பத்ரிநாத் கோயில் பற்றி சத்குரு சொன்ன புராணக் கதை!
பத்ரிநாத் கோயில் முன் உள்ள வெந்நீர் ஊற்று பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலையும், மலை உச்சிக்கு சென்றபோது வழிமறித்த குரங்கு கூட்டத்திடமிருந்து தப்பித்து வந்த நிகழ்வினையும் தாங்கியபடி சுவைகூட்டுகிறது இந்த பதிவு! மேலும், பத்ரிநாத் கோயில் பற்றி சத்குரு சொன்ன புராணக் கதையை நமக்காக வழங்குகிறார் எழுத்தாளர்.
இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா -பகுதி 10
பத்ரிநாத் கோயில் முன் உள்ள வெந்நீர் ஊற்று பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலையும், மலை உச்சிக்கு சென்றபோது வழிமறித்த குரங்கு கூட்டத்திடமிருந்து தப்பித்து வந்த நிகழ்வினையும் தாங்கியபடி சுவைகூட்டுகிறது இந்த பதிவு! மேலும், பத்ரிநாத் கோயில் பற்றி சத்குரு சொன்ன புராணக் கதையை நமக்காக வழங்குகிறார் எழுத்தாளர்.
திரு. அஜயன் பாலா:
இப்பொழுது நான் நின்று கொண்டிருப்பது பத்ரிநாத் கோவிலுக்கு முன் உள்ள நீண்ட வரிசை. மதியம் 12.30 க்கு நடை சாத்திவிடுவார்கள். இப்போதோ மணி 12.10. என் முன்போ நீண்ட வரிசை. எனக்கு பின்னும் பலர் நின்று கொண்டிருந்தனர். சுடுதண்ணீர் குளத்தில் குளித்த கையோடு வந்த காரணத்தால் ஈரம் சொட்ட சொட்ட நின்று கொண்டிருந்தனர். நானும் அவர்களோடு அவர்களில் ஒருவனாக இதோ என் முறைக்காக நின்று கொண்டிருக்கிறேன்.
இன்னும் இருபது நிமிடத்துக்குள் அனைவரும் உள்ளே செல்ல முடிந்தால் தேவலை. அதற்கு முன்பாக சொல்ல வேண்டிய சில தகவல்களை உங்களுக்கு சொல்லிவிடுகிறேன். கடந்த இதழின் முடிவில் சுடுதண்ணீர் குளத்தில் நான் குளிப்பதற்கு முன் ஒரு கை என்னைத் தடுத்தது என எழுதியிருந்தேன் அல்லவா. அந்தக் கை யாருடையது தெரியுமா? ஸ்வாமி நாத்தி அவர்களின் கை. அவர் சுடு தண்ணீரில் அதிக நேரம் குளிக்க வேண்டாம். நீரில் சல்பர் அதிகம் கலந்திருப்பதால் அது உடலை பாதித்து மயக்கம், தலைசுற்றல், வாந்தி போன்றவை வர வாய்ப்புள்ளது என எச்சரிக்கவே அப்படிச் செய்தார். என்னை மட்டுமல்லாமல் பொதுவாகவே எல்லோருக்கும் அப்படி தனிப்பட்ட முறையில் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஸ்வாமி நாத்தி ஈஷாவில் யோகா ஆசிரியர். இந்த இமயமலை பயணத்துக்கும் இக்கட்டுரை தொடர் மூலம் உங்களுடனான இந்த அனுபவப் பகிர்தலுக்கும் முக்கியமான காரணிகளுள் இவரும் ஒருவர். அடிப்படையில் நான் ஆன்மீக ஈடுபாடு கொண்டவனாக இருந்தாலும் சக மாற்றங்கள் பற்றிய எழுத்துக்களுக்கே என்னை அர்ப்பணித்துக் கொண்டவன். அப்படிப்பட்ட என்னை ஆன்மீக எழுத்துக்கு திருப்பிவிட்டதில் ஸ்வாமி நாத்தி அவர்களுக்கும், அவரது இனிய சுபாவத்துக்கும், அன்பான தொலைபேசி அழைப்புகளுக்கும் கணிசமான பங்குண்டு. அன்பை விட உலகில் உயர்ந்த விஷயம் எதுவும் இல்லை என நம்புபவன் நான். அதேபோல அவரது மனவலிமையும் எனக்கு மிக ஆச்சர்யமூட்டக்கூடியது. ஆன்மீக வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பிரம்மச்சாரிகள் எதற்கும் அஞ்சாத உளத்திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பதற்கு அந்த சம்பவம் ஒரு உதாரணம்.
பத்ரிநாத் பிரகாரத்துக்குள் நான் நுழைவதற்கு முன் அச்சம்பவத்தை இதோ உங்களிடம் ஒரு குட்டி ப்ளாஷ்பேக்கில் உங்களுடன் சுருக்கமாக பகிர்ந்துகொள்கிறேன். முன்பு ஹரித்துவாரில் சண்டிதேவி மலைசிகரத்துக்கு போயிருந்த விவரம் பற்றியும் அங்கு பக்தர்களுக்கு முதுகில் அடி கொடுப்பது பற்றியும் எழுதியிருந்தேன் அல்லவா. அப்படி அந்த கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது ஒரு அழகான மலை உச்சியும் அதற்கு ஒரு ஒற்றை பாதை வழியும் தெரிந்தது. நானும் சிலரும் அங்கு சென்று பார்க்கலாம் என நினைத்து ஸ்வாமி நாத்தி அவர்களிடம் தெரிவித்தபோது விரைவில் திரும்ப வேண்டும் என்பதாக இருந்தால் நானும் வருகிறேன் போகலாம் என்றபடி எங்களோடு புறப்பட்டார்.
அந்தப்பாதை வழியாக நடந்து அந்த உச்சி மலையை அடைந்தபோது ஒட்டு மொத்த ஹரித்துவார் நகரமும் ஆறுகளும் மலைகளும் தெரிந்தன. புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு திரும்பும் வழியில்தான் அந்த அதிர்ச்சி.
எங்கள் முன் பெரும் குரங்குகள் படை. எங்களை வழி மறித்தப்படி முறைத்துக்கொண்டு நிற்க அனைவரும் ஒரு நிமிடம் உறைந்தோம். எங்களுடன் வந்த சில பெண்கள் பயத்தில் கூச்சலிட்டனர். நான் துணிச்சலாக ஒரு அடி எடுத்து வைத்து முன்னேற, நான் சற்றும் எதிர்பாராத தருணத்தில் ஒரு குரங்கு என் உடம்பில் ஏறி கேமராவை பிடித்து இழுக்க அதற்கும் எனக்கும் சிறு போராட்டம். பயத்தில் அந்த நிமிடம் என்ன செய்வதென்று கூட தெரியவில்லை. பலரும் கூச்சல் போட அது என்னை விட்டு விலகினாலும் மீண்டும் எங்களை வழி மறித்தப்படி நின்றது. எனக்கோ படபடப்பு அதிகரித்துவிட்டது. சிலர் கையில் வைத்திருந்த சிப்ஸ் பாக்கெட்டுகளை வீசினர். ம்ஹூம் ஒரு குரங்கு மட்டும் அருகில் வந்து அதனை முகர்ந்து பார்த்து கையிலெடுத்துக் கொண்டது. நாங்களும் அடுத்து என்ன செய்வதென தெரியாமல் நின்றோம்.
Subscribe
எங்களுடன் வந்தவர்கள் அனைவரும் போய்விட்டிருந்தனர். சில மணித்துளிகள்தான் ஆனால் அதற்குள் பதற்றம் அதிகரித்துவிட்டது. ஸ்வாமி நாத்தி அவர்கள் துணிச்சலாக எல்லோரும் வாருங்கள் என் பின்னால் என அழைத்து முன்னால் நடந்தார். ஒரு குரங்கு அவரது வேஷ்டியை பிடித்து இழுக்க சற்றும் கலங்காமல் அதனை மூர்க்கமாக ஒரு பார்வை பார்த்து அப்பால் போக சொல்லி விரட்டினார். அந்த குரங்கு விலகி நின்று அவரை முறைத்து பார்க்க எங்களை பின்னால் வரும்படி அழைக்க நாங்கள் அவரின் முதுகில் ஒட்டியபடி பின் தொடர்ந்தோம். இதர குரங்கு கூட்டமும் எங்களைப் பார்த்தபடி நிற்க நாங்கள் வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றோம்.
இது ஒரு சிறிய சம்பவம்தான். ஆனாலும் வேஷ்டியை அந்த குரங்கின் சிறு கைகள் இறுக்கமாக பற்றியவுடன் அவர் முகத்தில் துளி அச்சமோ அல்லது பதற்றமோ இல்லை. மாறாக ஒரு மரண தைரியமும் ஆற்றல்மிக்க உறுதியும் அவரது கண்களில் வெளிப்பட்டது. அந்த முகபாவம் அப்படியே ஒரு சிறந்த க்ளோசப் காட்சியாக என் எண்ணங்களுள் புதைந்துவிட்ட காரணத்தால் இப்போது அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
இதோ பிரகாரத்தை நெருங்கிவிட்டேன். எனக்கு முன் பத்து பேர்தான். மெல்ல அவர்களுடன் ஊர்ந்து அந்த சிறிய கோவிலின் இடது பக்க வாசல் வழியாக மெதுவாக உள்ளே நுழைந்தபோது உள்ளே பெரும் கூட்டம் முண்டிக்கொண்டிருந்தது. இதர வைணவ கோவில்கள் போல அணிகலன்கள் பூட்டப்பட்ட பிரம்மாண்டமான உருவச்சிலை எதுவும் இல்லை. சிறிய உருத்தோற்றம்தான். ஆனாலும் பிரகாரத்தினுள் மட்டும் மனதின் ஆழத்தை அதிகரிக்கும் இதமான குளிர்ச்சியை உணரமுடிந்தது.
பத்ரிநாத் கோவிலின் தோற்றம் மற்றும் அதன் வடிவம் புத்தமடாலயத்தை நினைவுப்படுத்துகிறது. இதனை வைத்து பிரகாரத்தினுள் இருப்பது விஷ்ணு அல்ல, சாக்கிய முனி என்றழைக்கப்படும் புத்தர்தான் என பௌத்தர்கள் சிலரும் இதனை வழிபடுகின்றனர். ஜைனர்கள் எனப்படும் சமணர்களோ நிர்வாண தீர்த்தங்கரர் என்றும் சாக்தர்கள் காளீ என்றும் வழிபடுகின்றனர். இப்படி அனைத்து மதத்தினரும் தங்களது கடவுளாக நினைத்து மூலவரை வழிபடும் ஒரே புண்ணியத்தலம் என்ற பெருமையும் இக்கோவிலுக்கு உண்டு.
இந்த பட்டியலின் தொடர்ச்சியாக சிவனை வழிபடும் சைவர்களும் உண்டு. அவர்கள் உள்ளே இருப்பது விஷ்ணு அல்ல, பஞ்சமுகி சிவன் என்றும் கூறுகின்றனர். இதனையொட்டி சிவனும் பார்வதியும் வசித்து வந்த இக்கோவிலுக்குள் விஷ்ணு எப்படி வந்தார் என்பது பற்றி சத்குரு சொல்லும் கதை ஒன்று மிகவும் சுவாரசியமானது. இப்படியெல்லாம் உண்மையில் நடந்திருக்குமா என்று என் பகுத்தறிவுக் கேள்வி ஒருபுறம் இருந்தாலும், அவர் சொன்ன கதையின் சுவாரசிய தன்மைக்காக அதை உங்களுக்கும் சொல்கிறேன்.
ஆதிகாலத்தில் இக்கோவிலில் அமர்ந்தபடிதான் சிவனும் பார்வதியும் உலகை ரட்சித்தார்களாம். ஒரு நாள் வழக்கமாக கலகம் செய்யும் நாரதர் விஷ்ணுவிடம் சென்று இப்படி சதா மகாலட்சுமி சகிதம் ஆதிசேஷன் மேல் படுத்துக்கிடப்பது இவ்வளவு நல்லதல்ல. சிவனைப் பார் எப்படி அட்டகாசமாக உலகை பரிபாலனம் செய்கிறார் என கலகம் செய்ய, இதனால் வெகுண்ட நாராயணன் தனக்கு தோதான இடமாக பத்ரிநாத்தை கண்டு இங்கே வர கோவிலுக்குள் முன்னமே சிவனும் பார்வதியும் இருப்பதை கண்டு தயங்கினார். அவர்களை வெளியேற்றுவது அத்தனை சுலபமல்ல. அதிலும் சிவனோ பெரிய கோபக்காரன். அழிக்கும் கடவுள் வேறு. கையிலிருக்கும் சூலாயுதத்தை சடக்கென வீசிவிட்டால் ஆபத்து. எதற்கு பிரச்சனை... பேசாமல் அவர்களைக் குட்டி தந்திரம் போட்டு வெளியேற்றுவதுதான் சரியான வழி என முடிவு செய்து, சட்டென ஒரு குழந்தையாக மாறி வாசல் கதவில் அமர்ந்தபடி கேவத் துவங்கினார்.
குழந்தை அழும் சத்தம் கேட்டு பார்வதி பதறிவிட்டார். உடனடியாக குழந்தையை கையிலெடுக்க ஓடிப்போக, எல்லாம் அறிந்த சிவன் அவரை தடுத்தார். ஆனாலும் பெண் மனதோ குழந்தை அழுகுரல் தாளாமல் பதைபதைத்தது.
என்ன கல்நெஞ்சம் உங்களுக்கு...! அழும் குழந்தையை தூக்கவிடாமல் இப்படி தடுக்கிறீர்களே எனக்கூற, சிவனோ எதையும் முழுமையாக சொல்லாமல் உனது அவசர உணர்ச்சியால் நமக்குதான் பிரச்சனை எனக்கூற, பார்வதியோ சினத்துக்கு பேர்போன சிவனையே கண்களால் சிவந்தார்.
என்னதான் சிவனாக இருந்தாலும் அவரும் குடும்பம் என்று வந்துவிட்டால் மனைவிக்கு கட்டுப்படும் ஒரு கணவர்தானே?!
வேறு வழியில்லாமல் அவர் கைப்பிடி தளர்ந்தது.
அவர் புன்னகைக்க பார்வதி ஓடிச்சென்று குழந்தையை கையிலெடுத்தார்.
அடுத்த பதிவில், பார்வதி மற்றும் சிவனை விஷ்ணு தந்திரமாக எப்படி வெளியே அனுப்பினார் என்பதை எடுத்துரைக்கும் எழுத்தாளர், சாலகிராம கல் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை வழங்குகிறார்.
குறிப்பு: ஈஷாவுடன் இமாலயம் செல்ல வாருங்கள். வரும் செப் 15 அன்று துவங்கவுள்ள இந்த இமாலயப் பயணத்தில் நீங்களும் பங்குகொள்ள முன்பதிவுகள் அவசியம்.
தொடர்புக்கு: 94 88 111 333, 94 88 111 555
வலைதளம்: www.sacredwalks.org