‘காசி’ என்ற பெயர்கொண்ட உத்தர் காசியின் மகிமைகள்!
உத்தர்காசி எனும் ஊரின் தனிச்சிறப்புகளை தன் எழுத்தின்மூலம் நம் கண்முன் நிறுத்தும் எழுத்தாளர் அஜயன்பாலா, அந்த கோயிலின் வரலாற்று தன்மைகளையும், அந்த இடத்தின் ஆன்மீக முக்கியத்துவங்களையும் எடுத்துரைக்கிறார்!
இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா -பகுதி 14
உத்தர் காசி எனும் ஊரின் தனிச்சிறப்புகளைத் தன் எழுத்தின் மூலம் நம் கண்முன் நிறுத்தும் எழுத்தாளர் அஜயன்பாலா, அந்த கோயிலின் வரலாற்றுத் தன்மைகளையும், அந்த இடத்தின் ஆன்மீக முக்கியத்துவங்களையும் எடுத்துரைக்கிறார்!
திரு. அஜயன் பாலா:
கேதார்நாத், பத்ரிநாத். கங்கோத்ரி - மூன்று முக்கிய புண்ணியதலங்கள்தான் இந்த இமயமலைப் பயணத்தின் இலக்கு.
இதில் கேதார்நாத் பத்ரிநாத் இரண்டும் வாழ்வின் மறக்க முடியாத அனுபவங்களை மனதில் உண்டாக்கிய பின் அடுத்த இலக்கான கங்கோத்ரி நோக்கி பயணிக்கிறோம்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாதை. ஒவ்வொரு பாதையிலும் ஒவ்வொரு விடியல்.
பிரம்மாண்டமான பச்சைமலைகளின் இடுப்பைச் சுற்றி சூரியனோடும், சந்திரனோடும் ஒளிந்து விளையாடும் விளையாட்டைப் போல, பேருந்துடன் ஒவ்வொரு நாளும் ஒன்றே போல தோற்றத்தில் தெரிந்தாலும் நாட்களின் அனுபவம் ஆன்மாவினுள் புதிய உயரங்களை உண்டாக்கித் தந்திருந்தது.
இத்தனை நாள் பயணத்தில் உடலின் எடை குறைந்ததோ என்னவோ தெரியாது. ஆனால் மனதின் எடை வெகுவாக குறைந்திருந்தது. இன்னும் சில நாட்கள் இமயமலையில் தங்க நேர்ந்தால் நாமும் ஒரு மேகமாகவோ அல்லது பனித்துகளாகவோ மாறிவிடுவோம் போல. சாம்பல் துலக்கம் பெற்ற விளக்கைப்போல மனம் அத்தனை பளிச்.
கங்கையின் உற்பத்தி ஸ்தலமான கோமுக் தான் இந்தப் பயணத்தின் உச்சம். பலரும் அங்கு போவது அத்தனை சுலபமல்ல என ஆரம்பம் முதலே பயமுறுத்திக்கொண்டு வந்தனர். மேலும் கங்கோத்ரியோடு பலரை நிப்பாட்டி விட்டு குறிப்பிட்ட சிலரை மட்டும்தான் கோமுக்கிற்கு அனுப்புவார்கள் என்றும், வேறு சிலரோ பனிச்சரிவு அதிகம் இருப்பதால் அங்கு ஒருவருமே செல்ல வாய்ப்பில்லை என சிலரும் பயணத்தின் நடுவே பலவிதமான பிம்பங்களை மனதினுள் உருவாக்கிவிட்டிருந்தனர்.
ஏற்கனவே நான் கேதார்நாத்துக்கே குதிரை கட்டியவன். இந்தச் சூழலில் இந்த இக்கட்டான கோமுக் பயணத்துக்கு நம்மை அழைத்துச் செல்வது சந்தேகம்தான் என உள்மனசு வெதும்பியது.
இதன்காரணமாக கோமுக் என்பது அடையமுடியாத பார்க்க முடியாத இடமாகவே பனிச்சிகரங்களுடன் கண்முன் உயர்ந்து நின்றது.
Subscribe
அப்படிப் பார்க்கவே முடியாவிட்டால் பயணக்கட்டுரை எப்படி எழுதுவேனாம். எனக்காக இல்லாவிட்டாலும் வாசகர்கள் பலருக்காகவாவது என்னை எப்படியும் அழைத்து சென்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கை மனதில் துளிர்விட்டது.
இப்படியான மனக்கணக்குகளுடன் நான் யோசித்துக் கொண்டிருக்க, பேருந்து மாலையில் வந்து நின்றது ஓரிடத்தில். அந்த இடம் உத்தர் காசி. இன்று இரவு இங்கு தங்கி அடுத்த நாள் காலைதான் புறப்படப் போகிறோம் என பயணக்குழுவின் தலைவர் கூற வழக்கம் போல பேருந்திலிருந்து விடுதிகளுக்குள் மூட்டை முடிச்சுடன் இறங்கினோம்.
உத்தர்காசி நம்மூர் காஞ்சிபுரம் போல பழமை புதுமை இரண்டுமுகம். முன்பின் எப்படி இழுத்தாலும் விரிந்துகொள்ளும் நகரம்.
வழக்கம்போல யோகிகள், சாமியார்கள் தெருக்களில் நடந்து போக இன்னொருபக்கம் ஸ்பைக்ஸ் ஸ்டைலில் முடி வெட்டிக் கொண்டு கூலிங்கிளாஸும், லேட்டஸ்ட் பைக்குமாக இளைஞர்கள் சிலரும் தொடர்பே இல்லாமல் கலந்து கட்டி காணப்பட்டனர். அனைவரும் 6 மணிக்குள் விடுதியைவிட்டு பேருந்தில் ஏறி உத்தர்காசியின் புராதன கோவிலை தரிசிக்கப் புறப்பட்டோம். மலைகளில் புதைக்கப்பட்ட வீடுகளின் மொட்டை மாடிகளில் பெண்கள் கொடியில் போட்ட துணியை வாரி சுருட்டிக்கொண்டிருந்தனர். யூனிபார்மில் வீடு திரும்பிக்கொண்டிருந்த குழந்தைகளுக்கு நாங்களும் கையசைத்தபடி பேருந்தில் உத்தர்காசியில் ஊடுருவினோம். மலையைக் குடைந்து போடப்பட்ட குகையினுள் நுழைந்த பேருந்து அற்ப பயம் எனும் மன இருளைக் கடந்து ஆன்மீகம் எனும் பெரு வெளிச்சத்தை உடனடியாக எதிர்கொண்டழைக்க மறு வாயிலில் வெளிவந்தது.
இப்போது கோவில் முன்புள்ள மைதானத்தில் பேருந்துகள் நிற்க அனைவரும் இறங்கினோம்.
உண்மையில் காசி என்றாலே அந்த இடத்துக்குள் ஒரு ஆன்ம அதிர்வு உட்புகுந்துவிடும் போல. பேருந்திலிருந்து இறங்கி கோவிலுக்குள் போகும்போது சட்டென ஒரு புராதனம் எங்களைச் சுற்றி சூழத் தொடங்கியது. உடன் எங்களை வரவேற்பது போல சிறு மழையும் எங்களை பின் தொடர எங்கள் கால்கள் வேகமெடுத்து கோவிலை நோக்கி ஓட்டமெடுக்க, அதுவரை எங்களைச் சுற்றி நகர்ந்துகொண்டிருந்த நகரத்து மோஸ்தர்கள் மறைந்து சட்டென ஒரு பழங்காலத்துக்குள் பயணிப்பது போல காட்சிகள் மாறின.
ஆங்காங்கு சடைமுடியும் ருத்ராட்சமும் அணிந்த யோகிகள் வரிசையாக அமர்ந்திருக்க ஒரு உயரமான மரத்தின் கீழமர்ந்திருந்த சிறு கோபுரம் கூடிய அந்த கோவிலுக்குள் நுழைந்தோம். அடுத்த சில நிமிடங்களில் அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூட்டைப்போல எங்களுடன் வந்த ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையில் உருண்டனர். அடுத்த நொடி அங்கு பேச்சு இல்லை எங்கும் நிசப்தம். சுற்றிலும் பார்த்தபோது கிடைத்த இடங்களில் எல்லோரும் தியானத்தில் அமர்ந்து உள்ளுக்குள் பல கி.மீ. பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் மீண்டும் கண்விழிப்பதற்குள் இக்கோவில் குறித்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
காசி என்ற பெயர்கொண்ட அனைத்து இடங்களிலும் உள்ளுறைந்து கிடக்கும் ஆற்றலை இங்கும் பூரணமாய் உணர முடிந்தது. கிட்டத்தட்ட 4,225 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது இந்த கோயில். சொல்லப்போனால் இன்று இந்தியா முழுக்க உள்ள கோவில்களில் மிகவும் பழமை வாய்ந்த, இன்னமும் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் கோவில் இது ஒன்றாகவே இருக்கக்கூடும்.
க்ரியா யோகத்தை சிவாவின் மூலமாக பூமிக்கு அளித்தவரும் சப்தரிஷிகளுள் ஒருவராக கருதப்படுபவருமான அகத்திய முனிவரால் வழிபாடு செய்யப்பட்ட இடம் என்றும் கருதப்படுகிறது. கோவிலின் இடப்பக்கமாக எட்டு இதழ்கள் கொண்ட ஒரு பூ ஒன்று கற்களால் செதுக்கப்பட்டிருந்தது. இந்த கல்பூ குறித்து சத்குரு அவர்கள் குறிப்பிடும்போது, "இது மக்கள் சிவனை பூஜிக்க பயன்படுத்திய இடம்" என்றார்.
முற்காலத்தில் இறைவனிடமிருக்கும் தங்கள் அன்பை நிரூபிக்க பலவித வழிபாட்டு முறைகளை மக்கள் கடைப்பிடித்தனர்.
எச்சில்பட்ட இறைச்சி உணவை கண்ணப்ப நாயனார் இறைவனுக்கு ஊட்டியதைக் கூட பெரிய புராணத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால் அதற்கும் முன்பாக மக்கள் தாங்கள் உயர்ந்தது என நினைத்த அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்துள்ளனர்.
இந்த கல் பூவுக்கு பின்னிருக்கும் வழிபாட்டு முறைகள் குறித்து வரலாற்று நூல்கள் சொல்லும் பல விஷயங்கள் அதிர்ச்சியூட்டுபவையாகவும் இக்காலத்து மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலும் இருக்கின்றன என கூறுகிறார். அனைவரது ஆழ்நிலை தியானத்தைக் கலைக்கும் விதமாக கோவிலின் பூஜை ஓசைகள் ஓங்கி ஒலிக்க அனைவரும் கருவறைமுன் கூடினர்.
அங்கிருந்த புரோகிதர்கள் எங்களது ஈஷா குழுவுக்காக சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.
நான் கொஞ்சம் கடைசி ஆளாக கோவிலை சுற்றிவிட்டு வெளியே வர அனைவரும் ஓரிடம் நோக்கி ஓடி வரிசையாக நின்றனர்.
நான் கடைசி ஆளாக ஓடி நிற்கப் போக, க்ளீக் சத்தமுடன் பளீச் மின்னல்வெட்டும் பிரகாசித்தது.
ம்ம்ம், ப்ச் அடச்சே இந்த க்ரூப் போட்டோவையும் நான் மிஸ் பண்ணிவிட்டேன்.
மறுநாள் காலை அனைவருக்கும் பத்துக்கும் மேற்பட்ட ஜீப்புகள் தயாராக இருந்தது.
ஜீப்புக்கு பத்து பேர்வீதம் ஒழுங்கு செய்யப்பட்டிருக்க அனைவரது கைகளிலும் பயணத்துக்கு இளைப்பாற சிறு உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன.
பேருந்து இல்லையா? என கேட்டபோது வழியெங்கும் கடும் நிலச்சரிவு அதனால்தான் இந்த திடீர் ஏற்பாடு எனக் கூற அப்போது யாரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
வரும் பதிவில், பயணத்தின் உச்சமான கோமுக்கை எட்டும் வேளையில் தங்கள் குழு எதிர்கொண்ட சுவாரஸ்ய அனுபவங்களை விவரிக்கிறார்! அந்த ஜீப் பயணத்தைத் தடுத்த நிலச்சரிவின்போது நிகழ்ந்தவற்றை அறிந்துகொள்ளக் காத்திருங்கள்!
குறிப்பு: ஈஷாவுடன் இமாலயம் செல்ல வாருங்கள். வரும் செப் 15 அன்று துவங்கவுள்ள இந்த இமாலயப் பயணத்தில் நீங்களும் பங்குகொள்ள முன்பதிவுகள் அவசியம்.
தொடர்புக்கு: 94 88 111 333, 94 88 111 555
வலைதளம்: www.sacredwalks.org