IYO-Blog-Mid-Banner

கொல்லைப்புற இரகசியம் தொடர்

டாக்டர். சாட்சி சுரேந்தர்,

ஈஷா ஆரோக்யா

உமையாள் பாட்டி ஒவ்வொரு வியாழக் கிழமையும் கிராம மக்களுக்கு இலவசமாக தனது கைவைத்திய சேவையையும் சில மருந்துகளையும் வழங்குவது வழக்கம். அன்று பாட்டியைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுவது எனது வழக்கம். உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரவமாக ஆகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். அன்று பௌர்ணமி என்பதால், கோயிலுக்கு சென்று கிராம தேவதையான முத்தாலம்மனை தரிசித்துவிட்டு, பிரசாதத்தை உமையாள் பாட்டியிடம் கொடுத்து வரச்சென்றேன். அன்று வியாழக்கிழமை என்பது சுத்தமாக நினைவில் இல்லை!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பாட்டியின் வீட்டிலிருந்து அடுத்த தெரு வரை வரிசை நின்றிருந்தது. வீட்டின் கொல்லைப்புறம் வழியாக பாட்டியை அடைந்தேன். நான் ஏதோ வைத்தியத்திற்கு வந்திருப்பதாக நினைத்த பலரும், ‘இவன் என்ன வரிசையில் நிற்காமல் குறுக்கே நுழைகிறான்’ என்பது போல முறைத்தனர். பாட்டியின் அருகில் பிரசாதத்தை வைத்துவிட்டு சைலண்ட்டாக கிளம்பினேன்.

“இந்தாப்பா அந்த பையை எடு!” பாட்டி ஒரு நபரின் நாடியைப் பார்த்தவாறே அன்புக் கட்டளையிட்டாள்.

துணிப்பைக்குள் இருந்த தூக்குச் சட்டியில் ஏதோ கீரை வெஞ்சனம் போல இருந்ததை எடுத்து, அந்த நோயாளிக்கு கொடுத்து, அதைக்கொண்டு கட்டி உள்ள இடத்தில் ஒற்றடம் கொடுத்து வரும்படி ஆலோசனை வழங்கினாள்.

எனக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது!

இது என்ன... கீரைப் பொறியல் போல இருப்பதைக் கொண்டு ஒற்றடமிட வேண்டுமா? அப்படியென்ன அந்தக் கீரை? கேட்டுத் தெரிந்துகொள்ள ஆவல் பிறக்க, அப்படியே பாட்டிக்கு ஒத்தாசை செய்வதுபோல அருகில் அமர்ந்தேன். பாட்டி என் நோக்கத்தை தெரிந்துகொண்டு மெல்லப் புன்னகைத்தாள்.

எப்படியும் நான் கேள்விகளைக் கேட்டுத் தொந்தரவு செய்யப்போகிறேன் என்று தெரிந்துகொண்ட பாட்டி, தானாகவே அந்த துத்தி இலை பற்றி சொல்ல ஆரம்பித்தாள், வைத்தியம் பார்த்துக்கொண்டே!

thuthi ilai uses in tamil - துத்தி இலை பயன்கள் - thuthi keerai

 

துத்தி இலை பயன்கள் (Thuthi Ilai Uses in Tamil):

மூல நோய் தீர்க்கும் துத்தி இலை (How to use thuthi leaf for piles in tamil):

“முறையில்லாத உணவுப் பழக்கத்தாலயும் வாழ்க்கை முறையினாலயும் மக்கள் மூலநோய்க்கு ஆளாகுறாங்க. இந்த துத்தி இலை மூல நோய்க்கு சிறந்த மருந்தா இருக்கு. ஆமணக்கு எண்ணெய் விட்டு துத்தி இலைய வதக்கி, மூலத்தால வர்ற கட்டி-புண்ணுக மேல ஒத்தடமிட்டு வந்தா, மூலநோய்க்கு நல்ல குணம் கிடைக்கும். அதான் அவருக்கு கொடுத்தேன்.” பாட்டி சொல்லிவிட்டு அடுத்த நபரை அழைத்தாள்.

பல் ஈறு பிரச்சனை தீர:

பல் ஈறு பிரச்சனையால் அவதியுற்றுக்கொண்டிருந்த அந்த நபருக்கு துத்தி இலைக் குடிநீரை வாயிலிட்டு கொப்பளிக்கும்படி ஆலோசனை வழங்க, துத்தியின் மற்ற குறிப்புகள் பற்றியும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது. செவிக்கு உணவு தேடும் என் ஆவலைப் புரிந்துகொண்ட பாட்டி, தொடர்ந்து பகிர்ந்தாள் துத்தி பற்றி!

உடல் வலி, மலச்சிக்கல் தீர:

“கொதிக்குற நீரில் துத்தி இலையப் போட்டு வேகவச்சு, அந்த தண்ணிய ஒரு துணியில நனைச்சுப் பிழிஞ்சு, உடல் வலிக்கு ஒத்தடமிட்டா உடல் வலி தீரும். இலைய கசாயம் செஞ்சு அதோட, பாலும் சக்கரையும் சேத்து குடிச்சு வந்தா, மலச் சிக்கல் தீரும். அதோடு மூலச்சூடும் தணியும்! அப்புறம்... இந்த துத்தி இலைய பருப்பு சேத்து சாப்பாட்டுல கலந்து சாப்பிடலாம். நம்ம முன்னோர்களெல்லாம் இந்த துத்திய உணவாதான் பாத்தாங்க, நாமதான் மருந்தா பாக்குறோம். துத்தி விதையில கூட நல்ல மருத்துவ குணங்கள் இருக்கு.”

துத்தி விதையின் பயன்கள்:

பாட்டி தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தபோது, அதிக உடல் சூட்டுப் பிரச்சனையைப் பற்றி ஒரு நபர் பாட்டியிடம் முறையிட்டார். ஒரு டப்பாவில் பொடி செய்து போட்டிருந்த துத்தி விதைப் பொடியை கொஞ்சம் பொட்டலம் போட்டு அவருக்குத் தந்து, அதனை சர்க்கரை சேர்த்து 1/2 கிராம் வீதம் தினமும் உண்டு வரச் சொல்லி அனுப்பினாள்.

துத்தி விதை பற்றிய குறிப்புகளை முழுமையாகச் சொல்லும்படி பாட்டியிடம் ஒரு விண்ணப்பம் போட்டேன்.
தொடர்ந்து சொன்னாள் பாட்டி!

“துத்தி விதைய கரிநெருப்புல போட்டு, அதிலயிருந்து வர்ற புகைய குழந்தைகளின் மலவாயில் படும்படி செய்தா, வயித்துப் புழுக்கள் வெளியேறும். துத்தி விதைக் கசாயத்த தினமும் (15-30 மிலி) குடிச்சு வந்தா பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், மூல நோய் குணமாகும்.”

பாட்டி துத்தியின் பல்வேறு ஆரோக்கியம் நல்கும் குணங்கள் பற்றி சொல்லியதும், பாட்டியிடம் கொஞ்சம் துத்தி இலையை போகும்போது வாங்கிச் செல்ல நினைத்தேன். ஆனால் அங்கிருந்த மக்களுக்கே அவை பற்றாக்குறையாக இருக்குமெனத் தோன்றியதால், வேறெங்காவது கிடைக்குமா என யோசித்துக் கொண்டிருக்கையில், பாட்டி சொன்னாள் “கொஞ்சம் ஈஷா ஆரோக்கியா வரைக்கும் போயி, துத்தி பொடி வாங்கிட்டு வர்றயா?! இங்க கொஞ்சம் பத்தல!”

ஈஷா ஆரோக்கியாவிற்குப் பயணமானேன்.