தொடரின் இந்த இரண்டாம் பாகத்தில், சாதனா பாதை பங்கேற்பாளர் ஒருவரின் வாழ்க்கையைப் பற்றியும், அவர் சாதனா பாதைக்கு வந்ததன் பின்னணி பற்றியும், இதுவரை அவர்கள் மேற்கொண்ட பயணத்தைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். இந்தத் தொடரின் முதல் பகுதியை நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால், அதைப் படிக்க இங்கே கிளிக் செய்க. வெர்னர், ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் அருகே பிறந்தார், அவருக்கு 51 வயது. நம் நெஞ்சத்தைத் தொடும் ஆச்சரியங்கள் நிறைந்த அவரது கதை கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று! 2019ம் வருட சாதனா பாதையின் பங்கேற்பாளர்களான ராடெக் மற்றும் ககன்தீப் ஆகியோர் தங்களது உள்ளத்தின் சில பிரதிபலிப்புகளை பகிர்ந்து கொள்கிறார்கள். மேலும், தற்போதைய குழுவில் பங்கேற்றுள்ளவர்களுக்கான ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள்.

வெர்னர்

நான் 14 வயதிலிருந்தே ஒருவித ஆன்மீகப் பாதையில் இருந்தேன் என்று நினைக்கிறேன். அந்த வயதில், இயேசு எனக்கு ஒரு பெரிய முன்மாதிரியாக இருந்தார். அவர் நடந்த வழியையும், அவருடைய சக்தியையும் பலத்தையும் நான் வியந்தேன். நான் உண்மையில் ஈர்க்கப்பட்டேன். நான் சுமார் பதினைந்து ஆண்டுகள் பிரான்சிஸ்கன் ஆர்டரில் சேர்ந்தேன் – அது ஒரு மடம் அல்ல, ஆனால் இது ஒரு குடும்ப நடைமுறை.

கே) நீங்கள் அந்த வயதில் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்திருப்பீர்கள் அப்போது அது உங்களுக்குப் பிடித்திருந்ததா?

எனக்கு பள்ளி பிடிக்கவில்லை, சுத்தமாகப் பிடிக்கவில்லை. இந்த பதின்மூன்று ஆண்டு பள்ளி எனக்கு மிகவும் கொடூரமாக இருந்தது. நான் வெளியே இயற்கையுடன் இருக்க விரும்பினேன். ஜெர்மனியில் 1988 மற்றும் 89ல் இராணுவத்தில் சேர்வது கட்டாயமாக இருந்தபோது, ஜெர்மனியில் நிறைய பேர் இராணுவத்தில் சேர விரும்பவில்லை. ஆனால், நான் அதை மிகவும் விரும்பினேன். ஏனென்றால் நான் எப்போதுமே இயற்கையுடன் வெளியே இருந்தேன். நான் வான்வழிப் படைக்கு அழைக்கப்பட்டேன். நாங்கள் அந்த பயிற்சியில் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களில் இருந்து குதித்தோம். அங்கேதான் ஹெலிகாப்டர்கள் மீதான என் காதல் பிறந்தது.

கே) எனவேதான் நீங்கள் ஹெலிகாப்டர் பைலட் ஆனீர்களா?

இல்லை, உடனடியாக இல்லை. வாழ்க்கை அப்படியே சென்றது. நான் வெவ்வேறு வேலைகளைச் செய்தேன். நான் சுமார் 30 வயதில் இருந்தபோது, நான் பொருட்களை விற்பனை செய்வதில் மிகவும் விரக்தியடைந்தேன். பொருட்கள் உண்மையில் நன்றாக இருந்தன - உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கான தயாரிப்புகள் அவை. ஆனால், என் வாழ்க்கையில் யார் வந்தாலும், நான் அவர்களுக்கு ஏதாவது விற்க முடியுமா என்றுதான் பார்த்தேன். நான் அந்த நபருக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் அவர்கள் பாக்கெட்டில் உள்ளவற்றில் அதிக ஆர்வம் காட்டுகிறேன் என்பதை நான் உணரத் தொடங்கினேன். இதை உணர்ந்தபோது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நான் விலகினேன்.

நான் 50 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன், இப்போது உண்மையாகவே உயரே பறப்பதற்கு நான் தயாராகிக்கொண்டு இருக்கிறேன்.

ஹெலிகாப்டர்களில் பறக்க வேண்டும் என்பதே எனது கனவு. அது ஜெர்மனியில் கைரோகாப்டர் சகாப்தத்தின் தொடக்கமாக இருந்தது. நான் நேரடியாக இதில் நுழைந்தேன். நான் மக்களை விமானத்தில் அழைத்துப் பறந்தேன், விமானம் ஓட்டுவதற்கான பயிற்றுவிப்பாளராக ஆனேன். அது ஒரு அற்புதமான காலம். ஏனென்றால் என் வாழ்க்கையில் முதல்முறையாக, நான் ஒரு சிறுவனாக இருந்ததிலிருந்து நான் உண்மையில் செய்ய விரும்பியதைச் செய்து கொண்டிருந்தேன். 2006ம் ஆண்டில், எனது சொந்த கைரோகாப்டரைப் பெற்றேன், அதற்கான எனது அனுமதிகள் எல்லாம் தெளிவாகவே இருந்தது, நான் அதைச் செய்யத் தொடங்கினேன்.

பின்னர் ஒரு நாள், எனக்கு ஒரு விமான விபத்து ஏற்பட்டது. ஏனெனில் எனது விமானத்தில் உற்பத்தி குறைபாடு இருந்தது. நான் சொர்க்கத்திலிருந்து கீழே விழுந்தேன். அதன்பிறகு சில மாதங்கள் சக்கர நாற்காலியில் இருந்தேன். இது எனக்கு ஒரு கடினமான நேரம். ஏனென்றால் மிகவும் சிறப்பாக இருந்த என் வாழ்க்கையை திடீரென்று இந்நிகழ்வு புரட்டிப்போட்டது.

கே) உங்கள் விபத்தின்போது உண்மையில் என்ன நடந்தது?

நான் அதிக வேகத்தில் பாதுகாப்பு பெல்ட் எதுவும் இல்லாமல் நேரடியாக தரையை நோக்கி சென்றேன். இந்த வகையான தாக்கம் ஏற்பட்டால் அதன்பின் பிழைக்க முடியாது. கிறிஸ்தவ கலாச்சாரத்தில், "தேவதூதர்களின் செயல்" என்று சொல்கிறோம். நான் விழுந்தபோது, ஆயிரக்கணக்கான துண்டுகளாக உடைந்தது போல் இருந்தது. அது நிலையில்லாத உணர்வாக இருந்தது. அந்த தருணத்தில் அது வித்தியாசமாக இருந்தது. அந்த அனுபவம் ஆழமானது. அடுத்த விநாடி நான் இன்னும் உயிருடன் இருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் அதன்பிறகு யாரும் பிழைக்கமுடியாது. ஆனால் அரை விநாடி கழித்து, உடல் முழுவதும் அப்படியொரு வலி இருந்தது, நான் உயிருடன் இருப்பதை அப்போது அறிந்தேன். நிஜம் என்று நம்பமுடியாத ஒரு அனுபவம் அது.

என் கனவு தகர்ந்தது. என் கைரோகாப்டர் செயலிழந்தது, நான் செயலிழந்துவிட்டேன். இனி என்னால் நடக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. அந்த நேரத்திலிருந்து, நான் ஏதோ ஒன்றை எனக்குள் தேடிக்கொண்டிருந்தேன். ஏனென்றால் இது வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு என்று உணர்ந்தேன். நான் வானத்தில் பறந்த ஒரு அற்புத நேரம்… நிறைய மணி நேரங்கள் பறந்தேன். ஆனால், தற்போது சில வருடங்களாக, நான் இன்னும் சிறப்பான ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் 50 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன், இப்போது உண்மையாகவே உயரே பறப்பதற்கு நான் தயாராகிக்கொண்டு இருக்கிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கே) ஆகவே அந்த ஏக்கம் உங்களை யோகாவிற்கு கொண்டு வந்தது?

நான் ஜெர்மனியில் யோகாவை முயற்சித்தேன். நான் பல கருத்தரங்குகளுக்குச் சென்றேன். ஆனால், அது எனக்கு வேலை செய்யவில்லை. தெரிந்துகொள்வதும் கற்றுக்கொள்வதும் அதிகமாக இருந்தது. நான் முழு மூளைத்திறனுடன் இருந்தேன். ஆனால், எதுவும் வேலை செய்யவில்லை. யோகா எனக்கானது இல்லை என்று நினைத்தேன். பின்னர் 2019ம் ஆண்டில், எனது நண்பர் ஒருவர் எனக்கு ஒரு சத்குரு வீடியோவைக் காட்டினார். அது என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையானது. என்னுள் ஏதோ ஒன்று விழித்தது போல ஏதோ ஒன்று உடனடியாக மாறியது. இங்கே யாரோ ஒருவர் உண்மையை பேசிக் கொண்டிருந்தார், எப்போதும் உண்மை மட்டுமே அதில் இருந்தது. "இந்த ஈஷா யோகாவை முயற்சி செய்து பார்க்கலாமா” என்று நான் நினைத்தேன்.

எனவே 2019ம் ஆண்டில் ஹம்பர்க்கில் இந்த வகுப்பை செய்தேன். அது ஒரு பெரிய மாற்றமாகும்.

சாதனா பாதை எனக்கு வேறு என்ன சாத்தியத்தை திறந்துகொடுக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இதை என்னுள் ஒரு பொக்கிஷம் போல் வைத்திருப்பேன்.

கே) ஏதேனும் குறிப்பிட்ட மாற்றங்களை நீங்கள் கவனித்தீர்களா?

அதன்பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. நான் என் வாழ்நாள் முழுவதும் புகைப்பதை நிறுத்த முயற்சித்தேன். அடிக்கடி புகைப்பதை நிறுத்தினேன், ஆனால் அடுத்த நாள், மீண்டும் தொடங்கினேன்! நான் ஒரு நாளைக்கு ஏழு சிகரெட்டுகளை புகைத்து வந்தேன். ஜெர்மனியிலுள்ள பெரும்பாலானோரைப் போல நானும் நிறைய மது அருந்திக் கொண்டிருந்தேன். நாங்கள் பீர் குடிப்பதை அனுபவித்து மகிழ்வோம்.

ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியை கற்றுக்கொண்ட பிறகு, புகைப்பிடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டேன். ஏனென்றால் இனி அதற்கான ஏக்கம் என்னிடம் இல்லை. இதை நான் எதிர்பார்க்கவில்லை. புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்காக நான் அங்கு செல்லவில்லை. ஆனால், அது விரல் சொடுக்குவது போல அப்படியே மறைந்துவிட்டது. மிகவும் எளிதானது! திரும்ப அந்த பழக்கத்தைப் பெறுவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் ஆண்டு இறுதி வரை, நான் மிகக் குறைந்த அளவில் குடிக்க ஆரம்பித்தேன்– கிட்டத்தட்ட அது மிகவும் குறைவானது. பின்னர் டிசம்பர் 31 அன்று, நான் மது அருந்துவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டேன். ஏக்கம் முற்றிலும் மறைந்துவிட்டது. நான் முற்றிலும் சுதந்திரமாக உணர்ந்தேன். புகைபிடிப்பதை நிறுத்துவதே எனது கனவாக இருந்தது என்பதால், அதற்காக நான் மிகவும் நன்றி கூறுகிறேன். நான் பதினாறு வயதில் புகைபிடிக்க ஆரம்பித்தேன். இப்போது எனக்கு ஐம்பத்தொன்று, அதனால் இது ஒரு முப்பத்தைந்து வயதுடைய பழக்கம். என் வாழ்க்கையில் நான் மிகவும் இருமிக் கொண்டிருந்த நேரங்கள் இருந்தன. என் நுரையீரலில் இருந்து நிறைய பழுப்பு நிற பொருட்கள் வெளியே வந்தன. எனக்கு புற்றுநோய் வரும் என்று பயந்தேன். எனவே இது உண்மையில் ஒரு ஆச்சரியமான விஷயம், சில யோகப் பயிற்சிகள் இப்படி மாற்றிவிட்டது.

கே) இதுபோன்ற வித்தியாசமான கலாச்சாரத்திலிருந்து வந்த நீங்கள், ஈஷா யோக மையத்தில் வாழ்வதற்கு எவ்வாறு உங்களை மாற்றிக்கொண்டீர்கள்?

துவக்கம் முதலே, நான் இங்கே உணவை அனுபவித்து மகிழ்ந்தேன். மிகவும் இயற்கையான, அடிப்படை சத்துமிக்க உணவு என் உடலுக்கு மிகவும் நல்லது. தேர்ந்தெடுக்கப்பட்ட மூலப் பொருட்கள் சமநிலையை வழங்குவதாகவும் நான் மிகவும் விரும்புவதாகவும் உள்ளது. நான் ஒன்றரை முதல் இரண்டு கிலோ வரை கூடுதல் எடை பெற்றேன். இது என்னைப் பொருத்தவரை நல்லது. நல்ல உணவை உட்கொள்வது மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வது ஆகியவற்றின் பலனை என்னால் பார்க்க முடிந்தது. உடல் வலிமையாகிறது. நான் முதலில் இங்கு வந்தபோது, என்ன நடக்கும் என்று கொஞ்சம் யோசித்துக்கொண்டிருந்தேன். நான் இங்கே தங்கினால், சைவ உணவு உண்பவராக என்னால் இருக்க முடியுமா? இங்கு வந்ததிலிருந்து கடந்த 15 வாரங்களில் நான் காபி குடித்ததில்லை. நான் முன்பு ஜெர்மனியில் நிறைய காபி குடிப்பேன். சில நாட்களில், ஏழு கப் வரை… உண்மையிலேயே ஸ்ட்ராங் காபி! அதிலிருக்கும் நிறைய காஃபின் என்னை விழித்திருக்க வைக்கும். இப்போது, காபிக்கான அந்த ஏக்கம் மறைந்துவிட்டது. எந்த யோகாவையும் பற்றி நான் பேசும் ஆளில்லை. ஆனால், ஈஷா யோகா வேலை செய்கிறது என்பதை இப்போது நான் அறிவேன். இது என் விஷயத்தில் நன்றாக வேலை செய்கிறது. நான் என் வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தில் இருக்கிறேன். எனக்குள் இன்னும் கொஞ்சம் நிம்மதியாக உணர விரும்பினேன். இப்போது, அது சாத்தியம் என்று நான் காண்கிறேன்.

மார்ச் மாதத்தில் நான் இங்கு வந்தது முதல் தற்போது அரை வருடமாகிவிட்டது. நான் அதிக உற்சாகமாக இருக்கிறேன். என்ன நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்போது நான் சாதனா பாதையில் இருக்கிறேன். இந்த புதிய பாதையை, இந்த புதிய வாழ்க்கையை நிலைநிறுத்துவதற்கு நிறைய சாத்தியங்கள் உள்ளன. நான் இங்கு அனுபவித்த எல்லாவற்றிற்கும் நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், அனைவருக்கும் நன்றி. இந்த இடத்தை நான் அனைவருக்கும் பரிந்துரைக்க முடியும். ஈஷா யோகா நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள் ஆன்லைன் வகுப்புகள் ஆகியவற்றை தங்கள் வாழ்க்கையில் உயர்ந்த ஒன்றை அடைய விரும்பும் உலகில் உள்ள அனைவருக்கும் நிச்சயமாக பரிந்துரைக்கிறேன். ஒருவர் தனது வாழ்க்கையில் ஆழமிக்க ஒன்றைக் கண்டறிய, இது ஒரு நல்ல இடம். ஈஷா யோக மையத்திற்கு வருவதென்பது என் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்.

கே) நீங்கள் இங்கு வராவிட்டால் ஊரடங்கில் என்ன செய்வீர்கள்?

ஊரடங்கில் நான் வீட்டில் இருந்தால், பெர்லினில் ஒரு முப்பத்து நான்கு சதுர மீட்டர் இடத்தில் நான் அமர்ந்திருப்பேன். ஆனால், நான் இங்கே இருந்தேன். இப்போது நான் என் வலது பக்கத்தில் பார்க்கும்போது, வெள்ளியங்கிரி மலைகளைப் பார்க்கிறேன். இது மிகவும் அழகாக இருக்கிறது. நான் மீண்டும் ஜெர்மனிக்குச் செல்லும்போது அவற்றை தவறவிடுவேன். ஜெர்மனியில் வீட்டில் செய்ய முக்கியமாக எதுவும் இல்லை. ஆனால் இங்கே, மிக முக்கியமான காரியத்தைச் செய்ய, என் வாழ்க்கையில் ஆழமான ஒன்றைக் கண்டறிய எனக்கு வாய்ப்புள்ளது. சாதனா பாதை எனக்கு வேறு என்ன சாத்தியத்தை திறந்துகொடுக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இதை என்னுள் ஒரு பொக்கிஷம் போல் வைத்திருப்பேன்.

ககன்தீப் (சாதனா பாதை 2018 முன்னாள் பங்கேற்பாளர் )

sadhanapada-meet-the-participants-gagandeep

கே) உங்கள் சாதனா பாதை பயணத்தைத் தொடங்கியபோது உங்களுக்கு அதிக போராட்டமாக இருந்தது எது?

சாதனா பாதையின் ஆரம்ப கட்டங்களில், எனக்கு கடினமான விஷயமாக இருந்தது என்னவென்றால், எனது நேரத்தை நிர்வகிப்பதும், அதிகாலை பயிற்சிகளைச் செய்வதும்தான்! ஏனெனில் நான் ஒருபோதும் காலையில் எழும் ஆளாக இருக்கவில்லை. ஆனால் மாதங்கள் செல்லச் செல்ல, என் உடலிலும் மனதிலும் எளிமையை உணர ஆரம்பித்தேன். அதோடு, பயிற்சிகளின் மதிப்பை நான் உணர ஆரம்பித்தேன். என் தீவிரமும் சகிப்புத்தன்மையும் தினசரி அளவில் அதிகரித்து வருகின்றன. ஆரம்பத்தில் வெகு தொலைவில் இருந்த பக்தியுணர்வு, என்னுள் ஒரு எல்லையை எட்டியது, குறிப்பாக ஆதியோகி பிரதட்சணத்தின் போது.

கே) சாதனா பாதையில் இணைய இந்த முயற்சியை எடுத்திருப்பவர்களுக்கு ஏதாவது ஆலோசனை?

அந்த நீண்ட காலத்திற்கு ஒருவர் ஆசிரமத்தில் இருப்பது, ஒரு தனிநபரின் உறுதியும் அர்ப்பணிப்பும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். நீங்கள் சாதனா பாதையில் பங்கேற்கும் அளவுக்கு அதிர்ஷ்டசாலி என்றால், எல்லா ஆலோசனைகளையும் கவலைகளையும் விட்டுவிட்டு, செயல்முறைக்கு உங்களை முழுமையாகக் கொடுங்கள்.

சத்குரு வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள், நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாக உங்களை மாற்றிக்கொள்வீர்கள்.      

ராடெக் (2019 ஆம் வருட சாதனா பாதை பங்கேற்பாளர்)

sadhanapada-meet-the-participants-radek

கே) சாதனா பாதையின் ஆரம்ப காலங்களையும் அதன் பின்னாலான காலகட்டத்தையும் ஒப்பிடும்போது என்ன உணர்கிறீர்கள்?

ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், கால அட்டவணை மீண்டும் மீண்டும் வந்ததால், நான் உண்மையில் இங்கே எதற்காக இருக்கிறேன், நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு நான் எப்படி இருக்க விரும்புகிறேன் என்பது குறித்து நான் அதிக விழிப்புணர்வு பெற்றேன். கூடுதல் பயிற்சிகள் இருந்ததால், அதிக நேர மேலாண்மை மற்றும் சுய ஒழுக்கம் ஆகியவை முக்கியமானவையாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் எனது ஆன்மீகப் பயணத்தில் நான் எங்கு இருக்க வேண்டும் என்ற கனவுகளும் எதிர்பார்ப்புகளும் நிகழ்காலத்தை அப்படியே ஏற்றுக்கொள்கின்ற தன்மையால் காணாமல் போயின.

கே) சாதனா பாதை பயணத்தைத் தொடங்கியுள்ள நபர்களுக்கு உங்களிடமிருக்கும் ஆலோசனை என்ன மற்றும் சாதனா பாதை உங்கள் வாழ்க்கையை எவ்விதத்தில் மாற்றியுள்ளது?

படிப்படியாக ஒரு குறிப்பிட்ட நேர முறைக்கு ஏற்ப உங்களை பொருத்திக்கொள்ளவும். குறிப்பாக காலை உணவிற்கு முன்னதாக. உதாரணமாக, ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருங்கள், நீங்கள் படுக்கைக்குச் செல்லும் நேரம் எதுவாக இருந்தாலும் அதை மீண்டும் தொடர்ந்து கடைபிடியுங்கள். நீங்கள் தூங்கச் செல்லும்போது, நீங்கள் மனதை கவனிக்க மற்றும், உங்கள் உடலை கவனித்துப் பார்க்க கற்றுக்கொள்வீர்கள் - இரவு உணவிற்கு என்ன சாப்பிட வேண்டும் போன்றவையும். சிறிது காலம் கழித்து, அது மிகக் குறைந்த முயற்சி இருந்தாலே நடக்கத் தொடங்குகிறது. நீங்கள் ஏதோ ஒரு நாள் தோல்வியடைந்தால், மறுநாள் வழக்கம் போல் தொடருங்கள். இது அதிக சமநிலையைக் கொண்டுவருகிறது. நாள் முழுவதும் இதுபோன்று தொடர்ந்து இருக்க வேண்டாம், ஓய்வெடுக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

கே) சாதனா பாதையில் உங்களை அதிகம் பாதித்தது எது?

ஒரு ஆன்மீக ஸ்தலத்தில் ஒன்றாக சாதனா செய்வது - நாம் அனைவருக்கும் நம்முடைய சொந்த கட்டுப்பாடுகள் உள்ளன என்பதையும், நாம் தொடர்ந்து அவற்றை கடக்க போராடுகிறோம் என்பதையும் உணர்த்துகிறது. நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்பதை நினைவுகூர்ந்தபடி செயலாற்றும் போது, வாழ்க்கையை குறைவான சீரியஸ்னஸுடன் அணுக இது எனக்கு உதவியது.

ஆசிரியர் குறிப்பு: சாதனா பாதை பற்றி மேலும் தெரிந்துகொண்டு, அடுத்து நிகழவிருக்கும் குழுவில் பங்கேற்பதற்கு முன்பே பதிவு செய்யுங்கள்.