இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா -பகுதி 5

இமாலயத்தின் அடிவாரமான ஹரித்துவாரிலிருந்து இயற்கை எழில்மிகுந்த வழித்தடத்தின் வழியாக குப்தகாசியை சென்றடைந்த அனுபவத்தையும், பேருந்து பயணத்தின் நடுவில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களையும் விவரித்து சுவைகூட்டுகிறார் எழுத்தாளர்!

திரு. அஜயன் பாலா:

இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா, writer ajayan balaகாலை 5.57 மணி

வெளியே செம குளிர். அவசரமாக ஸ்வெட்டரையும் க்ளவுசையும் மாட்டிக்கொண்டு அறைக்கதவை பூட்டி லக்கேஜை எடுத்துக்கொண்டு கீழே ஓடுகிறேன். இன்னும் இரண்டு நிமிடம்தான். ஹாலில் சத்சங்கம் துவங்க போகிறது. ஏற்கனவே பலரும் வந்தமர்ந்துவிட என்னைப்போல இன்னும் சிலர் கடைசி நேர பரபரப்பில் இருக்கிறோம். கீழே கைத்தட்டல் ஓசை துவங்கிவிட்டது. இன்னும் அங்கு வராதவர்களை துரிதப்படுத்த இந்த கைத்தட்டல் ஓசை. ஈஷாவின் ஸ்பெஷல் அயிட்டங்களில் இந்த கைத்தட்டல் ட்ரீட்மெண்டும் ஒன்று. சத்சங்கம் முடிந்த கையோடு ஹரித்துவாரிலிருந்து புறப்படவிருப்பதால் முன்கூட்டியே அறையை காலிசெய்து லக்கேஜுகளை வராந்தாவில் வைக்க சொல்லி உத்தரவு. வராந்தாவில் ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த லக்கேஜுகளுடன் என்னுடையதையும் வைத்துவிட்டு அவசரமாக ஹாலுக்கு ஓடிவந்து கடைசி வரிசையில் அமர்ந்துகொண்டேன். இன்னும் சிலர் வரவேண்டியிருப்பதால் கைத்தட்டல் தொடர்கிறது. சுற்றும் பார்த்தேன் மேலே மாடியிலிருந்து பலரும் ஓடிவந்து கொண்டிருக்கிறார்கள்.

கண்ணுக்கெட்டியது வரை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கடுக்காக மலைகள், ஜன்னல் வழியாக வரும் காலை நேர குளிரை உள்வாங்கியபடி கண்களால் அந்த நீல ஆகாயத்தையும் பச்சை மலைகளையும் கீழே அதள பாதாளத்தில் ஓடும் ஆற்றின் வெள்ளத்தையும் ரசித்தேன்.

அக்கம் பக்கம் பார்வையை சுழலவிட்டேன். அனைவரும் புதிய ஆடைகளில் நெற்றியில் விபூதியுடன் பளிச்சென காணப்பட்டனர். அவர்களது தோற்றம் இமயமலைக்குள் ஐக்கியமாகப்போகும் ஆர்வம் உள்ளுக்குள் மினுங்குவதை காட்டிக்கொடுத்தது.

சரியாக 5 மணிக்கு அனைவரும் அங்கு வந்தமர கைத்தட்டல் ஓசை முழுவதுமாக நின்றது. சத்சங்கம் துவங்கிய சில நிமிடங்களில், “என்ன எல்லாரும் லக்கேஜை பேக் பண்ணி தயாராயிட்டீங்களா?”

சத்குருவின் குரல் கணீரென கேட்டது. எதிரே இருந்த வெண்திரையில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சியில் சத்குரு ஒளிர்ந்தார். வழக்கமாக அவர் அணியும் நீள அங்கி மற்றும் தலைப்பாகையுடன் புன்னகை முகத்துடன் காட்சியளித்தார். கனபொருத்தமானதொரு இருக்கை அவரை வாகாக சுமந்து கொண்டிருந்தது. இந்த டேப் முன்பு சத்குரு தியான யாத்திரைக்கு வந்தபோது இந்த இடத்தில் பதிவு செய்யப்பட்டது. அவர் வடிவமைத்த அதே அச்சில் தியான யாத்திரை வருடாவருடம் நடைபெறுவதால் அந்த ஒளிநாடா ஒவ்வொருமுறையும் பயன்படுத்தப்படுகிறது. இம்முறை இதோ எங்கள் முன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தொடர்ந்து சத்குரு பேச துவங்கினார்.

இதுவரைக்கும் நீங்க இருந்தது இமயமலையோட அடிவாரம். இனிமேதான் உண்மையான பயணம் துவங்கப்போகிறது. அடுத்த பத்துநாள் உங்க வாழ்க்கையோட மிக முக்கியமான நாட்கள். மிக முக்கியமான தலங்களுக்கு பயணிக்கப்போறீங்க. அதனால பயணத்தில் நீங்க ஒவ்வொருத்தரும் கடைப்பிடிக்கிற கட்டுப்பாடும், இறையுணர்வும்தான் பயணத்தோட இனிமையான அனுபவத்துக்கு அடிப்படை. உங்களுக்கு எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் தன்னார்வலர்கள் கிட்ட சொன்னா போதும் அவங்க செஞ்சு கொடுப்பாங்க. வழி நெடுக இயற்கை காட்சிகள் கொட்டி கிடக்கு. சிவான்னு நாம சொல்ற வார்த்தை வெறும் கோயில்ல இருக்குற லிங்கம் மட்டுமில்ல, இந்த மலையும் இந்த அற்புதமான காட்சிகளும் தான். இதை முழுவதுமாக உள்வாங்கும் போதுதான் யாத்ரையோட முழு பலனையும் நீங்க அனுபவிக்க முடியும்.

சத்குருவின் உரை யாத்திரை குறித்த உள்ளுணர்வுகளை அனைவருக்குள்ளும் தட்டி எழுப்ப அனைவரும் பலத்த மவுனத்துடன் சற்றொரு நிமிடம் கண்களை மூடி தியானித்தனர்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் விடுதி வாசல் போர்களம் போல காணப்பட்டது. நான்கு பேருந்துகள் வரிசையாக நிற்க அதன் ஒவ்வொன்றின் உச்சியிலும் ஆட்கள் நின்று கீழே இருப்பவர்களிடமிருந்து லக்கேஜ்களை ஏற்றிக்கொண்டிருந்தனர். எல்லோருக்கும் பயணத்தினிடையே பசியார ஆப்பிள் பழங்களும், பிஸ்கட் பாக்கெட்டும், தண்ணீர் பாட்டில்களும் தரப்பட்டன. ஒரு சிலர் அவசரமாக ஓடிசென்று வாசலில் கடைபரப்பி விற்றுக்கொண்டிருந்தவனிடம் மழைக்கு பாதுகாப்பான பிளாஸ்டிக் உறைகளை வாங்கிக்கொண்டிருந்தனர். எல்லாம் சில நிமிடங்களுக்குத்தான். பத்தாவது நிமிடம் கூட்டம் அனைத்தும் அவரவர் பேருந்தில் அடைந்துகொள்ள வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக பேருந்துகள் அங்கிருந்து இமயம் செல்லும் பாதையில் பயணிக்க துவங்கின. ஹரித்துவாரை கடந்து பேருந்து மலைப்பாதையில் ஏறத் துவங்கியது. கட்டிடங்கள் பின்னால் விலகி, அடர்ந்த மரங்கள் விலகி மெல்ல கண்முன் விரியத் துவங்கியது பிரமாண்டமான மேரு. ஆஹா... மலைகள் - பச்சை மலைகள் - கண்கள் முழுக்க பசேலென விரிந்தபடி காணப்படும் உயரமான மலைகள். கண்ணுக்கெட்டியது வரை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கடுக்காக மலைகள், ஜன்னல் வழியாக வரும் காலை நேர குளிரை உள்வாங்கியபடி கண்களால் அந்த நீல ஆகாயத்தையும் பச்சை மலைகளையும் கீழே அதள பாதாளத்தில் ஓடும் ஆற்றின் வெள்ளத்தையும் ரசித்தேன். குளிர் காற்று ஸ்வெட்டரையும் தாண்டி உடம்புக்குள் பரவி சில்லிட வைத்தது. வாயை திறந்து கொட்டாவி விட பனிப்புகை காற்றில் கலந்தது.

பேருந்து ஒரு திருப்பத்தில் வளைந்தபோது ஜன்னல் வழியாக கீழே எட்டிப் பார்த்தேன். ஐய்யோ, பேருந்துக்கும் சரிவுக்கும் இடையில் எறும்பு ஊறும் இடைவெளி. கீழே அதள பாதாளம். பின்சீட்டில் இருந்த ஒரு அக்கா பயத்தில் அலறிவிட்டார். ஆனால் வாகன ஓட்டுனரோ இதுபோல பல்லாயிரக்கணக்கான வளைவுகளை கண்டவர் போல அனாயசமாக ஸ்டியரிங்கை வளைத்துக்கொண்டிருந்தார். எங்களுக்கு முன்னே வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன. ஓரிடத்தில் நீர் வீழ்ச்சியுடன் அற்புத காட்சி. பேருந்தில் என் அடுத்த இருக்கையில் ஸ்தபதி சந்தான கிருஷ்ணன். கையிலிருந்த அவரது கேமராவை ஜன்னலோரம் அமர்ந்திருந்த என்னிடம் கொடுத்து அந்த காட்சியை படம் பிடிக்க சொல்கிறார். நான் காமிராவை பிடித்துக்கொண்டு க்ளிக் செய்ய போக சட்டென பேருந்து வளைந்து எங்களிடம் விளையாட்டு காட்டியது. இப்போது சாலையோரம் நீள கம்புகளை இறுக்க கட்டியபடி வரிசையாக நடந்து செல்லும் காட்டுப்பெண்கள் சென்று கொண்டிருக்க பேருந்து அவர்களை கடந்தபின் முன்பக்கமாக க்ளிக் செய்ய வேண்டி காத்திருக்க மீண்டும் இன்னொரு திருப்பத்தில் பேருந்து வளைந்து திரும்பி போக்கு காட்டியது. என்ன எடுத்தீங்களா என அவர் கேட்க நான் சிரித்து இப்ப எடுத்தா போட்டா நல்லா இருக்காது வண்டி நிக்கட்டும் எனக்கூறி சமாளித்து மீண்டும் ஜன்னலுக்கு திரும்பினேன். மண் பாதைகள் பாம்பு போல மலையின் இடுப்பு சுற்றியபடி நகர்ந்து கொண்டிருந்தன.

பேருந்தில் எங்களுடன் வந்த இருவரும் சேர்ந்து தொடர்ந்து பாடல்களை பாடி அசத்த நாங்களனைவரும் கைகளை தட்டி அவர்களை ஊக்கப்படுத்தியபடி மகிழ்ச்சி உடலில் அலையென பரவ பயணித்தோம்.

இந்த மலையை குடைந்து பாதை போட்டது யார்? எது மனிதனை இந்த இடத்தில் பாதை போட வைத்தது, இங்கிருக்கும் புண்ணிய பூமிகளான கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி போன்றவை ஏன் தரையில் இருந்திருக்கக்கூடாது கேள்விகள் என்னை துரத்திக் கொண்டிருந்தன. ஆனால் அந்த கேள்விகள் எவற்றுக்கும் பதில் தேட விருப்பமில்லை. மனம் பேரானந்தத்தில் அந்த அழகை ரசித்துக் கொண்டிருந்தது. இந்த அழகு நம் மனதுள் நிகழ்த்தும் மவுன உரையாடல்கள் ஆழமானவை. வார்த்தைகளால் மொழிபெயர்க்க முடியாதவை. இதுவரை இமயமலை என்றதும் நாம் கற்பனை செய்து வைத்த அனைத்தையும் கடந்ததொரு பெரும் பிரம்மாண்டம்.

எங்கள் பயணம் இப்போது எங்கே தெரியுமா?

கேதார்நாத் இமயமலையின் நான்கு புண்ணிய தலங்களில் மிக முக்கியமான சிவத்தலம். இந்த கேதார்நாத் நெட்டுக்குத்தாக பதினாலு கி.மீ மலையில் ஏறவேண்டும். கேதார்நாத் போக இரண்டு நாள் ஆகும். இப்போது நாங்கள் குப்த காசியை நோக்கி பயணிக்கிறோம். இன்று, இரவு குப்த காசியில் தங்க போகிறோம். மறுநாள் தான் கேதார்நாத். அதற்கு முன் பேருந்தில் உங்களுக்கு சிலரை அறிமுகப்படுத்த வேண்டும்.

நாங்கள் பயணிப்பது 6ம் எண் பேருந்து. ஒவ்வொரு பேருந்துக்கும் ஒரு தலைவர். அவர்தான் எங்களுக்கான தேவைகளுக்கு பொறுப்பு. நாங்களும் அவர் உத்தரவுபடிதான் நடக்க வேண்டும். அந்த தலைவர் பொறுப்பில் இருந்தவர் தேனி பேராசிரியர், முந்தின நாளே எனக்கு அறிமுகமான துரை. பயணம் அலுப்புதட்டாமல் போவதற்கு அடிக்கடி நாட்டுப்புற பாடல்களையும், ஆன்மீக பாடல்களையும் சந்தடிசாக்கில் சினிமா பாடலையும் பாடி அசத்துவார். அவருக்கு பக்கபலமாக ஒருவர் வந்து வாய்த்தார். அவர் கோபால், ஏ.ஆர்.ரகுமான் ட்ரூப்பில் டிரம்மராக உலக பயணம் எல்லாம் சென்று வந்தவர். இவர்கள் இருவரும் சேர்ந்து தொடர்ந்து பாடல்களை பாடி அசத்த நாங்களனைவரும் கைகளை தட்டி அவர்களை ஊக்கப்படுத்தியபடி மகிழ்ச்சி உடலில் அலையென பரவ பயணித்தோம். ஒரு பக்கம் கண்ணுக்கு விருந்தாக பேருந்துக்கு வெளியே விரிந்துகொண்டிருக்கும் மலைக்காட்சி. இன்னொரு பக்கம் செவிக்கு விருந்தாக பேருந்தினுள் இசை மாட்சி. பத்து நாளில் முதல் நாளிலேயே பேருந்தில் அனைவரும் பெரு நிறைவுடன் உள்ளம் பூரித்து கிடக்க, நகரும் எங்கள் ஜன்னலுக்குள் மாலையும் சற்று மயங்கி சரிந்தபோது ஆவலுடன் எதிர்பார்த்த குப்த காசியும் வந்தடைந்தது.

குப்த காசி அது ஒன்றும் அத்தனை சாதாரணமான இடமல்ல. உண்மையில் ஆன்மீக தூண்டுதல் உங்களிடம் இருந்தால் குப்த காசி கோயிலில் அதன் ஆழமான நிறைவானதொரு பகுதியை உங்களால் உணரமுடியும். குப்தகாசி பற்றி நான் சொல்வதைவிட சத்குரு அவர்கள் அதைப்பற்றி என்ன சொன்னார் என சொல்கிறேன். அப்போதுதான் குப்தகாசியின் பெருமை உங்களுக்கு முழுமையாக தெரியவரும்.

குப்த காசி...

வரும் பதிவில், குப்த காசியின் சிறப்புகள் என்ன என்பதை விவரிக்கிறார் எழுத்தாளர்! காத்திருங்கள்!

குறிப்பு: ஈஷாவுடன் இமாலயம் செல்ல வாருங்கள். வரும் செப் 15 அன்று துவங்கவுள்ள இந்த இமாலயப் பயணத்தில் நீங்களும் பங்குகொள்ள முன்பதிவுகள் அவசியம்.

தொடர்புக்கு: 94 88 111 333, 94 88 111 555

வலைதளம்: www.sacredwalks.org