பூமித்தாயை காக்க இயற்கை விவசாயம் ஏன் தேவை?
இயற்கை விவசாயம் என்பது மண்ணையும் மனிதனையும் காப்பதற்கு மட்டுமல்ல, இந்த உலகில் வாழும் பல்வகை உயிர்களையும் பாதுகாக்க அவசியம் என்பதை எடுத்துரைக்கிறது இந்தக் கட்டுரை!
இயற்கை விவசாயம் என்பது மண்ணையும் மனிதனையும் காப்பதற்கு மட்டுமல்ல, இந்த உலகில் வாழும் பல்வகை உயிர்களையும் பாதுகாக்க அவசியம் என்பதை எடுத்துரைக்கிறது இந்தக் கட்டுரை!
சுமார் 166 பயிரினங்கள் நமது நாட்டில் உண்டு எனச் சொல்லப்படுகிறது. நெற்பயிரில் மட்டும் 50,000 இனங்கள் இருந்ததாகவும் சோளத்தில் 5000 ரகம் உண்டு என்றும், மிளகுப் பயிரில் 500 வகையும் மாமரத்தில் 1000 வகையும் உண்டு என்றும் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். ஏன்... விலங்கினங்களில் கூட பல எண்ணற்ற வகையினங்கள் இருந்துள்ளன. வெள்ளாட்டில் 20 வகை, செம்மறியில் 42 வகை, எருமையில் 15 வகை, கால்நடையில் 30 வகை, கோழியில் 18 வகை, என விலங்கினங்களிலும் சூழல் அமைப்புக்கு ஏற்ப மனித உதவியின்றியே பரிணமித்துள்ளன.
இத்தனை உயிர்களைப் படைத்து பரிணமிக்கச் செய்துள்ள இயற்கை, மனிதனுக்கும் இப்பூமியில் வாழும் உரிமையைக் கொடுத்துள்ளது. ஆனால், மனிதனோ தான் மட்டுமே இப்பூமியில் வாழ பிறந்திருப்பதாக எண்ணிக்கொண்டதன் விளைவு, இன்று நம் பூமி பெரும் அபாயத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. நாம் மட்டுமல்ல... பிற உயிர்களுக்கும் இங்கு வாழ உரிமையுண்டு. இதைப் புரிந்துகொண்டு இயற்கையின் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் பூமித்தாய் நலம் காக்கலாம். மண்ணின் துயர் போக்கலாம்.
மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட தடயங்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர் பயிர் சாகுபடி நுட்பம் குறித்து அறிந்து இருந்ததைச் சொல்கிறது என்கிறார்கள். ஆனால், இன்று நாம் அதிக மகசூல் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் விளைநிலங்களை கொலைக்களங்களாக மாற்றி வருகிறோம். விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரிலே பூமித்தாயை நிலைகுலையச் செய்து வருகிறோம்.
Subscribe
பாதிப்படைந்த பாரம்பரிய வளங்கள்
பாரம்பரியமாக நமது தேசத்தில் இருந்து வந்த சித்த வைத்தியத்திற்கு ஆதாரமாய் இருந்து வருபவை மூலிகைகள். மூலிகைகளை நாம் புனிதமானதாகப் போற்றினோம். தீராத நோய்கள் எனக் கருதப்படும் நோய்களைப் போக்கும் வல்லமை கொண்ட அரிய மூலிகைகளை நம் முன்னோர் அறிந்து வைத்திருந்தனர். ஆனால், இன்று ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விளை நிலங்களில் இறைத்து, மண்ணின் தன்மையையே மாசுபடுத்தி விட்டோம். இதனால் நிலங்களில் விளையும் பயிர்களும் வேலியோரங்களில் வளரும் மூலிகைகளின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாம் விளைவித்த சுற்றுச்சூழல் சீர்கேட்டால் கால்நடைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. உதாராணமாக மாடுகள்... மனிதர்களின் வாழ்வில் மாடுகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. வயற்காட்டில் ஏர் உழ, நீர் இறைக்க, வண்டியை இழுக்க எனப் பலவிதங்களிலும் உழைப்பதோடு விளைச்சலுக்குத் தேவையான எருவினையும், உண்ண உணவினையும் (பாலாக) மாடுகள் வழங்குகின்றன. ஒவ்வொரு உயிரும் பிறவற்றைச் சார்ந்தே வாழ்கிறது என்பதை ஆன்மீக ரீதியாகவே உணர முடியும். வெறும் அறிவியல்ரீதியாக மட்டுமே பார்த்தால் அது அழிவினை நோக்கியே இட்டுச் செல்லும்.
‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என மனிதனை மட்டும் உயிராகப் பார்க்காமல் எல்லாவற்றையும் நம்மோடு அரவணைத்துக் கொள்வதே... ஆன்மீகப் பார்வை. மனிதனைச் சுற்றியுள்ள மரம், செடி, கொடிகளும், கால்நடைகளும், பறவைகளும் என அனைத்தும் நலமாய் வாழ்வதற்குரிய சூழல் இந்தப் பூமியில் இருக்க வேண்டும். இவை ஒவ்வொன்றின் நலவாழ்வும் மற்ற உயிரினங்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்தவை என்பது விஞ்ஞானரீதியாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இயற்கை விவசாயம் என்பது அடிப்படை ஆதாரமாக உள்ளது. பூமியில் பல நுண்ணுயிர்கள் புழு பூச்சிகள் இருப்பதால்தான், நிலம் வளமாகி விளைச்சல் பெருகுகிறது.
இரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லிகள் இடப்படும் நிலங்களில் மண்புழுக்கள் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை! மண்புழு உழவனின் நண்பன் எனத் தெரிந்திருந்தும், இரசாயன நஞ்சுகளை நிலங்களில் விதைத்து நண்பர்களையே கொல்லும் அறிவீனத்தைச் செய்தோம். அதற்கெல்லாம் விளைவாகத்தான் இன்று பெயர் தெரியா பல விநோத நோய்களுக்கு மனித இனம் ஆளாகி வருகிறது!
ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்
ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் ஒரு அங்கமான ஈஷா விவசாய இயக்கம் தற்போது இயற்கை விவசாயத்தை விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. நவீன வேளாண்முறைகளின் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ள நமது மண்வளத்தையும், இரசாயன இடுபொருட்களின் பயன்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள நமது ஆரோக்கியத்தையும் மீட்டெடுப்பதற்கு, இயற்கை வேளாண்மையே தீர்வு என்பதை உணர்ந்து திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்கள் இயற்கை வேளாண்மையின் அவசியத்தை நாடெங்கும் உள்ள விவசாயிகளிடத்தில் வலியுறுத்தி வருகின்றனர். அவருடன் ஈஷா விவசாய இயக்கம் கைகோர்த்து செயல்பட்டு வருகிறது.
செலவில்லாமல் குறைந்த நீர் பாசனத்தில், குறைந்த மின்சாரத்தில், பணியாட்கள் செலவைக் குறைக்கும் தொழிற்நுட்பத்துடன், நாட்டுக் கால்நடைகளைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்யும் முறையை ஈஷா பசுமைக் கரங்களின் ஒருங்கிணைப்பின் பேரில் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்கள் தமிழகம் வந்து சில நூறு விவசாயிகளுக்கு கற்றுக்கொடுத்தார்.
இயற்கை வேளாண்மை குறித்த அனைத்து சந்தேகங்களையும் போக்கும் வகையிலும், அதன் நடைமுறை சாத்தியத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும், தாங்கள் கற்றுக்கொண்டதை மற்றவருக்கும் கற்றுக்கொடுக்கும் வகையிலும் இந்த வகுப்பின் தன்மையானது அமைந்தது.
ஈஷா விவசாய இயக்கம் சார்பில் ஆங்காங்கே விவசாயிகளை ஒருங்கிணைத்து சந்திப்புக் கூட்டங்களும், ஆலோசனைகளும் தன்னார்வத் தொண்டர்களால் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மேலும் தகவல் பெறுவதற்கு கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொ. பே. 94425 90062