காயாந்த ஸ்தானம், ஈஷா சுடுகாடு என்ற பெயர்களால் அந்த இடம் அழைக்கப்படுகிறது. அங்கே சென்று தன்னார்வத் தொண்டு செய்த ஈஷா தியான அன்பரின் அனுபவப் பகிர்தல் இங்கே...

காயாந்த ஸ்தானம் - 'காயா' என்றால் உடல், 'அந்த்த' என்றால் முடிவு. அதாவது உங்கள் உடல் முடிவுறும் இடம். கவனிக்க... இது நீங்கள் முடிவுறும் இடமல்ல. உங்கள் உடலும், அதை வைத்து நீங்கள் நடத்தி வந்த நாடகமும் முடிவுறும் இடம். சிவன் பெருமளவு சுடுகாட்டில் அமர்ந்திருப்பார் என்று கேட்டிருப்போம். அதுவும் கூட, மனிதர்கள் நடத்தும் நாடகங்கள் அலுத்து, எந்த இடத்தில் மனிதர்கள் நாடகங்கள் நடத்த முடியாதோ, எந்த இடத்தில் வாழ்வின் அர்த்தம் மிகத் தெளிவாய் விளங்குமோ, அவ்விடத்தில் (அ) மயானத்தில் அவர் அமர்ந்திருந்தார்.

பிறந்தவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகள் மட்டுமல்ல...
இறந்தவர்களுக்கும் நாம் செய்யவேண்டிய கடமைகள் இருக்கிறது.

கோயம்புத்தூரில், நஞ்சுண்டாபுரம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் அரசாங்க சுடுகாட்டை ஈஷா பொறுப்பேற்று நடத்திவர, அங்கு தன்னார்வத் தொண்டும் செய்யமுடியும் என்று அறிந்து, 'சுடுகாட்டில் அப்படி என்னப்பா தன்னார்வத் தொண்டு?' என்று பார்த்துவரக் கிளம்பினேன்.

அங்கே சென்றால், அது ஏதோ பூங்கா போல் பச்சைப்பசேலென இருக்கிறது. செழிப்பான மரங்கள், பசுமையான சூழல், சுத்தமான நடைபாதை, அதைத் தாண்டிச் சென்றால் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு சற்றுத் தொலைவில் வீற்றிருக்கிறார் காலபைரவர். அவர் முன்னே உடலைக் கிடத்தி கடைசிக் காரியங்கள் நடத்தும் வகையில் இடம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இவ்விடத்தில் உடலைத் தகனம் செய்யவேண்டுமெனில், முன்பதிவு செய்யவேண்டும். அவ்வாறு முன்பதிவு செய்து, குறித்த நேரத்தில் இறந்தவரின் உடல் காயாந்த ஸ்தானத்திற்குள் வரும்போது, அங்கு ஆதிசங்கரரின் நிர்வாண ஷடகம் ஒலிக்கத் துவங்குகிறது. தொடர்ந்து நிர்வாண ஷடகம் ஒலித்துக் கொண்டே இருக்க, உடலை காலபைரவரின் முன்னிலையில் கிடத்தி கடைசிக் காரியங்கள் - (வாய்க்கரிசி போன்ற பிற ஈமைக் க்ரியைகள்) செய்யப்படுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இது முடித்து, உடலை அங்கிருக்கும் கட்டிடத்துள் எடுத்துச் சென்றால், நுழைவாயிலில் ஒரு பெரிய தியானலிங்கப் படம். அருகில் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. இதைத் தாண்டி எரிக்கும் அமைப்பை அடைந்தால், அங்கு லிங்கபைரவி தேவியின் அருள் ஒளிரும் முகம் தென்படுகிறது. உறவினர்கள் ஒரு சிலரை மட்டும் அந்த உள் அறையில் அனுமதிக்கின்றனர். அங்கு இறந்தவரின் மகனோ, வேறு உறவோ கொள்ளி வைக்க, உடலை மெதுவாய் தகனம் நடக்கும் இடைவெளியில் நுழைத்து அக்கதவை மூடுகிறார்கள். அங்கு எரிவாயுவின் உதவியோடு உடல் எரியத் துவங்குகிறது. முழுவதுமாய் எரிந்து முடிக்க ஒன்றில் இருந்து, ஒன்றரை மணி நேரம் ஆகிறது.

தன்னார்வத் தொண்டு செய்ய அங்கே வருபவர்கள் உடல் எரிவதற்குத் தேவையானவற்றை செய்து, அவ்விடத்தை பராமரிக்கின்றனர். உடல் எரிந்தபின், அந்த சாம்பலை சேகரித்து தனித்தனியே வைக்கின்றனர். அங்கு உருவாகும் கார்பன் கழிவுகள் ஒரு தொட்டி தண்ணீரின் வழியே வடிகட்டப்பட்டு, மீதம் காற்றில் கலக்கிறது.

அங்கே இருந்து ஒரு உடல் முழுவதுமாய் எரிவதைப் பார்க்கும்போது,

உன் உடலிற்கும் இதே நிலைதான் மானுடா!
இதன் மீதா கர்வம் கொண்டாய்?
அதோ உருகி வெளிவருகிறதே, அதே போல்தான்
உன் மூளையும் உருகி வெளி ஊற்றி, எரிந்து சாம்பலாகும்.
இதற்கா இத்தனை பெருமை கொண்டாய்?

எதன்மீது பற்று வைக்கிறாய்?
எதை முக்கியமாய் சேமிக்கிறாய்?
எல்லாம் கண்முன்னே காணாமற் போவதைக்
கண்டேனும் திருந்தி வாழடா!!!

என்பதைப் போன்றிருந்தது. உள்ளே நுழைந்தபோது இருந்த இறுமாப்பு சற்றே காணாமற் போக, வெளி வந்தேன். அங்கு உடலைக் கொண்டு வரும் அமரர் ஊர்தி நின்றிருந்தது. அதில் சத்குருவின் வாசகம்:

"பிறந்தவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகள் மட்டுமல்ல...
இறந்தவர்களுக்கும் நாம் செய்யவேண்டிய கடமைகள் இருக்கிறது
"

அங்கே காலபைரவ கர்மா செய்யும் குளமும் இருக்கிறது. இது தவிர வீரகேரளம், துடியலூர் மற்றும் போத்தனூர் ஆகிய இடங்களில் ஈஷா காயாந்த ஸ்தானம் செயல்பட்டு வருகிறது.

இவ்விடங்களில் உடலைத் தகனம் செய்ய என்ன செய்யவேண்டும்?

1. மருத்துவர் கையெழுத்திட்ட மரணச் சான்றிதழ்
2. இறந்தவரின் புகைப்படம் மற்றும் அரசாங்க உறுதிச்சான்றுடன் கூடிய, இறந்தவரின் அடையாளம் மற்றும் முகவரி அட்டை
3. இத்துடன் பதிவு அலுவலகத்தில் இருக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவு செய்தால், அவர்கள் சொல்லும் நேரத்தில் அங்கு உடலை தகனம் செய்யலாம்.
4. தகனம் செய்யும் நேரம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை.
5. தகனம் பற்றிய தொடர்புக்கு: 94425 66688, 94425 04646
6. ஈஷாவில் நடக்கும் காலபைரவ கர்மா பற்றிய விபரங்களுக்கு: 94433 65631, 94864 94865

ஈஷா காயாந்த ஸ்தானத்தில் தன்னார்வத் தொண்டு செய்ய தொடர்பு கொள்க:

ஈஷா ஆசிரமத்தில் உள்ள தன்னார்வத் தொண்டர்கள் வரவேற்பு அலுவலகம் (VRO) 94421 08000 (அ) 94425 04646