32 நாடுகளைச் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், தங்கள் உள் வளர்ச்சிக்காக ஈஷா யோக மையத்தின் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலத்தில் 7 மாதங்கள் தங்கி இருக்கிறார்கள்.

சுயசார்பிலிருந்து முழு சுதந்திரத்தை நோக்கி

isha-blog-article-life-in-sadhanapada-symphony-of-skills-rashmi

ராஷ்மி - கலை இயக்குனர், மும்பை, இந்தியா

ராஷ்மி: சாதனா பாதைக்கு முன்பு, மும்பை சர் ஜே.ஜே கலைக் கல்லூரியில் விளம்பரம் மற்றும் தகவல்தொடர்பு சம்பந்தமான பட்டம் படித்தேன். இது ஏழாம் வகுப்பு முதலே நான் கனவு கண்டிருந்த கல்லூரியாகும். நான் தொலைக்காட்சியில் திரைப்படங்களைப் பார்க்கும்போது, திரைப்படத்தை விட ஆக்கபூர்வமான பல விளம்பரங்களையே கண்டு ரசித்தேன். கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து, தொலைக்காட்சி விளம்பரங்களைத் தயாரிக்கும் விளம்பர நிறுவனங்களில் கலை இயக்குநராகவும், பின்னர் சிறந்த விளம்பர ஏஜென்சிகளான மெக்கான் வேர்ல்ட் குரூப், கிரே அட்வர்டைசிங் மற்றும் வோடபோன், குளுக்கான்-டி மற்றும் ஓகில்வி போன்ற நிறுவனங்களுக்காகவும் பணியாற்றினேன்.

கே: ஈஷா மற்றும் சாதனா பாதை பற்றி முதலில் எப்படி கேள்விப்பட்டீர்கள்?      

ராஷ்மி: சாதனா பாதையில் இதற்கு முன் பங்கேற்பாளராக இருந்த எனது சகோதரரிடமிருந்து ஈஷாவைப் பற்றி நான் தெரிந்துகொண்டேன். அவரிடம் பல மாற்றங்களைக் கண்டேன். அதுவே என்னை சாதனா பாதையை நோக்கிய படியை எடுக்கக் காரணமாய் இருந்தது. ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தபோது, சாதனா பாதை பற்றிக் கேள்விப்பட்டேன். நான் இணையத்தில் யூ-டியூப் பார்க்கும் போதெல்லாம், சாதனா பாதை வீடியோ பாப்-அப் ஆவதைப் பார்த்தேன். ஒருமுறை, “நான் சாதனா பாதைக்காக பதிவு செய்ய நினைக்கிறேன்!” என்று சொன்னேன். என் வாடிக்கையாளர்களும், என்னுடன் பணியாற்றுபவர்களும், “உங்களைச் சுற்றி எல்லாம் நன்றாகவே நடக்கிறது. நீங்கள் ஏன் வெளியேற வேண்டும், இந்த வகையான வகுப்புக்கு ஏன் பதிவு செய்ய வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பினர். நான் அவர்களிடம், “உண்மையில் எல்லாம் நன்றாகவே நடக்கிறது, எனக்கு மிகவும் வசதியான வாழ்க்கை இருக்கிறது, ஆனால் என்ன இருந்தாலும் நான் ஆனந்தமாக இல்லை. எனவே, அடிப்படையான செயல் செய்யவேண்டிய நேரம் இது” எனக் கூறினேன்.

கே: உங்கள் வேலையில் இருந்து ஏழு மாதங்கள் விடுப்பு எடுத்திருப்பது உங்கள் பணித்திறன் குறித்த உங்கள் அறிமுகத்தில் ஒரு கரும்புள்ளி என நீங்கள் நினைக்கவில்லையா?

ராஷ்மி: கட்டாயம் இல்லை. வாடிக்கையாளர்கள் திறமை கண்டு தேடி வருகிற காலம் இது. உங்கள் பணியில் நீங்கள் திறமைகரமானவராக இருந்தால், நீங்கள் எதைச் செய்தாலும் அது முழுமையாக உங்களுக்குத் தெரிந்திருந்தால், அதில் நூறு சதவிகிதம் உங்களை ஈடுபடுத்தினால், எந்த வேலையிலும் வெற்றி பெறமுடியும், வேலைக்கு பஞ்சமில்லை. வேலையை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம்.

கே: சாதனா பாதையில் பயணித்ததில் உங்கள் வெற்றிக்கான வரையறை மாறிவிட்டதா?

ராஷ்மி: ஒவ்வொரு விளம்பரத் துறையினரும் சில விருதுகளைப் பெறக் கனவு காண்கிறார்கள். இங்கு வருவதற்கு சற்று முன்பு, மார்பகப் புற்றுநோய்க்கான ஒரு விளம்பரத்தை செய்து கொடுத்தேன். இந்த விளம்பரம், ஒரு விளம்பர நிறுவனம் பெறக்கூடிய மிக உயரிய விருதைப் பெற்றது. அதன் பிறகு எனக்கு, “ம்ம்... இதுவும் கிடைத்துவிட்டது, இனி வேறு என்ன?” என்பது போல இருந்தது. இந்த விருதுகள் அனைத்திற்குப் பிறகும் நான் இன்னும் ஆனந்தமாக இல்லை என்பதை உணர்ந்தேன். உள்ளத்தில் ஊற்றெடுக்கின்ற திருப்தியே அதிமகத்துவமானது என்பதை இப்போது உணர்ந்துகொண்டேன். சாதனா பாதையில் இப்போது எனக்குள் மலர்ந்திருக்கும் இந்த உள்திருப்தியை என் வாழ்வில் நான் ஒருபோதும் அனுபவித்ததில்லை.

கே: இங்கே வந்தபிறகு உங்களுக்குள் புதிய திறன்களைக் கண்டுபிடித்துள்ளீர்களா?

ராஷ்மி: மக்களுடன் பழகுவதுதான்! சுயசார்பு பணியாளராக, நான் தனியாக வேலை செய்து வந்தேன். என் சொந்த சௌகரியங்களுக்குள்ளேயே சிக்கிக்கொண்டு வாழ்ந்து வந்தேன். என் சகோதரனைக் கூட சிறிதும் அனுசரித்துப் போக முடியாத நிலையை மெல்ல உணர ஆரம்பித்தேன். சாதனா பாதையின் இந்த பயணத்தினால், நான் சமநிலையுடனும், சீரன்புடனும் இருப்பதை உணர்கிறேன். பெரிய விஷயம் என்னவென்றால், இப்போது மக்கள் எந்தவிதத்தில் இருந்தாலும் நான் அவர்களுடன் நன்றாகப் பழக முடியும்.

ஒரு கண்டுபிடிப்பாளர் – தன்னையே கண்டுகொண்டார்

isha-blog-article-life-in-sadhanapada-symphony-of-skills-Niall

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நியால் - கண்டுபிடிப்பாளர், அயர்லாந்து

நியால்: நான் புதுமைத் தொழில்நுட்ப தொழில்முனைவோராக மாறிய ஒரு கண்டுபிடிப்பாளன் ஆவேன். புதுமையான இயந்திரங்கள், பொருள்கள் மற்றும் கருவிகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் நான் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன்.

நவீன ரோபாட்டிக்ஸ், மின்னணு கருவிகள் மற்றும் இதர பொருட்களை சார்ந்த எனது எண்ணங்களை நனவாக்க, சொந்த நிறுவனம் ஒன்றை நிறுவினேன். எனது பல தயாரிப்புகள் நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பல தயாரிப்பாளர் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. எனது காப்புரிமை பெற்ற தயாரிப்பான ‘பின்-ஜிக்’ என்கின்ற ஒரு நவீன கருவியும் இதில் அடக்கம். இது முழு எலக்ட்ரானிக்ஸ் சர்க்யூட் போர்டையும் சாலிடரிங் செய்ய உதவும் கருவியாகும்.

நான் ஒரு புதுமையான புதிய வகை ரோபோவை உருவாக்கியுள்ளேன், அதைக் காட்சிப்படுத்துவதாக இருந்தேன், ஆனால் அதற்கு பதிலாக இங்கு வருவது நல்லது என்று முடிவுசெய்து இங்கு வந்துவிட்டேன் - அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை!

கே: சாதனா பாதையை நீங்கள் ஏன் தேர்வு செய்தீர்கள்?

நியால்: பல ஆண்டுகளாக நான் ஆன்மீகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தேன், ஆனால் இப்போது பேச்சை நிறுத்தி, அவ்வழி நடப்பதற்கான நேரம் வந்துவிட்டது, ஆகையால் சாதனா பாதை.

கே: ஆசிரமத்தில் வாழ்வதில் உங்களுக்கு பிடித்தது எது?

நியால்: ஒவ்வொரு நாளும் தியானலிங்கத்துடன் சிறிது நேரம் இருப்பதுதான்! லிங்க வடிவம் உண்மையில் ஒரு தியான இயந்திரம் என்று சத்குரு கூறியுள்ளார்கள். ஒரு இயந்திர வடிவமைப்பாளராக இருப்பதால், இவ்வாக்கியத்தை என்னால் உணர முடிகிறது. எனது அனுபவத்தில் எனக்குள் என்ன நடக்கிறது என்பதை விவரிக்க ஒரே ஒரு சொல் மட்டுமே உள்ளது - “சொல்லிலடங்காதது”.

கே: சாதனா பாதையின் இந்த நான்கு மாதங்களில் உங்களுக்குள் நீங்கள் கண்ட குறிப்பிட்ட மாற்றங்களைப் பற்றி சொல்ல முடியுமா?

நியால்: மிகவும் அசாத்தியமான முன்னேற்றம் நடந்துள்ளது. என்னுள் அபரிவிதமான வளர்ச்சியையும் காண்கிறேன். எனது ஆற்றலும் தீவிரமும் மிகைப்பட்டுள்ளன. நான் ஒரு காலத்தில் அதிகமாக பளுதூக்குதல், குந்தி உட்காருதல், பெஞ்ச் பிரஸ் ஆகியவற்றைச் செய்து வந்தேன். பளுதூக்குதல் என் உடலிலிருந்து பறித்துச் சென்ற நெகிழ்வுத்தன்மையை இப்போது மீண்டும் பெற்றுவருவதை கவனிக்கிறேன். உள்ளேயும் வெளியேயும் மெல்லிய மலர் போன்ற ஒரு அமைதி ததும்பி இருப்பதை உணர்கிறேன். எனது நடை கூட மாறிவிட்டது. முதல் மூன்று மாதங்களிலேயே கிட்டத்தட்ட 20 கிலோ எடையை இழந்தேன். ஆரம்பத்தில், ஆசனப் பயிற்சிகளில், ‘சர்வாங்காசனா’வை என்னால் செய்ய முடியவில்லை, குறிப்பாக நத்தை-ஆசனா (மத்ஸேந்திர ஆசனா) செய்வதையும் கடினமாக உணர்ந்தேன். ஆனால் இப்போது கடினமான நத்தை ஆசனாவைக் கூட என்னால் எளிதில் செய்ய முடியும்… நான் இப்போது “நத்தை போல அடங்கிவிட்டேன்” என்று கூடச் சொல்லலாம்!

மென்பொருள் தொழில்நுட்பத்திலிருந்து உள்நிலை தொழில்நுட்பத்தை நோக்கி

isha-blog-article-life-in-sadhanapada-symphony-of-skills-surajit

சுரஜித் - லீட் டெவலப்பர், பெங்களூரு

சுரஜித்: நான் பெங்களூருவில் ஒரு மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தேன் - ஐ.எம்.எஸ் ஹெல்த்கேரில் நான்கரை ஆண்டுகளும், பின்னர் ஐ.பி.எம்.மில் ஏழரை ஆண்டுகளும் மென்பொருள் உருவாக்கம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் பணியாற்றினேன். விநியோகத்துறை தலைவராக பதினைந்து முதல் இருபது பொறியாளர்களை நிர்வகித்து வந்தேன்.

கே: நீங்கள் முதலில் ஈஷாவுடன் எவ்வாறு தொடர்பு கொண்டீர்கள்?

சுரஜித்: ஆன்மீக புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. 2011-12 ஆம் ஆண்டில், என் அலுவலகத்திற்கு செல்லும் வழியில், சாலையில் ஒவ்வொரு மின்கம்பத்திலும் சத்குருவின் படம் வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டேன். அவர் என்னைப் பார்த்து அழைப்பது போலவே இருந்தது. “யார் இவர்?” என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன், சத்குருவின் ‘ஞானத்தின் பிரம்மாண்டம்” என்ற புத்தகத்தைக் கண்டுபிடித்து வாசிக்க ஆரம்பித்தேன். உடனடியாக ஈஷா யோகா வகுப்பிலும் சேர்ந்தேன், தொடர்ச்சியாக பாவஸ்பந்தனா வகுப்பும் முடித்தேன். அப்போதிருந்தே நான் ஈஷாவுடன் ஈடுபாடு கொண்டிருந்தேன். வருடத்திற்கு ஒருமுறை பாவஸ்பந்தனா வகுப்பில் வாலண்டியரிங் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு சில மாதங்களுக்கும், வார இறுதியில் விடுப்பு கிடைக்கும் போதெல்லாம், வாலண்டியரிங் செய்ய ஆசிரமத்திற்கு வருவேன்.

கே: ஐ.டி துறையில் மூத்த பதவியில் இருக்கும் உங்களைப் போன்ற ஒருவர் ஏழு மாத விடுப்பு எடுத்துக்கொள்வது என்பது எந்த அளவு சாத்தியம்?

சுரஜித்: தகவல் தொழில்நுட்பத் துறையில் எட்டு முதல் பத்து ஆண்டுகள் வரை ஒரு குறிப்பிட்ட பொறுப்பில் நன்றாக சம்பாதித்து, குடும்பப் பொறுப்பிலும் இருப்பவருக்கு - இது ஒரு சவாலாகத் தோன்றலாம். ஆனால் அதிர்ஷ்டவசமாக, என் மனைவியும் சம்பாதிக்கிறார், என் மகளை கவனித்துக்கொள்ள என் பெற்றோரும் என் மனைவியின் தாய்தந்தையும் உள்ளனர். அதனால்தான் எனக்கு இது சாத்தியமானது. நான் இந்தப் படியை எடுத்துள்ளதால் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு கேட்கிறார்கள், அவர்களும் என்னைப் போன்றே ஏதோ ஒன்றைச் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் கேள்வி என்னவென்றால், "நான் ஏழு மாதங்கள் விடுப்பில் சென்றுவிட்டால், என் சம்பாத்தியத்தில் எவ்வளவு பணத்தை இழப்பேன்?" என்பது. என் அனுபவத்திலிருந்து நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், "நீங்கள் இங்கு வந்தால், உங்கள் உள்நிலையில் எவ்வளவு வளர்ச்சி பெறுவீர்கள் என்பதைப் பாருங்கள். ஏனென்றால், வெறும் பணத்தின் அடிப்படையில் மட்டுமே உங்கள் வாழ்வை நீங்கள் மதிப்பிட்டால், நீங்கள் விரும்புவதை ஒருபோதும் உங்களால் செய்ய முடியாது.”

கே: சாதனா பாதையில் உங்கள் குறிப்பிட்ட பங்கு என்ன?

சுரஜித்: தனித்துவமான ஒரு பகுப்பாய்வுத் தளத்தை (Analytics Platform) உருவாக்குவதே இங்கு எனது வேலை. ஈஷாவின் திட்டங்கள் மேலும் மேலும் அதிகரித்து வருவதாலும், சத்குருவின் பணி உலகளவில் அறியப்படுவதாலும், ஈஷாவின் தாக்கம் இணையத்தில் அதிவேகமாக வளர்ந்து வருவதாலும், ஈஷாவில் இப்போது ஏராளமான விதமான தகவல்கள் உள்ளன, அதிலும் ‘காவேரி கூக்குரல்’ போன்ற பெரிய அளவிலான திட்டங்களைப் பற்றி சொல்லக்கூடத் தேவையில்லை. ஆனால், நம்மிடம் ஒரு பகுப்பாய்வு தளம் இல்லை. நாங்கள் இப்போது ஒரு தற்காலிக அறிக்கையிடல் தளத்தை இணையத்தில் உருவாக்கியுள்ளோம் - நீங்கள் காவேரி கூக்குரல் இணைய தளத்தின் முகப்புப் பக்கத்தில் இதைப் பார்த்திருக்க முடியும். இதையே ஈஷாவின் எல்லா தகவல் களஞ்சியத்திற்கும் செய்ய உள்ளோம்.

சாதனா பாதையின் சமன்பாடு

எலிசா - வேதியியல் விரிவுரையாளர், ஒடிசா, இந்தியா 

எலிசா: சாதனா பாதைக்கு முன்பு, நான் வேதியியலில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்று கல்லூரி மாணவர்களுக்கும் பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும் வேதியியல் பாடம் கற்பித்து வந்தேன்.

கே: நீங்கள் சாதனா பாதைக்கு விண்ணப்பிக்கக் காரணமாய் இருந்தது எது?

எலிசா: சத்குருவின் வீடியோக்களை முதன்முதலில் பார்த்தபோதிலிருந்தே, ஆசிரமத்தில் சிறிது காலம் தங்கி ஆன்மீகப் பாதையில் மேலும் என்னை ஆழ்த்திட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். சாதனா பாதை வீடியோவை பார்த்தவுடன், ஆசிரம வாழ்வை உணர்ந்து அனுபவித்து, முழுநேர தன்னார்வலராக இங்கே இருந்திட என்னால் எந்த அளவு முடியும் என்று சிந்திக்க விரும்பினேன்.

கே: அப்படியென்றால், சாதனா பாதையில் நீங்கள் எந்த சேவையில் ஈடுபட்டு இருக்கிறீர்கள்?

எலிசா: நான் இங்கு வந்தபோது, பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல் பாடம் கற்பிக்கும் ஈஷா ஹோம் ஸ்கூலில் எனது சேவை இருக்கும் என்று என்னிடம் சொன்னார்கள். அதைக் கேட்டு நான் கொஞ்சம் விரக்தியடைந்தேன், ஏனென்றால் பாடம் கற்பிப்பதையே இங்கு வந்தபின்பும் செய்ய நான் விரும்பவில்லை. ஆனால் மூன்று, நான்கு நாட்களுக்குள்ளாகவே எனது கருத்து முற்றிலும் மாறிப்போனது. முன்பெல்லாம் நான் வகுப்பிற்குச் செல்லும்போது, மிகவும் கண்டிப்பான ஆசிரியையாக என்னை நான் வெளிப்படுத்தி இருந்தேன், ஆனால் இங்கே இதுபோன்ற தர்மசங்கடங்கள் எதற்கும் இடமே இல்லை. இங்கு வகுப்பில் மாணவர்கள் கூச்சலிடுவதில்லை, அமைதியாகவே உட்கார்ந்திருக்கிறார்கள். பாடத்தைக் கேட்க விருப்பம் இல்லை என்றாலும், அவர்கள் வகுப்பைத் தொந்தரவு செய்வதில்லை. ஆனால், எனது ஊரில் நான் பாடம் எடுத்தபோது, என் நேரத்தில் பாதியை வகுப்பில் மாணவர்களைக் கட்டுப்படுத்துவதிலேயே செலவிட்டேன். இங்குள்ள மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள், விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள். நான் கல்லூரியில் கற்பித்தபோது, அது ஒரு தொழிலாகவே எனக்குத் தோன்றியது. ஆனால் இங்கே அனைத்து ஆசிரியர்களும் பாடத்தை கற்பிப்பதோடு மட்டுமல்லாது மற்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். நாட்டியம், இசை, நாடகம் போன்ற மற்ற செயல்பாடுகளையும் நான் ரசிக்கிறேன். இது எனக்கு சிறந்த அனுபவமாகும். நான் ஏதோ ஒன்றைக் கற்றுக்கொடுக்கிறேன் என்பது போல எனக்குத் தோன்றவில்லை. ஒரு விளையாட்டுத்தனமான, ஆனந்தமான அனுபவமாகவே உள்ளது.

இங்கு எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்தும் என்னை மிகவும் நெகிழச்செய்துள்ளன. சத்குரு நமக்காக வழங்கியுள்ள இந்த பாக்கியத்தை, அதன் மகத்துவத்தை எண்ணும்போது, என் விழிகளில் கண்ணீர்த் துளிகளைக் காண்கிறேன். ஆன்மீகத்தின் வாடையே அறியாத ஆயிரக்கணக்கான மக்களுக்கு, அவர் இவ்வளவு பிரம்மாண்டமான விஷயத்தை எவ்வளவு அற்புதமாக வழங்கி இருக்கிறார்? இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆசிரியரின் குறிப்பு: சாதனா பாதைக்கு பதிவு செய்வதற்கான வாய்ப்பு இப்போது திறக்கப்பட்டுள்ளது.