மாநிலம் சிறக்க மழைநீரை பிடித்து வைப்போம்!
மழை கொட்டித் தீர்க்கிறது; அனைத்து அணைகளும் நிரம்புகின்றன. கேட்பதற்கே எவ்வளவு நன்றாக இருக்கிறது! ஆனால், எல்லா வருடமும் இப்படி பெய்வதில்லை. அதோடு, அடுத்த இரண்டு மூன்று மாதங்களிலேயே சூரியன் அனைத்தையும் ஆவியாக்கக் காத்திருக்கிறான். இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன?! கொஞ்சம் இங்கே படியுங்கள்!
மழை கொட்டித் தீர்க்கிறது; அனைத்து அணைகளும் நிரம்புகின்றன. கேட்பதற்கே எவ்வளவு நன்றாக இருக்கிறது! ஆனால், எல்லா வருடமும் இப்படி பெய்வதில்லை. அதோடு, அடுத்த இரண்டு மூன்று மாதங்களிலேயே சூரியன் அனைத்தையும் ஆவியாக்கக் காத்திருக்கிறான். இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன?! கொஞ்சம் இங்கே படியுங்கள்!
சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
Subscribe
பொதுவாக இயற்கையே மழைநீரைப் பிடித்து வைப்பதற்கு ஏரிகள், குளங்கள் போன்ற அமைப்புகளை உருவாக்கிக் கொண்டிருந்தாலும், பெருகி வரும் மக்கள் தொகைக்கும், மாறி வரும் தட்பவெப்ப நிலைக்கும் அவை போதுமானதாயில்லை. கோடை காலத்தில் உச்சியைப் பிளக்கும் வெயில், நீர் தேக்கங்களை கபளீகரம் செய்துவிடுகின்றன. ஒவ்வொரு ஊரிலும் வீடுகளிலும் மேற்கொள்ளப்படும் மழைநீர் சேகரிப்புதான் இதற்குத் தீர்வாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
விருதுநகர், ராமநாதபுரம் போன்ற வறட்சி நிலவும் மாவட்டங்களில் இப்போதும் கூட மழைநீரை மட்டும் நம்பி வானம் பார்த்த பூமியில் வேளாண்மை நடந்து வருகிறது. நகரத்தார் எனச் சொல்லப்படும் காரைக்குடி, தேவகோட்டைமற்றும் செட்டிநாட்டு பகுதிகளில் தங்களின் வீடுகளிலேயே மழை நீர் சேகரிப்பு அமைப்புக்களை கட்டிவைத்துள்ளனர். அவர்கள் தங்கள் வீட்டின் மத்தியில் மழைநீர் தேங்கும்படி முற்றம் அமைத்திருப்பதைப் பார்க்கமுடியும். தங்கள் முற்றத்தில் வந்து விழும் நீரைப் பித்தளைப் பாத்திரத்தில் சேகரித்து வைத்து, பின்னர் அதனை கொதிக்க வைத்து குடிநீராக பயன்படுத்துவது இப்போதும் வழக்கத்தில் உள்ளது.
மகாத்மா காந்தி பிறந்த வீட்டில் (குஜராத் மாநிலம், போர்பந்தர்) காந்தி பிறந்த அறைக்கு முன்புறமாக, வீட்டின் மூன்று பகுதிகளுக்கு நடுவில் அமைந்த வராண்டாவின் அடியில் ஒரு தொட்டியை அமைத்திருந்தனர். போர்பந்தர் பகுதியில் நிலத்தடி நீர் உப்புகரித்து கடினமாக இருப்பதால் சமையலுக்கு உபயோகிக்க இயலாததாக இருக்கிறது. ஆகவே காந்தியின் வீட்டில் மழை நீரை இந்தப் பெரிய தொட்டியில் சேகரித்து வருடம் முழுவதும் உபயோகப்படுத்தி வந்தனர். இந்த வீட்டில்தான் ஐந்து தலைமுறைகளாக காந்தி குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.
இப்படி மழைநீரை சேகரிக்கும் வழக்கம் என்பது நாடெங்கும் எப்போதும் இருந்து வந்துள்ள செயல்முறைதான் என்றாலும், இப்போதுள்ள எந்திர வாழ்க்கை, மழையை ரசிப்பதற்கு கூட நேரமில்லை என்று சொல்லும் அளவிற்கு மக்களைத் தள்ளியுள்ளது. காசு கொடுத்தால் தண்ணீர் கிடைத்து விடும் என்ற அலட்சியப் போக்கையே பரவலாகக் காணமுடிகிறது. ஆனால், நம் சுற்றப் புறச்சூழல் குறித்த விழிப்புணர்வின்றி தொடர்ந்து நடந்துகொண்டால், மழைநீர் கிடைப்பது அரிதாகிப் போய்விடும்.
நெரிசலான பெரு நகரங்களில், வீடுகள், கட்டிடங்களின் கூரையில் விழும் மழை நீரை குழாய்கள் மூலமாக பூமியில் அமைக்கப்படும் 'சம்ப்' நீர்த்தொட்டியில் சேகரிக்கலாம். மழை பருவத்திற்கு முன் கூரைகளை சுத்தம் செய்வதும், பொதுவாகவே கூரை, மொட்டை மாடியை சுத்தமாக வைத்துக் கொள்வதும் நல்லது.
வீடுகள், நிறுவனங்களின் கட்டடங்களின் மேற்கூரைகளில் இருந்து மழைநீரை சேகரித்து வைக்கலாம்; தரைவழியாகவும் மழைநீரை சேகரித்து குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தலாம். மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரமாக இருக்கிறது. சக்கரவாகப் பறவை மழையை அருந்துமாம், நாமும் சக்கரவாகப் பறவைகளாக மாறி மழைநீரை சேகரித்து கோடைகாலங்களில் அத்தியாவசிய தேவையை நிறைவேற்றிக்கொள்வது இன்றைய சூழ்நிலையில் அவசியமான ஒன்று!