சமீப காலமாக செம்மரம் என்ற வார்த்தையை அடிக்கடி செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம். செம்மரங்கள் பற்றியும் செம்மரங்கள் வளர்ப்பதால் கிடைக்கும் இலாபம் பற்றியும் விளக்கும் விதமாக இங்கே சில தகவல்கள்!

சந்தன மரம் கடத்தல் என்று ஒருகாலத்தில் பேச்சு அடிபட்டுக்கொண்டிருந்தது. ஆனால் இன்றோ செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக செய்திகள் வருகின்றன. சந்தனத்தையும் மிஞ்சிய செம்மரங்களில் அப்படியென்ன சிறப்பு?! செஞ்சந்தனம் எனப்படும் செம்மரங்களை வளர்ப்பது குறித்தும், அதன் சிறப்புகள் குறித்தும் தெரிந்துகொள்ளலாம்!

செம்மரங்களில் அப்படியென்ன சிறப்பு?!

சந்தையில் செம்மரத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதனால் அதன் மீது அனைவரின் கவனமும் குவிந்துள்ளது. சந்தன மரத்திற்கும் செம்மரத்திற்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், அதன் எடையும், நறுமணமும் தான்! அதிக பணமதிப்புள்ள மரமாக இருந்த சந்தன மரத்தை கடந்த சில ஆண்டுகளில் செம்மரம் சந்தையில் முந்திவிட்டது.

அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்ட மரமாக செஞ்சந்தன மரம் உள்ளது. பல அணு உலைக்கூடங்களில் அணுக்கதிர்களைத் தடுக்கும் அரணாக இதைத்தான் பயன்படுத்துகிறார்களாம்.

அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்ட மரமாக செஞ்சந்தன மரம் உள்ளது. பல அணு உலைக்கூடங்களில் அணுக்கதிர்களைத் தடுக்கும் அரணாக இதைத்தான் பயன்படுத்துகிறார்களாம். ஜப்பான் நாட்டில் எக்ஸ்ரே, லேசர் போன்ற வீரிய கதிர்வீச்சு சிகிச்சைகளில் மருத்துவர்கள் கதிர்வீச்சைத் தடுப்பதற்காக, செஞ்சந்தன மரத்துண்டை தங்கள் சட்டைப் பையில் வைத்துக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஒலி அலைகளைத் தடுக்கும் திறன் கொண்ட இம்மரங்கள், வெப்பத்தையும் அதிக அளவில் கடத்துவதில்லை! செம்மரத்தை கரையான் அரிக்காது.

இவ்வளவு சிறப்புகள் இம்மரங்களுக்கு இருப்பதால், இவற்றின் சந்தை வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் குறிப்பிடத்தகுந்த இடம் செஞ்சந்தனத்திற்கு உண்டு! செஞ்சந்தனத்திலிருந்து பெறப்படும் நறுமணம் மிக்க எண்ணெய், மருந்துக்காக மட்டுமன்றி அத்தர் வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சந்தனம் மேற்குத் தொடர்ச்சியில் அதிகம் காணப்படும். செம்மரம் கிழக்கு மலைக் குன்றுகள் பகுதிகளில் அதிகம் காணப்படும். குறிப்பாக தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஆந்திராவில் கர்நூல், கடப்பா, குண்டூர், கோதாவரி, சித்தூர் மாவட்டங்களிலும் செம்மரங்கள் அதிகம் உள்ளன.

செம்மரங்களை நாமும் வளர்க்கலாம்!

செம்மரங்கள் வளர்வதற்கு ஏற்ற சூழலும் மண்வளமும் தமிழகத்தில் காணப்படுவதால், நாம் நமது வீட்டுக் கொல்லைப்புறங்களிலும், வேளாண் நிலங்களிலும் செம்மரங்களை நட்டு வளர்க்கலாம்.

சிலர் வெட்டத்துடிக்கும் செம்மரங்களை நாம் வளர்த்து பலனடையலாம். சரளை மற்றும் செம்மண் கலந்த மண் வகைகளில் இம்மரம் சிறப்பாக வளரும். மானாவாரி செம்மண் நிலங்களிலும் வளர்க்கலாம். செம்மரங்கள் வளர்வதற்கு ஏற்ற சூழலும் மண்வளமும் தமிழகத்தில் காணப்படுவதால், நாம் நமது வீட்டுக் கொல்லைப்புறங்களிலும், வேளாண் நிலங்களிலும் செம்மரங்களை நட்டு வளர்க்கலாம்.

வேளாண் காடு வளர்ப்பில் செம்மரங்களை வளர்க்க விரும்புபவர்கள், 10 அடி இடைவெளியில் குழி எடுத்து, வழக்கமாக மரக்கன்றுகளை நடவு செய்வதுப் போல இயற்கை உயிர் உரங்களைப் போட்டு நடவு செய்ய வேண்டும். செம்மரங்கள் மெதுவாகவே வளரும். நன்கு வளர்ந்து வராத செடிகளை சில நாட்களிலேயே கண்டறிந்து அகற்றிவிட வேண்டும்.

அவ்வப்போது செடிகளுக்கு சூரியஒளி நன்கு கிடைக்குமாறு கவாத்து செய்து வர வேண்டும். இம்மரங்களை விவசாய நிலங்களில் வரப்போரங்களில் வேலியாகவும் நட்டுவைக்கலாம்! நன்கு வளர்ந்து பருத்த ஒரு செம்மரம் மட்டுமே பல லட்சம் ரூபாய் விலைபோகும்.

ஈஷாவின் வேளாண் வல்லுனர்கள், மரக்கன்றுகள் நடுவதற்கு ஆலோசனைகளையும், மரம் வளர்ப்பதற்குத் தேவையான கவாத்து போன்ற வழிமுறைகளையும், களைகளை கட்டுப்படுத்துவதற்கான நுட்பங்களையும் நேரில் வந்து அளிப்பதோடு, மூடாக்கு போடுவதையும் வலியுறுத்துகிறார்கள்.

உருவாக்கப்படும் வேளாண் காடுகள்

இன்று பல்வேறு காரணங்களால் விவசாயத்தை கைவிட நினைக்கும் விவசாயிகளுக்கு ஒரு அற்புத வாய்ப்பாக ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் வேளாண் காடுகளை உருவாக்கித் தருகின்றன. மரங்கள் நட்டு, வேளாண் காடுகள் அமைக்க விரும்புபவர்களுக்கு விலை மதிப்புள்ள தேக்கு, குமிழ், மகிழம், செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, வெண் தேக்கு, தான்றிக்காய், மஞ்சள்கடம்பை, மலைவேம்பு, பூவரசு, வாகை போன்ற வகைகளில் தரமான மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம், நீடித்த, நிலைத்த வருவாய் பெறுவதற்கு ஏதுவாகிறது.

ஈஷா பசுமைக் கரங்கள்

ஈஷா பசுமைக் கரங்களின் வேளாண் வல்லுநர்கள் மூலம் உங்கள் நிலத்திற்கு ஏற்ற மர இனங்களை நடுவதற்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. ஈஷா பசுமைக் கரங்களின் நாற்றுப் பண்ணைகளிலிருந்து மிகக் குறைந்த விலையில் மரக்கன்றுகளை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். வறட்சியைத் தாங்கும் மரங்களான வேம்பு, நாட்டுவாகை, பூவரசு போன்ற மரங்களை அதிக தண்ணீர் வசதி இல்லாத இடங்களில் நடலாம். தண்ணீர் வசதி இருக்கும் பட்சத்தில் அதற்கு ஏற்றாற் போல மலை வேம்பு, செஞ்சந்தனம், தேக்கு போன்ற வகை மரக்கன்றுகளை நட்டு சில வருடங்களில் நல்ல வருமானம் பெறமுடியும்.

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம், தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ளது. எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்யேகமாக தயார் செய்து தரப்படுகிறது. புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.7) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 90062