ஊருக்கெல்லாம் சோறு போடும் விவசாயவர்க்கம், தங்களது குடும்பங்கள் பட்டினியிலும் கடனிலும் தவிக்கும் இன்றையநிலைக்கு இரசாயனவிவசாயம் தான் முக்கியகாரணம்! மண்ணில் நைட்ரஜன் சத்தை அதிகரிக்க அதிக செலவுசெய்து ரசாயன உரங்களை இடும் நம் விவசாயிகள், இயற்கையாகவே நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் மூலம் நைட்ரஜனை மண்ணில் அதிகரிப்பது பற்றி கட்டுரையில் அறிந்துகொள்ளலாம்.

ஆம்... விவசாயிகள் கடனாளி ஆவதற்கு இரசாயன உரங்களுக்கான செலவும் பூச்சிக்கொல்லி வாங்குவதற்கான செலவும்தான் பிரதான காரணங்கள்! அதிக விளைச்சலைப் பெற வேண்டும் என்ற நோக்கில் நைட்ரஜன் போன்ற சத்தினை மண்ணில் பெற யூரியா, அமோனியா போன்ற இரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கான பொருட்செலவும் கால விரயமும் அதிகம். ஆனால், இது தேவையே இல்லாத வேலை என்று இயற்கை வேளாண் வித்தகர் திரு.சுபாஷ் பாலேக்கர் சொல்கிறார்!

இயற்கையே நைட்ரஜனை மண்ணில் இருத்திக்கொள்ள வழிகளை செய்துள்ளபோது, இலவசமாக நைட்ரஜன் சத்துகள் மண்ணிற்கு கிடைக்கும்போது நாம் ஏன் தேவையில்லாமல் இரசாயன உரங்களை பயன்படுத்தி செலவு செய்து கடனாளி ஆகவேண்டும்?

இயற்கையே நைட்ரஜனை மண்ணில் இருத்திக்கொள்ள வழிகளை செய்துள்ளபோது, இலவசமாக நைட்ரஜன் சத்துகள் மண்ணிற்கு கிடைக்கும்போது நாம் ஏன் தேவையில்லாமல் இரசாயன உரங்களை பயன்படுத்தி செலவு செய்து கடனாளி ஆகவேண்டும்? இதற்கான அறிவியல் பூர்வமான விளக்கத்தையும் அவர் முன்வைக்கிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கார்பன், நைட்ரஜன் ஆகிய கரிமச் சத்துக்கள் இலைகள் மற்றும் தாவரங்களின் பாகங்கள் மட்குவதிலிருந்தும், வளிமண்டலத்திலிருந்தும் தாவரங்களுக்கு கிடைக்கப் பெறுகின்றன. தாவரங்கள் இலைகள் மூலம் ஒளிச்சேர்க்கை செய்யும்போது வளிமண்டலத்திலிருந்து கார்பனை உள்ளீர்த்து சேமித்துவைத்துக்கொள்கின்றன. அனைத்து பயிர்களும், பழமரங்களும் வேர்களின் மூலமாக மண்ணிலுள்ள நைட்ரேட்டிலிருந்து நைட்ரஜனை எடுத்துக்கொள்கின்றன. வளிமண்டலத்திலிருந்து நைட்ரஜனை நுண்ணுயிர்கள் எடுத்து மண்ணில் சேமிக்கின்றன என்பதைக் குறிப்பிடும் பாலேக்கர், பஞ்சம் வரும்காலத்தில் கூட மா, புளி, இலந்தை, நாவல் போன்ற பெரும் பழமரங்களில் தரம் மிக்க கனிகள் பழுத்து தொங்குவவதையும் சுட்டிக்காட்டுகிறார். யூரியா, அமோனியா சல்பேட்டு உரங்களை யாரும் போடாமலே அவை எப்படி பழங்களை விளைவிக்கின்றன என்ற கேள்வியை பாலேக்கர் எழுப்புகிறார்.

செலவில்லாமல் நைட்ரஜன் வழங்கும் நடத்துனர்கள்!

விஞ்ஞானிகள் வளிமண்டலத்தில் 78.6% நைட்ரஜன் இருப்பதாக குறிப்பிடுவதைச் சுட்டிக்காட்டும் பாலேக்கர் அவர்கள், நைட்ரஜனின் மூலவளமானது வளிமண்டலம்தான் என்பதைத் தெளிவுபடுத்துகிறார். அப்படியானால் வளிமண்டலத்திலிருந்து மண்ணிற்கு நைட்ரஜனை கொண்டுவருவது எப்படி சாத்தியமாகிறது? இடையில் இருக்கும் அந்த நடத்துனர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது! அந்த இடையீட்டு நடத்துனர்களாக பாக்டீரியாக்கள் இருக்கின்றன.

நைட்ரஜனை மண்ணில் நிலைப்படுத்தும் பாக்டீரியங்கள் இருவித்திலை தாவர வகைகள் சிலவற்றின் வேர்களிலேயே அமைந்துள்ளதாகச் சொல்லி, அந்தத் தாவர இனங்கள் எவை எவை என்பதையும், அவை ஒவ்வொன்றும் எந்தெந்த அளவில் நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றன என்பதையும் பட்டியலிடுகிறார் பாலேக்கர்.

நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்களால் ஒவ்வொரு ஆண்டும் 25 கோடி டன் நைட்ரஜனை மண்ணில் நிலைப்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதைப்போலவே புயல் மழையின்போது மின்னலின் துணையோடு வளிமண்டலத்திலிருக்கும் நைட்ரஜன் 15% அளவிற்கு மழைத்துளிகள் மூலமாக மண்ணில் பெறப்படுகின்றன என்பதையும் பாலேக்கர் குறிப்பிடுகிறார். எனில், சுமார் 30 கோடி டன் அளவிற்கு வளிமண்டல நைட்ரஜன் மண்ணிற்கு கிடைக்கிறதல்லவா? இந்த நைட்ரஜனை எல்லாம் யார் விலை கொடுத்து வாங்கியது? இலவசமாக இயற்கையால் மண்ணில் கிடைக்கப்பெறுகிறது! பிறகு எதற்கு இந்த யூரியா மூட்டைகள்? இது நாம் சிந்திக்க வேண்டிய கேள்வி!

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை தமிழகத்தில் கொண்டுசேர்க்கும் ஈஷா!

நம் விவசாய நிலங்கள் இயற்கையாகவே அனைத்துவித ஊட்டச்சத்துகளும் நிறைந்த வளமான நிலங்களே ஆகும். ஒரு செடி தனது வளர்ச்சிக்குத் தேவையான மூலப்பொருட்களில் 1.5% மட்டும்தான் நிலத்திலிருந்து எடுக்கிறது. மீதமுள்ள 98.5% காற்று, நீர் மற்றும் ஆகாய மண்டலத்திலிருந்து எடுத்துக்கொள்கிறது.

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் ஒரு அங்கமாக ஈஷா விவசாய இயக்கம் தற்போது பாலேக்கர் அவர்களின் விவசாய முறையை தமிழகத்தில் முன்னெடுத்து வருகிறது. செலவில்லாமல் குறைந்த நீர் பாசனத்தில், குறைந்தமின்சாரத்தில், பணியாட்கள் செலவை குறைக்கும் தொழிற்நுட்பத்துடன், நாட்டுக் கால்நடைகளைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்யும் முறையைக் கற்றுக்கொடுக்க ஈஷா பசுமைக்கரங்களின் அழைப்பின்பேரில் கடந்த 2015ல் திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்கள் வருகை தந்தார். இயற்கை முறையில் இடுபொருட்கள் தயாரிப்பது எப்படி என்பதும் அங்கே கற்றுத்தரப்பட்டது.

மேலும், சில முன்னோடி விவசாயிகள் இந்த ஜீரோ பட்ஜெட் விவசாயம் குறித்த விழிப்புணர்வை மற்ற விவசாயிகளுக்கும் கொண்டு செல்ல துணைநிற்கிறார்கள். ஈஷா விவசாய இயக்கம் சார்பில் ஆங்காங்கே விவசாயிகளை ஒருங்கிணைத்து சந்திப்பு கூட்டங்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மேலும் தகவல் பெறுவதற்கு கீழ்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ.பே: 94425 90062