சத்குரு ஞானோதய தின கொண்டாட்டங்கள் - Eternal Echoes புத்தக வெளியீடு

கடந்த 30 ஆண்டுகளில் கவிதை வடிவில் வெளிப்பட்ட சத்குருவின் எண்ணங்களின் தொகுப்பு Eternal Echoes எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டு சத்குரு ஞானோதய தினமான செப்டம்பர் 23 அன்று புத்தகமாக வெளியிடப்பட்டது. நிகழ்வை கொண்டாடும் விதமாக சத்குருவுடன் எழுத்தாளரும் கவிஞருமான அருந்ததி சுப்ரமணியம் கலந்துரையாடினார். சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் இனிய இசையுடன் மாலை நிகழ்ச்சிகள் துவங்கியது. புத்தகத்திற்கான சித்திரங்களை வழங்கியுள்ள காருகோ யமசாகி தமது நுட்பமான, செறிவான கலைப்படைப்புகளை இந்நிகழ்வில் வெளியிட்டார். புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு படத்தினையும் கவனமாக தேர்வு செய்ததற்கான காரணம், அதன் பின்னுள்ள குறியீடு ஆகியவற்றையும் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது, தனது கவிதைகளை சத்குரு வாசிக்க, வேடிக்கையுடனும் நுட்பமாகவும் கேள்விகளை எழுப்பிய அருந்ததி, கவிதைகளின் பின்னால் உள்ள கதையையும், கவிதைகள் பேசும் உள்ளார்ந்த மொழியையும் சத்குருவிடமிருந்து வெளிக்கொணர்ந்தார். சாதாரண நாட்களிலேயே விருந்தளிக்கும் சவுண்டஸ் ஆஃப் ஈஷா குழுவினர், இந்த கொண்டாட்டமான நாளில் சாதாரணமாக இருந்து விடுவார்களா என்ன? நிகழ்ச்சியின் நிறைவாக துள்ளல் இசை விருந்தளிக்க, அனைவர் இதயத்திலும் உற்சாகத்தின் துடிதுடிப்பு பற்றிக்கொண்டது.

மோட்டார் சைக்கிளில் சத்குருவின் இமயமலை பயணம்

பங்கேற்பாளர்களின் உற்சாகமும் எதிர்பார்ப்பும் உச்சத்தை தொட, நொய்டாவில் இருந்து இமயமலை நோக்கி தனது பைக் பயணத்தை தொடங்கினார் சத்குரு! செப்டம்பர் இறுதி வாரத்தில் தொடங்கிய சத்குருவின் இந்த இமயமலை பயணத்தின் முதலாம் நாளில், 200க்கும் மேற்பட்ட புலிகளின் சரணாலயமாக விளங்கும் இந்தியாவின் மிகப் பழமையான தேசிய பூங்காக்களில் ஒன்றான உத்தரகாண்டிலுள்ள அழகான ஜிம் கார்பெட் தேசிய பூங்கா வழியாக சத்குரு தனது பைக்கை செலுத்தினார்.

வளைந்து நெளிந்து இமயமலைக்கு செல்லும் பாதைகளில் விரைந்த சத்குருவின் பைக், அடுத்ததாக ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நகரமான குப்த காசியைச் சென்றடைந்தது. இமயமலைச் சாலைகளில் ஜோஷிமத் செல்லும் வழியில், நிலச்சரிவின் அபாயத்தை சத்குரு எதிர்கொண்ட தருணம், சாகசமும் நிறைந்த இப்பயணத்தின் உச்சமாய் அமைந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷா யோக மையத்தில் தமிழக ஆளுநர்

மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களும் அவரின் மனைவி திருமதி.லட்சுமி ரவி அவர்களும், ஈஷா யோக மையத்திற்கு கடந்த அக்டோபர் 19ம் தேதி வருகை தந்தனர். அவர்களை வரவேற்ற சத்குரு, ஆதியோகி திருவுருவத்தைப் பரிசாக வழங்கி சிறப்பித்தார்.

அக்டோபர் மாத பௌர்ணமி சத்சங்கம்

'முழு நிலவில் அருள் மடியில்' சத்சங்க தொடரின் ஒரு பகுதியாக நிகழ்ந்த அக்டோபர் மாத பௌர்ணமி சத்சங்கத்தில், சத்குரு பஞ்ச வாயுக்களில் அடுத்த வாயுவான அபான வாயு குறித்த அறிமுகத்தை வழங்கியதோடு, சக்தியின் கீழ்நோக்கிய ஓட்டத்தை சமநிலைப்படுத்தி ஒருவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை நமக்கு விளக்கினார். குறிப்பாக இது, தங்கள் சாதனா மூலமாக தொடர்ந்து தங்கள் சக்தி நிலையை உயர்த்திக்கொண்டிருக்கும் ஆன்மீக சாதகர்களுக்கு உகந்ததாக இருக்கும். நமது சக்தியோட்டம் தங்குதடையின்றி பாய்வதற்கு நமது உடலமைப்பைச் சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை சத்குரு விளக்கியதோடு, கூடவே அதற்கான சில எளிய வழிமுறைகளையும் அளித்தார்.

சத்குருவின் தீபாவளி வாழ்த்து செய்தி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது வாழ்த்து செய்தியை காணொளி மூலம் வழங்கியிருந்த சத்குரு, தீபங்களின் திருவிழாவை விளக்குகளை ஏற்றி கொண்டாடுவதோடு, சமூக நிலையிலும் மன நிலையிலும் சுற்றுச்சூழலிலும் ஒரு விழிப்புணர்வான உலகினை உருவாக்க வேண்டிய அவசியத்தையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

தற்கொலை தடுப்பு பற்றி சத்குரு

செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, மத்திய காவலர் பயிற்சி மையத்தினருடன் சத்குரு உரையாடினார். ஆன்லைனில் நிகழ்ந்த இந்த உரையாடலின் போது, தற்கொலைக்கான பல்வேறு காரணங்கள், காவலர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது வைக்கப்பட்டுள்ள அழுத்தம் மற்றும் சிறைவாசிகளின் நல்வாழ்வு பற்றி கலந்துரையாடினார்கள். தனக்கே உரிய தெளிவுமிக்க பார்வையை வெளிப்படுத்திய சத்குரு, "இன்னும் 'சிறப்பான இடம்' என்பது உங்களுக்குள் உள்ளது, வேறெங்கோ இல்லை. இதுவே ஆன்மீக செயல்முறை" என்று தெளிவுபடுத்தினார்.

தற்காப்பு நிர்வாக கல்லூரியில் சத்குரு உரையாடல்

செகந்திராபாத்தில் உள்ள தற்காப்பு நிர்வாக கல்லூரியில், எதிர்பாராத சூழ்நிலைகளை கையாள ஈஷா யோகா எனும் தலைப்பில், செப்டம்பர் 14 அன்று ஆன்லைனில் சத்குரு உரை நிகழ்த்தினார். முன்னதாக, தீரமிக்க வீரர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் தனது மரியாதையை வெளிப்படுத்தி, உரையை துவங்கினார் சத்குரு. மரணம், கர்மா, தலைமைப் பண்பு, தோல்வியை எதிர்கொள்வது, வெற்றிகரமாக இருப்பது என்றால் என்ன, மற்றும் கோல்ஃப் குறித்தும் சத்குருவிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. ஒரு தலைவருக்கு தேவையான அடிப்படை குணங்களான உத்வேகம், நேர்மை, நுண்ணறிவு குறித்து வலியுறுத்தி பேசினார் சத்குரு. "நேர்மை என்றால் என்னவென்றால், உங்கள் நோக்கம் தனிப்பட்ட அளவில் இல்லாமல் பெரிதாக இருக்கிறது. உங்கள் நோக்கங்கள் உங்கள் தனிப்பட்ட நல்வாழ்வு பற்றியதாக இல்லை - அது எப்போதும் அனைவரது நல்வாழ்வு குறித்ததாகவே இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

பொருளாதார வல்லுநர் தியரி மல்லரேட்டுடன் சத்குரு கலந்துரையாடல்

முதலீட்டாளர்களுக்கு பொருளாதார கணிப்புகளை வெளியிடும் 'மன்த்லி பாரோமீட்டர்' இதழின் இணை நிறுவனரும், பொருளாதார வல்லுநருமான தியரி மல்லரேட் “The Great Narrative” எனும் தலைப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் புத்தகத்திற்காக சத்குருவுடன் செப்டம்பர் 22 அன்று ஆன்லைனில் கலந்துரையாடினார். இந்த புத்தகத்தில் 50 செல்வாக்கு மிக்க நபர்களின் பேட்டி இடம்பெற உள்ளது. பல்வேறு தலைப்புகளில் சுவாரஸ்யமாக உரையாடல் நிகழ்ந்தது. அப்போது, இந்த உலகம் செல்லும் திசை‌ பற்றி சத்குரு என்ன நினைக்கிறார் என்றும், யோக கருவிகள் எப்படி பயன்படும் என்றும் தியரி கேள்விகளை எழுப்பினார். பதிலளித்துப் பேசிய சத்குரு, வெற்றி மற்றும் நல்வாழ்வு குறித்த நமது எண்ணப்போக்கை நாம் மாற்றியமைத்து ஆனந்தமான மக்களை உருவாக்குவதன் முக்கியத்துவம் பற்றி பேசினார். சீர்கெட்டு வரும் சுற்றுச்சூழல், நமது மண்ணின் வளம் குன்றி வருவது, புவி வெப்பமயமாதல் ஆகிய பிரச்சனைகளைப் பற்றி எடுத்துரைத்து, இவற்றிற்கு மரம் சார்ந்த விவசாயம்‌ எனும் தீர்வையும் சத்குரு வழங்கினார். பேட்டியை நிறைவு செய்கையில், சத்குரு, "நாம் அனைவரும் முயற்சி செய்தால், நம்மிடம் இருக்கும் கருவிகளைக் கொண்டு இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் நாம் கற்றுத்தர முடியும். அவர்களை நாம் அப்படியே சரியான திசையில் திருப்ப முடியும். அதை செய்வதற்கான மிகச்சிறந்த நேரம் இதுவே" என முத்தாய்ப்பாக முடித்தார்.