கோமுக் பயணத்தில் எதிர்கொண்ட நிலச்சரிவு... சுவாரஸ்யமும் மிரட்சியும்!
இமாலயப் பயணத்தின் உச்சமாக கோமுக் செல்லும் வழியில், கங்கையின் பிறப்பிடமாம் கங்கோத்ரி பயணத்தில் எதிர்கொண்ட நிலச்சரிவு குறித்தும், அப்போது வழித்தடத்தில் கண்ட அப்பகுதி மக்களின் தனித்துவங்கள் குறித்தும் சுவைபட விவரிக்கிறார் எழுத்தாளர்.
இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா -பகுதி 15
இமாலயப் பயணத்தின் உச்சமாக கோமுக் செல்லும் வழியில், கங்கையின் பிறப்பிடமாம் கங்கோத்ரி பயணத்தில் எதிர்கொண்ட நிலச்சரிவு குறித்தும், அப்போது வழித்தடத்தில் கண்ட அப்பகுதி மக்களின் தனித்துவங்கள் குறித்தும் சுவைபட விவரிக்கிறார் எழுத்தாளர்.
திரு. அஜயன் பாலா:
எல்லா காரியத்திலும் ஆரம்பம் எளிது. ஆனால் இறுதி உச்சம் என்பது அத்தனை எளிதானதல்ல. அதனை நெருங்க நெருங்கத்தான் தடைகள் அதிகரிக்கும்.
அது எலெக்ஷன் ரிசல்ட்டானாலும் ரேஷன் க்யூவானாலும் க்ளைமாக்ஸை நெருங்கினாலே பரபரப்புதான்.
சினிமா க்ளைமாக்ஸ் காட்சியில் தடைகளே இல்லாமல் ஹீரோ வில்லனை ஜெயித்துவிட்டால் அதில் அத்தனை சுவாரசியமில்லையே.
பலமுறை அடிவாங்கி இறுதியில் வில்லனை வீழ்த்தும்போதுதான் நாம் கைகளைத் தட்டி ஆர்ப்பரிக்கிறோம்.
நம்மை மீறி ஒரு சந்தோஷம் கொப்பளிக்கிறது.
Subscribe
அப்போதுதான் நாம் அந்தக் காட்சியில் முன்னிலும் தீவிரமாக நம்மை ஒன்றி பார்க்க முடிகிறது. இப்படி எல்லா காரியத்திலும் உச்சத்தை நெருங்கும்போது தடைகள் வந்து உச்சத்தின் மதிப்பைக் கூட்டிவிடுவதைப் போல இப்பயணத்திலும் அதுபோல தடைகள் உருவாயின. கங்கையின் பிறப்பிடமான கோமுக்தான் இப்பயணத்தின் உச்சம். அந்த உச்சத்தை எந்தத் தடையுமில்லாமல் சுலபமாக அடைந்துவிட்டால் அப்புறம் அத்தனை மதிப்பு மிக்கதாக இல்லாமல் போய்விடும் காரணத்தாலோ என்னவோ ஆரம்பத்திலேயே பல தடைகள். முதலாவதாக நிலச்சரிவு அதிகம் என சொல்லி பேருந்திலிருந்து இறக்கி, ஒன்பது பேருக்கு ஒன்றாக ஜீப்பில் ஏறச் சொன்னார்கள்.
ஜீப் பயணம் புறப்பட்டு கிட்டதட்ட இரண்டு மணி நேரத்தில் உத்தர்காசி தாண்டி 37 கி.மீ. தொலைவில் யாரும் எதிர்பாராத அந்த திடீர் நிலச்சரிவு உண்டானது.
கொஞ்சம் முன்னாடி போயிருந்தால் அவ்வளவுதான் எங்கள் ஜீப் சட்னியாகி நாங்கள் சாம்பாராக ஆகியிருப்போம். அந்த அளவுக்கு மயிரிழையில் உயிர் தப்பினோம். எங்கள் வாகனத்துக்கு இரண்டு வாகனம் முன்னால் செல்லும்போது பாதையில் சடசடவென பாறாங்கற்கள் உருண்டு வந்து பாதையை அடைத்துக்கொண்டன.
நல்லவேளை ஒரு வாகனத்துக்கும் இன்னொரு வாகனத்துக்குமிடையில் இந்த சரிவு நிகழ்ந்த காரணத்தால் விபத்துக்கள் ஏதுமில்லை. ஆனாலும் இரண்டு பக்க வாகனங்களும் செல்ல வழியில்லை. நிமிட நேரத்தில் எங்கள் வாகனங்களுக்குப் பின்னால் வரிசையாக வாகனங்கள் நிற்கத் துவங்க பலரும் வாகனத்தை விட்டிறங்கி நிலச்சரிவு நடந்த இடத்தை ஏதோ சுற்றுலாத்தலம் போல வேடிக்கை பார்க்கத் துவங்கினர். கீழே கங்கை நதி பிரவாகமெடுக்க தூரத்து இயற்கைக் காட்சிகளை பலரும் கண்டு களிக்கத் துவங்கினர்.
சிலநிமிடங்களில் பாறையை சரிசெய்யும் குழு அங்கு விரைந்து வந்தது.
இதோ இன்னும் சில நொடியில் பாதை சரிசெய்யப்பட்டுவிடும் என ஒருவர் உற்சாகமாகச் சொல்ல அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என அனைவரும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் வந்தவர்கள் இவ்வளவு பெரிய கல்லை எதிர்பார்க்கவில்லை போல. இதை அப்புறப்படுத்துவது கடினம் என்பதாக பேசிக்கொண்டனர். பாறையை வெடிவைத்து தகர்த்தாலொழிய வேறு வழியில்லை என முடிவெடுத்தனர். அக்குழுவின் தலைவர் உடனடியாக செல்போனில் பேசினார். இன்னும் குறைந்தது அந்த வண்டி வர மூன்று மணிநேரமாகும் எனச் சொல்ல அனைவரும் தலையில் கை வைத்துக்கொண்டனர்.
இதற்குள் இரண்டு பக்கமும் ஒரு கி.மீ நீளத்துக்கு வாகனங்கள் நிற்கத் துவங்கின. பலர் கூட்டம்கூட்டமாக புகைப்படம் எடுப்பதும் இயற்கைக் காட்சியை இரசிப்பதுமாக இருக்க நானும் என் பங்குக்கு இடைப்பட்ட நேரத்தை எப்படிக் கழிக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தபோது கீழே ஆற்றின் குறுக்கே ஒரு தொங்குபாலம் இருப்பது தெரியவர யாரிடமும் சொல்லாமல் கீழே இறங்கினோம். குழு தலைவர்கள் யாரையும் கீழே இறங்க வேண்டாம் என எச்சரிக்கும் குரல் கேட்க என்னுடன் கோபால் ட்ரம்மர் மற்றும் சேலம் மகேஷ் உள்ளிட்ட இன்னும் சில நண்பர்கள் இறங்கினர்.
உயரமான பெயர் தெரியாத மரங்களினூடே ஒற்றையடிப் பாதையில் இறங்க இரண்டாவது முறை வளைந்தபோது சிறுசிறு வீடுகள் தென்பட்டன. மாடு மேய்த்துக்கொண்டிருந்த கிராமத்துப் பெண்கள் சிலர் எங்களை ஆவலுடன் வேடிக்கை பார்த்தனர்.
தொங்கு பாலத்தின் ஒரு முனையில் வந்து நின்றோம். ஒரு விவசாயி கையில் மாட்டை பிடித்தபடி பாலத்தைக் கடந்து எங்களை நோக்கி வந்தார்.
கீழே பிரமாண்டமான கங்கை நதி ஓடிக்கொண்டிருக்க இரண்டு மலைகளுக்கு நடுவேயிருந்த அந்த பாலத்தில் நடப்பது மிகவும் சந்தோஷமாக இருந்தது. திரைப்படங்களில் மட்டுமே அதுவரை பார்த்து வந்த ஒரு காட்சியில் நாம் நேரடியாக அனுபவிக்கக் கிடைத்த மகிழ்ச்சி அது.
பாலத்தினூடே அங்கு வந்த பள்ளிச் சிறுவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அவர்கள் எங்களைக் காட்டிலும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
உண்மையில் இமயமலையில் கடவுள்கள் யார் என கேட்டால் நான் சிவனையோ பார்வதியையோ அல்லது விஷ்ணுவையோ கூறமாட்டேன். இங்கு வசிக்கும் மக்கள் ஒவ்வொருவரும் கடவுள்கள்தான்.
வாழும் ஒவ்வொரு நொடியிலும் மரணம் அவர்கள் முன் நிழலாக இருக்கிறது. மலையின் ஒவ்வொரு திருப்பமும் மரணத்திலிருந்தான விடுதலைதான். எதிர்வரும் பேருந்திலோ அல்லது திடீர் நிலச்சரிவின் காரணமாக எந்த கணத்திலும் விழக்கூடிய பிரம்மாண்டப் பாறைகளின் மூலமாகவோ அல்லது மலைப்பாதையின் விளிம்பில் ஒரு கல் பிசகினாலும் கீழே அதளபாதாளத்தில் விழக்கூடிய அபாயம் மூலமாகவோ மரணம் அவர்களை நிழல் போல ஒவ்வொரு கணத்திலும் பின் தொடர்ந்தபடி வந்து கொண்டிருக்கிறது. இத்தனை பயங்களுக்கு நடுவே அவர்கள் எந்த பதட்டமுமில்லாமல் எளிய புன்சிரிப்புடன் வாழ்க்கையை கடப்பதுதான் பேரதிசயம். ஒருநாள் உடம்பு சரியில்லாவிட்டால் கூட நாம் பண்ணுகிற அலப்பறை இருக்கிறதே, லேசான தலைவலிக்குக்கூட அப்பல்லோ ஆஸ்பிட்டலில் போய் ஊசி போட்டால்தான் தீர்ந்தது என்னும் மனநோய்க்கு பழக்கப்பட்ட நம் வாழ்க்கை எவ்வளவு ஆபத்தானது என்பதை இங்கு இவர்களைப் பார்க்கும்போது தெளிவாகிறது.
நாம் வசிப்பது போல தெருக்கள் இல்லை. குழாயை திறந்தால் நீர், கைநீட்டினால் பேருந்து, கைத்தட்டினால் ஆட்டோ, பொழுது போகாவிட்டால் சினிமா, ஞாயிற்றுக்கிழமை ரெஸ்டாரண்ட் உணவு இவை போன்ற எந்த வசதியும் இல்லை.
அவர்கள் வாழ்வது குளிருக்கு அடக்கமான மலையை ஒட்டிய சிறுவீடு. அந்த வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் கூப்பிட்டால் கூட கேட்காத தொலைவு. பெரிய விவசாயமும் இல்லை. ஆடுமாடு மேய்ப்பது தான் தொழில். ஆனாலும் அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். கொஞ்ச நேரம் அவர்களுடன் பேசிவிட்டு மீண்டும் எங்கள் வாகனம் நின்று கொண்டிருந்த இடத்துக்கு வந்தபோது வாகனங்கள் வரிசையாக நீளமான பாம்பு போல நீண்டு நின்றிருந்தன. மக்கள் அனைவரும் கூட்டமாக பாறைகள் சரிந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
நாங்கள் அருகே சென்றபோது அருகே செல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருந்தனர்.
அந்த இடத்தில் ஒரு பரபரப்பு காணப்பட்டது. விசாரித்தபோது வெடிகுண்டு வைத்து பாறையைத் தகர்க்க வேலை நடப்பதாகக் கூறினர். வெடிமருந்து குச்சிகளை பாறையில் பொருத்தி திரியை பற்ற வைத்துவிட்டு அந்த ஊழியர்கள் அனைவரையும் விலகி நிற்கும்படி சொல்லிவிட்டு ஓடி வந்து எங்களுடன் நிற்கச் சற்று நேரத்தில் அங்கு பிரளயமே ஏற்படுவதைப் போல பெரும் வெடிச்சத்தம் கேட்க பாறைகள் அந்தரத்தில் தூள் தூளாகச் சிதறின. சில நிமிடங்களுக்கு அங்கு பெரும் புகை மண்டலம் சுற்றி சூழ்ந்தது.
அடுத்த பதிவில்... கங்கோத்ரியில் கங்கையில் நீராடிய அற்புத அனுபவத்தையும், கங்கா தேவி கோயிலில் ஆரத்தி தரிசித்த அனுபவத்தையும் விவரிக்கும் எழுத்தாளர், தொடர்ந்து கோமுக்கிற்கு பயணித்தபோது தான் மயங்கி விழுந்ததையும் சொல்கிறார்!