மலைவாழ் மக்களுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி
“கொல்லி மலை எனக்கு இளைய செல்லி மலை அம்மே” குற்றாலக் குறவஞ்சியின் இத்தகைய சொல்நயம் மிக்க பாடல்கள் மலையின் அழகினையும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையையும் எடுத்துக்கூறும்! அத்தகைய மலைகளின் தன்மை இரசாயன இடுபொருட்களால் கெடுவதை எப்படி அனுமதிக்க முடியும்? அதற்காக ஈஷா மேற்கொண்டுள்ள ஒரு முதல் முயற்சியைப் பற்றி இங்கே படித்தறியலாம்!
பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 18
“கொல்லி மலை எனக்கு இளைய செல்லி மலை அம்மே” குற்றாலக் குறவஞ்சியின் இத்தகைய சொல்நயம் மிக்க பாடல்கள் மலையின் அழகினையும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையையும் எடுத்துக்கூறும்! அத்தகைய மலைகளின் தன்மை இரசாயன இடுபொருட்களால் கெடுவதை எப்படி அனுமதிக்க முடியும்? அதற்காக ஈஷா மேற்கொண்டுள்ள ஒரு முதல் முயற்சியைப் பற்றி இங்கே படித்தறியலாம்!
ஈஷா விவசாய இயக்கம் மற்றும் CTRD அறக்கட்டளை இணைந்து நடத்திய மலைவாழ் மக்களுக்கான இடுபொருள் தயாரிப்புப் பயிற்சி நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமண்ணா கிராமத்திலும் கூடலூர் அருகே உள்ள நந்தட்டி கிராமத்திலும் நடத்தப்பட்டது.
கடந்த மே 24 மற்றும் 25 தேதிகளில் இப்பயிற்சி நடைபெற்றது. CTRD அறக்கட்டளை (Centre for Tribals and Rural Development Trust) என்பது நீலகிரி மலைவாழ் மக்களுடன் இணைந்து பணியாற்றும் ஒரு தொண்டு நிறுவனமாகும். CTRD அறக்கட்டளை மலைவாழ் மக்களுக்கு வீடுகள் கட்டித்தருதல், சாண எரிவாயு கலன் அமைத்தல், கல்வி மற்றும் மருத்துவ சேவையிலும் ஈடுபட்டுவருகிறது.
இயற்கை முறையில் வேளாண் சாகுபடி தொழில் நுட்பத்தை மலைவாழ் மக்களுக்கு கற்பிக்கும் நோக்கத்தில் ஈஷா விவசாய இயக்கத்துடன் CTRD இணைந்துள்ளது. முதல் படியாக மலைவாழ் மக்களுக்கு 'இயற்கை விவசாயத்தின் நுழைவாயில்' என்ற இடுபொருள் தயாரிப்பு பயிற்சி நடத்தப்பட்டது.
மலைவாழ் பழங்குடி மக்களான குறும்பர், காட்டு நாயக்கர் மற்றும் பனியர் போன்றவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்று பலன் அடைந்தனர். முதல் நாள் நிகழ்ச்சி ஏலமண்ணாவில் உள்ள CTRD தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பழங்குடி மக்கள் 45 பேர் கலந்து கொண்டனர், அடுத்த நாள் வகுப்பு நந்தட்டியில் நடைபெற்றது. இதில் 32 பழங்குடி மக்கள் கலந்து கொண்டனர். அப்பகுதி பழங்குடி மக்கள் மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் கலந்த மொழிகளை பேசுகின்றனர். மலையாளம் பெரும்பாலோர் பேசும் மொழியாக உள்ளது.
ஈஷா விவசாயக் குழுவினரை பழங்குடி மக்களுக்கு அறிமுகப்படுத்தி CTRD இயக்குனர் திரு. ரங்கராஜன் தற்போதைய சூழ்நிலையில் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார்.
Subscribe
"CTRD யுடன் 1500 விவசாயிகள் தொடர்பில் இருக்கிறார்கள், இதில் 90 சதவீதம் பேர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள், 10 சதவீதம் பேர் பெண்கள் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் சராசரியாக 20 சென்ட் முதல் 1 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளனர். தற்போது ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் இரசாயன விவசாயமே செய்கிறார்கள். இவர்கள் அனைவரையும் படிப்படியாக இயற்கை விவசாயத்திற்கு மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
ஏனுங்க இந்த மலைவாழ் மக்கள் தானுங்க இயற்கையோட இயற்கையா இன்னும் வாழ்ந்துட்டு இருக்காங்கோ! ஆனா… கெரகத்துக்கு இந்த பாழாப்போன இரசாயன இடுபொருளெல்லாம் அங்கேயும் மண்ண பாழாக்கிப்போட்டுதுங்க! ஆனாலும் மலைய உடைக்க சின்ன உளி போதுமில்லீங்கோ, அதுமாறி நம்ம ஈஷா விவசாய இயக்கம் இந்த மலைவாழ் மக்கள் கிட்ட இருக்குற மனநிலைய மாத்தி மீண்டும் இயற்கை விவசாயத்துக்கு சீக்கிரமா திருப்புவாங்க பாருங்கோ!
மேலும் திரு. ரங்கராஜன் கூறியபோது…
“இயற்கை முறையில் தேயிலையை உற்பத்தி செய்யும்போது இவர்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உருவாகும். தற்போது ஒரு கிலோ தேயிலைக்கு சராசரியாக 10 ரூபாய் வரை கிடைக்கிறது. இயற்கை முறையில் தேயிலையை விளைவித்தால் கிலோவிற்கு ரூ.30 வரை கிடைக்கும், இயற்கை விவசாயம் செய்யும்போது மண் வளப்படுவதோடு வருவாயையும் அளிக்கும்.
பல ஆண்டுகளுக்கு முன் பந்தலூர் பள்ளத்தாக்கு பகுதியில் மண்ணுளி என்ற சிவப்பு ரக பாரம்பரிய அரிசி பயிரிட்டு வந்தனர். படிப்படியாக அரிசி பயிரிடப்படுவது குறைந்து தற்போது தேயிலை மட்டுமே பயிரிடும் நிலை ஏற்பட்டுவிட்டது. காய்கறிகளையும் பயிர் செய்வதில்லை! இதனால் மலைவாழ் மக்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறையுடன் உள்ளனர். தற்போது காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிப்பதுடன் இயற்கை வழி விவசாயத்தையும் கற்றுக்கொடுக்கத் தேவையுள்ளதால் நாம் ஈஷா விவசாய இயக்கத்துடன் இணைந்துள்ளோம். நாம் அனைவரும் இயற்கை விவசாயம் செய்து நோயற்ற வாழ்வைப் பெறுவோம்." என்று தனது விருப்பத்தை தெரிவித்துக் கொண்டார்.
அட சாமி… கெரகத்துக்கு இந்த தேயிலை நல்ல வருமானம் குடுக்குதுங்கற காரணத்துனால நம்ம இயற்கை உணவ மறந்துபோட்டோம் பாத்தீங்ளா? அட பச்சை தங்கம்னு தேயிலய சொல்றாங்கோ… ஆனா தங்கத்த வச்சு அலங்காரம்தானுங்க பண்ண முடியும்; ஆரோக்கியம் எப்படிங்கோ வரும்?
இயற்கை விவசாயத்தைக் குறித்து விழிப்புணர்வு உரை வழங்கிய சுவாமி ஸ்ரீமுகா மலையாளத்திலும், தமிழிலும் இரு மொழியில் பேசி இயற்கை விவசாயத்தின் சிறப்புகளை விளக்கினார்.
"நீங்கள் தினமும் காலையில் குடிப்பது தேனீர்தான், நீங்கள் தேயிலை பயிருக்கு உரமாகப் பயன்படுத்தும் யூரியா, பொட்டாஷ் மற்றும் பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்த தெளிக்கும் பூச்சிக் கொல்லிகளும் அந்த தேனீரில் தான் இருக்கிறது, அந்த விஷமான தேனீரைத்தான் நீங்கள் எல்லோரும் தினமும் குடிக்கிறீர்கள், இதே தேயிலையைத்தான் விற்பனையும் செய்கிறீர்கள். அந்த தேயிலையால் தயாரித்த தேநீரைத்தான் உலகில் பலகோடி மக்கள் தினமும் குடிக்கின்றனர்.
நம் முன்னோர்கள் பாரம்பரியமாக இயற்கை விவசாயம் மட்டுமே செய்து வந்தனர். மாடு இருந்தது, மாட்டில் இருந்து சாணம் கிடைத்தது, சாணத்தின் மூலம் விவசாயம் நல்லபடி நடந்தது. மாடும் இயற்கை விவசாயமும் நம் முன்னோர்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்தது. கடந்த 50 - 60 ஆண்டுகாலமாகத்தான் நாம் இரசாயன விவசாயத்திற்கு மாறினோம். மீண்டும் நாம் அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாறவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.
ஈஷா விவசாய இயக்கம் இயற்கை விவசாயத்தை எளிமைப்படுத்திக் கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல் படிதான் 'இயற்கை விவசாயத்தின் நுழைவாயில்' என்ற இந்த இடுபொருள் தயாரிப்பு பயிற்சி. இந்த பயிற்சியில் உங்களுக்கு இயற்கை விவசாயத்தில் அடிப்படையாக இருக்கும் இடுபொருள்களை நேரடியாக செய்து காண்பிப்போம். இந்த இடுபொருள்களை நீங்களே எளிதாக செய்து கொள்ள முடியும். இந்த இடுபொருள்களை பயன்படுத்துவதன் மூலம் இரசாயனம் (உரங்கள்) வாங்கும் செலவு கிடையாது. விஷமில்லாத உணவையும் உண்டு குழந்தைகளை பல்வேறு நோய்களில் இருந்தும் காக்க முடியும்."
நம்ம சாமி ரொம்ப கரெக்ட்டா சொல்லிப்போட்டாருங்க! சீனாவுல புத்த மத சாமிங்கோ ஒரு டீ குடிக்குறதயே விழிப்புணர்வா தியானம் மாதிரி பண்ணுவாங்கன்னு என்ற ஊர்ல ‘சீனா சின்ராசு’ அண்ணன் அடிக்கடி சொல்லுவாப்டிங்கோ! நாமளும் இப்ப விழிப்புணர்வ கொண்டு வர்ற நேரம் வந்துருச்சுங்கோ! ஆனா அது டீ குடிக்குறது பத்தி இல்லீங்கோ… அது இயற்கை விவசாயத்த விதைக்குறது பத்திங்கோ!
நிகழ்ச்சியில் அறிமுக உரையைத் தொடர்ந்து இடுபொருள் தயாரிப்பு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இடுபொருள் தயாரிப்பு செயல்முறை பயிற்சிக்கான முன்னேற்பாடுகளை CTRD ஒருங்கிணைப்பாளர் திரு. வாசுதேவன் செய்திருந்தார்.
ஈஷா விவசாய இயக்கத் தன்னார்வத்தொண்டர் திரு T. முத்துக்குமார் இடுபொருள் தயாரிப்புமுறை குறித்த அறிமுக உரையை அளித்தபின், நேரடியாக செய்து காண்பித்ததோடு மலைவாழ் மக்களையும் பங்கேற்கச் செய்தார். CTRD ஊழியர்களும் பயிற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், மூலிகைப் பூச்சி விரட்டி, மீன் அமிலம் மற்றும் மூங்கில் இ.எம் போன்றவை தயாரிக்கும் முறை, பாதுகாக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை போன்றவற்றை விளக்கி பயிர் வளர்ச்சிக்கு இந்த இடுபொருள்கள் எவ்விதம் உதவுகிறது என்பதையும் தெரிவித்தார்.
மலைப்பகுதியில் கிடைத்த இலை தழைகளை வைத்தே பூச்சி விரட்டி தயார் செய்யப்பட்டது. பச்சைப் பாத்திரம் (காட்டு மரிக்கொழுந்து), ஆடாதொடை, ஏசீர் இலை, காட்டு பிரகம், ஆமணக்கு போன்ற இலைகள் பயன்படுத்தப்பட்டது. பெரும்பாலான மலைவாழ் மக்கள் ஆர்வமாகக் கற்றதோடு இயற்கை விவசாயம் செய்யவும் ஆர்வம் தெரிவித்தனர்.
மேலும் மலைப்பகுதியில் ஒரு சில இடங்களில் புங்கன் மரங்களை பார்க்க முடிந்தது. வேப்ப மரங்களே கண்களுக்குத் தென்படவில்லை. புங்க இலைகளும், புங்க எண்ணையும் சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படுவதால் அந்த மரங்களை வேலியோரங்களில் வைக்கவும் ஆலோசனை தெரிவித்தோம்.
என்ற ஊர்ல பெரிய வூட்டு ஆத்தா அடிக்கடி சொல்லுவாப்டிங்கோ… கறையான் புத்து பாம்புக்கு உதவும், பெரியோர் வாக்கு என்னைக்கும் உதவும்னு! அதுமாறி இயற்கை இலை தலைகளையே நமக்கு பூச்சி விரட்டியா பயன்படுத்துற நுட்பத்த ஈஷா விவசாய இயக்கம் பக்குவமா சொல்லித்தர்றாங்க பாருங்ணா! இந்த கள்ளிப்பட்டி கலைவாணியோட தோட்டத்துலயும் இப்ப இயற்கை பூச்சி விரட்டிதானுங்க பயன்படுத்துறேன். அட பூச்சிய பத்தி இன்னும் தெரிஞ்சிக்க “பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள் – அறிவோம் வாருங்கள்!” அப்படின்னு நம்ம பூச்சி செல்வம் அண்ணா சொல்ற செய்திய தொடர்ந்து ஈஷா வலைத்தளத்துல படிக்கலாமுங்க!
நிகழ்ச்சியில் இறுதியாக பேசிய CTRD இயக்குனர் திரு. ரங்கராஜன் இந்த பயிற்சி இயற்கை விவசாயத்தின் தொடக்கமாகும், பயிற்சியை முடித்த விவசாயிகளை எங்கள் ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை ஈஷா உதவியுடன் வழங்குவார்கள், படிப்படியாக இயற்கை விவசாயத்தை மலைப்பகுதியில் பரவச்செய்வதே CTRD நோக்கமாகும், இதற்காக பங்களித்த ஈஷா விவசாய இயக்கத்திற்கு நன்றியை தெரிவித்துகொண்டார். திரு. ரங்கராஜன் அவர்களுக்கும் CTRD ஊழியர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் விடைபெற்றோம்.
தொகுப்பு:
ஈஷா விவசாய இயக்கம் – 8300093777