கோழிப்பண்ணை to இயற்கை விவசாயம்…
கோழிப்பண்ணை, கோழித்தீவனம், கோழி மருந்துக் கடை என சிறப்பாக தொழில் செய்து வந்த பெருந்துறை சீலம்பட்டியைச் சேர்ந்த திரு. ராஜசேகரன் அவர்கள் தற்போது ஒரு இயற்கை விவசாயியாக ஜொலிக்கிறார்... இவரை இயற்கை விவசாயத்திற்கு மாற்றியது யார்? தொடர்ந்து படியுங்கள்...
பூமித்தாயின் புன்னகை இயற்கை வழி விவசாயம் - பகுதி 41
"எங்க குடும்பம் பரம்பரையா விவசாயக் குடும்பம்தான், நான்தான் இந்த கோழிப்பண்ணையை ஆரம்பித்தேன், தொழில் நன்றாக நடந்து கொண்டிருந்தாலும் எனக்கு அந்த தொழிலை செய்ய விருப்பம் இல்லாமல் போனது. அதற்குக் காரணம் சத்குரு சொன்ன ஒரு வார்த்தைதான். 'நீங்கள் எந்த தொழிலைச் செய்தாலும், செய்கிற தொழில் மக்களுக்கு உபயோகமானதாகச் செய்யுங்கள்.' என்று ஒரு சத்சங்கத்தில் கூறினார். அந்த வார்த்தை எனக்கு மந்திரம் போல் ஒலித்தது, கோழிப்பண்ணைத் தொழிலை படிப்படியாகக் குறைத்தேன், எனக்குத் தெரிந்த அளவு இயற்கை விவசாயத்தை செய்யத் தொடங்கினேன்." என்று பேச்சைத் தொடங்கினார்.
சரியா சொன்னீங்கண்ணா, இதத்தான் என்ற ஊர்ல பெரிவூட்டு ஆத்தா 'சீரைத் தேடின் ஏரைத் தேடு'ன்னு காலம்பூரா சொல்லிட்ருந்தாங்ணா, நாலுபேருக்கு நல்லது செய்யறது விவசாயிங்க மட்டும் தானுங்கண்ணா...
இயற்கை விவசாயத்தை ஆர்வமாக செய்யத் தொடங்கி விட்டாலும், தொடக்கத்தில் பல சிரமங்களையும் எதிர்கொண்டுள்ளார். மணத்தக்காளி கீரையை இயற்கை முறையில் உற்பத்தி செய்த முதல் முயற்சியில் போலி பொறிவண்டுத் தாக்குதலினால் சிரமப்பட்டிருக்கிறார், அப்பொறிவண்டை கட்டுப்படுத்த முடியாததினால் மொத்தப் பயிரையும் மடக்கி உழுதிருக்கிறார், மறுதாம்பு மூலம் ஓரளவுக்கு கீரை கிடைத்துள்ளது.
முன்னெச்சரிக்கையாக கத்தரிச் செடிக்கு புகையிலைக் கரைசல் தெளித்ததினால் தண்டுப்புழு மற்றும் காய்புழுத் தாக்குதலில் இருந்து காப்பாற்றியுள்ளார், இந்த அனுபவத்தின் மூலம் பூச்சித் தாக்குதல் இருக்கிறதோ இல்லையோ பயிர்களுக்கு அட்டவணைப்படி பூச்சிவிரட்டிகளைத் தெளிப்பதை முறைப்படுத்தியுள்ளார். ஈரோடில் ஈஷா விவசாய இயக்கம் நடத்திய இடுபொருள் தயாரிப்புப் பயிற்சியில் கலந்துகொண்டு பல்வேறு பூச்சிவிரட்டிகளின் தயாரிப்பு முறைகளை கற்றுக் கொண்டதினால் தற்போது பூச்சிகள் அவரது கட்டுப்பாட்டில் உள்ளது.
ஒருங்கிணைந்த பண்ணையம்
இவரது பண்ணையில் காய்கறிகள், வாழை, தென்னை, நிலக்கடலை, மஞ்சள், கீரைகள், மூலிகைகள் போன்றவை சாகுபடி செய்வதோடு நாட்டு மாடுகளோடு, 30 ஆடுகளையும் வளர்த்து வருகிறார். தேனீ வளர்த்து தேன் வியாபாரமும் செய்கிறார். பண்ணையில் படிப்படியாக புதுமைகளையும் புகுத்தி வருகிறார். "வாழையை இப்போதெல்லாம் மொத்தமாக நடுவதில்லை, வேலியோரங்களில் மட்டுமே நடுகிறேன், இதனால் தேவைக்கேற்ப நடவு செய்ய முடிகிறது, 15 வகையான கீரை இருக்கு, பிரண்டை, வல்லாரை, தூதுவளை போன்ற மூலிகைகளையும் சாகுபடி செய்கிறேன். வெண்டை, கத்தரி, பாகல், முருங்கை, சுரை, தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளையும் உற்பத்தி செய்கிறேன். இவை தவிர எலுமிச்சை மரங்களும் உள்ளது, பப்பாளியையும் சாகுபடி செய்கிறேன்."
விளையும் எந்தவொரு பொருளையும் இவர் வீணாக்குவதில்லை. காய்கறிகள் விற்பனையாகாமல் போனால் அவற்றை அவித்து காயவைத்து வத்தலாக மாற்றி விற்பனை செய்கிறார், நிலக்கடலைக் கொடி மற்றும் மீதியான கீரையை ஆடுகளுக்கும், காய்கறி கழிவுகளை மாடுகளுக்கும் போடுகிறார். இவர் பண்ணையில் எந்த ஒரு விவசாயக் கழிவுகளும் மதிப்புடையவையாக மாறுகிறது.
தேவைக்கேற்ப உற்பத்தி
அளவுக்கதிகமாக உற்பத்தி செய்தால் சரியான விலை கிடைக்காது என்பதால் தேவையான அளவுக்கு மட்டுமே உற்பத்தி செய்கிறார். தேங்காயைத் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் நேரடி விற்பனை செய்வதோடு அவற்றை மதிப்புக் கூட்டி விற்பனை செய்கிறார். கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றையும் உற்பத்தி செய்கிறார்.
"நான் எந்த பொருளையும் மக்களிடம் நேரடியாக விற்பனை செய்து விடுவதால் உழைப்புக்கேற்ற விலை கிடைத்துவிடுகிறது. சந்தை விலைக்கே கொடுப்பதால் மக்கள் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். ஒரு முறை வாங்கியவர்கள் மீண்டும் வந்து வாங்குகிறார்கள். பொதுவாக மக்கள் மனநிலையை கவனித்தால் கடையில் ஒரு பொருள் எந்த விலைக்கு கிடைக்கிறதோ அதே விலைக்கே நாமும் கொடுத்தால் விரும்பி வாங்குகிறார்கள். என்னிடம் பொருள் வாங்குபவர்களில் 80 சதவீதம் பேர் மார்கெட் விலையையே விரும்புகிறார்கள், 20 சதவீதம் பேர் கூடுதல் விலை என்றாலும் வாங்கத் தயாராகவே இருக்கிறார்கள்."
Subscribe
"இயற்கை விளைபொருட்கள் குறித்து மக்கள் மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது, எல்லோரும் காய்கள் பளபளப்பா இருக்கணும், கீரை கரும் பச்சையா இருக்கணும்னு எதிர்பார்ப்பதில்லை. நானும் எனக்கு கூடுதல் விலை வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை, கடவுள் தயவால் இயற்கை கை கொடுப்பதால் சாதாரண விலைக்கே கொடுக்க முடிகிறது. சந்தையில் கிடைக்காத பொருட்களுக்கு மட்டும் சற்று கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கிறேன். கொத்தமல்லியை நான் வருடம் முழுவதும் சாகுபடி செய்வதால் மக்கள் சற்று கூடுதல் விலைகொடுத்து என்னிடம் வாங்கிச் செல்கிறார்கள்."
"நேரடி விற்பனை ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும் இப்போது கஷ்டமில்லாமல் வியாபாரம் செய்ய முடிகிறது. ஒருமுறை வாங்கியவர்கள் அடுத்தமுறை அவர்களுடைய நண்பர்களையும் அழைத்து வருகிறார்கள், நான் எந்த விளம்பரமும் செய்யவில்லை, விளம்பரம் செய்தால் நம்பிக்கை குறையும், சிலர் நேரடியாக பண்ணைக்கு வந்து எல்லாவற்றையும் பார்த்துவிட்டு காய்கறிகளை வாங்கிச் செல்கிறார்கள்."
'கறிகாய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும்'னு சொல்லுவாங்கோ, ஆனா வந்த காய்கறியெல்லாம் விக்கிறதில்லையே, அதனால நம்ம அண்ணா எந்தெந்த காய்கறிகளை போடோணும், எவ்வளவு போடோணும்னு ரோசன பண்ணி வெள்ளாம செய்றாப்படி. வெவசாயத்துல ஜெயிக்கோணும்னா அண்ணா மாதிரி விகரமா செய்யோணும்!
மகள் கொடுத்த தைரியம்
நேரடி விற்பனை செய்ய முதலில் தயங்கியவர், அவரது மகள் மற்றும் மனைவி கொடுத்த ஆதரவில் தற்போது சிறப்பாக நேரடி விற்பனை செய்துவருகிறார். "எனது மகள் கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம் எந்தத் தயக்கமும் இல்லாமல் கீரைக்கட்டுகளை எடுத்துச் சென்று வீடுகளிலும், சந்தையிலும் விற்றுவிட்டுச் செல்வார். என்னிடம் இருந்த தயக்கத்தைப் போக்கி, நேரடி விற்பனை செய்ய என்னை ஊக்கப்படுத்தியது என் மகள்தான் என்று நான் சந்தோஷமாகச் சொல்வேன். தற்போது எங்கெல்லாம் மக்கள் கூடுகிறார்களோ அங்கெல்லாம் சென்று என்னால் விற்பனை செய்ய முடிகிறது, அப்போது நான் ஒரு வியாபாரியாக இல்லாமல் மக்களில் ஒருவனாகவே இருக்கிறேன்." என்று கூறுபவர் வியாபாரத்திற்காக ஒரு நுட்பத்தையும் கடைபிடிக்கிறார்.
டிராக்டரில் காய்கறி விற்பனை
நேரடி விற்பனைக்காக அவரிடம் உள்ள மினி டிராக்டரில் இணைப்பதற்கு ஏற்ப ஒரு ட்ரெய்லர் செய்துள்ளார். இதற்காக 75 ஆயிரம் ரூபாய் செலவு செய்திருந்தாலும் இதனால் விற்பனை அதிகரித்துள்ளது.
"ஆரம்பத்தில் ஸ்கூட்டரில் காய்கறிகளை எடுத்துச்சென்று விற்பனை செய்தேன். தேவை அதிகமானதால் காரில் எடுத்துச் சென்றேன், தற்போது டிராக்டரில் எடுத்துச் செல்லுமளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது. இந்த ட்ரெய்லரில் நிறைய காய்கறிகளை வைக்க முடிகிறது, மக்கள் காய்கறிகளைப் பார்த்து வாங்கவும், டிஸ்பிளே வைக்கவும் இது வசதியாக உள்ளது. இந்த ட்ரைய்லர் செய்ததினால் எனக்கு கடை வைக்கும் செலவு குறைந்துள்ளது."
"மக்கள் நடமாட்டமுள்ள முக்கிய பகுதிகளில் இந்த வண்டியை நிறுத்துவதால் வியாபாரம் நன்றாக நடக்கிறது, மாலை 4 மணி முதல் 6 மணி வரை கடை இருக்கும், அருகிலேயே பள்ளி உள்ளதால் குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர்களும் காய்கறிகளை வாங்கிச் செல்கிறார்கள்." என்று சொல்பவர் காய்கறி விற்பனைக்காக யாரையும் வேலைக்கு வைக்கவில்லை. படிக்கும் நேரம் போக மற்ற நேரத்தில் பிள்ளைகள் உதவி செய்கிறார்கள். மனைவியும் முழு ஒத்துழைப்பு கொடுப்பதால் இவரது வேலைப்பளு சற்று குறைகிறது.
செழிப்பான வருமானம் தரும் செவ்வாழை
செவ்வாழை, பச்சை நாடன், நேந்திரன், கதளி என பல்வேறு வாழை ரகங்களைச் சாகுபடி செய்கிறார். செவ்வாழை சாகுபடி செய்து நல்ல திரட்சியான வாழையை அறுவடை செய்துள்ளார். ஒரு வாழைத்தார் 30 கிலோ வரை எடை இருக்கிறது, ஒரு பழம் 200 முதல் 250 கிராம் வரை எடையிருக்கிறது. வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவற்றையும் விற்பனை செய்து அதிலும் வருமானம் எடுக்கிறார். இந்த உபரி வருமானம் வாழை நடவுக்கான செலவையும் ஈடுசெய்கிறது.
மூடாக்கு செய்த மாயம்
தென்னை மரத்தில் இருந்து கழிக்கும் ஓலைகளையும் வீணாக்காமல் அவற்றைத் தூளாக்கி மீண்டும் தென்னைக்கே மூடாக்காக இடுகிறார். இதனால் தென்னையில் காய்ப்பு அதிகரிப்பதோடு, காய்களின் அளவும் பெரிதாகியுள்ளது. வாழைக் கழிவுகளைக் கொண்டு மூடாக்கு செய்வதினால் தண்ணீர் தேவை மிகவும் குறைந்துள்ளது என்கிறார்.
"தென்னையில இப்ப காய்ப்பு அதிகமா வருது, போன வருஷம் 5 ரூபாய்க்கு விற்ற தேங்காய் இந்த வருஷம் 15 ரூபாய்க்கு போகிறது, பக்கத்துத் தோட்டத்து காயைவிட பெரிதாக இருப்பதால் மூன்று ரூபாய் எனக்கு சேர்த்துத் தருகிறார்கள். இளநீராகவும் கொடுக்கிறேன், இளநீராக கொடுக்கும்போது சற்று கூடுதல் வருமானம் கிடைக்கிறது."
இதைத் தானுங்கண்ணா நம்ம நம்மாழ்வார் ஐயா 'மனிதனுக்கு சட்டை போல மண்ணுக்கு மூடாக்கு தேவை'ன்னு வெகரமா சொல்லிட்டு போயிருக்காப்டி. இனியாவது நம்ம விவசாயிங்க நம்மாழ்வர் ஐயா சொல்லிப்போட்டு போனத கேட்டு நடக்கோணுமுங்க...
இடுபொருள் பயிற்சி
இயற்கை விவசாயத்தை மற்றவர்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கத்தில் பெருந்துறையில் அவரது பண்ணையிலேயே ஈஷாவின் இடுபொருள் தயாரிப்பு பயிற்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தார். அதைப்பற்றிக் கூறும்போது "விவசாய சொந்தங்கள் என் பண்ணைக்கு வந்து பார்க்கிறார்கள் அவர்களிடம் சிறிது தயக்கம் உள்ளது அந்த தயக்கத்தை போக்கிவிட்டால் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் இயற்கைக்கு மாறிவிடுவார்கள். பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் அவ்வப்போது என்னிடம் சந்தேகங்களை கேட்கிறார்கள்." என்றவர், புதிய விவசாயிகளுக்கு கற்றுத்தரும் வகையில் பண்ணையையும் மேம்படுத்தியுள்ளார்.
அடுத்த திட்டம்
ஒரு வருடத்திற்குள் பண்ணையை மேலும் மேம்படுத்தி ஒரு முழுமையான பண்ணையமாக மாற்றத் திட்டமிட்டுள்ளார். காய்கறிகள் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஒரு ஏக்கர் அளவுக்கு வலைப்பந்தல் அமைத்து அதில் கேரட், பீட்ருட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளார். கொத்தமல்லி சாகுபடியை ஆண்டு முழுவதும் செய்ய டிரான்ஸ்பரன்ட் ஷீட் (Transparent sheet) பயன்படுத்தி சாகுபடி செய்கிறார். கொடிக் காய்கறிகளின் உற்பத்தியை அதிகரிக்க 40 சென்ட் நிலத்தில் கற்பந்தல் அமைத்துள்ளார். மேலும் ஜீவாமிர்தம் கொடுக்க, சொட்டு நீர் பாசனம் செய்ய, தெளிப்பு நீர் பாசனம் செய்ய பண்ணையை ஆட்டோமேஷன் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
சமூகத்துக்கு என்னால் இயன்றதைச் செய்கிறேன்...
சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை மக்கள் மருத்துவத்துக்காக செலவு செய்கிறார்கள். உணவின் தரம் குறைந்துள்ளதால் மக்கள் நோய்வாய்ப் படுகிறார்கள். சத்குரு அவர்கள் விவசாயிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது "விவசாயி நமது வளர்ப்புத் தாய்" என்று கூறுவார். அந்த வகையில் நஞ்சில்லாப் பொருட்களை மக்களுக்குக் கொடுப்பது எனக்கு திருப்தியாக உள்ளது.
நம்ம ஊர்ல சிலர் மேடையில பேசும்போது அடிக்கடி சொல்லுவாங்க இல்லீங்கோ… யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு. நம்ம ராஜசேகரன் அண்ணா அவிகளமாரி மேடையில ஏறி பேசிப்போட்டு போயிறாம செஞ்சு காமிக்கிறாரு பாருங்க! இந்த மனசெல்லாங் விவசாயிகளுக்கு தானுங்க வரும். என் குடும்பத்தினர் அனைவரும் இதில் மகிழ்ச்சியாக ஈடுபடுகிறோம். ஆரோக்கியமான உலகத்தை உருவாக்கும் முயற்சியில் பங்கேற்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்துள்ளது. எனக்குக் கிடைத்த வாய்ப்பை நல்லபடி பயன்படுத்தி வருகிறேன், என்று கூறிய அவரது முயற்சிகளுக்கும் நல்லெண்ணத்திற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு நாங்கள் விடைபெறத் தயாரானோம், மாலை மூன்று மணி ஆகிவிட்டதால் வியாபாரத்திற்கு செல்வதற்காக டிராக்டர் ட்ரெய்லரில் காய்கறிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். நாங்களும் இயற்கை காய்கறிகளை சிறிது வாங்கிக்கொண்டு விடைபெற்றோம்.
தொடர்புக்கு : திரு. ராஜசேகரன் - 98427 20163
தொகுப்பு : ஈஷா விவசாய இயக்கம் - 83000 93777
முகநூல் : ஈஷா விவசாய இயக்கம்