இயற்கை விவசாயத்தில் அசத்தும் ஐ.டி இளைஞர்!
ஏசி அறை, கணினித் திரை, லட்சத்தை எட்டும் மாதச் சம்பளம், வார இறுதி குதூகலங்கள் என ஒரு ஹைடெக் சிட்டியில் ஒய்யாரமாய் வாழ்ந்து களிக்காமல், இந்த ஐ.டி இளைஞர் தன் வேலையை உதறிவிட்டு இயற்கை விவசாயத்தை முழுநேரமாய் கையிலெடுத்ததை சாதாராணமாக எப்படி நம்மால் கடந்துபோக முடியும்?! ஐ.டி வேலை இல்லாமலேயே இயற்கை விவசாயத்தில் இலட்சக்கணக்கில் இலாபம் ஈட்டும் அந்த சாதனை இளைஞரிடம் உரையாடிய தருணங்கள்!
ஈஷா விவசாய இயக்க குழுவினர் ஒருசில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் அத்தானி அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சுதாகர் அவர்களின் இரண்டரை ஏக்கர் கரும்பு தோட்டத்தை பார்வையிடச் சென்றனர். ஈஷா குழு அங்கு சென்றிருந்தபோது கரும்பு அறுவடை செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது.
மிகுந்த உற்சாகத்துடன் குழுவினரை வரவேற்ற இயற்கை விவசாயி சுதாகர் தோட்டத்தை சுற்றி காண்பித்தவாறே பேச ஆரம்பித்தார்.
ஐ.டி. வேலையை உதறிவிட்டு…
“எனக்கு காலேஜ் படிக்கும் போதே இயற்கை விவசாயம் மேல அதிக ஆர்வம். இயற்கை விவசாயம் சம்பந்தமான புத்தகங்கள், பத்திரிக்கைகள தேடி தேடி படிப்பேன். அதோடு யூ-டியூப்-ல நம்மாழ்வார் ஐயாவோட வீடியோக்களையும் நிறைய பாத்திருக்கேன். படிச்சு முடிச்சதுமே விவசாயம் பண்ணலாம்னு நினைச்சு இருந்தேன். ஆனா, வீட்டுல இருக்குறவங்க அதுக்கு சம்மதிக்கல. அதனால எம்.சி.ஏ முடிச்சுட்டு ஐ.டி. கம்பேனியில சாஃப்ட்வேர் டெவலப்பரா எட்டு வருசம் வேலை பாத்தேன். ஆனாலும் என்னோட நெனப்பெல்லாம் இயற்கை விவசாயத்து மேல தான் இருந்துச்சு.
அதேசமயம், எங்க அப்பா தொடர்ந்து விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்தாரு. ஆனா, முழுக்க முழுக்க ரசாயன விவசாயம் தான் பண்ணிக்கிட்டு இருந்தாரு. அவர இயற்கை விவசாயத்துக்கு மாத்த முயற்சி எடுத்தேன். ஆரம்பத்துல கொஞ்சம் நம்பிக்கை இல்லாம இருந்த எங்க அப்பா போக போக இயற்கை விவசாயத்துனால கிடைச்ச பலன்கள கண்கூடா பாத்து முழுசா மாறிட்டாரு” என்று சொல்லி கொண்டே அவருடைய அப்பாவை நமக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
சுதாகரும் அவருடைய அப்பாவும் இணைந்து கடந்த 6 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். சுதாகர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முழு நேரமாக இயற்கை விவசாயத்தில் ஈடுப்பட்டு வருகிறார். அதற்கு முன்பாக, நான்கரை ஆண்டுகள் ஐ.டி. கம்பேனியில் வேலை பார்த்துக் கொண்டே பகுதி நேரமாக இயற்கை விவசாயம் செய்துள்ளார் சுதாகர்.
உடனடியாக பலன்தந்த இயற்கை விவசாயம்…
”ரசாயன விவசாயத்துல இருந்து இயற்கை விவசாயத்துக்கு மாறுனா இரண்டு மூணு வருசத்துக்கப்பறம் தான் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும்னு நிறைய விவசாயிங்க நம்பிக்கிட்டு இருக்காங்க. அந்த நம்பிக்கை உண்மை கிடையாது. மூணு வருசமெல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. வெறும் 130 நாள் செலவழிச்சா போதும். முதல் அறுவடைலேயே ரசாயன விவசாயத்துல எடுக்குற அதே அளவுக்கு அல்லது அத விட அதிகமாவே இயற்கை விவசாயத்துல மகசூல் எடுக்கலாம்” என்று கூறும் இயற்கை விவசாயி சுதாகர் அதை நிரூபித்தும் காட்டி இருக்கிறார்.
Subscribe
அவர் ரசாயன விவசாயத்திலிருந்து இயற்கை விவசாயத்துக்கு மாறிய முதல் ஆண்டிலேயே கரும்பு சாகுபடியில் ஏக்கருக்கு 55 டன் மகசூல் எடுத்து சுற்றுவட்டார விவசாயிகளை வியப்பில் ஆழ்த்தி உள்ளார். மேலும், 5-க்கு 5 அடி என்ற இடைவெளியுடன் கூடிய வித்தியாசமான முறையிலும் கரும்பு சாகுபடி செய்து வருகிறார்.
பகுதி நேரமாக இயற்கை விவசாயம் செய்துகொண்டே முதல் அறுவடையிலேயே 55 டன் மகசூல் சாத்தியமானது எப்படி?
”ரசாயன விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்த பூமிய இயற்கைக்கு மாத்துறதுக்கு நான் செஞ்ச முதல் வேலை பல தானிய விதைப்பு. பயறு வகை, எண்ணெய் வித்து, பசுந்தால் உரப் பயிர், வாசனை திரவியம்னு 4 ரக பயிர்களையும் கலந்து ஒரு 10 வகையான தானியங்களை விதைச்சேன். நட்டதுல இருந்து 50 நாள் கழிச்சு அத மடக்கி உழுதுட்டேன். அடுத்து ஒரு 10 நாள் இடைவெளி விட்டு மறுபடியும் அதே மாதிரி பல தானியங்களை விதைச்சு அடுத்த 50 நாள் கழிச்சு மடக்கி உழுதேன். ஒரு 20 நாள் காட்ட சும்மா போட்டேன். இப்படி மொத்தம் 130 நாள் முடிஞ்சதும் கரும்பு நட்டேன். இயற்கை விவசாயத்துக்கு மாறுன முதல் வருசமே 55 டன் மகசூல் கிடைச்சுச்சு. இதுக்கு முக்கியமான காரணம் அந்த பல தானிய விதைப்பு தான்.
அது மண்ணோட மலட்டு தன்மைய போக்கி, நுண்ணுயிர்கள அதிகப்படுத்தி சத்தில்லாம இருந்த மண்ண வளமான மண்ணா மாத்துத்து. பல தானிய விதைப்புக்கு பிறகு எந்த பயிர நட்டாலும் அதோடோ மகசூல் கண்டிப்பா அதிகரிக்கும்” என்றார்.
இதையடுத்து, 2-வது கட்டையின் போது போதிய பாரமரிப்பு செய்யாததால் 31 டன் மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. அதனால், காட்டை அழித்துவிட்டு குப்பையை கொட்டி மீண்டும் புதிதாக கரணை நட்டதாகவும், அந்த ஆண்டு 43 டன் மகசூல் எடுத்ததாகவும், தற்போது 2-வது கட்டை அறுவடையில் 42 டன் மகசூல் கிடைக்கும் என்றும் சுதாகர் தெரிவித்தார்.
5-க்கு 5 அடி இடைவெளி
வழக்கமான மூன்றரை அடி இடைவெளி முறையில் கரும்பு சாகுபடி செய்யும் அவர் பரிசோதனை முயற்சியாக, ஒரு ஏக்கரில் வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளி, குழிக்கு குழி 5 அடி இடைவெளி விட்டு கரும்பு சாகுபடி செய்துள்ளார்.
அறுவடையாகி கொண்டிருந்த அந்த கரும்பு காட்டை பார்த்தபோது மிக நேர்த்தியாக அழகாக இருந்தது. அதற்குள் வலது, இடதாகவும் நேராகவும் எளிதில் உட்புகுந்து செல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது. “5-க்கு 5 அடி இடைவெளிங்குறது பரிசோதனைக்காக நானே முடிவு பண்ணது. இந்த முறையில நிறைய விஷயங்கள கத்துக்கிட்டேன். மூன்றரை அடி இடைவெளியில கிடைக்குற அதே அளவு மகசூல் இதுலயும் கிடைக்குது. அதேநேரம், இதுல நிறைய சவுகரியங்கள் இருக்கு. குறிப்பா, காட்ட எளிதா பராமரிக்கலாம். சருகு உரிக்குறது, அறுவடை பண்றது ரொம்ப சுலபம், அதிகமா காத்து அடிக்கும் போது கரும்பு சாயமா கட்டி வைக்க முடியும்.
இடைவெளி அதிகமா இருக்குறனால, காற்றோட்டமும், சூரிய ஒளியும் கரும்புக்கு நல்லா கிடைக்குது. மாவு பூச்சி தொந்தரவு இல்லை. கரும்போட கணமும், நீளமும் அதிகமா இருக்கு” என்று சொல்லி கொண்டே கரும்பு அரைக்கும் இடத்துக்கு அழைத்து சென்றார்.
3 மடங்கு கூடுதல் லாபம்
சுத்தமான சுவையான கரும்பு பாலை பருக கொடுத்துவிட்டு தொடர்ந்து பேசினார். ”இதுக்கு முன்னாடி ரசாயன விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்தப்போ தோராயமா 40 ல இருந்து 55 டன் வரைக்கும் மகசூல் எடுத்துருக்கோம். கரும்ப நேரடியா ஆலைக்கு விற்கும் போது சராசரியா ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் லாபம் கிடைச்சுச்சு. இப்போ, நானே நாட்டு சர்க்கரையா மாத்தி விக்கிறனால, ஏக்கருக்கு ஒரு லட்சத்துல இருந்து ஒன்னரை லட்சம் வரைக்கும் லாபம் எடுக்குறேன். அதாவது இயற்கை விவசாயத்துக்கு மாறுனதுக்கு பிறகு 3 மடங்கு கூடுதல் லாபம் எடுக்குறேன்” என்றார்.
கரும்பு பாலை வயிறுமுட்ட பருகி விட்டு கொஞ்சம் நாட்டு சர்க்கரையை வாயில் போட்டு கொண்டு இயற்கை விவசாயி சுதாகருக்கு நன்றி கூறி விடைப்பெற்றோம்.
வரவு செலவு (வாய்க்கால் பாசனத்துடன் கூடிய ஒரு ஏக்கர் நிலத்துக்கு முதல் நடவுக்கானது)
செலவு:
- உழவு – ரூ.3,000
- கரணை – ரூ.14,000
- பார் பிடிக்க ரூ.5,000
- தண்ணீர் கட்டுதல் – ரூ.8,000
- களை எடுத்தல் – ரூ.25,000 (கூலி ரூ.170)
- சோகை உரித்தல் (2 முறை) – ரூ.10,000
- மண் அணைத்தல் – ரூ.5,000
- இடுப்பொருள் தயாரிப்பு – ரூ.10,000
- இதர செலவுகள் – ரூ.10,000
- கரும்பை நாட்டு சர்க்கரையாக மாற்றுவதற்கான செலவு (ஆலை வாடகை சேர்த்து) – ரூ.75,000
- மொத்த செலவு – ரூ.1,55,000
வரவு:
- சராசரி மகசூல் 45 டன். அதை நாட்டு சர்க்கரையாக மாற்றினால் 4,500 கிலோ கிடைக்கும். ஒரு கிலோ நாட்டு சர்க்கரையின் விலை – ரூ.65
- வருமானம் – 4500 x ரூ.65 – ரூ.2,92,500
- நிகர லாபம் – ரூ.2,92,500 – ரூ.1,55,000 = ரூ.1,37,500
குறிப்பு: அடுத்தடுத்த கட்டைகளில் மறுதாம்பு முளைக்க விடும்போது, கரணைக்கான செலவு இருக்காது. சோகைகளை மீண்டும் மண்ணிலேயே போடுவதால் களை வளர்வது குறையும். பிற செலவுகளும் சற்று குறையும். கரும்புக்கு இடையில் ஊடுபயிர் போட்டால் அதில் இருந்து தனி வருமானமும் கிடைக்கும்.
ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் களப் பயிற்சிகளில் கலந்துகொள்ள 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஈஷா விவசாய இயக்கத்துடன் தொடர்பில் இருக்க Facebook மற்றும் Youtubeஇல் இணைந்திடுங்கள்.