நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 28

சமீபத்தில் உடல் துறந்த நம்மாழ்வார் அவர்கள் ஆற்றிய செயல்கள் இப்போதும் பல சமூக ஆர்வலர்களால் தொடர்கிறது. எத்தனை யோகிகள், எத்தனை ஞானிகள் வந்துள்ளனர் நம் பாரதத்தில்! ஆனால் அறிவில்லா செயல்களே அங்குமிங்கும் காண்கிறோம். நாட்டில் நடக்கும் அஞ்ஞான செயல்களெல்லாம் மறைய வேண்டுமானால், மகான்களின் வழிநிற்பதுதான் தீர்வு என்பதை உணர்த்துகிறார் நம்மாழ்வார்.

நம்மாழ்வார்:

பூமி வெப்பமாவதும், பருவ கால நிலைமையில் மாற்றம் நிகழ்வதும் அதனால் பயிர்த்தொழில் பாதிக்கப்படுவதும் அதன் விளைவாக உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதும் இன்று உலகம் முழுவதும் பேசப்படும் விவாதப் பொருள் ஆகியுள்ளது.

முதல் முதலாகப் பூமி வெப்பமடைவது குறித்து சுவீடன் விஞ்ஞானி, 1898ஆம் ஆண்டு எச்சரித்தார். அவர் நிலக்கரி மற்றும் அதுபோன்ற பொருள்களை எரிப்பதால் கரிஅமிலக் காற்று வெளியாகிறது. இப்படி கரிக்காற்று வெளியேறுவதால் பூமி வெப்பம் அதிகரிக்கிறது என்று குறிப்பிட்டார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

57 ஆண்டுகளுக்குப் பின்பு 1955ஆம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானி சார்லஸ் கீலிஸ், காற்று வெளியில் கரியமிலக் காற்று லட்சம் பாகத்தில் 32 பங்கு இருப்பதை வெளியிட்டு அதனால் பூமி வெப்பம் கூடுவதை உணர்த்தினார்.

ஆனாலும் அதிகாரத்தில் இருந்தவர்களின் பொறுப்பற்ற செயல்களால் அண்டவெளி புகை மண்டலமாவதும் அதனால் பூமி வெப்பமாவதும் பருவ கால நிலைமையில் விரும்பத்தகாத மாற்றம் நிகழ்வதும் உயர்ந்த வண்ணம் உள்ளது.

அண்மையில் கவுதம புத்தரை உள்வாங்கவும் எனக்குள்ளே பார்த்துக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பு கிட்டியது.

2,500 ஆண்டுகளுக்கு முன்பு கவுதம புத்தர் கண்டுணர்ந்த உண்மைகள் ஆசிய நாடுகள் எங்கும் பரவின. தமிழ்நாட்டிலும் பரவியது. "உண்பது நாழி (லிட்டர் குவளை போன்ற அளக்கும் கருவி)! உடுப்பது இரண்டே!" என்ற சிந்தனை மக்களிடம் மட்டும் அல்ல. மன்னர்களிடமும் வாழ்க்கையாகப் பரிணமித்திருந்தது.

காட்டு விலங்கைத் தேடி அலையும் வேடனுக்கும், நாட்டை ஆளும் வேந்தனுக்கும் இதுவே பொருந்தும். மற்ற தேவைகளும் இது போன்றதே என்று புலவர் நக்கீரர் பாடினார்.

அன்றைய மக்கள், யாதும் எமது ஊரே! எவரும் எமது உறவினரே! என்று மட்டும் சொல்ல வில்லை.
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
நோதலும் தணிதலும் கூட பிறர்தர வாரா!
என்றும் சேர்த்துப் பாடினர்.

இன்று பூமி எங்கே போயுள்ளது? உணவு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த மக்களும், இயற்கையும் அநாதை ஆக்கப்பட்டுள்ளன. இயற்கையும், பெண்களும், குழந்தைகளும் போகப் பொருள்களாக மாற்றப்பட்டுவிட்டன. போதைப் பொருள்கள் மட்டுமே மனிதர்க்கு உந்து சக்தியாக மாறியுள்ளது. பெண்களும், குழந்தைகளும், இயற்கையும் கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டு வீசப்படுவது அன்றாட நிகழ்வாக உள்ளது.

கவுதம புத்தர் வாழ்ந்து காட்டிய நிகழ்வுகளையும், போதனைகளையும் சத்குரு உரைக்க அடிக்கடி கேட்டிருக்கிறோம். இந்த யோகிகளின் வார்த்தைகளை உள்வாங்கி வாழ்ந்தால் இந்த உலகமும் அதில் நம் வாழ்வும் வளம் பெறும் என்று கூறி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.

(முற்றும்)

இத்தொடரின் முந்தைய பதிவுகள்: நம்மவரு நம்மாழ்வார் தொடர்

nature, nammalvar, agriculture

இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவு என தன் வாழ்நாள் முழுவதையும் இயற்கை நலனிற்காவும் சமூக நலனிற்காகவும் அர்ப்பணித்தவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள். அவருக்கு ஒரு அர்ப்பணிப்பாக இங்கே அவரது எழுத்துக்களைப் பதிகிறோம்!