தங்கத்தை விரும்பாத பெண்கள் இல்லை என்பதைப் போல தேக்கு மரத்தை நட விரும்பாத விவசாயிகளைப் பார்ப்பதும் கடினம். அவ்வளவு ஏன்... வீட்டு முற்றத்திலும் கூட, ஆசைக்கு ஒரே ஒரு தேக்கு மரக்கன்றை நட்டு வளர்ப்பவர்களும் ஏராளம். தேக்கு மரத்தின் மீது மக்கள் கொண்டுள்ள பேரார்வம் அதன் மதிப்பை உணர்த்துகிறது.

மதிப்பு வாய்ந்த மர இனங்களில் தேக்கு மரமும் ஒன்றாக உள்ளது. இதன் தாவர அறிவியல் பெயர் “டெக்டோனா கிரான்டிஸ்”. கிரேக்க மொழியில் 'டெக்டன்' என்றால் தச்சருக்கு உரியது என்பதாகும். “கிராண்டிஸ்” என்றால் பிரமாதமானது என அர்த்தமாகும். அதாவது இந்த மரம் “தச்சர்களுக்கு உகந்த பிரமாதமான மரம்” என்பதாகும். தேக்கு ஓங்கி வளர்வதுடன் மிகவும் உறுதியானதுமாகும். ஆனால், அதன் வளர்ச்சி அது நடப்படக்கூடிய நிலத்தைப் பொறுத்தே அமைகிறது.

தேக்கு பயிரிட ஏற்ற நிலம்

தேக்கு மரம் கடல் மட்டத்திலிருந்து 1200 மீ உயரம் வரையிலுள்ள நிலப்பகுதியில் நன்கு வளரும். ஆண்டு மழையளவு 750 மி.மீ முதல் 2500 மி.மீ.வரை மழை பெறும் இடங்களில் நன்கு வளர்கிறது. இம்மரம் நல்ல வடிகால் வசதியுள்ள ஆற்று வண்டல், மணல் கலந்த நிலங்கள், செம்மண் நிலங்கள், செம்புறை மண் நிலங்கள் மற்றும் மணல் கலந்த களி நிலங்களிலும் நன்கு வளரும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கேரளா போன்ற அதிக மழைபெறும் மாநிலங்களில் இம்மரம் நன்கு வளர்கிறது. தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் மண் வளமும் நீர் வளமும் மிக்க பகுதிகளில் பருத்து வளருகிறது.

மண் ஆழம் குறைவாக உள்ள நிலங்களும் கடுங்களி நிலங்களும் மற்றும் நீர்வடியா நிலங்களும் இம்மரம் வளர்ப்பதற்கு ஏற்றதல்ல. குறிப்பாக ஆண்டிற்கு 750 மி.மீ அளவிற்கு குறைவாக மழைபெய்யும் பகுதிகளில் இம்மரம் நன்றாக வளருவதில்லை. மேலும் தொடர்ந்து மழையில்லாத மானாவாரி பகுதிகளிலும் நன்றாக வளருவதில்லை.

தேக்கு ஒரு “ஒளி விரும்பி” “Light demander” ஆகும். நல்ல சூரிய ஒளி கிடைத்தால் தான் மரம் நல்ல முறையில் வளரும்.

சிலர் எந்தெந்த நிலப்பகுதியில் தேக்கை நடுவது என்ற வரைமுறை அறியாமல், தங்கள் நிலமெங்கும் தேக்கு கன்றுகளை நட்டு விடுகின்றனர். தகுந்த மண் வளமும் நீர் வசதியும் இல்லாத நிலத்தில் வைக்கப்படும் கன்றுகள் ஓங்கி உயர்ந்து மரமாக வளர வழியின்றி குச்சி குச்சியாக நிற்பதைப் பார்க்க முடிகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தேக்கு மரத்திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு தனியார் நிறுவனங்கள் ஆசையைத் தூண்டிவிட, ஆர்வக் கோளாறில் மக்கள் தேக்கு மரங்களை நீர் வசதியில்லாத மண் வளமில்லாத தங்கள் நிலங்களில் நட்டு வைத்தனர். குறிப்பாக, தமிழகத்தின் வறட்சி பகுதிகளான தென் மாவட்டங்களில் வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான தேக்கு மரக்கன்றுகள் காய்ந்து போயுள்ளதை நெடுஞ்சாலை பேருந்து பயணம் காட்டிக்கொடுக்கிறது.

ஈஷா பசுமைக் கரங்கள்

ஈஷா பசுமைக் கரங்களின் வேளாண் வல்லுநர்கள் மூலம் உங்கள் நிலத்திற்கு ஏற்ற மர இனங்களை நடுவதற்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. ஈஷா பசுமைக் கரங்களின் நாற்றுப் பண்ணைகளிலிருந்து மிகக் குறைந்த விலையில் நீங்கள் மரக்கன்றுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். வறட்சியைத் தாங்கும் மரங்களான வேம்பு, நாட்டுவாகை, பூவரசு போன்ற மரங்களை அதிக தண்ணீர் வசதி இல்லாத இடங்களில் நடலாம். தண்ணீர் வசதி இருக்கும் பட்சத்தில் அதற்கு ஏற்றாற் போல மலை வேம்பு, செஞ்சந்தனம், தேக்கு போன்ற வகை மரக்கன்றுகளை நட்டு சில வருடங்களில் நல்ல வருமானம் பெறமுடியும்.

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம், தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ளது. எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்யேகமாக தயார் செய்து தரப்படுகிறது. புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.5) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொ. பே. 94425 90062