காடுகள், மலைகள், மரங்கள், ஆறுகள் - இவற்றையெல்லாம் ரசிப்பதற்கு எல்லோருக்கும் ஆவல் உண்டு. ஆனால், இரண்டு நாட்கள் சுற்றுலா முடியும் வரை மட்டுமே! அதன்பின், வாழ்க்கை என்னவோ அலுவலக கேபினுக்குள்ளும், மடிக்கணினிகளோடும், செல்ஃபோனில் பரபரப்பான உரையாடல்களாகவும் பலருக்கும் கடந்துபோகிறது. காடுகளோடும் மலைகளோடும், மரங்களோடும் இரண்டறக் கலந்து வளர்ந்த ஒருவரின் அனுபவம் நமது அனுபவங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கும். அப்படிப்பட்ட ஒருவரின் அனுபவங்களை இந்தப் பகுதியில் தொடராக பதியவிருக்கிறோம். இயற்கை அவருக்கு கற்றுத் தந்த
பாடங்களை நீங்களும் உள்வாங்கிக் கொள்ளக் காத்திருங்கள்!

ஆனந்த்,

ஈஷா பசுமைக் கரங்கள்

எனது அறிமுகம்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வணக்கம், என் பெயர் ஆனந்த். நான் கடந்த 10 வருடங்களாக ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தில் முழு நேரத் தன்னார்வத் தொண்டராக உள்ளேன். தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் மேற்கொண்டு வரும் பணிகளில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி வருவதை எனக்கு கிடைத்த பெரும் பேறாகவே கருதுகிறேன். எனது வாழ்க்கை அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி! வரும் வாரத்தோடு 30 வயதை எட்டவிருக்கும் நான், இக்காலக் குழந்தைகளைப் போல காடுகளையும் அரியவகை மரங்களையும் படங்களிலோ தொலைக்காட்சியிலோ பார்த்து தெரிந்துகொள்ளவில்லை. எனது பால்ய வயது முழுக்க காடுகளோடும் மரங்களோடும் கழிந்தன.

ஆனந்த் - ஈஷா பசுமைக் கரங்கள்
காடுகளை எனக்கு அறிமுகப்படுத்திய எனது அப்பாவின் நண்பரான ஞானசெல்வன் மாமாவைப் பற்றியும், கல்லூரி நாட்களில் நான் செய்த இயற்கை விவசாயம் குறித்தும், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களோடு பேசிப் பழகிய நாட்களைப் பற்றியும் நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன். அதோடு, மோட்டார் சைக்கிளின் மேல் நான் கொண்ட காதல், குறிப்பாக அந்த 'புல்லட்'. அதை ஓட்டிச் செல்வதில் எனக்கு போதை என்றே சொல்ல வேண்டும்.

திருச்சி B.H.E.L டவுன்ஷிப்பில் வளர்ந்த எனக்கு மரங்களின் மேலும் இயற்கையின் மீதும் ஆர்வம் வந்ததில் எந்த வியப்பும்கொள்ள வேண்டியதில்லை. B.H.E.L டவுன்ஷிப் ஒரு பசுமை சொர்க்கம். அங்கிருந்த மா மரங்களும் கொய்யா மரங்களும் மறக்க முடியாதவை. அந்த அடர்ந்த பசுமைப் பகுதியில் நண்பர்களோடு மரங்களில் ஏறி கனிகளைப் பறித்து உண்ட அனுபவமே மரங்களின் பயன்களையும் அவசியத்தையும் உணர்ந்து கொள்வதற்கான முதற்படியாக எனக்கு அமைந்தது.

மிருகங்களுக்கு மோப்ப சக்தி உண்டு என்பது தெரிந்ததுதான். ஆனால், மனிதர்களுக்கு...?! ஆம்! நிச்சயம் உண்டு! காடுகளில் மிருகங்களையும் பறவைகளையும் தன் மோப்ப சக்தியால் உணரும் மலைவாழ் பழங்குடியைச் சேர்ந்த திரு.நடராஜ் பற்றி சொல்ல வேண்டியது ஏராளம் இருக்கிறது.

பாம்புகள் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? நான் சொல்லப் போவது பாம்புக் கதையல்ல, பாம்புகளின் வாழ்க்கை. எந்தெந்த பாம்புகள் எப்படிப்பட்ட குணம் கொண்டது; எந்தப் பாம்பை எப்படிப் பிடிக்க வேண்டும்; எப்போது பிடிக்கக்கூடாது; தவறான சமயத்தில் பாம்பை பிடித்ததால் கடிபட்டு இறந்த நண்பன் என நிறைய உள்ளன பகிர்ந்துகொள்ள.

இந்தத் தொடர் முடியும்போது நீங்களும் ஒரு இயற்கை ஆர்வலராக, மரங்களின் காதலராக நிச்சயம் மாறி இருப்பீர்கள். தொடர்ந்து காத்திருங்கள்! என்னுடன் சேர்ந்து என் நினைவுக் காட்டுக்குள் பயணிக்க வாருங்கள்!

இயற்கை இன்னும் பேசும்!

இத்தொடரின் பிற பதிவுகள்: இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்