இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்... பகுதி 11

ஈஷா பசுமைக் கரங்கள் ஒரே நாளில் 8.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை புரிந்த நிகழ்வை விவரிக்கும் பதிவாக இது அமைகிறது. மரக்கன்றுகள் நடுவது தற்போதைய தேவையாக உள்ளது. ஆனால் இதில் சாதனை புரிவதால் என்ன நடந்துவிடப்போகிறது? தொடர்ந்து படித்து இதுபோன்ற உங்கள் கேள்விகளுக்கு விடையறியலாம்!

ஆனந்த்,

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷா பசுமைக் கரங்கள்

2006ஆம் ஆண்டு அக்டோபர் 17ல் ஒரே நாளில் 8.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது. இது கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது. மரம் நடுவதில் சாதனைக்கு என்ன வேலை எனக் கேட்கத் தோன்றலாம் சிலருக்கு. ஆனால், இந்த சாதனை நிகழ்வு அடுத்தடுத்து நாம் செய்யும் செயல்களுக்கு ஒரு ஊக்குவிப்பாக அமைந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. இது கின்னஸ் சாதனைக்காக திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல, அது தற்செயலான நிகழ்வே!

அவர்கள் வழங்கிய சான்றிதழின் படி மட்டுமே 8.5 லட்சம் மரக்கன்றுகள்! ஆனால், உண்மையில் நடப்பட்டது 11 லட்சம் மரக்கன்றுகள்.

2006ல் ஈஷா பசுமைக்கரங்களின் பணிகள் வேகம்பிடித்தது. அப்போது தமிழகம் முழுக்க ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் பசுமைக் கரங்களின் பணிகளுக்காக தங்கள் பங்களிப்பை வழங்குமாறு சத்குருவால் வழிகாட்டப்பட்டனர். ஆங்காங்கு ஈஷா நர்சரிகள் உருவாக்கும் பணிகளும் அப்போதுதான் துவங்கப்பட்டன. நர்சரி உருவாக்குவதற்கான வழிமுறைகள் அனைத்தும் பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்களால் அந்தந்த ஊர்களுக்குச் சென்று கற்றுத்தரப்பட்டன. புதிதாக நர்சரிகள் துவங்கப்படும்போது, அங்கு சுற்றியிருக்கும் மக்களை அழைத்து, குருபூஜை செய்து, இனிப்புகள் வழங்கி துவங்கப்படும்.

கடலூர் மாவட்டம் முழுக்க ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதென்று முதலில் நாங்கள் தீர்மானித்திருந்தோம். இதையறிந்த சேலம் மாவட்ட தன்னார்வத் தொண்டர்கள், தங்கள் மாவட்டத்திலும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் அதே நாளில் நடுவதற்கான வேலைகளில் இறங்குவதாகச் சொன்னார்கள். இதைப்போலவே பிற மாவட்ட தன்னார்வத் தொண்டர்களும் தங்கள் மாவட்டங்களிலும் பெரிய அளவில் அன்றைய நாளில் மரம் நடும் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

சரி! இப்போது ஒரே நாளில் இத்தனை மரங்கள் நடுவதற்கான ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், அவ்வளவு விதைகள் நம்மிடம் இல்லை. எனவே, விதை சேகரிப்பை மேற்கொண்டோம். அது வெறும் விதை சேகரிப்பு பணியாக இருக்கவில்லை; விதை சேகரிப்பு திருவிழாவாக இருந்தது. ஒவ்வொரு விதையைப் பற்றியும் அதன் தன்மைகள் குறித்தும் சொல்லித்தரப்பட்டதோடு, அதனை எப்படி விதை நேர்த்தி செய்ய வேண்டும் என்பதும் கற்றுத்தரப்பட்டது. இந்த விதை சேகரிப்பு பணியானது தன்னார்வத் தொண்டர்கள் ஒன்றாகக் கூடுவதற்கு ஒரு ஊடகமாக அமைந்தது. ஆட்டம், பாட்டம், விளையாட்டு என கொண்டாடி ஒன்றாக ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்வார்கள்.

இப்படித் தொடர்ந்து செய்த செயல்களால் தேவையான மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டன. பின், சத்குரு ஞானோதயம் அடைந்த நாளான செப்டம்பர் 23 அன்று ஒரே நாளில் மரக்கன்றுகள் தமிழகம் முழுக்க நடுவதற்கான பணிகளில் இறங்கினோம். ஆனால் அப்போது வந்த இடைத்தேர்தல் காரணமாக சத்குருவின் ஞானோதய நாளில் மரக்கன்றுகள் நடுவது தடைபட்டது. எனவே அக்டோபர் 17ல் மரக்கன்றுகள் நடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. நாங்கள் சுமார் 7 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் தமிழக அரசின் ஒத்துழைப்பால் 8.5 லட்சம் மரக்கன்றுகளுக்கும் மேலாக ஒரே நாளில் நடப்பட்டு கின்னஸ் சாதனையாக உருவெடுத்தது. கின்னஸ் ரெக்கார்டின் படி, அவர்கள் வழங்கிய சான்றிதழின் படி மட்டுமே 8.5 லட்சம் மரக்கன்றுகள்! ஆனால், உண்மையில் நடப்பட்டது 11 லட்சம் மரக்கன்றுகள். சில நடைமுறைச் சிக்கல்களால் அவர்களால் அவ்வளவு எண்ணிக்கைக்கான சான்றிதழை வழங்க முடியவில்லை. இது உண்மையில் கின்னஸையும் தாண்டிய சாதனையே!

இயற்கை இன்னும் பேசும்!

இத்தொடரின் பிற பதிவுகள்: இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்