பிரண்டை உண்டு பெறலாம் ஆரோக்கியம்! (Pirandai Uses in Tamil)
உணவே மருந்து என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள் நம்மைச் சுற்றி விளையக்கூடிய பல்வேறு மருத்துவ குணமிக்க காய்கள், பழங்கள், கீரைகள், தண்டுகள் வேர்கள் என பல்வேறு தாவர இனங்களையும் உணவாக சமைத்து உண்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். அந்த விதத்தில், நாம் மறந்துவிட்ட ஒரு மருத்துவ குணமிக்க தாவரம்தான் பிரண்டை! பிரண்டையின் மருத்துவ குணங்கள் மற்றும் அதன் மகத்துவங்களை உமையாள் பாட்டியிடம் கேட்டு அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!
கொல்லைப்புற ரகசியம் தொடர்
லாக் டவுன் தளர்வுகள் செய்யப்பட்டபின் இப்போது அடிக்கடி உமையாள் பாட்டியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பது மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது.
“இப்பல்லாம் மக்கள் கொரோனாவோட வாழப் பழகிட்டாங்க… இல்ல பாட்டி?!” பாட்டியிடம் கேட்டபடியே வீட்டின் நிலை வாசலைக் கடந்து உள்ளே நுழைந்து அடுப்பங்கரையை அடைந்தேன். பாட்டி வழக்கம் போல வடச்சட்டியில் நெய்விட்டு எதையோ மும்முரமாக வதக்கிக் கொண்டிருந்தாள். தன் கையிலிருந்த பாத்திரத்தை “இந்தா பிடி…!” என்றபடி என்னிடம் ஒப்படைத்த பாட்டியிடம்,
“என்ன பாட்டி… இந்திய கேப்டன் ரஹானே வெற்றிக் கோப்பையை நம்ம யார்க்கர் கிங் நடராஜன் கிட்ட கொடுத்து அழகு பாக்குற மாதிரி, இந்த கிண்ணத்தை எங்கிட்ட தர்றீங்க?!” என்று குறும்பாக கேட்டேன்.
“இது வெற்றிக் கோப்பையெல்லாம் இல்ல, இது பிரண்டைய உறிச்ச தோல் கழிவு, இதைப் போயி கொல்லப்புறத்துல செடிகளுக்கு கீழப் போட்டு வாப்பா, உரமாகும்!” என்றபடி என்னை அனுப்பினாள்.
பாட்டி பிரண்டை சட்னியை தயார்செய்யத் தொடங்க, நானும் சில இட்லிகளை அங்கேயே உண்டுவிட்டு காலை உணவை முடித்துக்கொள்ள ஆர்வமானேன்.
பிரண்டை பற்றிய பொதுவான தகவல்கள்
பாட்டியின் பிரண்டை சட்னி சுவையாக இருந்ததால், ஆறேழு இட்லிகளுக்கும் மேல் இரைப்பைக்குள் ஐக்கியமாகின.
“இந்த பிரண்டை சட்னி ரொம்ப டேஸ்டா இருக்கு பாட்டி! இது எப்படி வைக்கணும்னு சொல்லுங்க… எங்க அம்மாகிட்ட சொல்லி அடிக்கடி வைக்க சொல்றேன்” என்று பாட்டியிடம் சமையல் குறிப்பை கேட்ட எனக்கு, பாட்டியிடமிருந்து பிரண்டையின் மருத்துவ குணங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
“பிரண்டை சட்னி எப்படி வைக்கணும்னு உங்க அம்மாவுக்கு ஏற்கனவே தெரியும். ஆனா பிரண்டையில என்னென்ன மருத்துவ குணம் இருக்குன்னு இப்ப நீ தெரிஞ்சுக்கோ! அதான் ரொம்ப முக்கியம், அப்பதான் நீ மார்க்கெட்டுக்கு போகும்போதெல்லாம் பிரண்டைய வாங்கி வருவ. நீ வாங்கி குடுத்தாதான் வீட்ல உள்ளவங்க செஞ்சு தருவாங்க!”
“கரைக்ட்டா சொன்னீங்க பாட்டி… பிரண்டைய பத்தி சொல்லுங்க கேட்குறேன்”
“பிரண்டை அல்லது வச்சிரவல்லி'ன்னு சொல்லப்படுற இது மருத்துவ பயன்பாடுடைய தாவரம். இந்த கொடித் தாவரம் சாதாரணமா வேலியோரமா வளரும். பிரண்டையில ஓலைப் பிரண்டை, உருண்டைப் பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, முப்பிரண்டை எனப் பலவகை இருக்கு.
பிரண்டை பயன்கள் (Pirandai Uses in Tamil)
பிரண்டை ரத்த மூலத்துக்கான நல்ல மருந்தா இருக்கு. வாயு பிடிப்பு, கைகால் குடைச்சலுக்கான மருந்தாவும் பயன்படுது.
இரைப்பை அலர்ஜி, அஜீரணம் மற்றும் பசியின்மை போன்ற எல்லா செரிமானப் பிரச்சனைக்கும் பிரண்டை துவையல் மிகவும் சிறந்த மருந்தாக இருக்கும். மூலம் மற்றும் குடற்புழு நீக்குவதற்கு பிரண்டை நல்ல மருந்தா இருக்கு.
பிரண்டைத் துவையல் (Pirandai Thuvaiyal) செஞ்சு தினமும் உணவில் சேர்த்துகிட்டா உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகளும் பலப்படும்.
Subscribe
பிரண்டைத் துவையலை அடிக்கடி சாப்பிட்டு வந்தா இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும், எலும்பு பலப்படும்.”
“வாவ்… பிரண்டையில இவ்வளவு நன்மை இருக்கா பாட்டி…?!” ஒரு நல்ல மருத்துவ குணமிக்க பதார்த்தத்தை சாப்பிட்ட உணர்வு எனக்கு வந்தது.
நாட்டு வைத்தியத்தில் பிரண்டையின் முக்கியத்துவம்
“நாட்டு வைத்திய முறைப்படி இன்னும் சில குறிப்புகளை சொல்றேன் கேட்டுக்கோ…!” அப்டின்னு, பாட்டி இன்னும் சில மருத்துவ குறிப்புகளை விரிவாகச் சொல்ல, நானும் அப்படியே அங்கே அமர்ந்தபடி கேட்கலானேன்.
“பிரண்டையோட இளந்தண்டை எடுத்து நெய்விட்டு வதக்கி அரைத்து துவையல் செஞ்சு சாப்பிடுவது நாட்டு வழக்கு! பிரண்டைய நெய்விட்டு வறுத்து அரைச்சு கொட்டைப் பாக்கு அளவுக்கு எடுத்து, எட்டு நாள் காலை மாலை சாப்பிட்டு வந்தா பெண்களுக்கு ரத்தப்போக்கு சரியாகும்.
பிரண்டை இளந்தண்டை இலையோட சேத்து உலர்த்தி பொடிசெஞ்சு (Pirandai Podi), சுக்குத்தூள் மிளகுத்தூள் சேத்து சாப்பிட்டு வந்தா, செரியாமை குணமாகும்; இதையே பால்ல கலந்து கொஞ்சம் கற்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தா மெலிந்த உடல் தேறும்; உடல் வன்மை ஆகும்.
பிரண்டைத் தண்டை சின்னதா வெட்டி சுண்ணாம்பு நீர்ல ஊற வச்சு, வேளைக்கு ஒன்னு ரெண்டு எடுத்து சாப்பிட்டு வந்தா, பசிய நல்லா தூண்டும்.
பிரண்டை வேர் எடுத்து உலர்த்தி பொடிசெஞ்சு, 2 கிராம் அளவு கொடுத்து வந்தா உடைஞ்ச எலும்புகள் சீக்கிரம் கூடும். அதையே வெந்நீர்ல குழைச்சு மேற்புறமா பத்து போடலாம்!”
கொல்லைப்புறத்தில் படரவிடலாம் பிரண்டையை…!
பாட்டி இப்படி பிரண்டையோட மருத்துவ குறிப்புகள அடுக்கிக்கிட்டே போக,
“பாட்டி, போதும்… எனக்கு ஒன்னு நல்லா புரிஞ்சிருச்சு…!” என்று சொல்லி பாட்டியை இடைமறித்தேன்.
“மொத்தத்துல பிரண்டைய நம்ம அன்றாட உணவுல அடிக்கடி சேத்துக்கிட்டு நம்ம ஃப்ரெண்டா ஆக்கிட்டோம்னா, நாம ஆரோக்கியமா வாழலாம்!”
“ஆமா… உங்க வீட்டு கொல்லப்புறத்துல பிரண்டைக் கொடிய வேலியில படரவிடு… அப்புறம் உங்க வீட்ல ஆரோக்கிய கொடி பறக்கும்!” என்று பஞ்ச் டயலாக்குடன் பாட்டி முடிக்க, நானும் பாட்டியிடமிருந்து கொஞ்சம் பிரண்டைகளைப் பெற்றுக்கொண்டு கிளம்பினேன்.
ஈஷா சமையல்
பிரண்டை சட்னி (Pirandai Chutney in Tamil)
தேவையான பொருட்கள்:
பிரண்டை (காம்பு மற்றும் நார் நீக்கியது) - 100 கிராம்
ஆப்பிள் தக்காளி - 1
உளுந்தம் பருப்பு மற்றும் கடலைபருப்பு - 2 ஸ்பூன்
வரமிளகாய் மற்றும் புளி - தேவைக்கேற்ப
தேங்காய் துருவல் - சிறிதளவு
செய்முறை: உளுந்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு இவையிரண்டையும் பொன்னிறமாக வறுத்து, அதனுடன் பிரண்டை மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும். இதனுடன் வரமிளகாய், உப்பு, புளி, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளிதம் செய்து, அரைத்த சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.
பிரண்டை துவையல் செய்வது எப்படி? (Pirandai Thuvaiyal)
தேவையான பொருட்கள்:
பிரண்டை - 150 கிராம்
புளி - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 20
வெந்தயம் - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 250 மிலி
தாளிக்க கடுகு, உளுந்து, கறிவேப்பிலை
செய்முறை: இளம் பிரண்டையாக எடுத்து, வாணலியில் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக ஆகும்வரை நன்கு வதக்கி எடுத்துக்கொள்ளவும். மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை வறுக்கவும், அதில் புளியை சேர்த்து லேசாக வதக்கிக்கொள்ளவும். சிறிதளவு தண்ணீரை காய்ச்சி வைத்துக்கொள்ளவும். இப்போது வதக்கிய பிரண்டை, மிளகாய் புளியுடன் சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைப்பதற்கு காய்ச்சிய சுடுதண்ணீரை பயன்படுத்தவும். வெந்தயத்தை வறுத்து நன்றாக பொடித்துக்கொள்ளவும்.
பின்னர் வாணலியில் நிறைய எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, அதில் அரைத்த பிரண்டை கலவையை சேர்த்து நன்கு வதக்கவும். அதில் பொடித்த வெந்தயத்தை சேர்க்கவும். தேவைப்பட்டால் மேலும் நல்லெண்ணெய் சேர்க்கவும். தண்ணீர் முழுவதும் சுண்டி, நன்றாக திரண்டு வந்தவுடன் இறக்கவும்.
நல்லெண்ணெய் அதிகமாக சேர்ப்பதால் சுவை கூடுவதுடன், நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். இந்த பிரண்டை துவையல் இட்லி, தோசை மற்றும் சாப்பாடு அனைத்துடனும் சாப்பிட சுவையாக இருக்கும்.