நாம் ஏன் மரம் வளர்க்க வேண்டும்?
மரம் வளர்ப்பது நல்லது என்பது நாம் அறிந்ததே. அப்படி இருந்தாலும், இப்படி செய்வதால் ஏதேனும் ஆதாயம் உண்டா என்று யோசிப்பவர்களும் உண்டு. சத்குருவிடம் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் நாம் யோசிக்கும் வகையில் உள்ளது.
மரம் வளர்ப்பது நல்லது என்பது நாம் அறிந்ததே. அப்படி இருந்தாலும், இப்படி செய்வதால் ஏதேனும் ஆதாயம் உண்டா என்று யோசிப்பவர்களும் உண்டு. சத்குருவிடம் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் நாம் யோசிக்கும் வகையில் உள்ளது.
Subscribe
சத்குரு:
நர்சரியை ஏன் வீட்டில் வளர்க்க வேண்டும்? செடியோ மரமோ அது உங்கள் வாழ்க்கையில் ஒரு மிக முக்கியமான உயிர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தாய், தந்தை இல்லையென்றாலும் எப்படியோ வளர்ந்து விடலாம். கணவனோ மனைவியோ இல்லையென்றாலும் வாழ்ந்து கொள்ளலாம். குழந்தை இல்லையென்றால் ரொம்ப சுகமாக வாழ்ந்து கொள்ளலாம். ஆனால் மரம் இல்லாமல் நாம் வாழமுடியுமா? நமக்கு மூச்சுக்காற்று வேண்டுமென்றால் அவர் இங்கே இருக்கவேண்டும். அவரது வெளிமூச்சு நமக்கு உள்மூச்சு. நமது வெளிமூச்சு அவருக்கு உள்மூச்சு. இந்த அளவிற்கு அது ஒரு முக்கியமான உயிர் என்று நீங்கள் அனுபவபூர்வமாக உணர்ந்துவிட்டால் பிறகு அதற்குத் தேவையானதை செய்வீர்கள்.
உங்கள் வீடு எவ்வளவு சிறியதாக இருந்தாலும், 12 பிளாஸ்டிக் கவரில், 12 செடி வளர்க்கமுடியுமா? விதை நான் கொடுக்கிறேன், பிளாஸ்டிக் கவர் நான் கொடுக்கிறேன். மண் மட்டும் பக்கத்து வீட்டில் வெட்டிக்கொண்டு வாருங்கள், உங்கள் வீட்டில் வேண்டாம் (அனைவரும் சிரிக்கிறார்கள்).
நீங்கள் விதை வைத்து, தினமும் கொஞ்சம் தண்ணீர் விட வேண்டும். நீங்கள் தண்ணீர் குடிக்கும் போதோ, அல்லது சாப்பிட்டு கை கழுவும்போதோ அந்த நீரையே கொஞ்சம் அப்படி ஊற்றி வளர்க்கமுடியும். அது நாளடைவில் ஒவ்வொரு இலையாக துளிர்த்து வருவதை கவனித்து வந்தீர்கள் என்றால், இது ஒரு உயிர், நம் குழந்தை மாதிரி இது வளர்கிறது என்பதை உணர்வுபூர்வமாக பார்க்கமுடியும். அப்போது அந்த அனுபவமே மிகவும் அற்புதமாக இருக்கும். இப்படி ஒரு உயிர் வளர்வதை உணர்வுப்பூர்வமாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால்தான் நீங்கள் எல்லோரும் வீட்டில் ஒரு நர்சரியை வளர்க்க வேண்டும் என்று சொல்கிறோம். சிறிய வீடாக இருந்தால் 10, 12 வளர்த்துக் கொள்ளுங்கள் போதும். பெரிய வீடாக, இருந்தால் 100 வளர்த்துக் கொள்ளலாம். ரொம்ப அதிகமாக இருந்தால் 1000 வளர்த்துக்கொள்ளலாம். நம் திறமைக்கு ஏற்ப வளர்த்துக்கொள்ளலாம்.
இரண்டுக்கு இரண்டு அடி இடம் இருந்தாலே 12 செடி வளர்க்கலாம், அவ்வளவு இடம் இருக்கிறது தானே? இந்த உலகத்தில் செடி மிகவும் தேவையானது. அதுவுமல்லாமல், நீங்கள் ஒரு குழந்தை பெற்றிருந்தால், அவர் வாழ்க்கை முழுவதுமாக மூச்சு எடுக்கத் தேவையான ஆக்ஸிஜனும் நீங்கள் தானே தயார் செய்ய வேண்டும்? அவருக்கு வீடு மட்டும் கட்டிக் கொடுத்து விட்டால் போதுமா? அவர் மூச்செடுக்கத் தேவையான மரம் வைக்க வேண்டாமா? மேலும் மரம் என்பது ஒரு முக்கியமான உயிர். உங்கள் உயிருக்கு என்னென்ன நடக்கிறதோ, உங்கள் வாழ்க்கை எப்படி நடக்கிறதோ, எல்லாமே அவருக்கும் நடக்கிறது. உங்களுக்கு என்னென்ன உணர்ச்சி இருக்கிறதோ, அதற்குமேல் அவருக்கு உணர்ச்சி இருக்கிறது.
மரத்திற்கு எந்தளவிற்கு உணர்ச்சி இருக்கிறதென்றால், நீங்கள் ஒரு மரத்தைப் பார்த்து அன்பாக, ‘நிழலில் போய் உட்கார்ந்து கொள்ளலாம்‘ என்று சந்தோசமாக போய் உட்கார்ந்தீர்கள் என்றால், அந்த மரத்திற்குள் ஒருமாதிரி ரசாயன மாற்றம் நடக்கிறது. அதுவே நீங்கள் அந்த மரத்தைப் பார்த்து, ‘ஓ நன்றாக வளர்ந்திருக்கிறது, வெட்டி விடலாம்‘ என்று நினைத்து, சும்மா எண்ணம் மட்டும்தான், அங்கே போனீர்கள் என்றால் அந்த மரத்திற்குள் வேறு மாதிரி இரசாயன மாற்றம் நடக்கிறது. இவையெல்லாம் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
நீங்கள் நினைத்த எண்ணமே அவருக்கு புரிந்துவிட்டது. ஆனால் உங்கள் வீட்டில் உங்கள் மனைவி, குழந்தை என்ன நினைக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அந்த மரத்திற்குப் புரிகிறது, பாருங்கள். அவ்வளவு சூட்சுமமான ஜீவன். ஆனால் என்ன, நம்மை மாதிரி அவர் பேசவில்லை. அதனால் நமக்கு அது ஒரு உயிர் என்ற உணர்வே வரவில்லை. எதோ மரமென்றால் வெட்டுவதுதான் என்று நினைத்து விட்டோம்.
ஒரு செடி வளரும்போது கவனித்துப் பார்த்தால், அது எப்படி வளருகிறது, உயிரோடு இருக்க வேண்டும் என்று எவ்வளவு ஆர்வம் அதற்கு இருக்கிறது என்பதை எல்லாம் நீங்கள் கவனிக்கமுடியும். அப்போது அதோடு உங்களுக்கு ஒரு ஆழமான தொடர்பு வரும். இந்த தொடர்பு இல்லாமல் மனிதன் வாழக்கூடாது என்பதற்காகதான் உங்கள் வீட்டில் நர்சரி அமையுங்கள் என்று சொன்னேன். உங்கள் வீடு மரம் வளர்க்கும் அளவிற்கு இல்லை என்றால் நர்சரியாவது வையுங்கள் என்று சொல்கிறோம். பிறகு நீங்கள் வளர்த்த நாற்றுகளை நாங்கள் வேறெங்காவது நன்றாக வளர்கின்ற இடத்தில் வைத்து மரமாக வளர்க்கிறோம்.
ஈஷாவிலேயே கூட நர்சரி வளர்க்க முடியும். ஆனால் இன்னொரு உயிரோடு தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடிய ஆழமான அனுபவம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இது இன்னொரு உயிருடன் ரொம்ப ஆழமான தொடர்பு வருவதற்கான பயிற்சி. இதுவே ஒரு ஆன்மீக பயிற்சிதான். எனவே ஈஷாவில் இருக்கின்ற எல்லா தன்னார்வத் தொண்டர்களும் தங்கள் வீட்டில் ஒரு சிறிய நர்சரியாவது வைத்துக் கொள்ள வேண்டும். வருடத்திற்கு ஒரு 10 செடியாவது வளர்க்க முடியாதா? முடியும்தானே? பிளாஸ்டிக் கவர் நாம் கொடுக்கிறோம். விதை நாம் கொடுக்கிறோம். மண்ணு மட்டும் பக்கத்து வீட்டில், சரிதானே? (அனைவரும் சிரிக்கிறார்கள்)