இயற்கை விவசாயத்தில் இடுபொருள் தயாரிப்பு - சில நுட்பங்களும் விவசாயிகளின் பகிர்வுகளும்
இயற்கை விவசாயம் செய்வதற்கு ஆர்வம் இருந்தும் சிலர் தயங்குவதைப் பார்க்கிறோம்; இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது இயற்கை இடுபொருள் தயாரிப்பு மற்றும் அதை பயன்படுத்துவதில் உள்ள சந்தேகங்களும் அறியாமைகளும்தான்! இதனை நிவர்த்தி செய்யும் விதமாக ஈஷா விவசாய இயக்கம் மேற்கொண்டு வரும் பணிகள் பற்றி சில வரிகள்!
பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 28
இயற்கை விவசாயம் செய்வதற்கு ஆர்வம் இருந்தும் சிலர் தயங்குவதைப் பார்க்கிறோம்; இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது இயற்கை இடுபொருள் தயாரிப்பு மற்றும் அதை பயன்படுத்துவதில் உள்ள சந்தேகங்களும் அறியாமைகளும்தான்! இதனை நிவர்த்தி செய்யும் விதமாக ஈஷா விவசாய இயக்கம் மேற்கொண்டு வரும் பணிகள் பற்றி சில வரிகள்!
வழி இருக்க வருந்துவதேன்?
கடந்த ஆண்டு இந்தியாவில் யூரியாவின் மொத்த பயன்பாடு 32 மில்லியன் டன், இதில் 8 மில்லியன் டன் யூரியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும், உள்நாட்டு யூரியா உற்பத்தி 24 மில்லியன் டன். இது யூரியாவின் அளவு மட்டுமே, மற்ற உரங்களையும் சேர்த்தால் இந்த அளவு மூன்று மடங்கு வரை அதிகரிக்கும். விவசாயிகள் தொடர்ந்து இத்தகைய இரசாயன இடுபொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலம், இடுபொருட்களுக்கான செலவு அதிகரித்து பொருளாதார நிலையில் தேக்கமடைந்து, கடன்பட்டு பெரும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.
இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ளும் திறனும் இரசாயன விவசாயத்தில் இல்லாததால், பருவ கால மாற்றங்களும் விவசாயிகளை துன்பத்தில் ஆழ்த்துகிறது. வறட்சி காலங்களில் பயிருக்குத் தேவையான குறைந்த அளவு நீர்கூட கிடைப்பதில்லை. ஆனால் இரசாயன விவசாயத்தில் அதிக நீர் பாய்ச்சினால் மட்டுமே பயிர்கள் வளர்கிறது, எனவே விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். மேலும் இரசாயன உரங்களினாலும் பூச்சிக்கொல்லிகளினாலும் மண்ணுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்குத் தீர்வு என்ன?
ஒரு விவசாயி எந்த தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து விவசாயம் செய்தால் அவர் நன்மையடைவாரோ அத்தகைய நுட்பத்தை பயன்படுத்துவது அவர் கையில் மட்டுமே உள்ளது. இதை யாரும் தட்டிப்பறிக்க முடியாது. இயற்கை விவசாயம் என்ற நல்வழி இருக்க விவசாயிகள் வருந்துவதேன்?
“அட நம்ம ஐயன் வள்ளுவரு அப்பவே சொல்லிப்போட்டு போயிட்டாரில்லீங்கோ... ‘கனியிருப்ப காய் கவர்ந்தற்று’னு! நம்ம இயற்கை வழி விவசாயம் இருக்கும்போது, இரசாயன இடுபொருள பயன்படுத்துனதுனால இன்னைக்கு நம்ம நிலத்தோட நிலமை ரொம்ப மோசமா போச்சுதுங்கண்ணா! அதைய மாத்துறதுக்காக நாம அல்லாரும் இயற்கை பக்கம் திரும்பியே ஆகணுமுங்க”
பெரியோர்கள் காட்டிய நல்ல வழி
மண்ணும் மனிதனும் இரசாயன விவசாயத்தினால் நஞ்சை உண்டு மடிந்துகொண்டிருக்கும் நிலையில், நம்பிக்கை ஒளியாக ஸ்ரீ பாத தபோல்கர், ஸ்ரீ பாஸ்கர் சாவே, முனைவர் நம்மாழ்வார் மற்றும் பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் போன்ற பெரியோர்கள் "வழி இருக்க வருந்துவதேன்" என நல்ல வழிகாட்டியாக இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் அதன் நுட்பத்தையும் எடுத்துரைத்திருக்கிறார்கள்.
இத்தகைய சூழலில் டிசம்பர் 2015ல், ஈஷா விவசாய இயக்கம் ஒருங்கிணைத்த திரு. பாலேக்கர் ஐயா அவர்களின் 8 நாள் இயற்கை விவசாயப் பயிற்சியில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயன் அடைந்தனர். பங்கேற்றவர்களில் பெரும்பாலோர் இயற்கை விவசாயத்திற்கு படிப்படியாக மாறிவருகின்றனர். தொடர்ந்து கலந்தாய்வுக் கூட்டங்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் பண்ணை பார்வையிடல் என பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகளை இயற்கை விவசாயம் செய்யத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது.
தன்னார்வத் தொண்டர்கள் மூலம் இயற்கை விவசாயப் பயிற்சி
பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்ய வேண்டிய நிலையிலும், மண்ணை இரசாயன நஞ்சுகளில் இருந்து காக்க வேண்டிய நிலையிலும் தற்போது இருக்கிறோம். இந்தப் பிரச்சினைகளுக்கு இயற்கை விவசாயத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்பது நன்றாகத் தெரிந்தாலும், விவசாயிகளுக்கு அதன் வழிமுறைகளைக் கொண்டு சேர்க்கும் வேகம் தற்போது இல்லை!
இதற்கு ஒவ்வொரு முன்னோடி இயற்கை விவசாயிகளும் தன்னார்வமாக இயற்கை விவசாயத்தை மற்ற விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்துவதே சிறந்த தீர்வாக உள்ளது! அந்த நோக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் இயற்கை விவசாயத் தன்னார்வத் தொண்டர்களை உருவாக்கும் பணியில் ஈஷா விவசாய இயக்கம் ஈடுபட்டுள்ளது. இவர்கள் இடுபொருள் தயாரிப்புப் பயிற்சி, களப்பயிற்சி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி போன்றவற்றுடன் தொழில் நுட்ப ஆலோசனைகளையும் பெற்று அவரவர் பகுதியில் ஒரு சிறந்த பயிற்றுனராக செயல்படுவர்.
இடுபொருள் தயாரிப்பு பயிற்றுனர் பயிற்சி
இடுபொருட்கள் என்பது இயற்கை விவசாயத்திற்கு முதுகெலும்பாக இருக்கிறது. ஒரு இரசாயன விவசாயி இயற்கை விவசாயத்தில் முதல்படி எடுத்து வைக்க இப்பயிற்சி நுழைவாயிலாக அமைகிறது. முதற்கட்டமாக தமிழகத்தின் ஐந்து மண்டலங்களிலும் இடுபொருள் தயாரிப்புப் பயிற்றுனர் பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளது. கீழ்கண்ட பண்ணைகளில் நடந்த இந்த இடுபொருள் தயாரிப்பு களப்பயிற்சியில் 175 தன்னார்வத் தொண்டர்கள் பங்குபெற்றனர்.
கிழக்கு மண்டலம் - ஈஷா நர்சரி - சூரியம் பட்டி, தஞ்சாவூர்
தெற்கு மண்டலம் - ஈஷா நர்சரி - துவரிமான், மதுரை
வடக்கு மண்டலம் - திரு. வாசுதேவன், பாரதி இயற்கை பண்ணை, வழூர், வந்தவாசி
மத்திய மண்டலம் - திருமதி. கலைவாணி, ஷாம்பவி இயற்கை பண்ணை, கள்ளிப்பட்டி, கோபி
மேற்கு மண்டலம் - திருமதி. ஜெகதீஸ்வரி, GJ இயற்கை பண்ணை, சோமனூர், கோவை
12 வகையான இடுபொருட்கள்
பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், கனஜீவாமிர்தம், பத்து இலை கஷாயம், அக்னி அஸ்திரம், நீம் அஸ்திரம், புளித்தமோர் கரைசல், மூங்கில் E.M (திறன் மிகு நுண்ணுயிரி), பழ E.M, மீன் அமிலம், வேப்பங்கொட்டைக் கரைசல், மூலிகைப் பூச்சி விரட்டி, திராட்சை ரசம், தேமோர் கரைசல் போன்ற 12 வகையான இடுபொருட்கள் செய்வதற்கு நேரடி செய்முறைப் பயிற்சியும் களப்பயிற்சியும் பெற்றனர்.
Subscribe
இந்த இடுபொருட்களில் அடி உரம், மேலுரம், வளர்ச்சியூக்கி, செயலூக்கி, பூச்சி விரட்டி போன்றவை அடங்கும். பயிற்சிக்கான இடுபொருள் மாதிரிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு தயாரிக்கப்பட்டு பயிற்சியின்போது பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஈஷா விவசாய இயக்கத் தன்னார்வத் தொண்டர் திரு. T.முத்துக்குமார் அவர்கள் இடுபொருள் தயாரிப்பு முறைகளை விரிவாக விளக்கியதுடன், விவசாயிகளுக்கு எழுந்த சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தார்.
இந்த இடுபொருட்களை பண்ணையில் கிடைக்கும் பொருட்களை வைத்து விவசாயிகளே தயாரித்துக் கொள்ள முடியும், அதனால் இடுபொருள் செலவு இல்லாமல் நிகர வருமானம் நிச்சயம் அதிகரிக்கும். இதனால் விவசாயி சுயசார்போடு வாழ்வதற்கு வழிவகுக்கும்.
“அட கெரகத்துக்கு இந்த இரசாயன இடுபொருளையெல்லாம் கேப்பார் பேச்ச கேட்டு நெலத்துல போட்டு நெலத்த மலடாக்கி போட்டோமுங்க. கையில வெண்ணெய வச்சிக்கிட்டு நெய்யிக்கு அலைஞ்ச கதைய கேட்ருப்பீங்கோ. அதைய தானுங்க இத்தன வருசமா செஞ்சுபோட்டோம். நம்ம நெலத்துல இருக்குற பொருட்கள வச்சு இயற்கை இடுபொருள் தயாரிக்க முடியுறப்போ நாம எதுக்குங்ணா வெல குடுத்து இடுபொருள் வெளியில இருந்து வாங்கோணும்?!”
பகிர்வுகள்
நிகழ்ச்சியில் முன்னோடி இயற்கை விவசாயிகள், இயற்கை விவசாயம் செய்து வருபவர்கள், புதிதாக இயற்கை விவசாயத்திற்கு வந்தவர்கள், தற்போது இரசாயன விவசாயம் செய்து வருபவர்கள் என பலதரப்பட்ட விவசாயிகளும் பங்கு பெற்றனர்.
அவர்கள் இத்தகைய பயிற்சியின் அவசியத்தைப் பற்றி பல கோணங்களில் கவனித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
முன்னோடி இயற்கை விவசாயிகளின் பகிர்வு
"ஏக்கருக்கு 30 வண்டி தொழுஉரம் அடிச்சாதான் இயற்கை விவசாயம் செய்ய முடியும் என்று பலரும் தப்பா நினைக்கிறாங்க, ஆனா ஜீவாமிர்தம் பயன்படுத்தும்போது ஒரே ஒரு நாட்டு மாட்ட வச்சு 30 ஏக்கர் விவசாயம் செய்யலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை."
"ஒரு உள்ளூர் நாட்டுமாட்டை 20,000 ரூபாய்க்குக் கூட வாங்க முடியும். வருஷம் முழுக்க அது கொடுக்கும் கோமியத்தையும், சாணத்தையும் சரியாகப் பயன்படுத்தினால்; ஒரு வருடத்திற்கு தோராயமாக ரூ.3,00,000 வரை செலவழித்து வாங்கும் இரசாயன உரத்துக்கு சமமான பலனை அந்த நாட்டுமாடு நமக்குத் தந்துவிடும். இவ்விதம் இயற்கை இடுபொருட்கள் குறைந்த செலவில் அதிக வருவாய் தரக்கூடியது என்ற தகவலை ஒவ்வொரு விவசாயிக்கும் நாம் சொல்ல வேண்டும்."
"இயற்கை விவசாயத்தில் மூடாக்கு மிக முக்கியமானது, மூடாக்கு இடுவதைப் பொறுத்தே ஜீவாமிர்தம் போன்ற இடுபொருட்கள் நல்ல பலனைத் தரும். மேலும் நன்மை செய்யும் பூச்சிகளை வரவழைக்கவும், தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் ஊடுபயிராக மக்காச்சோளம், சாமந்தி போன்ற தாவரங்களையும் இடையிடையே வளர்க்க வேண்டும், அப்போதுதான் பூச்சி விரட்டிகள் நல்ல பலனைத் தரும் என்பதை புதிய இயற்கை விவசாயிகள் கவனத்தில் வைக்க வேண்டும்."
இயற்கை விவசாயிகளின் பகிர்வு
"நான் ஆர்வமா இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கி அதை சரியா செய்ய தெரியாம 2-3 வருஷத்திலேயே விட்டுட்டேன், 2 வருஷம் இரசாயன விவசாயமும் செய்தேன். படிப்படியா பலரிடமிருந்து இயற்கை விவசாயத்தின் நுட்பங்களைத் தெரிந்து கொண்ட பின்னர்தான் இயற்கை விவசாயத்தை மீண்டும் செய்யத் தொடங்கினேன். இப்பொழுது இயற்கை விவசாயத்தை சிறப்பாக செய்கிறேன்.
இப்படிப்பட்ட அனுபவம் ஏற்படும்போது கால விரயம் ஏற்படுகிறது. அதனால் புதிதாக இயற்கை விவசாயத்திற்கு வருபவர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்ல இப்படிப்பட்ட களப்பயிற்சி வகுப்புகள் அவசியமானது மட்டுமல்ல அத்தியாவசியத் தேவையாகவும் இருக்கிறது."
"இயற்கை விவசாயத்தை கடந்த 12 வருஷமா செய்து வந்தாலும் ஒரு சில இடுபொருட்களை புதுசா இந்தப் பயிற்சியில கத்துகிட்டேன். முக்கியமா மூங்கில் இ.எம் தயாரிப்பு பற்றி கத்துக்கிட்டேன். இனி இ.எம் வாங்குகிற செலவும் குறைஞ்சுடும்."
"பக்கத்தில் உள்ள விவசாயிகளுக்கு நான் இயற்கை விவசாயத்தை சொல்லிக் கொடுக்க முயற்சி செய்தேன். ஆனா யாரும் கேட்கல, இப்படி ஒரு முறைப்படி செய்முறை விளக்கத்தோட சொல்லிக் கொடுத்தா நிச்சயமா கேட்பாங்க."
“அட என்ற அப்பாரு அடிக்கடி ஒரு சொலவட சொல்லுவாப்டிங்கோ! அதாவது,. கிணத்துக்கு பயந்து நெருப்புல பாஞ்சானாம் ஒருத்தன்...! அதுமாறி நிறையபேரு இயற்கை விவசாய நுட்பம் தெரியாம இன்னும் இரசாயன விவசாயத்துல இருக்குறாங்கோ. ஈஷா விவசாய இயக்கம் இந்த நிலமைய மாத்துறதுக்காக நெறைய வேல செய்யிறாங்க. இதுல இன்னும் நெறைய பேர் இணையோணுமுங்க!”
புதிதாக இயற்கை விவசாயத்திற்கு வந்தவர்களின் பகிர்வு
"இடுபொருள் தயாரிக்கும்போது எனக்கு பல சந்தேகம் வரும், அந்த சந்தேகம் எல்லாம் இந்தப் பயிற்சிக்கு வந்த பிறகு தீர்ந்து விட்டது, இனி இடுபொருட்களை தயக்கம் இன்றி செய்வேன்."
"இதுவரை இடுபொருட்களை எந்த அளவு பயன்படுத்தனும் என்று சரியாகத் தெரியவில்லை, ஒருமுறை மீன் அமிலத்தை அதிகமாக தெளித்துவிட்டதால் பயிர் சிவப்பு நிறத்திற்கு மாறிவிட்டது, இப்பயிற்சியில் எந்தெந்த இடுபொருளை எந்தெந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்."
"எந்தெந்த இடுபொருள் எதற்கு பயன்படுகிறது என்று தெரியாமல் இருந்தது அதைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டேன்."
தற்போது இரசாயன விவசாயம் செய்து வருபவர்களின் பகிர்வு
"இயற்கை விவசாயப் பயிற்சிக்கு முதல்முதலாக வந்திருக்கேன், ஆனால் நிறைய தெரிந்து கொண்டுள்ளேன்."
"பாலேக்கர் ஐயா வகுப்பில் கலந்து கொண்ட பிறகும்; இடுபொருள் தயாரிப்பில் ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது; அதனால் இயற்கை விவசாயம் செய்யவில்லை; தற்போது இந்தக் களப்பயிற்சி எனக்கு புதிய ஊக்கத்தை தந்துள்ளது, இயற்கை விவசாயத்தை விரைவில் செய்யத் தொடங்கிவிடுவேன்."
"ஜீரோ பட்ஜெட் என்பதன் அர்த்தம் முன்பு புரியவில்லை, இந்தப் பயிற்சியின் மூலம் இடுபொருட்களுக்காக எந்த செலவும் செய்ய வேண்டாம் என்பதைத் தெரிந்து கொண்டேன். இது உண்மையாகவே ஜீரோ பட்ஜெட்டாகவே இருக்கிறது."
எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பயிற்சிகள் பற்றி....
ஈஷா விவசாய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் பகிர்ந்து கொண்டவை...
இந்த இடுபொருள் தயாரிப்பு ஒரு அறிமுகப் பயிற்சிதான். இதைத் தொடர்ந்து; நெல், தென்னை, கரும்பு, வாழை, காய்கறிகள் போன்ற பயிர்களுக்கு தனித்தனியாக பயிர் வாரியான பயிற்சி, பூச்சி மேலாண்மைப் பயிற்சி, கால்நடை மேலாண்மைப் பயிற்சி, நீர் மேலாண்மைப் பயிற்சி, விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற பயிற்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில் ஒரு விவசாயி இரசாயன விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறுவதற்கான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி முறையான பயிற்சிகளை வழங்கி அவர்களை கைபிடித்து அழைத்துச் செல்லும் பணியில் ஈஷா விவசாய இயக்கம் ஈடுபட்டுள்ளது.
பசுமைக்கரங்கள் திட்டத்தின் ஆலோசகர் திரு. எத்திராஜுலு அவர்கள் பகிர்ந்து கொண்டவை...
நம்மாழ்வார் ஐயா அவர்கள் சொன்னபடி, நிலத்தில் விதை விழுந்தாலே அது தானாக முளைத்து விட வேண்டும். அந்த நிலைக்கு நிலத்தைக் கொண்டுவர இந்த இடுபொருள்கள் ஆரம்பத்தில் தேவையாய் இருக்கிறது. சில வருடங்களில் மண் நன்றாக பதப்பட்டவுடன் இந்த இடுபொருட்களின் தேவை குறைந்து விடும். இடுபொருட்களின் தேவை இல்லாமலேயே விவசாயம் செய்வதற்கான பக்குவத்தை நிலம் அடைந்து விடும்.
5 மண்டலங்களில் நடைபெற்ற பயிற்சியில் மொத்தம் 175 பேர் கலந்து கொண்டுள்ளனர், இதில் அனைவருமே குறைந்த பட்சம் மாதம் ஒரு நாள் இப்பயிற்சியை அருகில் உள்ள விவசாயிகளுக்கு கற்றுத் தருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவ்விதம் 175 இயற்கை விவசாயிகள் மாதம் தோறும் பத்து விவசாயிகளுக்கு பயிற்சியளித்தால் ஒரு மாதத்தில் 1750 விவசாயிகள் இந்த இடுபொருள் தயாரிப்புப் பயிற்சியை பெறுவார்கள். ஒரு வருடத்திற்கு 21,000 விவசாயிகள் இப்பயிற்சியைப் பெறுவார்கள்.
“என்ற ஊர்ல பெரிய வூட்டு ஆத்தா சொன்னத இப்போ ரோசன பண்ணி பாக்குறேனுங்க... நல்லது செஞ்சு நடுவழியே போனா, பொல்லாப்பு போகிற வழியில விலகிடும்னு சொல்லுவாங்கோ. அதுமாறி நமக்கு தெரிஞ்ச விஷயத்த நல்ல மனசோட அடுத்தவங்களுக்கும் சொல்லிக்குற மனசு இருந்தா போதுமுங்க! வெற்றி தானா தேடி வருமுங்க!”
மேற்கு மண்டலத்தில் நடந்த களப்பயிற்சியில் பசுமைக்கரங்கள் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. மகேஷ் அவர்களும், எழுத்தாளர் திரு. தூரன் நம்பி அவர்களும் பங்கேற்றனர்.
தூய்மையான இடுபொருள் தயாரிப்பைக் குறித்து திரு. மகேஷ் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்...
இயற்கை விவாசாயத்தில் இடுபொருள் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு அதன் தயாரிப்பு முறையும் முக்கியம். அதனால் இடுபொருள் தயாரிப்பின்போது சிறிய விஷயங்களையும் கவனித்து சரியாகச் செய்யவேண்டும், அப்பொழுதுதான் நாம் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும்.
உதாரணமாக ஜீவாமிர்தம் தயாரிக்கும்போது கரைசலை வெய்யிலிலோ அல்லது பாதி வெய்யில் பாதி நிழல் படும் இடத்திலோ வைத்துவிடுவார்கள். அதில் சரியான அளவுகளில் எல்லா பொருட்களையும் கலந்திருந்தாலும் வெய்யில் படுவதினால் கரைசலில் நுண்ணுயிர்கள் பெருகாமல் ஜீவாமிர்தம் கெட்டுவிடும்.
கரைசல்களை பயிர்களுக்கு தெளிக்கும்போது எந்த நேரத்தில், எந்த அளவுகளில் கலந்து தெளிக்க வேண்டும் என்பதை சரியாகச் செய்ய வேண்டும். செய்வதை திருந்தச் செய்தால் இயற்கை விவசாயம் இனிமையானதாக அமையும். இத்தகைய பயிற்சிகள் பெறுவதன் மூலம் இப்படிப்பட்ட சிறு சிறு தவறுகளை திருத்திக் கொள்ள முடியும்.
விவசாயிகள் செலவைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்து திரு. தூரன் நம்பி அவர்கள் தெரிவித்த கருத்துகள்...
தற்போதைய விவசாயிகளின் முக்கியப் பிரச்சினை, அவர்கள் இரசாயன விவசாயத்தில் சிக்கிக் கொண்டிருப்பதே, இரசாயன உரங்களின் சந்தை விவசாயிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. விவசாயிகள் அவர்கள் வீட்டிலேயே கிடைக்கும் மாட்டுச் சாணத்தையும், கோமியத்தையும் பயன்படுத்தி விவசாயம் செய்யும்போது அவர்கள் இந்த இரசாயன வியாபார சங்கிலியில் இருந்து விடுபட முடியும்.
தேவையான இடுபொருட்கள் அனைத்தையும் அவர்களது தோட்டத்தில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி தாயாரித்துக் கொள்ளும்போது இரசாயன உரங்களுக்காக செலவழிக்கும் பெருந்தொகை மிச்சமாகி நிகர லாபம் அதிகரிக்கும், அதனால் ஒரு விவசாயி சுய சார்போடும், பெருமிதமாகவும், கெளரவமாகவும் வாழ முடியும்.
இடுபொருட்கள் பற்றி பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய முன்னோடி விவசாயிகளுக்கு ஈஷா விவசாயக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இந்த இடுபொருள் தயாரிப்பு களப்பயிற்சி இயற்கை விவசாயத் தன்னார்வத் தொண்டர்களால் தொடர்ந்து பல இடங்களில் நடைபெற இருப்பதால் பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள விவசாயிகள் கீழ்கண்ட எண்ணைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஈஷா விவசாய இயக்கம்: 83000 93777