இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்... பகுதி 8

இயற்கையின் மேல் தீரா காதல் கொண்டு, இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, நம் அனைவருக்கும் வழிகாட்டிச் சென்றவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள். அவருடன் நேரடியாகப் பேசிப் பழகி வாழ்ந்த அனுபவம் வெகு சிலருக்கே கிடைத்துள்ளது. அவருடன் பழகிய நாட்களும், அவர் கற்றுத் தந்த பாடங்களும் அனுபவப் பகிர்வாக இங்கே!

ஆனந்த்,

ஈஷா பசுமைக் கரங்கள்

நம்மாழ்வார் அவர்களை நான் சந்தித்த முதல் நாளிலேயே இயற்கை விவசாயம் முதல் இந்திய வரலாறு வரை பல்வேறு விஷயங்களை அவர்மூலம் கேட்டறிந்தேன். அவரது பேச்சின் தன்மையும் அவரிடம் இருந்த சிந்தனைத் தெளிவும் அவர்பால் எனக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. நம்மாழ்வார் ஐயா ஒரு சாமானிய மனிதரல்லர் என்பதை நான் முதல் நாளிலேயே உணர்ந்துகொண்டேன். 2.5 வருடங்களாக நம்மாழ்வார் ஐயாவின் அலுவலகம் திருச்சியில் எங்கள் வீட்டில் இயங்கியது. எனவே அவர் எப்போதெல்லாம் திருச்சிக்கு வருகிறாரோ அப்போது அவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
"என்னைப் பார்த்தால் உனக்கு அப்படியா தெரிகிறது?!" என்று கூறிய அவர், என்னுடன் பைக்கில் கோபி வரை பயணித்தார்.

அவருடைய பேச்சு எனக்கு இயற்கையின் மேலும், இயற்கை விவசாயத்தின் மேலும் அதீத ஆர்வத்தை ஏற்படுத்தியது. நான் இயற்கைக்காகவும் விவசாயத்திற்காகவும் என்னுடைய வாழ்நாட்களை செலவழிக்க தீர்மானித்தேன். தற்போதைய சமூகத்தில் வேதனை என்னவென்றால், இதுபோல் ஒரு பொதுநல நோக்கத்திற்காக செயல்படும் மனிதர்கள் நம்மிடம் வெகுசிலரே உள்ளனர் என்பதுதான். பொதுவாக, தங்கள் வாழ்க்கையை உயர்வான ஒன்றுக்காக வழங்கும் துணிவு அவ்வளவு எளிதில் வருவதில்லை. நான் அவ்வாறு முடிவெடுத்ததற்கு முக்கிய காரணம் நம்மாழ்வார் அய்யாவின் பேச்சும் அவரின் வழிகாட்டுதலுமே ஆகும்.

இப்போதிருக்கும் காடுகள் அழிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால் நாம் காடுகளுக்குள் செய்ய வேண்டிய வேலை ஏதும் இல்லை. நாம் காட்டுக்கு வெளியே மக்களுடன் பணியாற்றத் தேவையிருக்கிறது. காலியாக இருக்கும் நிலங்களில் மரம் நட்டால்தான் காடுகள் அழிக்கப்படாமல் இருக்கும். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் சமயத்தில் என் தந்தை ஒரு சிறிய விவசாய நிலத்தை வாங்கினார். அந்த வருடத்தில்தான் நான் முதல் ஈஷா யோகா வகுப்பை கற்றேன். நான் அந்த நிலத்தில் இயற்கை விவசாயம் செய்ய விரும்புவதாக என் தந்தையிடம் தெரிவித்தேன். என் தந்தையும் அதற்கு சம்மதித்தார். என்னுடைய வீட்டுக்கு அன்றாடத் தேவையான காய்கறிகள், தானியங்கள் அனைத்தும் அந்த நிலத்திலேயே பயிரிடப்பட்டன.

என்னுடைய கல்லூரி இறுதி ஆண்டான 2004ம் ஆண்டு, விவசாய பொருட்கள் கண்காட்சி ஒன்று கோபிசெட்டிபாளையத்தில் ஈஷா யோகா மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்விழாவிற்கு நம்மாழ்வார் ஐயா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் எங்கள் வீட்டில் இருந்தார். எனவே நான் அவரை கோபியில் விட்டு வரச் சென்றேன். அங்கே தன்னார்வத் தொண்டர்களை அவர் சந்திக்க வேண்டியிருந்தது.

அவர் என்னிடம் "நீ எப்படி இங்கிருந்து கோபிக்கு வழக்கமாக செல்வாய்?" என்று கேட்டார்.

நான் "என் புல்லட்டில் (பைக்) செல்வேன்!" என்றேன்.

"சரி..! அப்படியென்றால் நான் உன்னுடன் உன் புல்லட்டில் வருகிறேன்" என்றார்.

அவர் அப்படிக் கூறியது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. "இல்லை உங்களுக்கு ஒருவேளை முதுகுவலி வரலாம்" என்றேன்.

அவர் சிரித்தார். "எதை வைத்து நீ அப்படி தீர்மானித்தாய்?" என்று என்னிடம் சிரித்துக்கொண்டே கேட்டார். "என்னைப் பார்த்தால் உனக்கு அப்படியா தெரிகிறது?!" என்று கூறிய அவர், என்னுடன் பைக்கில் கோபி வரை பயணித்தார். வரும் வழி நெடுக, வயல்வெளிகளையும் இயற்கையையும் மக்களையும் ஆர்வமாகப் பார்த்தபடி வந்தார். என்னுடன் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

நாங்கள் கோபியை அடைந்ததும் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் அய்யாவை வரவேற்றனர். ஒரு சிறப்பு விருந்தினரை பைக்கில் வைத்து அவ்வளவு தூரம் கூட்டி வந்ததற்காக அவர்கள் என்னை மென்மையாகக் கண்டித்தனர். ஆனாலும் அவர்கள், நம்மாழ்வார் ஐயாவின் சிறுபிள்ளை போன்ற மனநிலையையும் குறும்புத்தன சுபாவத்தையும் உணர்ந்திருந்தனர்.

இயற்கை இன்னும் பேசும்!

இத்தொடரின் பிற பதிவுகள்: இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்