“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 21
மத்தியப்பிரதேசத்தில் உள்ள போபால் நகரிலிருந்து "நதிகளை மீட்போம்" பேரணி நிகழ்வுகள் இந்த பதிவில் Live Blog செய்யப்படுகிறது.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள போபால் நகரிலிருந்து "நதிகளை மீட்போம்" பேரணி நிகழ்வுகள் இந்த பதிவில் Live Blog செய்யப்படுகிறது. முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.
இன்று பேரணியின் 21வது நாள். நம் நாட்டின் மத்தியப் பகுதியில், மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கிறோம். இன்று செப்.23. இதே நாளில் 35 வருடங்களுக்கு முன்பு, சாமுண்டி மலையிலே சத்குருவிற்கு யோக அனுபவம் நிகழ்ந்தது.
சத்குருவின் செய்தி…
இன்று செப் 23. பகலும் இரவும் சரிசமமாய் இருக்கும் கதிர் திருப்ப நாள். சொல்லி வைத்தாற்போல், பூமியின் கடகரேகையில் (Tropic of Cancer) இருக்கிறோம். இந்த நாள் – தனிப்பட்டதொரு உயிராய் இருந்த என் அடையாளங்கள் தகர்க்கப்பட்டு, அனைத்தையும் உள்ளடக்கிய “ஒரு உயிராய்” நான் மாறிய நாள். என் வாழ்வின் செயல்கள் எல்லாம், வாழ்வெனும் பிரம்மாண்டத்தை அனைவரும் உணர்ந்திட வழிசெய்வதுதான்.
இன்று இங்கு போபால் நகரில், பேரணியின் 21ம் நாளில், சுழற்சிகளுக்கு அப்பாற்பட்ட நேரத்தின் அம்சமான மஹாகாலாவின் (உஜ்ஜயினி மஹாகாலேஷ்வர்) அருகில் இருக்கிறோம். சுழற்சிகளுக்கு அப்பாற்பட்ட உயிராய் நீங்கள் பரிணமிக்க என் ஆசிகள்.
– சத்குரு
உஜ்ஜயினி மஹாகாலேஷ்வர் தரிசனம்
விடிகாலையிலேயே இந்தூரில் இருந்து கிளம்பி, உஜ்ஜயினி மஹாகாலேஷ்வரை தரிசிக்கச் சென்றோம். சத்குருவும், அவருடன் சிலரும் நேராக போபாலிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றுதான் உஜ்ஜயினியின் மஹாகாலேஷ்வர். சென்ற ஆண்டு கும்பமேளாவின் போது நீரில்லாமல் ஓடை போலிருந்த ஷிப்ரா நதி இங்குதான் உள்ளது. தரிசனத்தை முடித்துக்கொண்டு போபால் நோக்கிப் பயணம் ஆரம்பமானது.
“ஏரிகளின் நகரம்” போபாலை வந்தடைகிறோம்
ராஜா போஜ்:
போஜ்தால் ஏரி:
போபாலில் பேரணிக்கு அதிகளவில் விளம்பரங்கள் காணப்படுகின்றன
இந்தூர், போபால் நகரங்களில், கடைகளிலும்கூட விளம்பர பானர்கள் வைக்கப்பட்டுள்ளன.
வீடியோவில் கூறப்படுவதாவது:
நான் இந்தூரில் இருந்து அமித். நம் நதிகளைக் காக்கவேண்டும். என் கடையில் இதற்காக நான் பானர் வைத்துள்ளேன். மக்களிடம் நான் கேட்டுக் கொள்வது, இம்முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து, நம் நதிகளை நாம் காக்க வேண்டும்.
பேரணி நடக்கும் இடம்
Subscribe
முதல்வர், சத்குரு வருகை
இன்றைய நிகழ்ச்சியில், மத்திய பிரதேச முதல்வர் மாண்புமிகு ஷிவ்ராஜ்சிங் சௌஹான் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
மிக அதிகளவில் மக்கள் பங்கேற்பு
மத்திய பிரதேசத்தில் நம் ஆதரவாளர்கள் வெகு நாட்களாகவே இப்பேரணி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்ல, முதல்வர் திரு.ஷிவ்ராஜ்சிங் சௌஹான் அவர்களும் இதற்கு முழு ஆதரவு அளித்துள்ளதால் மற்ற இடங்களை விட, இங்கு இந்த பேரணி பற்றி பலருக்கும் தெரிந்திருக்கிறது. இப்பேரணிக்கு ஆதரவும் அதிகமாகவே உள்ளது.
இப்பேரணி முடிந்ததும், பங்கேற்பாளர்களை அமரவைக்கும் அணியின் ஒருங்கிணைப்பாளர்கள் பகிர்ந்து கொண்டதாவது:
காலையில் ஒன்பது மணிமுதல் இங்கு நாங்கள் தேவையான ஏற்பாடுகளை செய்து, எல்லாம் தயார்நிலையில் இருந்தது. ஆனால் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சமயம் திடீரென எதிர்பாராமல் இன்னும் பற்பல மக்கள், மாணவர்கள் வந்துவிட்டார்கள். தண்ணீர் காப்போம் சங்கம், என்.சி.சி மாணவர்கள் குழு என பலரும் வரத்துவங்கினர். தேவையான ஏற்பாடுகளை பரபரப்பாக செய்து எப்படியோ நிலையை சமாளித்துவிட்டோம்.
உடன் இருப்பவர்: அபிஷேக் ஷர்மா. இவரது ஊர் குவாலியர். சத்குருவின் யூ-ட்யூப் வீடியோக்கள் மூலம் இப்பேரணி பற்றி அறிந்து, நண்பர்கள், உறவினர்கள் சுற்றுவட்டாரத்தில் 200க்கும் மேற்பட்ட மிஸ்டு-கால் திரட்டியுள்ளார். மேலும் சத்குருவை காணவேண்டும் என்பதற்காக 550 கி.மீ பயணித்து, நேற்று இந்தூர் பேரணியில் கலந்துகொண்டார். அங்கிருந்து இன்று போபால் வரை வந்து இன்றும் பேரணியில் தொண்டராக கலந்து கொண்டுள்ளார். இனியும் இப்பேரணிக்கு தன்னால் முடிந்ததைச் செய்வேன் என்றும் சொல்கிறார்.
குஜராத் துவங்கி இந்தூர், போபால் என இவ்விடங்களில் மக்கள் மிக ஆழமாக சத்குருவையும், இப்பேரணியையும் உணர்வது மிக வெளிப்படையாகத் தெரிகிறது. இதற்குமுன் ஈஷாவிற்கு அறிமுகமாகாத பலரும் இப்பேரணியின் பிரம்மாண்டத்தில் மிக ஆழமாகத் தொடப்படுகிறார்கள். என்னவென்று சொல்லத்தெரியாத பரவசத்தில் ஆழ்வதாக சொல்கிறார்கள்.
புகழ்பெற்ற கிராமிய இசைக் கலைஞர் பிரஹலாத் டிபானியா மற்றும் குழு
கிராமிய மண்வாசனையோடு இவரும், இவரது குழுவும் வழங்கிய இசை நிகழ்ச்சி, சூழ்நிலையை மிகவும் கொண்டாட்டமானதாக மாற்றியது.
முதல்வர் திரு.ஷிவ்ராஜ்சிங் சௌஹான் அவர்கள் பேச்சு
- ஒரே நாளில் நாம் 6 கோடி மரங்கள் நட்டோம். ஆனால் இது அந்த ஒருநாளில் முடிந்துவிடும் விஷயமல்ல. அம்மரங்களை பாதுகாத்து வளர்க்க வேண்டும். மரம் வளர்ப்பது நம் வாழ்நாள் நோக்கமாக ஆகவேண்டும்.
- மத்திய பிரதேச அரசாங்கமும், அதன் மக்களும் இப்பேரணிக்கு எங்கள் முழு ஆதரவை அளித்து, நம் நதிகள் மீண்டும் ஓடுவதற்குத் தேவையான முயற்சிகளை எடுப்போம் என்று உறுதி அளிக்கிறேன்.
- மரம் வளர்ப்பதும், நதிகளைக் காப்பதும் அரசாங்கத்தின் வேலையாக அல்ல, எங்கள் வாழ்வின் நோக்கமாக ஏற்கிறோம்.
- இதை செய்து முடிப்பதற்கு என்னென்ன தேவையோ, குறைவில்லாமல் அனைத்தையும் செய்வோம்.
- நதிகளைக் காக்க மக்கள் அனைவரையும் ஒரே திசையில் சத்குரு ஒன்று சேர்த்துவருகிறார். நம் மாநில நதிகள் ஒவ்வொன்றாக அனைத்தையும் நாம் மீட்க வேண்டும்.
- மனிதர்களின் நல்வாழ்விற்காகவும், உலக நலனுக்காகவும் நம் நாட்டிலும், உலகின் பல்வேறு இடங்களிலும் சத்குரு செய்துவரும் பணிக்கு தலை வணங்குகிறோம்.
உறுதிமொழி
எங்கள் மண்ணிலே ஓடும் எல்லா நதிகளையும் மீண்டும் புத்துயிர் பெற்று ஓடச்செய்வோம் என்று உறுதி கொள்கிறோம். பாரத மாதாவிற்கு ஜெய், நம் நதிகளுக்கு ஜெய், சத்குருவிற்கு ஜெய், இப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஜெய்!
சத்குரு அவர்கள் பேச்சு
செப்டம்பர் 23:
- இந்த நாள்… அளவற்ற அன்பாலும், சொல்லற்கரிய பரவசத்தாலும் என் கண்களில் நீர் பெருக்கெடுத்த முதல்முதல் அனுபவம் எனக்கு ஏற்பட்ட நாள்.
- நான் என்னவாக இருந்தேனோ, அது எதுவுமே இல்லாமல், வெற்றுப் பாத்திரமாக நான் ஆன நாள். மிக சாதுர்யமான இளைஞன் என்ற கர்வம், என் புத்திசாலித்தனம் என எல்லாம் என்னைவிட்டுச் சென்ற நாள்.
- மதியம் 3 மணியளவில் அமர்ந்து, இதோ இந்த 7:30 மணியளவில்தான் மீண்டும் என் “சுயம்” நினைவிற்கு வந்தேன்.
- ஒருவழியாக 8:15 மணிக்கு என் பைக்கை எடுத்துக்கொண்டு, எங்கள் கட்டுமான அலுவலகத்திற்கு வந்தேன். அங்கே எனது பங்குதாரர், வாராந்திர பட்டுவாடா செய்து கொண்டிருந்தார். நான் அங்கே அவரருகில் இருந்திருக்க வேண்டும். ஆனால் வெளியில் நின்று அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாம் முடிந்துவிட்டது என்பதை உணர்ந்தேன். அதுதான் அங்கு நான் சென்ற கடைசி நாள்.
- எதற்கும் அசராத இளைஞன் நான். ஆனால் என் கண்களில் நீர் வழிந்தோடின. காரணம் என்று எதுவுமில்லை. எனக்குள் பரவச அலை. நான் எதுவோ, என் வாழ்க்கை என்று இருந்தது எதுவோ, எல்லாம் ஒரே நொடியில் காணாமற் போனது.
- வீட்டிற்கு செல்ல தாமதித்து, மைசூரின் அழகிய ஏரி அருகே சென்றமர்ந்தேன். என் தாயையும் இழந்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். வீட்டிற்கு போகவேண்டும் என்றிருந்தது. ஆனால் என் தாயின் முகத்தை பார்க்கவேண்டாம் என்று நினைத்ததால், அவள் தூங்கச் சென்றபின் வீட்டிற்கு போகலாம் என்று காத்திருந்து 11:30 மணிக்கு சப்தம் போடாமல் வீட்டிற்குள் நுழைந்தேன்.
- அவள் நம் இந்தியத் தாயாயிற்றே. தூங்கச் செல்லாமல் உணவோடு எனக்காகக் காத்திருந்தாள்.
- அவளை நிமிர்ந்து பாராமல், உணவை முடித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டேன்.
- “நான்”, “என் உறவுகள்” எல்லாம் அகன்று, பரவச இன்பத்தால் நான் வெடித்துக் கொண்டிருந்தேன். ஒரு புதுவிதமான சக்தி, ஒரு தெய்வீகப் பரவசம் என் உடலின் ஒவ்வொரு அணுவிலும் வியாபித்திருந்தது
- இன்று 35 ஆண்டுகள் கழித்து அதே நாளில் நான் உங்களுடன் இருக்கிறேன்.
நதிகள்:
பிரச்சினை:
- நாம் இருக்கும் மோசமான நிலை பற்றி போதுமான அளவு சொல்லியாயிற்று.
- அதற்கான தீர்வும் இப்போது பரவலாகத் தெரிந்திருக்கிறது.
- இப்போதிருக்கும் பிரச்சினை: அதை யார் செய்வது? என்பது. ஏனெனில் பிரச்சினை பூதாகரமானது
- மண்ணும், தண்ணீரும் மிகக் கவலைக்கிடமான சூழலில் உள்ளது. உங்கள் குழந்தைகள்தான் உங்கள் வாழ்வில் பிரதானம். ஆனால் மண்ணும், நீரும் இன்றி அவர்கள் வாழ்வது கடினம் – முடியாத காரியம்
பேரணி:
- ஒருசிலர் குறை கூறிக் கொண்டிருந்தாலும், நம் நாட்டின் பெரும்பான்மையினர் – சாதாரண மக்கள், தலைவர்கள், விவசாயிகள், பிரபலங்கள், இளைஞர்கள், குழந்தைகள், ஊடகம் என பலரும் இப்பேரணிக்கு ஆதரவாகத் திரண்டிருக்கிறார்கள்
- ஆனால் தீர்வு என்ன? 25 ஆண்டுகளுக்கு முன் இப்பிரச்சினையை நான் கவனித்தபோது, “பசுமைக்கரங்கள் திட்டம்” இதற்கான தீர்வு என்று ஆரம்பித்தேன்.
- இதன்மூலம் 3.3 கோடி மரங்கள் வளர்த்துள்ளோம். மரங்கள், இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற கலாச்சாரம் மக்கள், மாணவர்களிடையே வளர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டின் பசுமைப் பரப்பளவு ஓரளவிற்கு உயர்ந்தும் உள்ளது.
- ஆனால் இது தீர்வல்ல. இப்படி தனிப்பட்ட முயற்சிகள் எத்தனை நடந்தாலும் அது தீர்வாக முடியாது.
- இது ஒரு தேசிய இயக்கமாக ஆகவேண்டும். எல்லோரும் இத்திசையில் பயணிக்க வேண்டும். அப்போதுதான் மாற்றம் நிகழும்
- அதுவும் உடனடியாக நடந்துவிடாது. பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. 10-15 வருடங்கள் தீவிரமாக இத்திசையில் செயல்பட்டால், 20-25 ஆண்டுகளில் பலன் கிடைக்கும்.
தீர்வு:
- தீர்வை பல வல்லுநர்களின் உதவியோடு, ஒரு திட்டப்பரிந்துரையாக உருவாக்கியுள்ளோம்.
- இதை செயல்படுத்த, அதிகளவு பண முதலீடு தேவைப்படும். அதோடு விவசாய முறை, வாழ்க்கை முறை, தொழில் துறை என பல அம்சங்களில் மாற்றம் தேவைப்படும்.
- பல அரசாங்கங்கள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் தேவைப்படும்.
- தேசிய அளவிலான கொள்கைகள், சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டு பின்பற்றப்பட வேண்டும்.
- இத்தனையும் நடக்கவேண்டுமெனில் பொதுமக்களின் குரல் ஓங்காரமாக இதற்கு ஒலிக்கவேண்டும்
- அதற்கான வழி: மிஸ்டு-கால். அடுத்து வரும் 4-5 அரசாங்கங்கள் திசை மாறாது, பலன் கிடைக்கும்வரை இதை செயல்படுத்த வேண்டும் என்றால், 30 கோடி மக்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
மக்களின் பங்கு:
- முதல்வர்கள் தலைவர்கள் தானே தவிர்த்து, மாயாவிகள் அல்ல.
- அவர்கள் சரியான நோக்கத்தோடு சரியான திசையை நிர்ணயிக்கலாம்.
- ஆனால் அவர்களோடு உடனிருந்து, அந்த நோக்கம் நிறைவேற நீங்கள் செயல்பட வேண்டும்.
- இப்பேரணி விஞ்ஞானத்தையும் அரசியலையும் ஒன்றிணைக்கும் முயற்சி. சுற்றுச்சூழலையும் பொருளாதாரத்தையும் ஒன்றிணைக்கும் முயற்சி.
- பல காலமாக இவை ஒன்றுடன் ஒன்று சேராமல் பயணித்ததன் விளைவைப் பார்த்துவிட்டோம். இனி இவை கைகோர்த்து செயல்பட வேண்டும்.
நதிகளை மீட்பதற்கு இவ்வளவு பெரிய பேரணி தேவைதானா?
கேள்வி: சத்குரு இப்பிரச்சாரத்தை செப்.3 முதல் நான் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இது மிக பிரம்மாண்டமாக வளர்ந்துகொண்டே போகிறது. நம் சுதந்திரப் போராட்டம் போல் இது பெரிதாக வளர்ந்திருக்கிறது. நதிகளை மீட்பதற்கு இத்தனை பெரிய இயக்கம் தேவைதானா?
சத்குரு:
சுதந்திரப் போராட்டம் என்று நீங்கள் சொல்வது எனக்கு வியப்பாய் உள்ளது. 3 நாட்களுக்கு முன்தான் நான் சபர்மதி ஆசிரமம் சென்றிருந்தேன். தண்டியில் இருந்து காந்தியடிகள் மேற்கொண்ட உப்பு சத்தியாகிரக போராட்டம், பல வழிகளில் நம் சுதந்திரத்திற்கு வித்திட்டது. எளிமையான அந்த சபர்மதி குடிலில்தான் நம் சுதந்திரப் போராட்டம் பெருமளவு திட்டமிடப்பட்டது. அங்கிருந்த புகைப்படங்களைப் பார்த்தேன். அதில் ஒன்று, காந்தியடிகள் கீழே குனிந்து 1 கை உப்பை கையில் எடுக்கும் காட்சி. அவருடன் இருந்தது 72 பேர்தான். அக்காலத்தில் முகநூல், டிவிட்டர், தொலைக்காட்சி, ரேடியோ எதுவும் அவரிடத்தில் இல்லை. மக்கள் ஊர் ஊராக நடந்து சென்று இச்செய்தியைப் பரப்பினர். இதுவே மிகப் பெரிய இயக்கமாக மாறியது. இதை எல்லோருக்கும் தெரியப்படுத்த பல மாதங்கள், வருடங்கள் ஆகின. எனினும் சண்டை எதுவும் போடாமல், ஆங்கிலேயர்கள் வெளியேறினர். இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், சண்டையின்றி அவர்கள் வெளியேறினார்கள். அதற்கு அடிப்படை என்று பார்த்தால், இந்த முதியவர் கீழே குனிந்து கையில் எடுத்த அந்த ஒரு கை உப்பு.
அக்காலத்தில் நம் “எதிரி” வெளியில் இருந்தான். அவனை அப்புறப்படுத்தினோம். ஆனால் இப்போதிருக்கும் பாதகர்கள் நாம் தான். நம் எதிரி நாமேதான். அப்படியெனில் யாரை வெளியேற்றுவது? அவர்தான் அணை கட்டி நதியை அழித்தார், இவர்தான் மணல் திருடினார் என்று கை காட்டுவீர்களா? இவர் மணல் திருடினார் என்றால், அதை வைத்து வீடு கட்டியவர்கள் நாம். அவர் அணை கட்டினார் என்றால், அதன் உதவியோடு விளைந்த உணவை உண்டவர்கள் நாம். இன்றுதான் மிகப் பெரிய சுதந்திர போராட்டம் தேவை, ஏனெனில் நம் எதிரி நமக்குள் இருக்கிறான். இதை அப்புறப்படுத்த இன்னும் அதிக சக்தி, நேர்மை, உறுதி, தீர்க்கமான செயல் தேவை. அதனால்…
வேண்டுகோள்:
பேரணிக்கு:
- மத்திய பிரதேச இளைஞர்கள் அக்டோபர் 2 வரை தொடர்ந்து இப்பேரணியை உங்கள் மாநிலம் முழுவதும் நடத்த வேண்டும்
- நடைபயணம், ஓட்டம், சைக்கிள், மோட்டார்-சைக்கிள், பேருந்து, ரயில்… உங்களுக்கு சௌகரியமானதைத் தேர்வு செய்து அவ்வழியில் இப்பேரணியைத் தொடர்ந்து செய்யுங்கள்
- இம்மாநிலத்தின் 7.5 கோடி மக்களும் இதற்கு வாக்களிக்கச் செய்வது உங்கள் பொறுப்பு
செயல்:
- அடுத்த 3 வருடங்களுக்கு எங்களுடன் நின்று இதைச் செயல்படுத்த, உங்கள் மாநிலத்தில் இருந்து எனக்கு 100 இளைஞர்கள் வேண்டும்.
- அதற்கான ஒரே தகுதி: “அப்போ நான்? எனக்கு என்ன கிடைக்கும்?” என்ற எண்ணம் அடுத்த 3 வருடங்களுக்கு உங்களுக்கு இருக்கக்கூடாது.
- இப்படிப்பட்ட உறுதியோடு நீங்கள் செயல்பட முடியுமென்றால், 3 ஜென்மங்களில் நடக்காத வளர்ச்சி, இந்த 3 ஆண்டுகளில் உங்களுக்கு நடக்கும்.
- ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கவிருக்கும் இந்த செயல்திட்டங்களை, தனிப்பட்ட முறையில் நானே உடனிருந்து நிர்வகிக்க உள்ளேன்.
- இதைச் செயல்படுத்தினால் அடுத்த 25 வருடங்களில் நம் ஆறுகளை, 50 ஆண்டுகளுக்கு முன் அவை எப்படி இருந்ததோ, அதே பொலிவோடு நம் குழந்தைகளுக்கு வழங்கமுடியும்.
பேரணிக்கு ஆதரவு
பௌத்த, இந்து, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இப்பேரணியில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
"இன்றோடு பேரணியின் மூன்றாம் கட்டம் நிறைவுக்கு வருகிறது. நாளை முதல் பேரணியின் கடைசி கட்டம் ஆரம்பம்."