இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்... பகுதி 12

பாம்புகளைப் பார்த்தால் பயப்படுவது இயல்பானதுதானே?! என்று கேட்கத் தோன்றலாம்! இந்த பகிர்வின் மூலம் பாம்புகளின் குண நலன்களை தன்மைகளை அறியும்போது உங்களுக்கு பாம்புகள் குறித்த பயம் நீங்கி பாம்புகள் மீது ஆர்வம் பிறக்கும்!

ஆனந்த்,

ஈஷா பசுமைக் கரங்கள்

பொதுவாக பாம்பு மனிதரை நெருங்க விரும்புவதில்லை. மனிதர்கள் இருப்பதை உணர்ந்தால் அவை விலகிச் செல்லவே நினைக்கின்றன. ஆனால், மனிதர்கள் பாம்பைக் கண்டால் தேவையில்லாத அச்சம் கொண்டு பயந்து ஓடுகிறார்கள் அல்லது அடித்துக்கொல்ல முற்படுகிறார்கள். பாம்புகள் குறித்து அறிந்துகொண்டால் தேவையற்ற பயம் நீங்கி அதனை ஒரு அழகிய படைப்பாக காண முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
மக்கள் தொகை பெருகிவிட்டதால் பாம்புகள் வசிக்கும் இடத்தில் வீடுகள் கட்ட ஆரம்பித்துவிட்டோம்.

வயல்வெளிகளில் பாம்புகள் எலிகளைப் பிடித்து தனக்கு உணவாக்கிக்கொள்வதால் விவசாயிகளின் நண்பனாக பார்க்கப்படுகின்றன. சத்குரு பாம்புகள் குறித்து பேசும்போது அதன் விழிப்புணர்வைப் பற்றிக் குறிப்பிட்டு பேசுவார். நாங்கள் பசுமைக் கரங்கள் பணி நிமித்தமாக கிராமங்களில் வயல்களில் பணியாற்றும்போது பலநேரங்களில் பாம்புகளைக் கையாள வேண்டிய சூழல் ஏற்படும். எனவே நானும் பாம்புகளை கையாளக் கற்றிருந்தேன். ஈஷா தன்னார்வத்தொண்டர்கள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த பாம்பு, தேள் போன்றவற்றை பத்திரமாக பையில் வைத்து பின் வனப்பகுதியில் சென்று விட்டுவிடுவார்கள்.

ஸ்வாமி நாகரூபா எப்போதும் தனது கைப்பையில் ஒரு பாம்பையாவது வைத்திருப்பார். நாங்கள் தன்னார்வத்தொண்டர்கள் சந்திப்பை ஏதேனும் ஒரு மரத்திற்கடியில் நிகழ்த்தும்போது, பிடிக்கப்பட்ட பாம்பை எங்களுக்கு நடுவில் வைத்து நாங்கள் சுற்றி அமர்ந்துகொள்வோம். அது எங்களை கவனமாக கவனித்தவாறே இருக்கும். நாங்கள் அதனைக் கவனிக்க வில்லை என்றால் தலையைக் கீழே போட்டு படுத்துக்கொள்ளும். உடனே நாங்கள் அதனை மென்மையாகத் தட்டி வம்பிழுப்போம்! அது மீண்டும் தலையைத் தூக்கியபடியே எங்களைக் கவனிக்கும். இது எங்களுக்கு ஒரு பொழுபோக்காக இருந்தது என்று சொல்வதை விட, பாம்புகளின் விழிப்புணர்வையும் கூச்ச சுபாவத்தையும் கண்கூடாக உணர்ந்த அனுபவமாக இருந்தது என்று சொல்லலாம்.

எது விஷம்; எது விஷமல்ல?

இந்தியாவில் உள்ள 300 வகையான பாம்புகளில் நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகிய நான்கு வகை பாம்புகள் மட்டுமே விஷத்தன்மை கொண்டவை. ஏனையவை விஷமற்றவை. ராஜ நாகம் அடர்ந்த காடுகளில் மட்டுமே வசிப்பதால், அவற்றால் மனிதன் இறப்பது அரிது. சாரைப் பாம்பு, தண்ணீர் பாம்பு, ஒலைப் பாம்பு, மண்ணுளி பாம்பு, கொம்பு ஏறி மூர்க்கன், மலைப் பாம்பு போன்றவை விஷமற்றவை.

ஈஷா பாம்பு இயக்கம்

இப்போது மக்கள் தொகை பெருகிவிட்டதால் பாம்புகள் வசிக்கும் இடத்தில் வீடுகள் கட்ட ஆரம்பித்துவிட்டோம். இதனால் பாம்புகள் பாவம் என்ன செய்யும்?! வேறு வழியின்றி வீட்டுக்குள் வந்துவிடுகின்றன. குறிப்பாக கோவை சுற்றுவட்டார பகுதிகளில் பாம்புகள் மனிதர்கள் வசிக்கும் வீடுகளுக்கு விசிட் செய்வது சாதாரணம்.

இந்தப் பிரச்சனையை சமாளிக்க சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் 2012ல் தொடங்கப்பட்டதுதான் இந்த “ஈஷா பாம்பு இயக்கம் (அ) ஈஷா சர்ப்பம்" (Isha Serpent). தற்போது, கோவை, கரூர், மதுரை, வேலாயுதம்பாளையும், வேலூர் ஆகிய ஐந்து இடங்களில் தன்னார்வத் தொண்டர்கள் மூலம் இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது.

இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் பாம்புகளை மனிதரிடமிருந்து காப்பாற்றுவதேயாகும்!

பாம்புகளைக் கையாள்வதற்காக பிரத்யேக பயிற்சி 'ஈஷா பாம்பு இயக்க'த்தில் சேரும் தன்னார்வத் தொண்டர்களுக்கு கற்று தரப்படுகிறது. முதலில் விஷமுள்ள பாம்புகள் எவை, விஷமில்லாத பாம்புகள் எவை என்று அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். பாம்பினை தலைப்பகுதி பிடித்து தூக்காமல் வால்பிடித்துதான் தூக்க வேண்டும். பாம்பு கோபமாக இருக்கிறதா இல்லையா என அறிந்த பின்பே அதனை பிடிக்க வேண்டும் போன்ற முக்கியமான அடிப்படை விஷயங்களை அவர்கள் பயில்கிறார்கள்.

பாம்பைப் பார்த்தவுடன் பொதுமக்கள் ஈஷா சர்ப்பம் இயக்கத்திற்கு போன் செய்தால் போதும். உடனே அந்த இடத்திற்கு ஈஷா சர்ப்பம் தன்னார்வத் தொண்டர் வந்து பாம்பை பிடித்துவிடுகிறார். இதுவரை சுமார் ஆயிரம் பாம்புகள் வரை ஈஷா சர்ப்பம் இயக்க தன்னார்வத் தொண்டர்களால் பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஈஷா சர்ப்பம் இயக்கத்தை தொடர்புகொள்ள: 94898 94898

இயற்கை இன்னும் பேசும்!

இத்தொடரின் பிற பதிவுகள்: இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்