயிகளின் மத்தியில், முடியும் என்று கூறுகிறார் பொள்ளாச்சி ஆனைமலை அருகில் வேட்டைக்காரன் புதூரைச் சேர்ந்த பொறியாளர் விவசாயி திரு.வள்ளுவன் அவர்கள்.
ஆம், அவரது பண்ணைக்கு சென்று பார்வையிட்டால் உண்மை புரியும். அவரது பண்ணை மட்டும் பசுமையாக இருக்க, சுற்றியுள்ள தோட்டங்கள் பசுமையிழந்து காட்சியளிக்கின்றன.
இது எப்படிச் சாத்தியமானது என்பதை கள்ளிப்பட்டி கலைவாணியுடன் கேட்டறிவோம் வாருங்கள்!
“இயற்கை விவசாயத்தினால் தான் எனது பண்ணை பசுமையாக உள்ளது. இதில் நீர் நிர்வாகமும் மிக அவசியம். இயற்கை விவசாயத்தில் கடைப்பிடிக்கும் உத்திகளான மூடாக்கு, உயிர் மூடாக்கு, பல அடுக்கு பயிர்முறை போன்றவற்றை கடந்த 5 ஆண்டுகளாக பின்பற்றுவதால் எனது பண்ணை வறட்சியிலும் நன்றாக உள்ளது.” கூறுகிறார் திரு.வள்ளுவன்.
பல் அடுக்குப் பயிர்முறை
பல் அடுக்குப் பயிர்முறை என்பது காடுகளில் எப்படி பல அடுக்குகளில் பல்வேறு வகையான மரங்கள் உள்ளதோ அவ்வாறே தோட்டங்களில் உருவாக்குவதாகும்.
“காடு பாத்து வாழு, கச்சேரி செஞ்சு வாழு’ன்னு சொல்லுவாங்கோ என்ற ஊரு கள்ளிப்பட்டியில! இந்த கலைவாணியோட பண்ணையிலயும் காட்டுல இருக்குற மாறியே பல் அடுக்கு பயிர்முறைய ஒட்டுக்க பண்ணாட்டியும் கொஞ்சம் கொஞ்சம் ட்ரை பண்ணியிருக்கோமுங்க! ஒருநாளைக்கு அல்லாரையும் கூட்டிப்போயி காட்றேனுங்கண்ணா!.”
வள்ளுவன் அவர்களின் பண்ணையில், தென்னை முக்கிய பயிராகவும், இடையில் பாக்கு, ஜாதிக்காய், மகாகனி, கிளைரிசிடியா போன்ற மரங்கள் ஊடுபயிராகவும் செய்யப்பட்டுள்ளது. அதாவது பல அடுக்குத் தன்மை உருவாகியுள்ளது.
உயரமான தென்னை மரம், அதற்கடுத்து சற்று உயரம் குறைந்த பாக்கு மரம், அதற்கடுத்து சற்று உயரம் குறைந்த மகாகனி, அதற்கடுத்து வாழை, இடையிடையில் ஜாதிக்காய்... இப்படி உள்ளது! தென்னையிலும், பாக்கிலும் மிளகு கொடி சுற்றிக் கொண்டிருக்கிறது.
Subscribe
இப்படி பல்வேறு அடுக்குகளில் மரங்கள் உள்ளதால் சூரிய ஒளி உட்புகும் அளவை குறைக்கின்றன. எனினும் சூரிய ஒளி தேவையான அளவு கிடைக்கிறது. அதாவது சூரிய ஒளி காலையில் இருந்து மாலை வரை சில இடங்களில் படும், சில இடங்களில் படாமலும் மாறி மாறி கிடைக்கும். இதை நகரும் ஒளி அல்லது நகரும் நிழல் (Dancing shadow) என்று கூறலாம்.
“ஏனுங்க நீங்களே சொல்லுங்க, அல்லா உசுரும் வாழ்றதே சூரிய ஒளியில தானுங்களே?! ஆயிரம் கை மறைச்சு நின்னாக்கூட ஆதவன மறைக்க முடியாதுங்கண்ணா. சூரிய ஒளி கிடைக்குற மாறி நல்ல வெகராமா நம்ம வள்ளுவன் அண்ணா பல் அடுக்கு வேளாண்மை செஞ்சிருக்காருங்கோ!”
உயிர் மூடாக்கு
மண்ணில் சூரிய ஒளி படாதவாறு நிலத்தை மூடி வளர்ந்துள்ள தாவரங்களை உயிர் முடாக்கு என்று கூறலாம். உயிர் மூடாக்கு, சூரிய ஒளி நேரடியாக மண்ணில் படுவதை தடுப்பதோடு தழைச் சத்தையும் நிலைப்படுத்துகிறது. நரிப்பயிறு, கொள்ளு, சர்க்கரை வள்ளி கொடி, தட்டை, மஞ்சள், சேனை போன்றவை உயிர் மூடாக்காக உள்ளன.
காட்டில் விழுகின்ற இலைதழைகளை யாரும் அகற்றுவதில்லை. அவ்வாறே நாமும் மரத்தில் இருந்து கீழே விழும் இலைதழைகளை அகற்றவோ, எரிக்கவோ கூடாது. கிடைக்கும் இலைதழைகளை வேரைச் சுற்றியோ, சால்களிலோ மண் தெரியாதபடி தேவையான அளவுக்கு பரப்ப வேண்டும். இதனால் மண்ணில் இருந்து நீர் ஆவியாதல் தடுக்கப்படுகிறது. சிறிது காலத்தில் இலை தழைகள் மக்கி மண்ணை வளப்படுத்துகிறது.
“இலையறுக்க குலை வளரும்னு என்ற அப்பாரு சொல்லுவாப்டிங்கோ! வாழை இலைய நாம ஆசப்பட்டு அறுத்துப்போட்டு, மத்த மரத்து இலைய கவனிக்காம விட்டுப்போடுறோமுங்க. ஆனா... கீழ விழுற இலைகள இதுமாறி மூடாக்கு செஞ்சுபோட்டோமுன்னா, மண்ணு நல்லா வளமாயி போயிருமுங்க!”
கிளைரிசிடியா என்ற மூடாக்கு மரம்
(Gliricidia sepium)
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது மூடாக்கு, மூடாக்குக்காகவே சில மரங்களை வளர்த்திருக்கிறார் திரு.வள்ளுவன். அதில் முக்கியமானது கிளைரிசியா (சீமைக்கொன்றை) மரமாகும். சிறு மரமான இது தனது வேர் முடிச்சுகளின் மூலம் நிலத்தில் தழைச் சத்தை நிலைப்படுத்தக்கூடிய இருவித்திலைத் தாவரமாகும்.
தென்னை, பாக்கு போன்ற மரங்கள் ஒருவித்திலை தாவரமாக இருப்பதால் தழைசத்து தேவைக்கு மற்ற இருவிதையிலை தாவரங்களில் உதவியை நாடியுள்ளது. கிளைரிசிடியா வளர்க்கும்போது தேவையான தழைச்சத்து கிடைக்கிறது. அவ்வப்போது கிளைரிசியா இலைகளை வெட்டி எங்கெங்கு மூடாக்கு தேவையிருக்கிறதோ அங்கெல்லாம் பரப்பிவிடுகிறார் வள்ளுவன். இதனால் நீர் ஆவியாதல் குறைகிறது, தேவையான தழைசத்தும் கிடைக்கிறது.
மரப்பயிர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற அனைத்து பயிர்களுக்கும் மூடாக்கு இடுவது அவசியம். இதற்காக வேலி ஓரங்களில் கிளைரிசிடியா, சூபாபுல், அகத்தி, சித்தகத்தி, கொன்றை போன்ற பயறுவகை தாவரக்குடும்ப (Fabaceae family) மரங்களை உங்கள் நிலத்திற்கும் பயிருக்கும் ஏற்ப, ஊடுபயிராகவோ அல்லது வரப்போரங்களிலோ வளர்க்க வேண்டும். அவைகளை அவ்வப்போது கழித்து இலைதழைகளை பயிர்களின் இடையே மூடாக்காக பயன்படுத்தவேண்டும்.
நிலத்தை சூரிய ஒளி படாமல் மூடுவதால் நன்மையே நிகழ்கிறது, தீமை ஒன்றும் நிகழ்வதில்லை. சூரிய ஒளி மரத்துக்கும், பயிருக்கும் கிடைத்தால் போதும், சூரிய ஒளி மண்ணிற்குத் தேவையில்லை.
“எருபோட்டவன் காடுதான் விளையும், ஊருக்குப் போனவன் காடு எப்படி விளையும்?னு என்ற அப்பத்தா ரொம்ப சரியாத்தான் சொல்லியிருக்காப்டி. அதுமாறி இலைதளைகளயே எருவா செஞ்சிருக்காங்க இந்த வேட்டைக்காரன் புதூர் பண்ணையில! மூடாக்கு போடுற விசயத்த நமக்கெல்லாம் புரியுறமாறி வெகரமா சொல்லிட்டாப்டி வள்ளுவன் அண்ணா!”
மேற்கண்ட பல் அடுக்கு பயிர்முறை, உயிர் மூடாக்கு, தாள் மூடாக்கு, மூடாக்கு மரங்கள் இவைகளினால் பயன்கள்
1. நீர் ஆவியாதல் குறைகிறது.
2. மண்ணின் நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கிறது.
3. மண்ணின் வளம் அதிகரிக்கிறது
4. மண்ணில் மண்புழுக்களும், நுண்ணுயிர்களும் அதிகரிக்கிறது.
நீர் மேலாண்மை
முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது நீர் மேலாண்மை. வாரம் ஒருமுறை மட்டும் ட்ரிப் மூலம் நீர் விடுகிறார் வள்ளுவன். இயற்கை விவசாயம் செய்வதால் மண்ணில் நீர் பிடிப்பு தன்மை அதிகரித்துள்ளதாலும், நீர் ஆவியாதல் மிக குறைவாக உள்ளதாலும் மிக குறைவான தண்ணீர் கொடுப்பதே போதுமானதாக உள்ளது என்கிறார். குறைவான தண்ணீரிலேயே மரங்கள் நன்றாக உள்ளன. இது இயற்கை விவசாயம் தனக்களித்த பரிசு என மகிழ்ச்சியுடன் அவர் தெரிவிக்கிறார்.
“நீர் உள்ளமட்டும்தான் மீன் குஞ்சு துள்ளும் ஊர் உள்ள மட்டும்தான் உறவுமுறை செல்லும்’னு என்ற ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்கோ. நீர் இருந்தாதானுங்க அல்லாமே நல்லா இருக்கும். அதய நாம சரியான முறையில பயன்படுத்தோணும்னு அண்ணா சொல்றாப்டி!”
சமீப காலமாக மழை பொழிவு நிச்சயம் இல்லாமல் இருக்கிறது. இத்தகைய சூழலில் தமிழக விவசாயிகள் வறட்சியால் நிலத்தை முடமாக்காமல், குறைந்த அளவு நீர் வசதி உள்ளவர்கள் மூடாக்கு செய்து பயிர்செய்வது நல்லது. மழைநீரும், நிலத்தடி நீரும் மேலும் மேலும் குறைந்து கொண்டே வரும் இக்காலத்தில் வறட்சியை எப்படி சமாளிப்பது என்ற உத்திகளை விவசாயிகள் அனுபவப்பூர்வமாகத் தெரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு தெரிந்த உத்திகளை மற்ற விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். இது தற்போதைய அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது என்பதை வலியுறுத்திக் கூறிய திரு.வள்ளுவன் அவர்களுக்கு ஈஷா விவசாய குழு நன்றி கூறி விடைபெற்றது.
தொடர்புக்கு: 9843059597