இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்... பகுதி 2

கலாச்சாரத்தின் பிறப்பிடமாக விளங்கிய பல ஆறுகளின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பலரின் வாழ்வாதாரமாக இருந்து வரும் 'காவிரி' எனும் ஜீவநதி, மக்கள் தொகைப் பெருக்கத்தாலும் மனிதர்களின் பேராசையினாலும் இன்று காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஈஷா பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர் ஆனந்த், காவிரியுடனான தனது அனுபவங்களை பகிர்கிறார் இங்கே!

ஆனந்த்,

ஈஷா பசுமைக் கரங்கள்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பள்ளிக்கூடம் விடுமுறையென்றால் அந்தக் காலத்தில் திருச்சி சிறுவர்களை தொலைக்காட்சியோ சினிமாவோ ஆட்கொண்டதேயில்லை. அவர்களை ஈர்த்ததெல்லாம் காவிரி ஆற்றங்கரையும் காவிரி சார்ந்த நிலப் பரப்புகளும்தான்.

இன்றைய காவிரியின் நிலையோ, தலைகீழாய் உள்ளது. காவிரியில் வெள்ளத்தைக் காண்பதென்பது அரிதான ஒரு நிகழ்வாகிப்போனது.

ஆம்! திருச்சியில் வளரும் ஒவ்வொருவரையும் காவிரித் தாயும் வளர்த்தெடுக்கிறாள் என்று சொல்லலாம். விடுமுறை நாட்களில் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக செய்த சைக்கிள் பயணம் மறக்க முடியாதது. அப்போதெல்லாம் சைக்கிள் அழைத்துச் சென்றதைவிட பறக்கச் செய்ததே அதிகம். அந்தச் சைக்கிளில் ஏறி, நண்பர்கள் புடைசூழ காவிரியை நோக்கி பயணிக்கும்போது கிடைத்த ஆனந்தத்தை வேறெதனுடனும் ஒப்பிட முடியாது.

சைக்கிளை கரையில் நிறுத்திவிட்டு, திமுதிமுவென ஓடிச்சென்று காவிரியில் குதித்து மூழ்கி எழும் சந்தோஷம் வார்த்தையில் விவரிக்க இயலாதது. காவிரியில் குளிக்கும் சிறுவர்களுக்கு கரையேற மட்டும் மனமே இருக்காது. என் நினைவு தெரிந்து வற்றிப்போன கவிரியைக் கண்டதே இல்லை. வெறும் மணல் திட்டுகளாய் இருக்கும் காவிரி ஆற்றை நான் எப்போதும் அறிந்ததேயில்லை.

இன்றைய காவிரியின் நிலையோ, தலைகீழாய் உள்ளது. காவிரியில் வெள்ளத்தைக் காண்பதென்பது அரிதான ஒரு நிகழ்வாகிப்போனது. அப்போதெல்லாம், காவிரி ஆற்றைச் சுற்றி வாழ்பவர்களின் வீட்டிற்கு உறவினர்கள் வந்துவிட்டால்போதும்... கட்டுசோறு கட்டிக்கொண்டு உறவினர்களுடன் காவிரி ஆற்றங்கரைக்குச் சென்றுவிடுவார்கள். அங்கு மணிக்கணக்கில் பேசி மகிழ்ந்து, உண்டு களித்துவிட்டு வீடு திரும்புவார்கள். இப்போதோ அங்கே பார்ப்பதற்கு காவிரியாற்றைக் காணவில்லை. வெறும் மணல் திட்டுகளே காட்சியளிக்கின்றன.

காவிரியின் இந்த நிலை ஒரே நாளில் நிகழ்ந்ததன்று. மக்கள் தொகை பெருகியது, நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க ஆழ்துளை கிணறுகள் பெருகியது, மனிதன் பேராசை கொண்டு ஆற்று மணலை அளவுக்கு அதிகமாக அள்ளியது, என இதற்கு பல காரணங்கள் சொல்லலாம். மக்கள் தொகைப் பெருக்கமே முக்கியமான காரணியாக பார்க்கப்பட்டாலும், மனிதனின் பேராசையே காவிரியை காவு வாங்கிக்கொண்டிருக்கிறது.

ஆம்! ஆற்று மணல் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகவே எடுக்கப்பட்டுவிட்டதால், தண்ணீரைப் பிடித்து வைத்துக்கொள்ளும் மணல் பரப்புகள் குறைந்து கட்டாந்தரையாக காவிரி மாறிப்போயுள்ளது. ஓடும் நீர் பிடித்து வைக்கப்படாமல் நேராக கடலை நோக்கி செல்கிறது. இதனால் நிலத்தடி நீர் உயர்வதில்லை. எவ்வளவுதான் காவல்களும் சட்டங்களும் போடப்பட்டாலும், மனிதனின் மனம் மாறவில்லையென்றால் இதற்கு தீர்விருக்காது.

ஆறுகள், வெறும் ஆறுகளாக மட்டும் இருப்பதல்ல. அவை நம் கலாச்சாரத்தின் சின்னம். தமிழகத்தில் வற்றாமல் ஓடிய சிறு ஆறுகள் பல, இன்று அடியோடு மறைந்து வருகின்றன. செழித்து விளங்கக்கூடிய ஆற்றங்கரையோர விவசாயம் நசிந்து வருகிறது. விவசாயிகள் நிலங்களை விற்று விட்டு நகரங்களுக்கு குடிபெயர்ந்த வண்ணம் உள்ளனர். ஆறுகளைக் காப்பதென்பது தனிமனிதரால் நடவாது என்றாலும், ஒவ்வொரு தனிமனிதனும் நினைத்துவிட்டால் நிச்சயம் நடக்கும்.

இயற்கை இன்னும் பேசும்!

இத்தொடரின் பிற பதிவுகள்: இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்