செலவில்லாமல் அதிக லாபம் ஈட்டித்தரும் இயற்கை விவசாயம்!
பொதுவாக இயற்கை விவசாயம் என்றால் லாபம் இருக்காது என்ற எண்ணம் நிலவி வரும் நிலையில், திரு.ஞானசேகரன் அவர்களின் பண்ணை அந்த எண்ணத்தை உடைப்பதாய் இருக்கிறது! அப்படி என்ன நடக்கிறது அந்த பண்ணையில்... தொடர்ந்து படித்தறியலாம்!
பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 16
பொதுவாக இயற்கை விவசாயம் என்றால் லாபம் இருக்காது என்ற எண்ணம் நிலவி வரும் நிலையில், திரு.ஞானசேகரன் அவர்களின் பண்ணை அந்த எண்ணத்தை உடைப்பதாய் இருக்கிறது! அப்படி என்ன நடக்கிறது அந்த பண்ணையில்... தொடர்ந்து படித்தறியலாம்!
ஈஷா விவசாயக்குழு அரியலூர் மாவட்டம், இரவங்குடி கிராமத்தில் உள்ள இயற்கை விவசாயி திரு.ஞானசேகரன் அவர்களை சந்தித்தது. பரம்பரை விவசாயியான இவர் அவரது பண்ணையை ஒருங்கிணைந்த பண்ணையமாக உருவாக்கியுள்ளார். மரங்கள் வளர்ப்பிலும் ஈடுபாடுடையவராக இருக்கும் இவருக்கு பொறியியல் பட்டதாரிகளான இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களும் தற்போது விவசாயத்தில் முழுநேரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.
பூச்சிக்கொல்லிகள் மீது விழிப்புணர்வு
"எங்களுடைய தாத்தா இந்த பூமியில் இயற்கை விவசாயம் தான் செஞ்சுகிட்டு இருந்தாரு, என்னோடா அப்பாதான் படிப்படியா இரசாயன விவசாயத்திற்கு மாறிட்டாரு, நானும் அப்படியே அப்பா வழியிலேயே இரசாயன விவசாயம் தான் செய்து கொண்டு வந்தேன்.
இரசாயன விவசாயம் என்பதால் நிலக்கடலைக்கு பென்சீன் ஹெக்ஸா குளோரைடு (பி.எச்.சி) பூச்சிக்கொல்லியை பயன்படுத்தி கொண்டிருந்தேன், நிலக்கடலை பறித்த பின் கிடைக்கும் கழிவுகளையும் எனது கால்நடைகளுக்கு தீவனமாக கொடுத்துக் கொண்டிருந்தேன்.
ஒரு முறை பூச்சிக்கொல்லிகளை பற்றி நான் படித்த தகவல் எனக்கு இயற்கை விவசாயத்தின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தியது. பயிறுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லிகளின் எச்சம், அந்த பயிரின் இலைகளில் பல ஆண்டுகளுக்கு இருக்குமென்றும், அந்த இலைக்கழிவுகளை கால்நடைகளுக்கு போடும் போது அந்த விஷம் கால்நடைகளின் ரத்தத்தில் கலந்து, அது தரும் பாலையும் விஷமாக்குகிறது என்பதைப் படித்து அதிர்ச்சியடைந்தேன். உடனே ஒரு முடிவெடுத்தேன், என் இரு மகன்களையும் அழைத்து இந்த இரசாயன விவசாயம் இனி நமக்கு வேண்டாம், உங்களது பாட்டனார் கடைபிடித்த இயற்கை விவசாயத்தையே நீங்களும் கடைப்பிடியுங்கள் என்று எடுத்துக்கூறினேன்.
“அட கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்குள்ளார தெரியுமுன்னு சொல்லுவாப்டி இல்லீங்கோ...! அதானுங்க இந்த ரசாயன விவசாயத்தோட லெச்சனம் சீக்கிரமாவே வெளிச்சத்து வந்துருமுங்க! நம்ம ஞானசேகரன் அண்ணா புரிஞ்சுகிட்ட மாறயே மத்தவங்களும் புரிஞ்சுக்குவாங்க பாருங்க...!”
எனது மகனை ஈஷா ஏற்பாடு செய்த ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய 8 நாள் பயிற்சிக்கும் அனுப்பி வைத்தேன், அதன் பின் நாங்கள் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தோம். நாங்க எடுத்த முடிவு இதுதான், இனி நம் பூமியில் கண்டிப்பாக இரசாயனம் பயன்படுத்தக் கூடாது, நீரையும் சிக்கனமா பயன்படுத்தனும் என்பதுதான் அது!
நாங்கள் தற்போது திரு.நம்மாழ்வார் அவர்களின் வழிமுறையையும், திரு.பாலேக்கர் அவர்களின் வழிமுறையையும் இணைத்து, கடந்த ஒன்றரை வருடமாக இயற்கை விவசாயம் மட்டுமே செய்கிறோம். இப்போது எங்கள் மாடுகளுக்கும் இரசாயனம் இல்லாத தீவனம் கிடைக்கிறது." என்று தனது இயற்கை விவசாய நுழைவைப்பற்றி கூறினார் திரு. ஞானசேகரன்.
வெளிநாட்டில் வேலை பார்த்து இந்தியா வந்துள்ள திரு. ஞானசேகரன் அவர்களின் மூத்த மகன் திரு. ராஜசேகரன் தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்...
"எங்கப்பா எனக்குன்னு கொடுத்த நிலத்துல, ஒரு நாலு ஏக்கர்ல யூகலிப்டஸ் மரங்கள் இருந்துச்சு, அந்த நிலத்தை சுத்தப்படுத்திட்டு அதில்தான் முதல் முறையா இயற்கை விவசாயம் செய்ய முடிவு செய்தோம், யூகலிப்டஸ் வளர்ந்த இடமாயிற்றே இங்கு இயற்கை விவசாயம் செய்ய முடியுமா என்ற தயக்கம் இருந்தது. வருமானம் குறைந்தாலும் பரவாயில்லை, நாம் இயற்கை விவசாயம் செய்வோம் என்று எனது அப்பா என்னை ஊக்கப்படுத்தினார்.
முதலில் சணப்பை விதைத்து மடக்கி உழுதபின் நிலக்கடலை பயிர்செய்தேன். பூச்சிகள் வந்தது, பூச்சிகள் வருகிறதே என்று பயந்த போது பூச்சிகளை பிடிக்க பறவைகள், ஓணான்கள், தவளைகள் போன்றவையும் வந்தன. இதை பார்த்தபின் எனக்கு நம்பிக்கை வந்தது.
ஆரம்பத்தில் பயிர் சரியாக வரவில்லையென்றாலும் அமிர்த கரைசல், ஜீவாமிர்தம் போன்ற இடுபொருள்களை தொடர்ந்து அதிகமாக அளித்ததினால் தற்போது எங்களது பூமி இயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டது.
“ஏனுங்க கடல் மீனுக்கு நீச்சல் பழக்க வேணுமா? அட நம்ம ஞானசேகரன் ஐயா குடும்பமே பரம்பர விவசாய குடும்பம் இல்லீங்களா?! பொறவு என்னத்துக்குங்க சிரமப்பட போறோங்கோ. அதானுங்க சட்டுன்னு இரசாயன விவசாயத்த விட்டுத் தொலச்சுப்போட்டு, இயற்கை விவசாய நுட்பத்த புடுச்சுப்போட்டாங்கோ?!”
கடலையில் ஊடுபயிராக உளுந்து போடுகிறோம், வரப்போரங்களில் சோளம் பயிர் செய்கிறோம், தற்போது நட்டுள்ள மலைவேம்பு கன்றுகளுக்கு இடையே நிலக்கடலையை ஊடுபயிர் செய்துள்ளோம்.
பணியாளர்களுக்கு வழிகாட்டியாக...
எங்களது பண்ணையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு சொந்தமாக முந்திரி தோப்புகள் உள்ளது, முந்திரிக்கு அடிக்கும் இரசாயன மருந்துகளினால் அவர்களுக்கு தோல் நோய்கள் ஏற்பட்டுள்ளது.
Subscribe
இரசாயன பூச்சிக்கொல்லிகளை வாங்கும் செலவு போதாதென்று, அதனால் ஏற்படும் தோல் நோய்க்கான மருத்துவச் செலவுகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள், இதனால் பண்ணையில் வேலை செய்யும் அனைவரையும் இயற்கை விவசாயத்திற்கு வழிநடத்துகிறோம், அவர்களுக்கு தேவையான சாணம், கோமியத்தையும் எங்கள் பண்ணையில் இருந்தே கொடுக்கிறோம்.
“பூவோட சேந்துச்சுன்னா கூட இருக்குற அல்லாமே மணக்கதானுங்க செய்யும்?! நம்ம ஞானசேகரன் ஐயா பண்ணையில வேல பாத்தா அவங்களும் இயற்கை விவசாயத்த பத்தி தெரிஞ்சுக்காம இருக்க முடியுமா? அட அவங்க குடும்பத்து ஆளுங்கல்லாம் சும்மா விட்ருவாங்களாக்கும்?! குருவி தன் குஞ்சுக்கு இரைய ஊட்டி விடுற மாறி சொல்லிக்குடுத்துப் போடுவாங்க இல்லீங்கோ?!”
வெளிநாட்டில் மாதத்திற்கு 3600 டாலர் சம்பாதித்தபோது இல்லாத திருப்தி, தற்போது இயற்கை விவசாயம் செய்யும்போது ஏற்படுகிறது. எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்வது திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது"
ஞானசேகரன் அவர்களின் இளைய மகன் ரவிசேகரன் அவர்கள் கூறும்போது...
நீர்மேலாண்மை
"இருபது ஏக்கருக்கு தேவையான உரம் கொடுக்க வேண்டும் என்றால் ஏறக்குறைய 150 மூட்டை உரம் தேவைப்படும் நவீன முறையில் உரத்தொட்டி அமைத்து உரம் கொடுக்க நினைத்தாலும் அந்த உரத்தொட்டியில் ஆள் இறங்கி உரங்களை கலக்கவேண்டும், அப்படி உரத்தை கலக்குபவர்களுக்கு கால்களில் கொப்புளம், அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. நகங்கள் சொத்தையாகிறது. மேலும் பூச்சி மருந்து அடிக்கும் போது தொழிலாளர்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக அண்ணனின் ஆலோசனையின்படி நானும் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினேன்.
மொத்தமா எங்களுக்கு 50 ஏக்கர் நிலம் இருக்கிறதால அதற்குத் தேவையான இடுபொருள்களை ஸ்பிரேயர் மூலம் அளிப்பது சிரமமாக இருந்தது, மேலும் ஆள் கூலியும் அதிகமாகிறது. இதற்கு தீர்வாக இடுபொருட்களை தண்ணீரிலேயே கலந்து விடுவதற்கேற்ப ரெய்ன் ஹோஸ், ரெய்ன் கன், ஸ்பிரிங்க்ளர் (Rain hose, Rain gun, Sprinkler) போன்றவற்றை அமைத்துள்ளோம்.
வாய்க்கால் பாசனம் செய்யும் போது மண் சற்று இறுகிவிடும், ஸ்பிரிங்க்ளர் மூலம் பாசனத்தால் மழைபோன்று தண்ணீர் விழுவதால் மண்ணில் பொலபொலப்புத் தன்மை ஏற்படுகிறது, மேலும் கடலைக்கு வாய்க்கால் பாசனம் செய்தால் மூடாக்கு செய்ய இயலாது. ட்ரிப் மூலமாக தண்ணீர் விடும்போது மூடாக்கு போடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை.
பண்ணையில் கசிவுநீர்க் குட்டை அமைத்திருக்கிறோம், மழை நீரும், வயலில் கசியும் நீரும் குட்டையில் சேகரமாகிறது, மீன்வளர்ப்பும் செய்வதால் ஒரு வருமானமும் கிடைக்கிறது."
"ஏனுங்க அண்ணன் காட்டிய வழியில தம்பி எப்புடி நடக்குறாரு பாத்தீங்களா? இந்த காலத்திலயும் இப்படி அண்ணன் தம்பிக இருக்குறது ரொம்ப ஆச்சரியந்தானுங்க! ஆனா... நம்ம நாட்டுல உள்ள அல்லா அண்ணன்-தம்பிகளும் இயற்கை விவசாயத்துக்கு மாறுனா தானுங்க நாடு செழிக்கும்!”
தொடர்ந்து பேசிய ஞானசேகரன் தெரிவித்தவை...
இயற்கை விவசாயமே லாபகரமானது
"நான் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கி இன்னும் இரண்டு வருஷம் கூட ஆகவில்லை! நான் தெரிந்துகொண்டது ஒன்னுதான், தற்போதைய சூழ்நிலையில் இயற்கை விவசாயம் லாபகரமானது.
இரசாயன விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறியபோது நிலக்கடலை அறுவடை சராசரியாக ஏக்கருக்கு 17 மூட்டை கிடைத்தது, ஆரம்பத்தில் இது குறைவான மகசூல் என்றாலும் படிப்படியாக மகசூல் அதிகரித்து தற்போது 25-35 மூட்டை வரை கிடைக்கிறது.
இரசாயன விவசாயம் செய்யும் போது 35-40 மூட்டை மகசூல் கிடைத்தது, ஆனால் ஒரு ஏக்கருக்கு இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்காக ரூ.10,000 வரை செலவானது, இந்த செலவு தற்போது இல்லாததால் மகசூல் குறைந்தாலும் எங்களுக்கு லாபமாகவே இருக்கிறது. மண்வளம் கூடக்கூட மகசூலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் ஒரு ஏக்கரில் காய்கறிகள், பந்தல் காய்கறிகள், மற்றும் கீரைகளை இயற்கை முறையிலேயே பயிர் செய்திருக்கிறதால சில்லரை வருமானமும் வரும்."
நஷ்டம் தராத இயற்கை விவசாயம்
"பொதுவாக தண்டு முற்றிய செடிகளில் கடலை முழுவளர்ச்சியடைந்து விட்டால் செடிகளிலிருந்து இலைகள் உதிர்த்து விடும், இதன் மூலம் கடலை அறுவடைக்கு தயாராகிவிட்டது என்று தெரிந்துகொள்ளலாம், இந்த வருஷம் எங்கள் கிராமத்தில் நிலக்கடலையை அறுவடை செய்தபோது விவசாயிகளுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.
செடிகள் தண்டு திரண்டு முற்றியிருந்தும் செடியை பிடுங்கிப்பார்த்தால் கடலை முற்றாமல் சிறியதாகவே இருந்தது. மேலும் இதே பிரச்சினை எங்களது கிராமத்தின் அருகில் இருந்த ஆண்டிகுளம், இரவாங்குடி கிராமங்களில் பெரும்பாலான இரசாயன விவசாயிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் எங்களுக்கு பண்ணையில் நன்றாக முற்றிய கடலை விளைந்திருந்தது, விளைச்சலிலும் பாதிப்பு ஏற்படவில்லை இதை பார்த்த விவசாயிகள் ஆச்சரியமடைந்தனர். அதோடல்லாமல் இப்போது எங்க பண்ணையில் மண்புழுக்களும் நிறைய வந்திருக்கு, அத பாத்திட்டு, என் மனைவி ஆச்சரியத்துடன், 'இருபது வருஷமா நம்ம பூமியில மண்புழுவ பார்த்ததில்லங்க, இப்போ மண்புழு நிறைய இருக்குன்னு' சொல்லும் போது எனக்கும் சந்தோஷமா இருக்கு."
ஒருங்கிணைந்த பண்ணையம்
தற்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிறைய இருக்கிறது. அதனால் பாரம்பரியமாக கடைபிடித்த இயற்கை விவசாய முறைகளையும் தற்போதைய அறிவியல் நுட்பங்களையும் இணைத்து பயிர் செய்ய வேண்டும். இதனால் ஒரு சிறந்த ஒருங்கிணைந்த சுயசார்பு பண்ணையை உருவாக்க முடியும். நாங்க விவசாயத்துடன் ஆடுவளர்ப்பு, கோழிவளர்ப்பு, மீன் வளர்ப்பு, மற்றும் கால்நடை தீவனங்கள், அசோலா மற்றும் மரப்பயிர்கள் என எங்கள் பண்ணையை, ஒருங்கிணைந்த சுயசார்பு பண்ணையா உருவாக்கியிருக்கிறோம்.
மீன் வளர்ப்பு
பண்ணையில கசிவுநீர் குட்டை 4 இருக்குது, இதுல மீன் குஞ்சுகளை வாங்கி விட்டு வளர்த்து விற்கிறேன். இதுக்கு செலவுன்னு பார்த்தா 27,500 ரூபாய் ஆகும், ஆறு மாதத்துல 50 கிலோ வரை மீன்கள் கிடைக்கும்.
மரச்செக்கு கடலை எண்ணெய்
கடலையை ஆட்ட மரச்செக்கு வாங்கியிருக்கிறேன். கடலையை எண்ணையாகவே ஆட்டி தருகிறேன், ஒரு கிலோ எண்ணெய் உற்பத்தி செய்ய ஏறக்குறைய 3 கிலோ கடலை தேவைப்படுகிறது.
இயற்கை உணவுகள் மீது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும், விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டால் கலப்பட எண்ணெயை உண்டு தினந்தோறும் நோயுடன் போராட மாட்டார்கள்.
நமது தாத்தா, பாட்டன் பின்பற்றிய பயிரின் கழிவு மாட்டுக்கு, மாட்டின் கழிவு பயிருக்கு என்பதை ஒவ்வொரு விவசாயியும் நினைவில் வைத்து அவரது பண்ணையை ஒரு முழுமையான சுயசார்பு பண்ணையாக மாற்றவேண்டும்."
இவ்வாறு தனது அனுபவங்களை உணர்வுப்பூர்வமாக நம்மிடம் பகிர்ந்துகொண்ட திரு. ஞானசேகரன் மற்றும் அவரது இரு மகன்களுக்கும் ஈஷா விவசாயக்குழு வாழ்த்து கூறி விடைபெற்றது.
தொடர்புக்கு:
திரு.ஞானசேகரன் - 99421 37827
திரு.ராஜசேகரன் - 9626203436