காவேரி கூக்குரல் இயக்கம் பற்றி சில விளக்கங்கள்!
காவேரி கூக்குரல் பற்றிய செய்திகள், சமீபத்திய அப்டேட்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இவ்வியக்கம் குறித்த பொய்யான குற்றச்சாட்டுகள் எவை, உண்மை என்ன என்பதை பிரித்துக்காட்டி உங்களுக்கு உதவும் ஒரு பதிவு உங்களுக்காக இங்கே.
காவேரி கூக்குரல் என்றால் என்ன?
காவேரி கூக்குரல் என்பது ஈஷா அவுட்ரீச்சின் கீழ் செயல்படும் ஓர் இயக்கமாகும். கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் காவேரி நதிக்கரையோர மாவட்டங்களில் விவசாயிகள் பிரச்சனை மற்றும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் நோக்குடன் இவ்வியக்கம் செயல்படுகிறது. இது குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் நன்மைகளுடன் கூடிய ஒரு பொருளாதார தீர்வை வழங்குகிறது. இவ்வியக்கம் நதிக்கரையோர மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் சொந்த நிலங்களில் மரம்சார்ந்த விவசாயத்தை பின்பற்றுவதற்கு துணைநிற்பதன் மூலம், அவர்களின் சிறப்பான பொருளாதார எதிர்காலம் மற்றும் சுற்றுச்சூழல் நலத்தையும் உறுதிசெய்கிறது.
ஈஷா அவுட்ரீச் (சமூகநலத்திட்டம்) என்றால் என்ன?
ஈஷா அவுட்ரீச் (சமூகநலத்திட்டம்) என்பது வருமான வரிச்சட்டத்தின் 12AA பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமாகும். வருமான வரிச்சட்டத்தின் 80G பிரிவின் கீழும் ஈஷா அவுட்ரீச் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற இந்தியாவின் சுகாதாரம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடிற்கான முயற்சிகளை இது மேற்கொண்டு வருகிறது.
ஈஷா அவுட்ரீச்சின் செயல்பாடுகளும் சாதனைகளும் என்னென்ன?
ஈஷா அவுட்ரீச்சின் திட்டங்கள் தேசிய அளவிலும் உலக அளவிலும் அங்கீகரிக்கப்பட்டு பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்:
Subscribe
- 2010ம் ஆண்டில், தமிழ்நாட்டில் பசுமைப்பரப்பை அதிகரிப்பதற்காக சத்குருவால் தொடங்கப்பட்ட சுற்றுச்சூழல் திட்டமான ஈஷா பசுமைக் கரங்கள், இந்தியாவின் மிக உயர்ந்த சுற்றுச்சூழல் விருதான இந்திரா காந்தி பரியவரன் புரஸ்கார் விருதினைப் பெற்றுள்ளது.
- ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் 3 நாட்களில் அதிக மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது - 6284 இடங்களில் 8,52,587 மரக்கன்றுகள் நடப்பட்டன.
- இந்தியாவில் அழியும் நிலையிலுள்ள நதிகளை மீட்டெடுப்பதற்காக 2017ம் ஆண்டில் சத்குரு தொடங்கிய நதிகளை மீட்போம் இயக்கம், இந்திய அரசின் நீர்வள அமைச்சகத்தால் 2019ம் ஆண்டில் சிறந்த வெகுஜன விழிப்புணர்வு முயற்சி என்ற பிரிவில் தேசிய தண்ணீர் விருதைப் பெற்றுள்ளது
- கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகள் மூலம் சமூக புத்துணர்ச்சியை உண்டாக்கும் ஒரு முன்னெடுப்பான ஈஷா கிராமோத்சவத்திற்காக ஈஷா அவுட்ரீச், ராஷ்ட்ரிய கேல் புரோத்சஹன் விருதினைப் பெற்றுள்ளது.
காவேரி கூக்குரல் இயக்கத்திற்காக இதுவரை எவ்வளவு பணம் திரட்டப்பட்டுள்ளது?
ஜனவரி 2020 நிலவரப்படி, காவேரி வடிநிலப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு 1.6 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நடவுசெய்ய உதவும் அளவிற்கு நிதி திரட்ட முடிந்துள்ளது. இது சம்பந்தமாக நிகழும் முன்னேற்றங்களை https://www.ishaoutreach.org/en/cauvery-calling எனும் பக்கத்தில் அவ்வப்போது காணுங்கள்
பங்களித்தவர்கள் யார்?
இதற்கான பங்களிப்புகள் உலகம் முழுவதுமுள்ள தனிநபர்களிடமிருந்து வந்துள்ளன. மொத்த நன்கொடைகளில் ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் சேவை வழியாகப் பெறப்பட்டவை 99.6% ஆகும். இவை தன்னார்வமாக வழங்கப்பட்ட நன்கொடைகள். 150 நாடுகளிலிருந்தும், லட்சக்கணக்கான தனிநபர்களிடமிருந்தும் இதற்கான பங்களிப்புகள் பெறப்பட்டுள்ளன.
நிதி எவ்வாறு நிர்வகிக்கப்படும்?
காவேரி கூக்குரலுக்கான அனைத்து நிதிகளும் சமூகத்தில் மதிப்புமிக்க நபர்களைக் கொண்ட ஒரு ஆலோசகர் குழுவின் மேற்பார்வையின் கீழ், தனியாகக் கையாளப்படுகின்றன. மேலும், தலைசிறந்த தணிக்கையாளர்களால் தணிக்கை செய்யப்படும்.
இந்த பணத்திற்கும் மாநில அரசுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?
இந்த பணம் மாநில அரசின் சார்பாக பெறப்படவில்லை. காவேரி வடிநிலப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் சொந்த நிலங்களில் தரமான மரக்கன்றுகளை உற்பத்திசெய்து, நடவுசெய்வதற்கு துணைநிற்பதற்காக மட்டுமே இந்த பங்களிப்புகள் உள்ளன.
இதில் மாநில அரசின் பங்களிப்பு என்ன?
மாநில அரசும் விவசாயிகளுக்கு நேரடியாக தனது சொந்த பங்களிப்பை வழங்கும். திட்டவரைவில் முன்மொழியப்பட்ட மரம்சார்ந்த விவசாயத்தின் வெற்றியை நோக்கி அரசாங்கம் செயல்படும், இது விவசாயிகளின் பாதையிலுள்ள தடைகளை அகற்றி, இந்த செயல்முறைக்கு பெரிதும் துணைநிற்கும்.
மரங்கள் எங்கே நடப்படும்?
மரங்கள் விவசாயிகளின் சொந்த நிலங்களில் நடப்படும். மேலும், பொது இடங்கள்/ அரசாங்கத்திற்கு சொந்தமான நிலங்களுடன் எந்தவித சம்பந்தமும் இல்லை.
மரக்கன்றுகள் நடவு எப்போது தொடங்கும்?
கர்நாடகாவின் காவேரி நதிப்படுகையிலுள்ள 54 தாலுகாக்களில், ஒவ்வொன்றிலும் குறைந்தது 500 விவசாயிகளைச் சென்றடைவதற்கான முன்னெடுப்புகளையும் செயல்பாடுகளையும் காவேரி கூக்குரல் இயக்கம் களநிலையில் தொடங்கியுள்ளது. அதேநேரத்தில் தமிழ்நாட்டிலும் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் 2020ம் ஆண்டில் பருவமழைக் காலத்தில் மரக்கன்றுகளை நடவுசெய்யும் வேலைகளை தொடங்குவார்கள்.
இந்த முழுமுயற்சியும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் தன்னார்வத்தொண்டர்களினால் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், எந்தவொரு அரசியல் கட்சியுடனோ அல்லது மதங்களுடனோ எந்தவித தொடர்பும் இல்லை. இது நம் தேசப் பிரச்சனைக்கான சர்வதேச தீர்வு.