ஈரோடு விவசாயியின் புதிய கண்டுபிடிப்பு - இயற்கை பூச்சிக்கொல்லி!
ஈஷா விவசாயக் குழு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில், கெட்டவாடி கிராமத்தில் உள்ள இயற்கை விவசாயி திரு.சக்திவேல் அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தது. இவர் விவசாயத்தில் புதிய உத்திகளை கையாண்டதற்காக தேசிய அளவில் விருதுபெற்றவர். ஜீவாமிர்தம் தயாரிக்க இவர் உருவாக்கியுள்ள நான்கு அடுக்கு முறை இவருக்கு இவ்விருதினை பெற்றுத் தந்துள்ளது.
பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 13
ஈஷா விவசாயக் குழு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில், கெட்டவாடி கிராமத்தில் உள்ள இயற்கை விவசாயி திரு.சக்திவேல் அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தது. இவர் விவசாயத்தில் புதிய உத்திகளை கையாண்டதற்காக தேசிய அளவில் விருதுபெற்றவர். ஜீவாமிர்தம் தயாரிக்க இவர் உருவாக்கியுள்ள நான்கு அடுக்கு முறை இவருக்கு இவ்விருதினை பெற்றுத் தந்துள்ளது.
திரு.சக்திவேல் ஆமணக்கு கரைசலை பயன்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்துகிறார். இந்த இரண்டு முயற்சிகளும் தேசிய அளவில் அவருக்கு அங்கீகாரத்தை பெற்றுத் தந்திருக்கிறது.
மேலும் MYRADA-KVK (Mysore Resettlement and Development Agency- krishi vigyan kendra, மைசூர் மீள்குடியேற்ற மற்றும் மேம்பாட்டு முகமை - வேளாண் அறிவியல் மையம்) குழுவில் ஆலோசனை உறுப்பினராக உள்ளார்.
“என்ற வூட்டுக்காரரு ஏங்கிட்ட அடிக்கடி கேப்பாருங்க, இயற்கை விவசாயம் செஞ்சா நமக்கென்ன அவாடா குடுக்கப்போறாங்கண்ணு! நம்ம சக்திவேல் அண்ணாவ மாறி வெகரமா ரோசன பண்ணி வேல பாத்தோமுன்னா கண்டிப்பா அவாடு கிடைக்குங்கண்ணா! ஆனா... நம்ம விருதுக்காக வேல செய்யாம, நம்ம விருப்பத்துக்காக வேலை செய்யோணுமுங்க! சரி நம்ம அண்ணா அப்படி என்னதான் கண்டுபிடிச்சிருக்காருன்னு பாப்போம்”
ஆமணக்கு (கொட்டை முத்து) பருப்புகளைக் கொண்டு கரைசல் தயார் செய்து பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை:
கட்டுப்படும் பூச்சிகள்:
1. வெள்ளைக் கிண்டு (White grub) கரும்பு, -வேர்கடலை
2. தண்டு அந்து (Stem Weevil) -பருத்தி
3. காண்டாமிருக வண்டு (Rhenoceros beetle) -தென்னை
பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி:
பூச்சிகளின் பொதுவான வாழ்க்கை சுழற்சியின்படியே இப்பூச்சிகளும் முட்டை, லார்வா, கூட்டுப்புழு, வளர்ந்த பூச்சி என வாழ்க்கை சுழற்சியை கொண்டதாக உள்ளது. பொதுவாக இவ்வாழ்க்கை சுழற்சி ஒரு ஆண்டில் பூர்த்தியாகின்றது.
முதல் கோடை மழையில் (ஏப்ரல், மே, ஜுன்) கூட்டுப்புழு வெடித்து அதில் வண்டுகள் வெளிவருகின்றன.
Subscribe
வெளிவந்த பூச்சிகள் வேம்பு, இலந்தை, பீயன், புளி போன்ற வெவ்வேறு மரங்களின் இலை தழைகளை உண்டு நோயெதிர்ப்பு திறனைப்பெற்று இனப்பெருக்கத்திற்கு தயாராகின்றன. முட்டையிடும் தருணத்தில் கரும்பின் அடிக்கட்டையில் முட்டையிடுகின்றன.
இரண்டு மாதத்துக்குள் சாதகமான காலத்தில் முட்டைகள் பொறித்து இளம் லார்வாக்கள் மண்ணை நோக்கி நகர்கின்றன. மண்ணில் லார்வாக்கள் படிப்படியாக வளர்ச்சியடைந்தபின், முதிர்ந்த லார்வாக்கள் C வடிவில் வளைந்து இருக்கும். இந்த நிலையில் தான் கரும்புக்கு அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது.
நன்கு உண்டு முழுமையாக வளர்ந்த லார்வாக்கள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கூட்டுப்புழுவாக மாறி உறக்கநிலைக்குச் செல்கிறது. கூட்டுப்புழுக்கள் வண்டுகளாக மாறுவதற்கு தக்க காலம் வரும் வரை காத்திருக்கிறது, மழைக்காலம் தொடங்கியபின், மழை நீர் கூட்டுப்புழுவில் பட்ட உடன் அதன் உறக்க நிலை முடிந்து இளம் வண்டுகளாக வெளிவருகிறது.
“சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்னு சொல்லுவாங்கல்லீங்கோ?! அதுமாறி இந்த பூச்சிகல்லாம் நமக்கு இயற்கையா விளைச்சல் இருந்தாலும் இடையில ரவுசு பண்ணி கெடுத்து போடுவாங்க. ஆனா... அதுகளுக்கு ஒரு வாழ்க்கை இருக்குன்னு நாம கவனிச்சு பார்த்தா தெரியுமுங்க. இதுவரைக்கும் பூச்சிக் கொல்லிக்காக ரசாயனத்த பயன்படுத்தி நாம நம்ம மண் வளத்த நருவசா கெடுத்து போட்டோமுங்க. இனிமேலயாவது ஆமணுக்கு கரைசல பயன்படுத்த பழகனுமுங்கண்ணா.”
ஆமணக்கு கரைசல்:
1 ஏக்கருக்கு 5 கிலோ ஆமணக்கு விதைகள் தேவைப்படும். 5 லிட்டர் கொள்ளளவுள்ள மண்பானைகள் 5 வாங்கிக்கொள்ள வேண்டும். ஆமணக்கு விதைகளை நன்கு இடித்து பானைக்கு 1 கிலோ வீதம் போட்டு அதில் 4 லிட்டர் தண்ணீர் ஊற்றவேண்டும். பானை முழுவதும் தண்ணீர் விடாமல் சிறிது காலியாக இருக்க வேண்டும்.
நிலத்தின் நான்கு மூலைகளில் 4 பானைகள் மற்றும் நடுவில் 1 பானை என மொத்தம் 5 பானைகளை கழுத்து மட்டத்தில் நிலத்தில் குழிதோண்டி வைக்கவேண்டும். பானைக்கு மேல் சூரிய ஒளி படும்படி இருக்க வேண்டும். 10 நாட்களுக்கு நண்பகலில் தினம் ஒரு முறை கலக்கி விடவேண்டும்.
பானை திறந்திருக்க வேண்டும், பானையைச் சுற்றி மூடாக்கு போடவேண்டும். இத்தகைய ஏற்பாட்டை முதல் கோடைமழை வருவதற்கு 20 நாட்கள் முன்னமேயே செய்துவிட வேண்டும். 3 வருடத்திற்கு இதை பயன்படுத்தலாம். வெயிலில் கரைசல் உலர்ந்துவிடாமல் காய்வதற்கு முன்பே தண்ணீர் அல்லது கரைசலை ஊற்றிவிடவேண்டும்.
ஆமணக்கு கரைசலின் வாசனையை நுகர்ந்து மேற்கண்டவகைப் பூச்சிகள் பானையில் வந்து விழும். இறக்கைகளில் எண்ணை ஒட்டிக்கொள்வதால் பூச்சிகளால் பறக்க இயலாமல் சிக்கிக்கொண்டு இறந்துவிடும். அவைகளை வாரம் ஒரு முறை காப்பி ஜல்லடை வைத்து நீக்கி அழித்துவிடவேண்டும்.
“அட சாமி... ரொம்ப வெகரமாத்தாங் ஐடியா சொல்லியிருக்காப்டி! மீன் இருக்கும் போது புளியங்கா திண்ணுச்சாம் ஒரு வெகரமான பூனை’ன்னு எங்க அம்மாச்சி அடிக்கடி சொல்லுவாங்கோ. அதுமாறி ஆமணுக்கு வாசனை வச்சு சாதுர்யமா பூச்சிகள கொல்றதுக்கு ஐடியா சொல்லியிருக்காங்க நம்ம சக்திவேல் அண்ணா! இவர மாறியே ஒவ்வொரு இயற்கை விவசாயியும் இயற்கைய கவனிச்சு எல்லா பிரச்சனைக்கும் தீர்வு இயற்கையிலேயே எடுத்துபோடலாமுங்க!”
Pheromones (பெரமோன்கள்):
இனப்பெருக்க காலத்திலேயே அதிகமாக இந்த பூச்சிகள் வெளியே வருகின்றன. காற்றடிக்கும் எதிர்திசையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலிருந்து பூச்சிகள் கவரப்படுகின்றன.
ஒவ்வொரு வகை பெண் பூச்சிகளும் இனப்பெருக்க காலங்களில் pheromone எனப்படும் வாசனையுள்ள திரவங்களை சுரக்கின்றன, ஆமணக்கு எண்ணையின் மணமும், பூச்சிகள் சுரக்கும் Pheromone மணமும் ஏறக்குறைய ஒன்றுபோல் உள்ளதால் பூச்சிகள் கவரப்பட்டு நாடிவருகின்றன.
பொதுவாக மலர்நாடும் பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள், தேனீ போன்றவை இத்தகைய மணத்தினால் கவரப்பட்டு பானையில் விழுவதில்லை.
மேற்கண்ட பொருட்களை வாங்குவதற்கு 300 ரூபாய் வரையே செலவாகும், கரும்பு சாகுபடியில் மோசமான சேதத்தை ஏற்படுத்தக்கூடிய white grub கட்டுப்படுத்தப் படுவதால் மகசூல் அதிகரிக்கிறது.
“ஏனுங்க பாத்தீங்ளா... ரசாயன மருந்த நருவசா அடிச்சுப்போட்டு, பொறவு நல்லது செய்யுற பூச்சிக அல்லாத்தையும் ஒட்டுக்க கொன்னுபோடுறதுக்கு பதிலா, இந்த ஆமணக்கு கரைசல் நல்ல மாத்து வழிங்க! பூச்சிகளும் இருக்காது ரசாயனத்தால மண்ணும் மலடாகம இருக்கும்.”
இத்தகைய எளிய விவசாய முறைகளை அனைத்து விவசாயிகளும் கற்றறிவதுடன், மற்ற விவசாயிகளுக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதனால் முட்டுவழிச் செலவுகள் குறைவதோடு இயற்கைவழி விவசாயமும் செழிக்கும்.
அடுத்த பதிவில் ஜீவாமிர்தம் தயாரிக்க திரு.சக்திவேல் ஏற்படுத்தியுள்ள வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.