நில்... கவனி... சாப்பிடு! - பகுதி 5

சென்ற தலைமுறையினர் "எங்க வீட்ல இன்னைக்கு நெல்லுச் சோறு" என ஏதோ ஒரு பண்டிகை நாளில் சமைக்கப்படும் அரிசி உணவிற்காக சந்தோஷப்பட்டார்களாம்! இன்றோ அரிசி மட்டுமே பிரதான உணவு. பிற தானிய வகைகளை அடியோடு மறந்துவிட்டோம். இது ஆரோக்கியமானதா? முளைவிட்ட தானியங்களை உணவில் சேர்ப்பது குறித்து இன்று ஆங்காங்கே பேசத் துவங்கியிருந்தாலும் அதன் முக்கியத்துவங்களை அனைவரும் இன்னும் அறிந்துகொள்ளவில்லை. இங்கே முழுமையாய் தெரிந்துகொள்ளலாம்!

முளைவிட்ட தானியங்கள் ஒரு முழுமையான உணவாக இருந்தாலும் இன்னும் ஏன் மக்கள் அதை தினசரி உணவாகப் பயன்படுத்துவதில்லை? அதன் நற்குணங்களைப்பற்றி ஏன் தெரிந்துகொள்ளவில்லை?

காரணம், அவை வெகு எளிதாக, இயற்கையாக, எந்தத் தயாரிப்புச் சிரமமுமின்றி கையில் கிடைப்பதால்தான்!

விதைகள், பிறக்கக் காத்திருக்கின்றன. ஆனால், முளைவிட்ட தானிய வகைகளோ, உயிரோட்டத்துடன் வெடிக்கக் காத்திருக்கின்றன. பண்டைய காலங்களில், முளைவிட்ட பயறு வகைகள், தினசரி உணவின் ஒரு பாகமாக இருந்தது.

மனிதன் உட்கொள்ளும் எண்ணற்ற உணவுகளில், ஒரு பிடி முளைவிட்ட தானியத்தில் கிடைக்கும் சத்து, வேறு எந்த உணவின் ஒரு பிடியிலும் இருக்காது. ஒரு தானியத்தில் உள்ள வைட்டமின் சக்தி, முளைவிடும் போது பன்மடங்காகிறது. முளைவிட்ட கோதுமையில் வைட்டமின் சி, அறுநூறு சதவிகிதம் அதிகமாகிறது. ஆரஞ்சுப் பழத்தில் உள்ள வைட்டமின் ‘சி’ அளவைவிட இது அதிகம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒருவரின் வாழ்நாளை நீட்டிக்கக்கூடிய தன்மைகொண்ட என்சைம்ஸ், முளைவிட்ட தானியத்தில் மிக அதிகமாக உள்ளது.

ஒருவரின் வாழ்நாளை நீட்டிக்கக்கூடிய தன்மைகொண்ட என்சைம்ஸ், முளைவிட்ட தானியத்தில் மிக அதிகமாக உள்ளது. உடல் தளர்ந்துபோன நிலையில், என்சைம்ஸ் நிறைந்த முளைவிட்ட பயிரைச் சாப்பிடும்போது புத்துணர்ச்சி பிறக்கிறது. முளைவிட்ட தானியங்கள் மனிதனுக்குக் கிடைத்த ஒரு வரம் என்று சொல்லலாம்.

தானியங்கள் வருடம் முழுவதும் விளைகின்றன. அவற்றை முளைவிடச் செய்து, வருடம் முழுவதும் சாப்பிடலாம். இவற்றில் எந்த ரசாயனமும் இல்லை. சமைக்கக்கூடத் தேவையில்லை. மிகக் குறைந்த கலோரி அளவு உள்ள உணவும்கூட. அனைவரும் விரும்பிச் சாப்பிடலாம்!

எனது பால்ய நாட்களில் என் அம்மா, பச்சைப்பயிரில் செய்த பலவகை உணவுகளை எனக்குத் தந்திருக்கிறார். அதைச் சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியமும் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும் என்பார். அப்போது அதன் அருமை எனக்குத் தெரியவில்லை.

மற்ற முளைவிட்ட தானியங்களைவிட, முளைவிட்ட பச்சைப்பயிறுக்கு வயிற்றில் அதிக வாய்வை உண்டாக்காத தன்மை கொண்டது. இதனால் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இது மிகவும் ஏற்ற உணவு. கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி ஆகியவை மட்டுமல்ல, அளவற்ற வைட்டமின் சி-யும் நிறைந்தது, முளைவிட்ட பச்சைப்பயிறு.

பச்சைப்பயிறு முளைவிடாதபோது, அதில் உள்ள ட்ரிப்சின், புரதத்தை ஜீரணம் செய்யும் என்சைம்களைத் தடை செய்கிறது. அதுவே, பயறு முளைவிட்டதும் அதில் உள்ள ட்ரிப்சின்
(trypsin) குறைகிறது. முளைவிட்ட பயிரை வேகவைக்கும்போது, ட்ரிப்சின் முற்றிலும் நீங்கிவிடுகிறது. வேகவைப்பதால், இதில் உள்ள புரதச் சத்து குறைவதில்லை.

முளைவிட்ட தானியத்தைத் தயார் செய்ய, தண்ணீரும் காற்றுமே போதுமானது. தானியத்தை நீரில் ஊறவைத்தால், அரை நாளில் அவை முளைவிடத் தொடங்கும். இப்போது சாப்பிடத் தயார். இதைத் தவிர, வேறு எந்தச் சிரமமும் இல்லை. நறுக்குவதோ, தோல் சீவுவதோ அவசியமில்லை. பிறகு உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். இதைக்கொண்டு எளிதில் தயாரிக்கப்படும் சாலட் மற்ற உணவுகளுடன் சேர்த்துச¢ சாப்பிட நன்றாக இருக்கும்.

உலகின் அனைத்துப் பகுதிகளிலும் குக்கிராமங்கள் வரை, முளைவிட்ட பயிறு எளிதில் கிடைக்கும். மற்ற உணவுகளைவிட மிகக் குறைந்த விலையில் கிடைத்தாலும், தனது சத்துக்களால் அனைத்தையும்விட மிக அதிக அளவில் சிறப்பாக இருக்கின்றன முளைவிட்ட தானியங்கள்!

அடுத்த வாரம்...

வெள்ளைப் பூசணியினால் கிடைக்கும் பலன்கள் மற்றும் கொட்டை வகை உணவுகள் உண்பதால் கிடைக்கும் சத்துகள் பற்றிய தகவல்கள் காத்திருக்கின்றன!

நில்... கவனி... சாப்பிடு! தொடரின் பிற பதிவுகள்