மரங்களுக்கு மனிதன் செய்யும் கைமாறு!
நம் வாழ்வாதாரங்களுள் மிக முக்கிய பங்கு மரங்களுக்கு உண்டு என்பதை அனைவரும் அறிவோம். இருந்தாலும் அது தரும் நற்பயனை காண நம்மில் பலருக்கு கண் இல்லையென்பதுதான் பரிதாபமான நிலை. நாம் உயிர்வாழ உற்ற துணையாய் இருக்கும் மரங்களுக்கு நாம் என்ன கைமாறு செய்ய முடியும்? தெரிந்துகொள்வோம் இக்கட்டுரையில்...
நம் வாழ்வாதாரங்களுள் மிக முக்கிய பங்கு மரங்களுக்கு உண்டு என்பதை அனைவரும் அறிவோம். இருந்தாலும் அது தரும் நற்பயனை காண நம்மில் பலருக்கு கண் இல்லையென்பதுதான் பரிதாபமான நிலை. நாம் உயிர்வாழ உற்ற துணையாய் இருக்கும் மரங்களுக்கு நாம் என்ன கைமாறு செய்ய முடியும்? தெரிந்துகொள்வோம் இக்கட்டுரையில்...
மனிதனுக்கும் மரங்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனிதனின் வெளிமூச்சு, தாவரங்களின் உள்மூச்சாகிறது. தாவரங்களின் வெளிமூச்சு, மனிதனின் உள்மூச்சாகிறது. மனித நுரையீரலின் ஒருபாதி, மரங்களில் தொங்கிக்கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். மனிதனுக்கும் தாவரத்துக்கும் உள்ள பந்தமான இந்த இயற்கைச் சுழற்சிதான் பல்வேறு நிலைகளில் மனிதர்களுக்குக் கனிகளாக, விலங்குகளுக்கு உணவாக, பல்வகை உயிரிகளின் ஆதாரமாக விளங்குகிறது.
"என் நுரையீரலில்
உன் மூச்சு
என் இளைபாறுதல்கள்
உன் நிழலில்
உன் தேகத்தால்
என் வீடுகள்
Subscribe
என் தலைசூட
உன் மலர்கள்
என் பசியாற்ற
உன் கனிகள்
இத்தனைக்கும் கைமாறாக
என் கோடரி
உன் கழுத்தில்!"
இக்கவிதையில் சொல்வதுபோல், தனக்கு எத்தனையோ நலன்களை வழங்கும் மரங்களை மனிதன் சுயநலத்திற்காக வெட்டி வீழ்த்துகிறான். சுற்றுச்சூழல் பற்றிய கவனம் இல்லாமல் மனிதன் செய்யும் செயல்கள்
அவனுக்கே தீங்காக விளைகிறது. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் குறைந்து வரும் நீர் ஆதாரங்கள், உயிர்ச்சத்து அற்றுப்போன மண்வளம், பருவநிலை மாற்றங்கள், காட்டில் வாழும் உயிரினங்களும் அழிந்துகொண்டு இருக்கும் சூழல், இவை உலகெங்கும் உள்ள சமுதாயங்களைப் பல வழிகளில் பாதிக்க ஆரம்பித்தன. உலக வானிலை ஆராய்ச்சி மையம், கடந்த 25 வருடங்களில், 22 வருடங்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பத்தைப் பதிவு செய்திருக்கிறது, மேலும் அந்த 22 வருடங்களில் மிகவும் வெப்பமான இரண்டு வருடங்கள் கடந்த மூன்று வருடங்களில் நிகழ்ந்தவை என்று சொல்கிறது. எனவே, இந்த அளவுக்கு அதிகமான வெப்பத்தால் உலகம் கொதிக்கிறது. பனிமலை உருகுகிறது. கடல்களின் நீர்மட்டம் உயர்கிறது.
இதைத் தடுக்க எளிய மற்றும் சிறந்த வழி ஏராளமான மரங்கள் வைத்துப் பசுமைப் போர்வையை அதிகப்படுத்துவதே. ஏனெனில், வெப்பத்துக்குக் காரணமாக உள்ள வாயுக்களில் முக்கியமானது கரியமில வாயு. அவற்றை மரங்கள் உள்வாங்கி மனிதன் சுவாசிப்பதற்காக ஆக்ஸிஜனை வெளி விடுகின்றன. எனவே, உலக நலனில் அக்கறைகொண்ட ஈஷா அறக்கட்டளை, சுற்றுச்சூழல் சீர்கேடுகளைக் களைவதை அடிப்படையாக வைத்து, 2004-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் பசுமைக் கரங்கள் திட்டத்தைத் துவக்கியது. இந்தத் திட்டத்தின் பல செயல்பாடுகளில் முக்கியமான செயல்பாடு... மரம் வளர்த்தல்!
மரம் நடுதல் பற்றி சத்குரு பேசும்போது...
‘‘உங்களுக்கு எப்போதாவது தாகம் எடுத்தால் யாரையோ கெஞ்சியாவது ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கிக் குடிப்பீர்கள் அல்லவா? அதுபோல் சாலையில் நீங்கள் போகும்போது, ஏதாவது காய்ந்த செடியைப் பார்த்தால், பக்கத்தில் ஏதாவது வீட்டில் கெஞ்சி ஒரு குடம் தண்ணீர் வாங்கி ஊற்ற வேண்டும். தமிழ்நாட்டுக்கு மொத்தம் 12 கோடி மரங்கள் தேவைப்படுகின்றன. நம் தமிழ்நாட்டு ஜனத் தொகைக்கு ஒருவர் இரண்டு மரங்கள் வீதம் வைத்திருந்தாலே 12 கோடி மரங்கள் வைத்திருக்கலாம். இதை ஒரு மகத்தான வேலையாக நினைத்துக் கொள்கிறார்கள். சுற்றுப்புறத்து உயிர்களுடன் சிறிது ஈடுபாடு வைத்து வாழ்ந்து வந்திருந்தால், இது ஒரு பெரிய வேலையாக இருக்காது. இதை ஒரு விளையாட்டு போலச் செய்ய முடியும்.
இன்று நீங்கள் மரக்கன்று வைத்து தண்ணீர் ஊற்றுவதை, ஒரு பெரிய சேவையாக நினைத்துச் செய்ய வேண்டாம். இதை நமது நன்மைக்குத்தானே செய்கிறோம். நீங்கள் இந்த உலகை விட்டுப் போவதற்கு முன், நீங்கள் பிறந்தபோது எவ்வளவு மரங்கள் இருந்தனவோ, அந்த அளவு மரங்களாவது இந்த உலகில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மரம் நடுவது மட்டும்தான் தீர்வு என்று சொல்ல முடியாது. ஆனால், இயற்கை தன்னைச் சரிசெய்து கொள்வதற்கு நாம் ஒரு வாய்ப்பையாவது உருவாக்கித் தர வேண்டுமல்லவா!
மரம் நடுதலை, அரசாங்கத்து வேலையாகவோ, ஈஷா வேலையாகவோ யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த உலகில் யார் யார் சுவாசிக்க வேண்டியிருக்கிறதோ, அவர்கள் எல்லோருக்கும் பொதுவான வேலை இது. எனவே, உற்சாகமாக, முழு ஈடுபாட்டுடன், அனைவரும் இந்தப் பணியில் கைகோர்க்க வேண்டும்!"
ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்
ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம், தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ளது. எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்யேகமாக தயார் செய்து தரப்படுகிறது. புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.5) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 90062